செண்பகவல்லித்தாயே வாராயோ…

-கருவாபுரிச் சிறுவன்

தென் தமிழகத்தில் உள்ள திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய நான்கு மாவட்ட மக்களின் 80 ஆண்டுகாலக் கோரிக்கை, உடைபட்ட செண்பகவல்லி அணையைச் சீரமைக்க வேண்டும் என்பது. அதற்கான போராட்டங்கள் தற்போது உச்சமடைந்து வரும் நிலையில், அதுகுறித்த முழுமையான விவரங்களை இலக்கியச் சுவையுடன் இங்கு முன்வைக்கிறார் திரு. கருவாபுரிச் சிறுவன்....

தாரமர் கொன்றையும் செண்பக
  மாலையும் சாத்தும் தில்லை
ஊரர் தம்பாகத் துமைந்தனே 
  உலகேழும் பெற்ற
சீரபிராமி யந்தாதி எப்போதும்
  என் சிந்தையுள்ளே
காரமர் மேனிக் கணபதியே
  நிற்கக் கட்டுரையே! 

-என உயிர்களின் இடர் நீக்கி இன்பம் நல்கும் கணபதி என்னும் களிற்றினையும், திருவருள் நல்கும் தில்லை நாயகனையும், எண்ணில்லா கோடிக்கணக்கான உயிர்களை பல யுகங்களாக புரந்து காக்கும் திருவாட்டி அபிராமியம்மையையும் பட்டர்பிரான்  காப்புச் செய்யுளாக போற்றிப் பணிவார்.

அதன் பின்பு  அவரின் உள்ளத்தில் இருந்து அருள் வெள்ளமாக ஊற்றெடுத்து வருவது  அபிராமி அந்தாதி என்னும் வாடாப் பாமலைகள்.

அதைப்போல சற்குரு கணபதியின் அருளால் உருவான  இக்கட்டுரையைப் படிப்பவர்கள் உள்ளத்தில் கருத்தூன்றி  செண்பகவல்லி தடுப்பணைக்கு நிரந்தரத் தீர்வு ஊற்றெடுத்து வருவதற்கு முதலில் வேண்டுகிறோம்.

***

அபிராமியந்தாதியை  படித்து பாராயணம் செய்து இன்புறுவோர் பலர். இதில் அம்மையப்பனுக்கும் உகர்ந்தது   கொன்றையும் செண்பகமாலையும் என்ற வரிகளின் வழியே,  ‘சாம்பேயகுஸூமப் பிரியை நமஹ’ என்ற சுருதி வாக்கியத்தினால் செண்பகப்பூ வை அன்னை பார்வதி தேவி விரும்பி அணிவாள் என்பதை நமக்கு அழகாக தெளிவுபடுத்தி தெரியப்படுத்துகிறார்  திருக்கடவூர் அபிராமி பட்டர்.

இப்பகுதியில் தோன்றிய திரிகூடராசப்ப கவிராயர் அவர்களும்,

 அம்பரத்தின் இடைதோன்றும் மாருதம் போல்
   அம்பரத்தில் அருளாய்த் தோன்றி
அம்பரத்தின் அம்பரவான் ஒருதனுப் போல்
  இருதனுவும் அமைந்தொன்றாகி
அம்பரத்தின் விசிகரம் போல் அத்துவிதமாகி 
   அண்டமனைத்தும் ஈன்றாள்
அம்பரத்தின் அமர்கடந்த அருள்விழிச் செண்பகக்
   கோதை அடிசார்ந்து உய்வாம்.

-என  திருக்குற்றால தலபுராண பாயிரச்செய்யுளில் மலையின் மீது இருக்கும் செண்பகவல்லித்தாயின் திருவடியே  நாம் அனைவரும் அகவாழ்வில் உய்வதற்கு உண்டான ஒப்பற்ற ஒரே வழி என சொல்லி வழி காட்டுகிறார். அதைப்போல தென்தமிழகத்தில் உள்ள இந்த நான்கு மாவட்ட மக்களும், இம்மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளும் புறவாழ்வில்  மேன்மை அடைவதற்கு செண்பகவல்லி தடுப்பணை தண்ணீரே நிரந்தர வழி என்கிறார்கள் இப்பகுதியை சார்ந்த நல்லுள்ளம் கொண்ட நல்லவர்கள்.

கருணை, அன்பு, இரக்கம், தயவு  நிறைந்த பூமி, மழை, தண்ணீர், அருவி என வளங்கொடுக்கும் யாவற்றையும் அன்னையாகப் போற்றி வணங்கி வழிபடுவது நமது பண்டைய மரபு. அதன் அடிப்படையில் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் குற்றால அருவிகளில் அழகு சேர்க்கும் வரிசையில் செண்பக அருவியும் ஒன்றுண்டு என்பதை நினைவில் கொள்க.

பொய்யற்ற நக்கீர தேவநாயனார் என,  அருளாளர்களால் புகழப்பெற்றவருக்கும், புலவர் தருமிக்கு பொற்கிழியை பெற்றுத் தந்தவருக்கும்  அரசரான மன்னனின் பெயர் செண்பக பாண்டியன் என்பதை மனதில்  கொள்க.

