எமர்ஜென்சியின் பொன்விழா ஆண்டு

–கவிஞர் சுராகி

கவிஞர் சுராகி என்கிற திரு. சு.ராதாகிருஷ்ணன், 1975இல் நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராடியதால் வேலூர் சிறையில் சிறைவாசம் அனுபவித்தவர். அவரது நினைவோடைப் பதிவு இங்கே...

தனியொரு மனிதரின் சுயநலத்திற்காக (இந்திரா காந்தி) ஒட்டுமொத்த தேசத்தின் மீது நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்ட நாள், எமர்ஜென்சி அறிவித்து, நாடு அல்லோகலப்பட்ட நாள்: 25.06.1975. அதன் பொன்விழா ஆண்டான் தற்போது, நமது இளைய தலைமுறைக்கு அதுபற்றிச் சொல்வது அவசியம்.

நாம் 19ஆம் நூற்றாண்டை நோக்கி நமது மனதைச் செலுத்தினால், சில உண்மைகள் தெரிய வரும். 1971 நாடாளுமன்றத் தேர்தலில் இந்திரா காந்தி ரேபரேலி தொகுதியில் நின்று, பல தில்லுமுல்லுகள் செய்து வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சோஷலிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ராஜ்நாராயண், இந்த வெற்றி செல்லாது என அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 4 ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கில் நீதிபதி சின்ஹா 1975 மார்ச் 19ஆம் தேதி, இந்திராவின் வெற்றி செல்லாது என தீர்ப்பளித்தார். உடனே, இந்திரா காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அங்கு நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் விசாரித்து, சரியான தீர்ப்பினை உலகுக்குத் தெரிவித்தார். ‘இந்திரா காந்தி வழக்கு முடியும் வரை பிரதமர் நாற்காலியில் அமரலாம். ஆனால், எந்தத் தீர்மானத்திலும் வாக்களிக்கும் உரிமை, விவாதம் செய்யும் உரிமை கிடையாது’ என அறிவித்தார் நீதிபதி கிருஷ்ணய்யர்.

இந்தத் தீர்ப்பு வந்தவுடன், இந்திரா காந்தி பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென ஜெயபிரகாஷ் நாராயண் தலைமையில் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.

தீர்ப்பு தனக்கு சாதகமாக இல்லை எனத் தெரிந்த பிறகு, அரசியல் சட்டம் 352, 356 பிரிவுகளைப் பயன்படுத்தி, அவசரநிலை வரைவு அறிக்கை தயார் செய்து, இரவு 12 மணிக்கு ஜனாதிபதியை எழுப்பி, பக்ருதீன் அலியிடம் கையொப்பம் வாங்கி, 1975 ஜுன் 26ஆம் தேதி காலை 6 மணிக்கு நாடாளுமன்றத்திற்கும் கூட தெரிவிக்காமல், நெருக்கடிநிலை அறிவித்தார் இந்திரா காந்தி. இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து வந்துவிட்டதாக காரணம் சொல்லப்பட்டது.

காங்கிரஸ் ஆட்சியில் 1970களில் நாட்டின் பொருளாதாரம் கொந்தளிப்பாகவே இருந்தது. பங்களாதேஷ் பிரச்னை, சிம்லா ஒப்பந்தம், வங்கிகள் தேசியமயம், பொருளாதார வீழ்ச்சி, விலைவாசி உயர்வு, நாடு முழுவதும் உள்ள 10லட்சம் ஊழியர்கள் பங்கு கொண்ட ரயில்வே வேலைநிறுத்தம் இவையெல்லாம் இந்திராவை கொந்தளிப்பில் ஆழ்த்தின. அதற்காகவே, இந்திரா தன்னை காப்பாற்றிக் கொள்ள அவசரநிலையை கையில் எடுத்தார். தன்னை எதிர்த்த தலைவர்கள் அனைவரையும் சிறையில் அடைத்தார். 

