-ஷெசாத் பூனாவாலா
பாஜக-வின் தேசிய செய்தித் தொடர்பாளர்களுள் ஒருவரான திரு. ஷெசாத் பூனாவாலா ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் எழுதிய கட்டுரை இங்கு நன்றியுடன் மீள்பதிவாகிறது....

.
ஜூன் 25 ஆம் தேதியை அரசமைப்பு பாதுகாப்பு தினமாக நரேந்திர மோடி அரசு அறிவித்தது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஜூன் 25 ஆம் தேதியன்று அப்போதைய பிரதமர் நெருக்கடி நிலையை அமல்படுத்தினார். அது நம் நாட்டின் ஜனநாயக வரலாற்றில் கருப்பு தினமாகும்.
நாடகம்
இந்திரா காந்தி அரசமைப்பு சாசனத்தை அவமதித்தார்; எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெறித்தார்; சர்வாதிகார இருளில் இந்தியாவை மூழ்கடித்தார். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அரசு அமைப்பை அடித்து நொறுக்கிய கட்சி இன்று அரசமைப்பை பாதுகாப்ப போவதாக வேடமிடுகிறது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அண்மையில் இந்த நாளிதழில் (மேட்ச் பிக்சிங் – மகாராஷ்டிரா / தி இந்தியன் எக்ஸ்பிரஸ் , 07.06.2025) எழுதிய கட்டுரையில் இந்திய தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு மகாராஷ்டிரா மாநில தேர்தலின் போது மேட்ச் பிக்சிங்கில் (தேர்தல் முடிவை முன்கூட்டியே தீர்மானித்தல்) ஈடுபட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். அவரது பிற்போக்குதனம் தலைசுற்ற வைப்பதாக இருக்கிறது.
ஆன்மாவை நசுக்கியவர்கள்
தற்போதுள்ள ஜனநாயக வழிமுறைகளின் மீது எந்தவிதமான ஆதார மும் இன்றி குற்றம் சாட்டும் ராகுல் காந்தி , தன் சொந்தக் குடும்பம் மற்றும் குடும்பக் கட்சி நெருக்கடி நிலையின் போது ஜனநாயகத்தின் ஆன்மாவை நெரித்துக் கொன்றதை கருத்தில் கொள்ளாமல் வசதியாக மறந்துவிட்டார்.
அரசமைப்பின் அடிப்படைப் பண்புகளின் மீது நடந்த கொடூரத் தாக்குதலே நெருக்கடி நிலை அறிவிப்பு. அரசமைப்பு உறுதி கூறும் ஜனநாயக குடியரசு என்பதை இந்திரா காந்தி ஒழித்துக் கட்டினார். அவரது வார்த்தைகள் சட்டமாகின; அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டன; தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டன.
நீதியின் வாய் பூட்டப்பட்டது
கேசவானந்த பாரதி வழக்கின் மூலம் நீதித்துறை நிலைநாட்டிய அரசமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பு, நாடாளுமன்றத் தீர்மானங்கள் மூலம் பொருளற்றுப் போகும்படி செய்யப்பட்டது. இந்திராவின் சொல்லே சட்டமானது. 42 ஆவது சட்டத் திருத்தம் மூலமாக ‘அரசு நிர்வாகம் யாருக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை’ என்றானது. நீதிமன்றத்தின் அதிகாரம் அலட்சியப் படுத்தப்பட்டது. அரசு நிர்வாகம் நீதிமன்றத்துக்கு பதில் அளிக்கத் தேவையில்லை என்றானது.
ஊடக அடக்குமுறை
356 சட்ட பிரிவைப் பயன்படுத்தி மாநில அரசுகள் கலைக்கப்பட்டன. பணி மூப்பு அடிப்படையில் என்றில்லாமல் தன் துதிபாடுகளை உயர்மட்ட நீதிபதிகளாக பிரதமர் இந்திரா நியமித்ததால் நீதித்துறையின் சுதந்திரமும் முடக்கப்பட்டது. ஊடகங்களின் வாய் கட்டப்பட்டது. செய்தித்தாள்கள் அரசின் புகழைப் பாடும்படி கட்டாயப் படுத்தப்பட்டன; மறுத்த செய்தியாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
செய்தி ஊடகங்களின் தணிக்கைக்கு எதிராக ராம்நாத் கோயங்காவின் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தித்தாள் தலையங்கம் பகுதியை காலியாக விட்டு (வெற்றிடமாக விட்டு) வெற்று தலையங்கத்தின் மூலம் தன் எதிர்ப்பைத் தெரிவித்தது.