இப்பாரத சுதந்திரத்திற்கு புரட்சிகள் பல செய்து இன்றும் உத்தம அன்பர்களின் மனதில் நீங்காது இடம் பெற்றிருக்கும் வ.உ.சிதம்பரனார், தேசியகவி பாரதியாரையும் தந்தது இன்றைய துாத்துக்குடி மாவட்டம். இம்மாவட்டத்திற்கு உட்பட்ட கோவில்பட்டி தலத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் அம்பிகையின் திருநாமம் செண்பகவல்லியம்மை. இத்தலத்தின் சிறப்புகளையெல்லாம் விருதை சிவஞானயோகிகள் இயற்றிய கோயிற்பட்டி  புராணத்தில் விரிவாகக் காணலாம்.

பலரும்  செண்பா, செண்பகம், செண்பக வல்லி, செண்பகராஜன், செண்பகமாறன், செண்பகக்கோன்  என தன் சந்ததியினருக்கு பெயர் வைப்பதை இங்கு கண்கூடாக காண்கிறோம்.

ஆக, செண்பகவல்லி தடுப்பணைக்கும், அதில் வரும் நன்னீருக்கும் கேரளாஅரசு இன்று சொந்தம் கொண்டாடினாலும், செண்பகவல்லி தடுப்பணையின் மூலத்திற்கும், மூலாதாரத்திற்கும் முழுக்க முழுக்க சொந்தக்காரர்கள் இன்றைய தென்காசி, விருதுநகர், துாத்துக்குடி, ராமநாதபுர மாவட்டத்தில் வாழும் தமிழ் மக்களும், விவசாயப் பெருங்குடிகளும் என்பதை அழுத்தம் திருத்தமாகவும் அமைதியாகவும்  மனதில்  கொள்வோமாக.

***

நமது நூல்கள் 

ஹிந்து மதத்தின் முக்கிய நூல்களாக விளங்குபவை  நான்கு வேதங்கள், இருபத்தெட்டு ஆகமங்கள், பதினெண் புராணங்கள், இருபெரும் இதிகாசங்கள் மற்றும் நூற்றியெட்டு உபநிஷத்துக்கள், பன்னிரு திருமுறைகள், பதினான்கு சாஸ்திரங்கள், நாலாயிரத் திவ்ய பிரபந்தங்கள்  மற்றும் இவற்றின் வழி வந்த ஏனைய  அருள் நுால்கள். இவை யாவும் ஒரே கருத்தினை மையமாக வைத்து விரிவாக மக்களுக்கு நல்வழியைப் போதிக்கின்றன.

 இன்றும் நீதிநெறியோடு மக்கள் ஒழுக்கமாகவும் சன்மார்க்கத்தோடும்  வாழ்வதற்கு இவையாவும் அடிப்படை. இந்நுால்கள் யாவும்  மக்களின் உயர்வு, மேன்மை  கருதி தெய்வநிலைக்கு உயர்த்த எழுந்தவை என்பது சான்றோர்கள் துணிபு.

செண்பகவல்லி அணையில் தமிழகத்தின் உரிமை குறித்த வரைபடம்

ஐந்தாவது வேதம்

இருபெரும் இதிகாசங்களில் ஒன்றான  மகாபாரதம் ஐந்தாவது வேதம்.  இதனை வேத வியாசர் பகவான் சொல்ல விநாயகப் பெருமான் திருக்கரத்தால் எழுதிய தெய்வ நுால் என்னும்  சிறப்பினை உடையது. இதன் பெருமையை…

சீதப்பனிக் கோட்டு மால்வரை மேல் பாரதப் போர் தீட்டும்
தனிக்கோட்டு வாரணத்தின் தாள் …

*

நீடாழி உலகத்து மறை நாலோடு ஐந்து என நிலை நிற்கவே
வாடாத தவவாய்மை முனிராஜன் மாபாரதம் சொன்ன நாள்
ஏடாக வடமேரு வெற்பு ஆக அம்கூர் எழுத்தாணி தன்
கோடாக எழுதும் பிரானைப் பணிந்து அன்பு  கூர்வாம் அரோ!

-என்று பெருந்தேவனாரும், வில்லிப்புத்தூராழ்வாரும் போற்றுகிறார்கள்.

இவ்வுலகில் பெயரையும், புகழையும் விரும்பக்கூடிய மனிதர்களே அதிகம். அவர்கள்  ஏழு வகையான காலந்தோறும் எழுந்து நிற்கின்ற  நிலையான  தர்மங்களை மேற்கொண்டு வழுவாமல் செய்தார்கள் என்றால் அது அவர்களுக்கு நற்பெயரையும் அழியாப்புகழையும் பெற்றுத்தரும்.