மிசா (MISA – Maintenance of Internal Security Act – 1972) மற்றும் தேசியப் பாதுகாப்புச் சட்டம் (DISIR – Defence of India Act and Defence of India Rules, 1962) ஆகிய இரு சட்டங்கள் தீவிரமாக, களத்தை ஒடுக்கப் பயன்படுத்தப்பட்டன. மிசாவின் கீழ் 34,988 பேரும், தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் 75,818 பேரும் கைது செய்யப்பட்டனர். ஆர்.எஸ்.எஸ்., ஜமாத்-ஏ-இஸ்லாமி உள்ளிட்ட பல அமைப்புகள் தடைசெய்யப்பட்டன.

இந்தியாவின் பெரு நகரங்களில் மின்சாரத்தைத் துண்டித்து, இருளில் மூழ்கச் செய்தார்கள். நாளிதழ்களை ஆங்காங்கே மொத்தமாகத் தீயிட்டுக் கொளுத்தினார்கள். பத்திரிகை ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் பலர் கைது செய்யப்பட்டார்கள். பொதுக்கூட்டங்கள், அரங்கக் கூட்டங்கள் என எந்த வடிவிலும் மக்கள் கூடுவதற்கு அனுமதியில்லை. இந்திராவின் சர்வாதிகாரம் போலீஸ் தரப்பில் கொடிகட்டிப் பறந்தது.

காங்கிரஸ் கட்சிக்குள் தனக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களையும் இந்திரா காந்தி கைதுசெய்ய தயங்கவில்லை. ஜெயபிரகாஷ் நாராயண், மொரார்ஜி தேசாய், வாஜ்பாய், அத்வானி, ஜார்ஜ் பெர்னாண்டஸ்,  நானாஜி தேஷ்முக், கேரளாவில் ஏ.கே.கோபாலன், தமிழகத்தில் ஜனா கிருஷ்ணமூர்த்தி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் ரங்கசாமி தேவர் மற்ரும் திமுகவில் பல தலைவர்கள் நாடு முழுவதும் கைது செய்யப்பட்டனர். திமுக ஆட்சியும் கலைக்கப்பட்டது. பலரை சிறையில் அடைத்து பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். 

பத்திரிகைகள் மீது கடும் தணிக்கை அமலுக்கு வந்தது. தணிக்கைக்குப் பின்னர்தான் நாளிதழ்கள் அச்சாயின. ஒவ்வோர் இரவும் பத்திரிகை அலுவலகங்கள் உத்தரவுகளுக்காக நள்ளிரவு வரை காத்திருந்தன. தமிழகத்தில் தினமணி, விடுதலை, முரசொலி, தீக்கதிர், துக்ளக் போன்ற நாளிதழ்கள் கடும் தணிக்கைக்கு ஆளாகின. பல பக்கங்கள் அச்சிடப்படாமல் வெள்ளையாகவும் அல்லது கறுப்பாகவும் எதிர்ப்பைப் பதிவு செய்யும் விதமாக வெளிவந்தன.

நெருக்கடிநிலை காலகட்டத்தில் கோழிக்கோட்டில் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்ட மாணவர் ராஜன் வீடு திரும்பவே இல்லை. பொறியியல் படித்து வந்த ராஜனைத் தேடி அலைந்த பெற்றோர்,  இறுதியாக வழக்கு தொடர்ந்தனர்.  ‘என் மகன் உயிரோடு இருக்கிறானா, இல்லையா?’  என்கிற அந்தப் பெற்றோரின் கேள்வி இந்திய மனசாட்சியை உலுக்கியது.    ராஜன் வழக்கு, நாவலாகவும் திரைப்படமாகவும் பின்னர் வெளிவந்தது.