காங்கிரஸ் செய்தது கொடூரக் கொலை
மேற்சொன்னவை எல்லாம் மேட்ச் பிக்சிங் இல்லை… மாறாக ஜனநாயக அமைப்புகளைக் கொலை செய்வதுதான் என்று ராகுல் காந்தி சொல்வாரா ? இந்திரா ஆட்சியின் வரம்பு மீறல் யாரையும் விட்டு வைக்கவில்லை. கலைஞர்களும் கவிஞர்களும் இலக்கியவாதிகளும் ஒடுக்கப்பட்டார்கள்.
பிரபல பாடகர் கிஷோர் குமார் நெருக்கடி நிலையை ஆதரிக்க மறுத்ததற்காக அவரது பாடல்கள் அகில இந்திய வானொலியிலும் தூர்தர்ஷனிலும் தடை செய்யப்பட்டன.
வேட்டையாடப்பட்டவர்கள்
சாதாரண மக்கள், குறிப்பாக முஸ்லிம்கள், சஞ்சய் காந்தியின் மக்கள்தொகை கட்டுப்பாட்டு இயக்கம் என்ற பெயரில், கட்டாய கருத்தடை செய்யப்பட்டனர் . அரசியல் எதிர்ப்பாளர்கள் வேட்டையாடப்பட்டனர். அரசியல் ஆர்வலர்கள், செய்தியாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் என ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் எந்த விசாரணையும் இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் இப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நெருக்கடி நிலை காலகட்டத்தில் சிறையில் இருந்த போது தனது தாயாரின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள கூட அனுமதி மறுக்கப்பட்டதை நினைவு கூர்ந்தார்.
ஜெ.பி. இயக்கம்
காங்கிரசின் அடக்குமுறை ஆட்சிக்கு எதிரான இயக்கத்தை நடத்திய காந்திய சோஷலிஸ்டான ஜெயபிரகாஷ் நாராயணன் போன்ற உயர்ந்த தலைவர்கள் குறிவைக்கப் பட்டனர் . ஜே.பி. இயக்கத்தில் முன்னணி தலைவர்களாக இருந்து காங்கிரஸ் ஆட்சிக்கு , கட்சிக்கு எதிராகச் செயல்பட்ட முலாயம் சிங் , லாலு பிரசாத் போன்ற சோஷலிஸ்ட் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்தத் தலைவர்கள் காங்கிரஸின் சர்வாதிகாரத்துக்கு எதிராகச் செயல்பட்டார்கள். ஆனால் இன்று இந்தத் தலைவர்களும் இவர்களது கட்சிகளும் காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்துக்கொண்டு சொகுசாக இருப்பது ஒரு வரலாற்றுச் சோகம் தான்.
மன்னிக்க முடியாத துரோகம்
அக்காலத்தில் ஆயிரக்கணக்கானோர் எந்த விசாரணையும் இன்றி மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதன் நினைவாகவே, லாலு பிரசாத் தன் மகளுக்கு ‘மிசா’ என்று பெயரிட்டார். இன்று அப்படியே திரும்பி காங்கிரசுடன் கைகோத்திருப்பது தங்களது கொள்கைகளுக்கு மட்டுமல்ல இவர்கள் பேச்சைக் கேட்டு காங்கிரசின் அடக்கு முறையை எதிர்த்து தியாகம் செய்த எண்ணற்ற இந்தியர்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும்.
ஜனநாயக ஆட்சியா, குடும்ப ஆட்சியா?
நெருக்கடி நிலை அறிவிப்பு வெறும் நிர்வாகத் தவறு அல்ல. மாறாக ஜனநாயக ஆட்சியை விட குடும்ப ஆட்சி உயர்வானதென்று நிறுவுவது ஆகும். காங்கிரஸ் இன்றும் அதைத் தொடர்கிறது.
இந்திய தேர்தல் ஆணையம் பக்கச்சாய்வுடன் செயல்படுவதாக எந்த அடிப்படை ஆதாரமுமின்றி இன்றி குற்றம் சாட்டும் காங்கிரஸ் கட்சி, தான் ஆளும் தெலுங்கானா, கர்நாடகாவில் செய்தியாளர்களையும் சமூக ஊடகவியலாளர்களையும் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளது; சில முக்கிய செய்தியாளர்களை பகிஷ்கரிக்கிறது; சிலரை கைது செய்துள்ளது.
இவையெல்லாம், வரலாற்றில் அவர்கள் இழைத்த குற்றங்களால் எந்த விதமான குற்ற உணர்வும் அவர்களுக்கு ஏற்படவில்லை என்பதையே வெளிப்படுத்துகின்றன. தவிர, அரசமைப்பு சட்டத்தை அவர்கள் மதிக்காமையையும் காட்டுகிறது.