அதுவே அவர்களுக்கும் அவர்களது சந்ததியினருக்கும் மூவேழு  தலைமுறைக்கும் பாதுகாப்பாய் இருந்து சகல செளபாக்கியத்தையும் கொடுக்கும் என்பது அனுபவஸ்தர்களின் வாக்கு.  இதுவே  உயர்ந்த மனிதர்களுக்குரிய அடையாளம் என்னும் லட்சணங்களாகும்.  இந்த ஹிந்து தர்மங்களை நாவழுத்துமாறு புகழலாம் என்கிறார் வில்லிபுத்தூராழ்வார்.

ஆமாம், அந்த தர்மங்கள் தான் என்னென்ன… இதனை ‛ஸப்த ஸந்தானம்’ என்று குன்றக்குடி மேல மடம் நான்காவது பட்டத்தலைவர் ஸ்ரீ கணபதி ஸ்வாமிகள் போற்றி அதனை நிகழ்த்தியும் காட்டியுள்ளார்கள்.

தேடினார் யாவரே கொல் எழு வகையானும் சீர்த்தி
நீடினார் அவரே என்பார் நீணிலத்து  உயர்ந்த மாந்தர்
பாடினார் யாவர் யாவர் பாடுவித்தார் கொலென்று
நாடினார் தெளியும் வண்ணம் நவையற நவிலலுற்றேன்.

* உத்தம அந்தணர்களுக்கு இருப்பிடம்  அமைத்து கொடுத்தல்

* வறியவர்களுக்காக அன்னச்சத்திரம் கட்டுதல்

* ஆர்வமுடையவர்களுக்கு கல்விச்சாலை அமைத்தல்

* உயிர்கள் உய்யும் பொருட்டு கோயில்களில்  திருப்பணி செய்தல்

* கோயில்களில் வழிபாடு தடையில்லாமல் நடைபெற  நீர்நிலைகளை உருவாக்குதல், நந்தவனம் அமைத்தல்

* தூர்ந்து போன அவற்றை செப்பனிட்டு, மராமரத்துப் பணி செய்து பராமரித்தல்

* இதன் மகத்துவங்களை எல்லாம் தம் சந்ததியர்களும் தெரிந்து கொள்ள திருநூற்களை  உருவாக்குதல்.

இந்த பாரததேசத்தில் உள்ள  புண்ணிய பூமிகளில் முக்கியமானது தமிழகம்.   ‘மாதவம் செய்த தென்திசை’  என்று தெய்வச்சேக்கிழார் சுவாமிகளும்,   ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்று தேசியகவியும்,  ‘புண்ணியம் செய்த புனித பூமி இத்தமிழகம்’ என்று சுவாமி விவேகானந்தரும்,  ‘தமிழகத்தில் பிறப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்’ என்று பசும்பொன் முத்துராம லிங்க தேவரவர்களும், இன்னும் எத்தனையோ ஆன்றோர்களும், சான்றோர்களும்,  போற்றி புகழ்ந்து வணங்கி  இருக்கிறார்கள்.

இத்தேசம் சுதந்திரம் அடைவதற்கு முன்பு வரை இந்த ஏழு வகையான தர்மங்கள் யாவும் இத்தமிழகத்தில் போற்றப்பட்டு வந்தன. அவற்ரை நம் தேசத்து மன்னர்களும், ஜமீன்தார்களும் நிலச்சுவான்தாரர்களும், செல்வந்தர்களும் கடைப்பிடித்து அனுசரித்து ஒழுகி அதன்படி நடந்து  வந்தார்கள். பிரஜைகளாகிய மக்களும் போட்டி, பொறாமை இன்றி ஒற்றுமையாக வாழ்ந்தார்கள். வாழ்ந்து காட்டினார்கள்.

ஆனால் இன்றைய நிலையோ வேறு. மேற்கண்ட அந்த பொதுவான  தர்மங்கள் யாவும் போலிச்சுதந்திரம், வறட்டு சுயமரியாதை, சமத்துவ சமதர்மம், பெண்ணுரிமை, பார்ப்பன எதிர்ப்பு ஆகியவற்றின்  பிறப்பிடமான நாத்திகக்  கட்சிகளால் வியாபாரமாகி விட்டன.  கூச்சல், குழப்பம், வீண் தம்பட்டமே இங்கு எஞ்சி நிற்கின்றன.

ஊழல்களும்,  நியாயமற்ற தன்மையும் மிதமிஞ்சியும் வரைமுறையற்று விஞ்சியும் தாண்டவமாடுகிறது. மனம் போக்கில் கொண்டதே கோலம், கண்டதே காட்சி என்கிற நிலையில் எங்கும் எதிலும் மக்கள் தன்நிலை மறந்து  நிலையானது எது என்பது தெரியாமல் அர்த்தமற்ற வாழ்க்கையை  வாழ்ந்து வருகிறார்கள். நிதானமாக சிந்தித்துப் பார்க்க.

நீரின்றி யாருமில்லை 

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஞானச்சூரியனாகிய  திருவள்ளவ தேவ நாயனார் அவருடைய  ஞானதிருஷ்டி மூலம்  தந்தது  ‛திருக்குறள்’. தண்ணீரின் சிறப்பினைப் பேச வந்த திருவள்ளுவ தேவ நாயனாரின்   திருக்குறள் ஒன்று ‛ நீரின்றி அமையாது உலகு’ என்கிறது. 