அரசு, மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்துவருவது தொடர்பான வழக்கு ஒன்றில்,  “குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகள் என்பது அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பே இருந்து வருகிறது. அதைப் பறிப்பதற்கான அதிகாரம் அரசுக்கு என்றுமே கிடையாது”  என இந்திரா அரசுக்கு எதிராக நீதிபதி ஹெச்.ஆர்.கன்னா (ஏ.த.ஓட்ஹய்ய்ஹ) தீர்ப்பளித்தார்.

அதன் பிறகு, இந்திரா காந்தி தனது 20 அம்சத் திட்டத்தை அறிவித்தார். ஆனால், அவை நாட்டு மக்களைக் கவரவில்லை. 1977, ஜனவரி 18 அன்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, தேர்தல் நடத்தப்படும் என அறிவிப்பு வெளிவந்தபோதுதான், மக்களின் முகங்களில் புதிய நம்பிக்கையின் ஒளிக்கீற்று தென்பட்டது.

தேர்தல் பிரசாரத்தின்போது இந்திரா காந்தி ஊர் ஊராகச் சென்று மன்னிப்புக் கோரினார். தேர்தல் நடைபெற்றது. அதில் இந்திரா காந்தியும், சஞ்சய் காந்தியும் மாபெரும் தோல்வியடைந்தனர். ஜனதா கட்சி,  மாபெரும் வெற்றி பெற்று, அரசை அமைத்தது.  ஜனதா அரசு, தனது முதல் அரசாணையில் அவசரகால நிலையை ரத்து செய்தது. ஒருவழியாக அவசரநிலை, 1977 மார்ச் 21ஆம் நாள் முடிவுக்கு வந்தது.

எப்போதெல்லாம் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகிறதோ, அப்போதெல்லாம் அரசியல் இயக்கங்கள்,  வெகுஜன மக்கள் தலைவர்கள் கொந்தளித்து எழுவார்கள் என்பது தெளிவாயிற்று. அவை சர்வாதிகாரத்துக்கு எதிரான சவாலாக, வலிமை கொண்டு எழுந்து நின்றது.

வர்க்கப் போராட்டங்கள் வன்முறையின்றி தீர்வு கண்டதாக சரித்திரம் இல்லை. என்று சொன்னவர் மார்க்ஸ். அதை தீவிரமாகக் கடைபிடித்தவர் லெனின். பலாத்காரத்தைக் கையாண்டு அதிகாரத்தைக் கைப்பற்றினார் லெனின்.  அவரையும் ஒரு சாதாரணப் பெண் 1918இல் துப்பாக்கியால் சுட்டார். அந்தத் துக்கத்திலேயே, அவர் நோய்வாய்ப்பட்டு 1922இல் இறந்துபோனார். ஸ்டாலின் காலத்தில் 7 லட்சம் கைதிகளை சுட்டுக் கொலை செய்திருக்கிறார்.

கவிஞர் சுராகி

சர்வாதிகாரத்தை தன் கையில் வைத்து ஆட்டம் ஆடிய ஹிட்லரின் அரசியல் ஆலோசகர்  முசோலினியும், அவரது மனைவியும் எப்படி இறந்தார்கள் தெரியுமா?  அவர்கள் இருவரையும் இத்தாலி மக்கள் பொதுவெளியில் பெட்ரோல் நிலையத்தில் தலைகீழாகத் தொங்கவிட்டு, பெட்ரோல் ஊற்றி எரித்தார்கள். இதை அறிந்த ஹிட்லர், வெளி உலகத்திற்கு வராமல் பதுங்கு குழியில் தன் குடும்பத்தோடு விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். பல கம்யூனிச நாடுகளில் கூட, சர்வாதிகாரம் தொடர்ந்து நிலைத்ததில்லை.

1977இல் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படாமல் இருந்திருந்தால், இந்திராவிற்கும் இந்த கதியே நடந்திருக்கும். ஆயினும், விதிவசமாக அவர் மரணம் துர்மரணமாக ஆனது.