அவர்கள் உயர்ந்த மாண்புகளின் மீது மரியாதை காட்டுவதில்லை. மாறாக தங்களது நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் மட்டுமே மதிப்பார்கள் என்பதையெ இவை காட்டுகின்றன.
வென்றால் சரி, தோற்றால் ‘மேட்ச் பிக்சிங்’கா?
தெலுங்கானாவிலும் கர்நாடகாவிலும் காங்கிரஸ் வெற்றி பெறும்போது மட்டும் தேர்தல் ஆணையம் சரியாக செயல்படுகிறது. மகாராஷ்டிராத்திலும் ஹரியானாவிலும் தோற்கும் போது தேர்தல் ஆணையம் மேட்ச் பிக்சிங் செய்கிறது என்று குற்றம் சாட்டுவது சுயநலம் அல்லவா?
ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் இருண்ட கால வாரிசு என்பதிலிருந்து தப்ப முடியாது. 356 வது சட்டப்பிரிவை மீண்டும் மீண்டும் பயன்படுத்தி குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியது அவர்களுக்கு சட்ட அரசமைப்பு சட்டத்தின் மீதிருந்த வெறுப்பையே காட்டுகிறது; குறுக்கு வழியில் அதிகாரத்தைக் கைப்பற்றும் வெறியைக் காட்டுகிறது.
காங்கிரஸூம் 370 வது சட்டப்பிரிவும்
அம்பேத்கர் இயற்றிய அரசமைப்பு சட்டத்தை ஜம்மு காஷ்மீரில் பல பத்தாண்டுகள் நடைமுறைப்படுத்தப்பட முடியாமல் தடுத்த, மற்றும் எஸ்.சி, எஸ்.டி. இட ஒதுக்கீட்டை அம்மாநிலத்தில் நடைமுறைப்படுத்த விடாமல் தடுத்த 370 மற்றும் 35 ஏ சட்டப்பிரிவை நீக்கியதை காங்கிரஸ்காரர்கள் ஏன் எதிர்க்கிறார்கள்?
இட ஒதுக்கீடு மத அடிப்படையிலா?
அரசமைப்பு சட்டத்திற்கு முற்றிலும் எதிரான மதரீதியான இட ஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்குக் கொடுக்க தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களில் துடிப்பது ஏன்? பாஜக அரசமைப்பு சட்டத்தை மாற்ற முனைவதாக ராகுல் குற்றம் சாட்டுகிறார். ஆனால், உண்மையில், அவரது குடும்பமும் கட்சியும் தான் அதை மிதிக்கின்றனர்.
இந்திய ஜனநாயகத்தை நசுக்கிய நெருக்கடி நிலைக் கால அறிவிப்புதான் உண்மையில் ‘மேட்ச் பிக்சிங்’. அது விதிவிலக்காக இல்லாமல் , காங்கிரஸ் ஆட்சி முறையை வரையறை செய்வதாக பல பத்தாண்டுகளாக நீடித்து வருகிறது.
வருத்தமல்ல… நியாயப்படுத்துவது
காங்கிரஸ் அந்த இருண்ட காலம் பற்றி உண்மையில் வருத்தப்படுவதாகத் தெரியவில்லை. மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கொடுமைக்குள்ளானவர்களுக்கு மாத ஓய்வுதியம் வழங்க பாஜக ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டது. அந்த அரசு ஆணையை பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் அரசு திரும்பப் பெற்றுக் கொண்டு, தியாகிகளின் ஓய்வூதியத்தை நிறுத்தியது. அதன மூலம் இருண்ட நெருக்கடி காலகட்டத்தை நியாயப்படுத்தியது.
கண்ணாடியில் காங்கிரஸ் முகம்
அரசமைப்பு சட்ட பாதுகாப்பு தினத்தின் பொன்விழா ஆண்டு, அரசமைப்பைப் பாதுகாக்க வேண்டும் என்று ஒவ்வொரு குடிமகனுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதுமட்டுமல்லாமல் , அன்று அரசமைப்பைக் கொலை செய்துவிட்டு இன்று அதைக் காப்பதாக நாடகமாடுபவர்களுக்கு, அவர்களின் உண்மையான முகத்தை அவர்கள் முகத்தெதிரே காட்டுவதாகவும் அமையட்டும்.
- நன்றி: தி இந்தியன் எக்ஸ்பிரஸ் (01-07-25)
- தமிழில்: திருநின்றவூர் ரவிகுமார்
$$$