அதாவது நீர் இல்லாமல் இந்த உலகத்தில் எந்த உயிர்களும் நிலை பெற்று வாழ முடியாது. அந்த நீரை உலகத்திற்கு வழங்குகின்ற மழை இல்லையென்றால் இவ்வுலகில் எந்த ஜீவராசிகளும் வாழ முடியாது.

இவ்வுலகில் பெய்கின்ற மழையானது பெய்யாது எனில் நீர்நிலைகள் வற்றி, மரம் செடி கொடிகள் யாவும்  வறண்டு போய் உலகமே வெறுமையாகி விடும் என்பது அக்குறளின் பொருள் என்பதை கவனத்தில் கொள்க.

‘சென்றாடும் தீர்த்தங்கள் ஆனார் தாமே’ என்றார் திருநாவுக்கரசு சுவாமிகள்.

 ‘மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாய் தொடங்கினார்க்கு

 வார்த்தை சொலச்சற்குருவும் வாய்க்கும் பாரபரமே’ என்றார் தாயுமான சுவாமிகள்.

அருளாளர்களின் திருவாக்கின் வழியே நதிகளின் சிறப்பினை உணர்ந்த  நம்மவர்கள் சிவாலயங்கள்,  வைணவ ஆலயங்களில் தீர்த்தவாரி என்னும் பெருஞ்சிறப்புடைய விழாவினை நடாத்தி வந்தார்கள்.

தெய்வத்தின் மீதுள்ள பயபக்தியை  திருக்கோயிலில் இடம் பெற்ற ஏனைய பரிவார தெய்வங்களுக்கும், தலவிருட்சம் மற்றும்  தீர்த்தத்திற்கும் கொடுத்து நீர்நிலைகளின் முக்கியத்துவத்தைக் காத்து நின்றார்கள்; காப்பாற்றி வைத்தார்கள்.

இதை உணர்ந்தவர்களும்  எதிர்கால மக்களின் நலன் கருதி  நிலையான தர்மங்களை முன்னோர்களின் முதுமொழிக்கு ஏற்ப கோயில்களோடு  இணைத்து பாதுகாத்து புரந்தருளி வந்தார்கள்.

இன்றும் தமிழக கோயில்களின் தீர்த்தச்சிறப்பினை அந்தந்த தல புராணத்தின் வாயிலாக அறிந்துணர்ந்து மகிழலாம்.

காட்டாற்று வெள்ளம்

வானில் இருந்து பெய்யக்கூடிய மழையானது வீணாக கடலில் சென்று கலக்கிறதே என வருத்தப்பட்டார்கள் நம் முன்னோர்கள். தர்மநெறி வழியில் நிலப்பரப்பினை  நன்கு ஆராய்ச்சி செய்தார்கள். இரு மலைகளுக்கு நடுவே உள்ள பள்ளத்தாக்கில் சீறிப்பாய்ந்து வரும்  காட்டாற்று வெள்ளத்தை அணைகள், தடுப்பணைகள் மூலம்  கட்டி நிறுத்தி வைத்தார்கள்.

விளைநிலங்களுக்கு வேண்டிய நேரத்தில் அத் தண்ணீரைப் பயன்படுத்தி நாட்டினை வளத்தை காத்து மக்களின் பசியைப் போக்கி எப்போதும் பசுமைப் புரட்சியை உண்டாக்கி வைத்தார்கள்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே காவிரியில்  கரிகால் சோழன் கட்டிய கல்லணை, நிலையான தர்மத்திற்கு முதன்மை எடுத்துக்காட்டாகும். 

மேற்கு தொடர்ச்சி மலை

தென்னிந்தியாவில் உள்ள தமிழகத்தில் இருக்கும் கன்னியாகுமரி முனையில் தொடங்கி கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா,  குஜராத் வரை சங்கிலித்தொடர் போல் பரவி பாரத்தின் தெற்கு பகுதிக்கே  அரணாக விளங்குவது மேற்கு தொடர்ச்சி மலை. இம்மலையின் எண்ணற்ற பெருமைகளையும் சிறப்புகளையும் சிந்திப்பதற்கு இப்பிறப்பு போதாது.

‘திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி’   என்பது திருஞானசம்பந்த நாயனாரின் திருவாக்கு.  இத்திருநெல்வேலி மாவட்டத்திற்கு வளம் சேர்க்கும் புனித நதிகளில் முதன்மையானது தாமிரபரணி ஆறு.

மன்னர்கால ஆட்சி முடிவுற்ற பிறகு  பாளையக்காரர்களும்  ஜமின்களும் தமிழக நிலப்பரப்புக்களை அங்காங்கு  ஆட்சி செய்தார்கள். அவற்றில் ஒரு பிரிவினர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள  ஊற்றுமலை, சொக்கம்பட்டி,சிவகிரி, சேத்துார், தென்மலை, தேவதானம், தலைவன்கோட்டை போன்ற இடங்களை தலைமையாகக் கொண்டு நல்லாட்சி நடத்தினார்கள்.  மன்னர்களைப் போலவே இவர்களும் ஏழு வகையான தர்மத்தை நிலைநிறுத்தியுள்ளார்கள் என்பதற்கு குறிப்பிடத்தக்கதாகும்.