அன்றைக்கு ஜனநாயகத்தைக் காப்பாற்றி, முழுவதுமாக நாட்டைப் பாதுகாத்தவர்கள், காப்பாற்றியவர்கள் ஜனதா கட்சியில் இருந்த ஜனசங்கத்தினர், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த தொண்டர்கள் தான்.  அவர்களது வழித்தோன்றல்களே இன்றைய பாஜக. அவர்களின் வழியில் இந்திய ஜனநாயகம் உலக அரங்கில் சிறந்து விளங்குகிறது.

.

எழுத்தாளர் அறிமுகம்:

சுராகி என்கிற சு.ராதாகிருஷ்ணன் 1951இல் திருவொற்றியூரில் பிறந்தார்.  1965இல் ஆர்.எஸ்.எஸ்.சில் இணைந்தார்.  1973இல் அதன் முழுநேர ஊழியர் ஆனார்.  1975இல் நெருக்கடி நிலை காலத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் இருந்தார்.

நெருக்கடி நிலை நீங்கிய பிறகு, 1977இல்  ‘திருவொற்றியூர் இலக்கியப் பேரவை’ தொடங்கி, கவிஞர் நா.காமராசன், நா.பார்த்தசாரதி, மு.மேத்தா, கவிஞர் மோகனரங்கன் போன்ற இலக்கிய சிந்தனையாளர்களைக் கொண்டு கவியரங்கம், கருத்தரங்களை நடத்தி இருக்கிறார்.

1979இல் விம்கோ தொழிற்சங்கத்தில் பணியாற்றினார்.  ஜனசங்கத்தின் தொழிற்சங்க அமைப்பான பாரதீய லேபர் யூனியனின் மாநில இணை அமைப்பாளராகச் செயல்பட்டார். 1980லிருந்து பாஜக-வில் பல்வேறு பொறுப்புகளில் வலம் வந்தார்.

மதுரை பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டம் படித்தார். நல்ல கவிதைகள் படைத்தார். இவரது கவிதைகள் சென்னை வானொலியில் ஒலிப்பரப்பாகியுள்ளன.  கவிதைகள், கட்டுரைகள்,   தியாகபூமி, ஒரே நாடு, விஜயபாரதம், தாமரை, அலை ஓசை, தினமலர் ஆகிய ஏடுகளில் வெளிவந்துள்ளன.

இவர் ஆந்திரா தெலுங்கு அகாதெமியின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்துள்ளார். வேதாத்ரி மகரிஷியின் மனவளக்கலை மன்றம் திருவொற்றியூரில் தொடங்க காரணமாக இருந்தார். விவேகானந்தா பள்ளி திருவொற்றியூரில் தொடங்க வித்திட்டவர்களில் இவரும் ஒருவர்.

பன்முகத் தன்மை கொண்ட இவர், பன்னாட்டு லயன்ஸ் சங்கத்தில் மாவட்டத் தலைவராக, வட்டாரத் தலைவராக, மண்டலத் தலைவராக வலம் வந்திருக்கிறார்.  இப்போது லயன்ஸ் இயக்கத்தின்  மாதாந்திர வெளியீடான The DEN  இதழின் ஆசிரியராக இருக்கிறார். பாஜகவின் அதிகாரபூர்வ வார ஏடான ஒரே நாடு இதழில் தொடர்ந்து அரசியல் கட்டுரைகளை எழுதி வருகிறார்.

இவர்  ‘ஆர்எஸ்எஸ் பயங்கரவாத இயக்கமா?’,  ‘100 ஆண்டுகளுக்கு மேல் வாழ வேண்டுமா?’,   ‘கலங்கிப்போன கம்யூனிசம்’  போன்ற நூல்களை எழுதியிருக்கிறார்.

$$$.

One thought on “எமர்ஜென்சியின் பொன்விழா ஆண்டு

  1. தங்களின் ஆற்றல்மிகு பணி சிறப்பானது.

    தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்

    என் எஸ் கலைவரதன் புதுச்சேரி

    Like

Leave a comment