நன்னீர்துறை என்னும் நிட்சேப நதி

தென்தமிழக திருநெல்வேலி மாவட்டத்தில்  ஒரே நாளில் தரிசிக்க கூடிய பஞ்சபூத ஸ்தலங்களில் பிரதானமாக மக்களால் இன்றும் அறியப்படும் திருத்தலங்கள் 1. சங்கரன் கோவில்  2. கரிவலம் வந்த நல்லுார்.

சங்கரன் கோவிலில் பிரதானமாக ஓடிய கூழை நதி எங்குள்ளது என்று கண்டுபிடிக்கும் அளவிற்கு நதியை  ஆக்கிரமித்துக் கொண்டார்கள் அப்பகுதி மக்கள்.

கரிவலம் வந்த நல்லுாரில் பிரதான நதியாகிய நிட்சேப நதிக்கரையில் தான் அன்னை கோமதியம்பிகையின் பரமபக்தனான  பூலித்தேவரின் மருமகன்  ராஜ ரிஷி ராமர்பாண்டியரின் ஜீவசமாதி, அதிவீர ராம பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட மீனாட்சி சொக்கநாதர் கோயில்,  தென்பனையூர் ஆண்டவர்கள் என்று அழைக்கப்படும் சங்கரநாராயண சுவாமி, தெட்சிணாமூர்த்தி ஆகியோரின் அதிஸ்டானங்கள்,  வரதுங்கராம பாண்டிய மன்னரின் ஆத்மார்த்த நாயகனாகிய  பால்வண்ணநாதர் ஆலயம்,   கலிங்கப்பட்டி மேல மரத்தோணியில் உள்ள தோணியப்பர் திருக்கோயில்  போன்ற தெய்வ சான்னித்தியம் பொருந்திய  தலங்கள் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கரிவலம் வந்த நல்லுார் வழியாக பாயும் நிட்சேப நதி வற்றாமல் ஓடிய வழித்தடம் இன்றும் உள்ளது. இந்நதி  இத்தலத்தில் மட்டும் வடக்கு திசையில் பாய்ந்து கிழக்கு நோக்கி திரும்பி சீறிப்பாயும்  சிறப்பினை உடையது.

மலை சாயப்பாடிய சங்குப்புலவர் மரபில் உதித்த திருமலை வேற்கவிராயர் இந்நதியின் மகத்துவத்தை திருக்கருவை தலபுராணத்தில் பாடிப் பரவுகிறார்.

இப்புனித நதியில் தான் மகாத்மா காந்தியின் அஸ்தியை அன்றைய காந்தியவாதிகள் கரைத்து அந்நாளினை விழாவாக எடுத்து தர்மநெறியை பரப்பினார்கள்.   

செண்பகவல்லி தடுப்பணை மூலம்  வந்த தண்ணீர்  இப்பகுதி நன்கு செழித்துள்ளது  என்பதற்கு இப்பகுதியில் இன்றும் வெற்றிலைக்கொடி மடம்,வெற்றிலைக்கொடி வாய்க்கால்,   கொடிக்கால் தோட்டம், கொடிக்கால் கிணறு கொடிக்கால் வாய்க்கால், என்று மக்கள் மத்தியில் பேச்சு வழக்கில் உள்ளது என்பதும்,  இங்கு வசித்த பழைய குடியவர்களின் பத்திரங்களில் இப்பெயர்கள் நீங்காது இடம் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நதியில் தண்ணீர் வரத்து சுமார்  நாற்பது  ஆண்டுகளுக்கு மேலாக  நின்று விட்டது. காரணம் செண்பகவல்லி தடுப்பணை வாயிலாக வந்து கொண்டிருந்த தண்ணீர்  இன்றுவரை வரவில்லை என்பது உண்மையாகும்.

வாழ்க வளத்தோடு…

தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், சிவகரிக்கு மேற்கே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள செண்பகவல்லி கால்வாயின் தடுப்பணைச் சுவர்  இயற்கை சீற்றத்தால் உடைந்தது.

கடந்த இரு தலைமுறையாக  இப்பகுதி  லட்சோப லட்ச மக்களின் வாழ்வாதாரம் அன்றாடம் கேள்விக்குறியாகிக் கொண்டு இருப்பதை அலட்சியத்தோடு வேடிக்கை பார்த்து வரும்,  இப்பகுதியில் பதவி வகித்த, வகித்துக் கொண்டு இருக்கின்ற எம். எல். ஏ க்கள், எம். பி.க்கள் யாவரும்  வாழ்க வளத்தோடு வாழ்க  என வாழ்த்தி இவ்விஷயத்தினை சிந்திப்போமாக. 

செண்பக வல்லி அணை உருவாக்கம்:

கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில் ஆங்கிலேயர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவின் வளங்களைச் சுரண்டி கொள்ளையடித்துக் கொண்டிருந்த காலகட்டம். மன்னர் ஆட்சி மறைந்து ஜமின்தார்களின் ஆட்சி நிலவிய காலம் அது. அந்தந்த இனத்தைச் சார்ந்தவர்கள் அவரவர் வேலைகளை அக்கறையுடன் செய்த காலம் அது.

ஒருங்கிணைந்த திருநெல்வேலி பகுதியில் வாழ்ந்த மக்கள் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாத காலகட்டமது. எப்போதும் தர்மவழியில் நடக்க வேண்டும் என்ற வைராக்கிய சிந்தனையுடையவர்கள்  வாழ்ந்த காலம்.

இருப்பினும் பசிக்கொடுமையும், வறுமையும் அவர்களை  வாட்டியது. அதனால் தான் தர்மசத்திரங்களும், அன்னச்சத்திரங்களும் ஆங்காங்கு திறக்கப்பட்டன.

முழுமையாக இக்குறையை போக்க வேண்டும் என நினைத்தார்கள் நம் பகுதியை ஆண்ட ஜமீன்தார்கள். அதன் பயனே…  அன்றைய திருவாங்கூர் சமஸ்தானம், சிவகிரி ஜமின்தார்களுக்கும் இடையே  ஏற்பட்ட செண்பகவல்லி தடுப்பணை ஒப்பந்தம்.

அதன்  அடிப்படையில் ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்த சிவகிரி தாலுகாவிற்கு உட்பட்ட வனப்பகுதி அமைந்த மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியில்,  நிலையான தர்மங்களில் ஒன்றான நீர்நிலைகளை வளப்படுத்துதல் என்ற அடிப்படையில், 1733 ஆம் ஆண்டு செண்பக ராமன் பிள்ளை என்பவரின் மேற்பார்வையில்  செண்பகவல்லி  தடுப்புச்சுவர் அணை கட்டப்பட்டது. 

இது சுமார் 15 அடி உயரமும், 1,603 அடி மீட்டர் நீளமும், 928 அடி சுற்றளவும் கொண்டது.  இத்தடுப்பணை வழியாக வரும் தண்ணீர்  கள்ளி மலையாற்றிற்கு வந்து பாலையாற்றில் கலந்து சிவகிரி மேற்கே உள்ள மலையடிவார தலையணை வழியாக  பாய்ந்து வளம் கொழிக்கும் பூமியாக இப்பகுதி திகழ்ந்துள்ளது.

இதனால் தென்காசி மாவட்டத்திலுள்ள சிவகிரி, சங்கரன் கோவில், வாசுதேவநல்லுார் திருவேங்கடம், விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையம், வெம்பக்கோட்டை, சாத்துார், துாத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டையபுரம், விளாத்திகுளம்  போன்ற தாலுக்காக்களில் உள்ள நன்செய் புன் செய் நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன.

தற்போது இவ்வூர் வழியாக செல்லும் ஆறுகளில் கருவேலி மரங்கள் வளர்ந்து நிறைந்துள்ளன என்பதை நினைவில் கொள்க.

செண்பகவல்லி அணை உடைப்பும் அரசின் மெத்தனப்போக்கும்

1955 ஆம் ஆண்டிற்கு பிறகு செண்பகவல்லி காய்வாய் தடுப்பணை  முதன்முதலில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக அதில் வந்து கொண்டிருந்த தண்ணீர் முல்லைப்பெரியாறு  ஆற்றில் சென்று வீணாகக் கலக்கிறது என்பதைத் தெரிந்து கொண்ட  அன்றைய முதலமைச்சர் காமராஜர் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு இவ்வுடைப்பினை சரி செய்தார்கள். 

இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் பல ஆக்கபூர்வமான நீர்த்தேக்கங்களைக் கட்டிய இவருடைய ஆட்சியின் கீழ் சரி செய்யப்பட்ட அணை மீண்டும் உடைப்பட்டது என்பது வேடிக்கையாகவும், சிந்திக்கக் கூடியதாகவும் இருக்கிறது.  

அதன் பின் 1965ஆம் ஆண்டுஏற்பட்ட பெருவெள்ளத்தின் காரணமாக இரண்டாவது முறையாக உடைப்பு ஏற்பட்டு மீண்டும் முல்லை பெரியாறு ஆற்றிற்கே தண்ணீர் செல்கிறது.

இதில் இரண்டாம் முறையாக இயற்கைச் சீற்றத்தால் உடைப்பு ஏற்பட்டதா… அல்லது வேண்டுமென்றே அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக உடைக்கப்பட்டதா என்பதை மக்களின் ஆக்கப்பூர்வமான  சிந்தனைக்கே விட்டுவிடுகிறோம்.

அன்றில் இருந்து தொடர்ந்து போராட்டங்களை நடத்திவரும் விவசாய சங்கங்கள் பலமுறை இரண்டு மாநில அரசுக்கும் வேண்டுகோளினை முறையாக  வைத்தன.

அதன் பயனாக கேரளா அரசின் விருப்பத்தின்படி கால்வாய் உடைப்பை சரிசெய்ய தமிழ்நாடு அரசு எண். 1525 நாள் 10.9.1980 ஆம் ஆண்டு பிரகாரம் ரூபாய் 5,80,000 மும், அதன் பிறகு மறுமதிப்பீட்டின் படி  ரூபாய் 7, 52,170 ரூபாயும் வழங்க ஒப்புக் கொண்டது.

ஆனால் கேரளா அரசு மக்களுக்கு பயனுடைய வேலையைச் செய்யாமல் மேலும் திட்ட மதிப்பீடு உயர்ந்ததாகக் காலம் தாழ்த்தியது.

அன்று தமிழகத்தின் முதலமைச்சராகவும் இருந்த எம். ஜி. ராமசந்திரன் அவர்கள் கவனத்திற்கு  இக்கோரிக்கை கொண்டு செல்லப்பட்டது. அவர்கள் மூலமாக கேரளா அரசினை தொடர்பு கொண்டு செண்பகவல்லி கால்வாய் தடுப்பணை  உடைப்பினை சரிசெய்ய கேரளா பொதுப்பணித் துறையினர் மூலம் புதிய மதிப்பீடு தாயார் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு ஆணை எண். 234 நாள் 26.2.1985 ஆம் ஆண்டு   முதல் தவணையாக 5, 15,000 மட்டும்  கேரள அரசுக்கு செலுத்தியது. அதன் பிறகு வழக்கம் போல் காலதாமதப்படுத்திய கேரளா அரசிற்கு மீண்டும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

தமிழகத்தில் நிகழ்ந்த ஆட்சி மாற்றம், காட்சி மாற்றம், இதனால் எவ்வித நல்லபடியான நடவடிக்கையை  எடுக்க யாரும் முன்வரவில்லை. 

பொறுமை காத்த விவசாயப் பெருங்குடியினர், W.P.NO. 1274 /2006  பிரகாரம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இவ்விஷயத்தில் இரண்டு தலைமுறையாகப் போராடி வரும் சிவகிரி விவசாய சங்கத்திற்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. அத்தீர்ப்பின் விபரம் பின்வருமாறு:

மேற்படி செண்பகவல்லி கால்வாய் உடைந்த பகுதியைச் சரி செய்யலாம். ஏனென்றால் அந்தப் பணி ஏற்கனவே நடந்துள்ளது. அந்தக் கால்வாய் திடப்படுத்தப்பட்டது தான். ஆகவே மேற்படி வேலையை செய்வதற்கு தமிழ்நாடு அரசுக்கு எந்த மறுப்பும் இல்லை. மேலும் முல்லைப் பெரியாறு வழக்கில் உச்சநீதி மன்றம் வழிகாட்டுதலைப் போல கேரளா அரசும் மறுபரிசீலனை செய்து தமிழ்நாடு அரசு மேற்படி உடைந்த கால்வாய் பகுதியைச் சரி செய்வதற்கு அனுமதி அளிக்கவும், தமிழ்நாடு அரசு அந்த பணியை எட்டு வாரங்களில் முடிக்கவும் கேட்டுக் கொள்ளப் பட்டது.

(புதிய கட்டுமானம் எதுவும் இல்லை. பழைய கட்டுமானத்தில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யும் பணிதான். எனவே எட்டு வாரத்திற்குள் கால்வாய் தடுப்புச்சுவர் உடைப்பை சரி செய்ய  வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை  நிறைவேற்றாமல், 20 ஆண்டு காலமாக தமிழகஅரசும்,  கேரளா அரசும் கூட்டுச் சேர்ந்து அவமதிக்கின்றன என்பதே உண்மை). 

இவ்வழக்கு உயர்நீதி மன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே  ஏற்கனவே செண்பகவல்லி கால்வாய் தடுப்பணை  சுவர் உடைந்த பகுதியை சரி செய்வதற்கு எம்.ஜி.ஆர் அரசால் வழங்கப்பட்ட தொகையை சங்கரன்கோவில் பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு திருப்பி அனுப்பியது கேரளா அரசு.  

சுமார் 40 ஆயிரம் ஏக்கர் நிலத்தின் பாசனத்திற்கான  நீரை இழந்து, கடந்த 80 ஆண்டுகாலமாக அரசியல்வாதிகளின் மெத்தனப்போக்கினாலும் அதிகாரிகளின் அலட்சியத்தினாலும் இப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள்.

தளர்ச்சி அடையாத முயற்சிகள்

எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற பழமொழிக்கு ஏற்ப இப்பகுதி வாழ் நல்லெண்ணம் கொண்ட விவசாயப் பெரியோர்கள், உண்மையான அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், தன்னலமற்ற வழக்கறிஞர்கள், இளைஞர்கள் பலரும் செண்பகவல்லி தடுப்பணை உடைப்பினைச் சரி செய்யும் பொருட்டு  பலரும் பலவிதமான வழிகளில் துண்டுப் பிரசுரங்கள், தெருமுனைக் கூட்டங்கள்,  போராட்டங்கள், தர்ணாக்கள், உண்ணாவிரதங்கள், வலையொலி, காணொலி,  முகநுால், மீடியாக்கள் இன்னும் பல விதமான இணைய வழி  சாதனங்கள் மூலம் முன்னெடுத்தார்கள்; முன்னெடுக்கிறார்கள்.

அதன் உச்சகட்ட நிகழ்வாக, வரும் ஜூலை 10ஆம் நாள் ஒரு மாபெரும் கவன ஈர்ப்பு மாநாட்டினை சிவகிரி வட்டத்திற்கு உட்பட்ட தென்மலைக்கிராமத்தில் நடத்த  இருக்கிறார்கள்.

நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும்  இவ்விஷயம் காற்றை  விட வேகமாகச் சென்று அங்கு சம்பந்தப்பட்டவர்களின் செவிகளில்  ஒலிக்க வேண்டும்.

விரைவில் செண்பகவல்லி தடுப்பணைக்கு  நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என இந்நேரத்தில் பஞ்சபூத ஸ்தலங்களில் நான்காவதாகத் திகழும் காற்றுத் தலமான தென்மலை சிவபரிபூரணியம்பிகை சமேத திரிபுரநாதேஸ்வரரின் திருவடியை  பிரார்த்தனை செய்து கொள்வோமாக.

பெருமைக்குரிய விஷயம்

இப்பிரச்னை ஏற்பட்ட ஆண்டில் இருந்து 13 முறை சட்டமன்றத்திலும், 14 முறை நாடாளுமன்றத்திலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட  பிரதிநிதிகள்  நல்லாட்சி நடத்திட  உறுதுணையாக இருந்தார்கள். இருப்பினும்  இப்பகுதி மக்களுக்குரிய வாழ்வாதாரப் பிரச்னைக்கு பொறுப்பேற்று தீர்வு காண இன்று வரை யாரும் முன்வந்ததில்லை.  

ஒரு சில தரம் கெட்ட அரசியல்வாதிகள் மக்கள் பிரச்னைகளைச் சரி செய்து விட்டால் தன்னை மதிக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தினால் இப்பிரச்சனையை கண்டும் காணாதவாறு இருக்கிறார்கள்.  மேலும், இதில் சம்பந்தப்பட்ட நீர்வளத்துறை, நிலவளத்துறை, வனத்துறை, மாவட்ட ஆட்சியாளர், தாசில்தார், கிராமநிர்வாக அதிகாரி என உயர்மட்டத்தில் இருந்து கடைமட்டம் வரைக்கும் உள்ள அத்துணை அதிகாரிகளும் கள்ள மௌனம் சாதிக்கின்றனர்.

  செண்பகவல்லி தடுப்பணை மூலம் பயன்பெற்ற கண்மாய்களின் விபரம்:  
  வ.எண்      குளத்தின் பெயர்  பயனடைந்த ஊர்கள்  பரப்பளவு (ஏக்கர்)
1ராசசிங்க பேரி     ராயகிரி /   சிவகரி  பேரூராட்சிகள்843
2கருங்குளம்       ராயகிரி பேரூராட்சி   130
3வேப்பங்குளம்                                  ராயகிரி பேரூராட்சி100
4முத்தூர்குளம்  ராயகிரி பேரூராட்சி85
5கீழப்பன்னத்தி               ராயகிரி பேரூராட்சி121
6ஆண்டார்குளம்-            ராயகிரி பேரூராட்சி160
7சவுந்தரப்பேரி     ராயகிரி பேரூராட்சி280
8பட்டா குளம்        ராயகிரி  பேரூராட்சி176
9மேலப்பன்னத்தி  ராயகிரி பேரூராட்சி162
10கடம்பன் குளம்  ராயகிரி பேரூராட்சி287
11மேலக்கரிசல் குளம்ராயகிரி பேரூராட்சி496
12ஆவுடையார் குளம்  விஸ்வநாதப்பேரி560
13பெரியகுளம்வாசுதேவநல்லுார் பேரூராட்சி436
14பண்டாரகுளம்வாசு பேரூராட்சி286
15மகுளம்  வாசு  பேரூராட்சி302
16அருகன்குளம்  வாசு பேரூராட்சி  180
17பாறைக்குளம்  தேசியம்பட்டி ஊராட்சி  376  
18குலசேகரப்பேரி           கோட்டையூர் ஊராட்சி525  
19நாரணாபேரி  திருமலாபுரம் ஊராட்சி     421
20சிந்தாமணிப்பேரி    கோட்டையூர் ஊராட்சி390
21அமைச்சர் குளம்    கோட்டையூர், தேசியம்பட்டி ஊராட்சிகள்420
22பெரியபாறை குளம்    கோட்டையூர், தேசியம்பட்டி ஊராட்சிகள்340  
23அச்சன்குளம்     கோட்டையூர், தேசியம்பட்டி340
24பெரியகுளம்வெள்ளனக்கோட்டை     460
25பஞ்சன்தாங்கி    தாருகாபுரம், மலையடிக்குறிச்சி700
26சிந்தாமணிக்குளம்    நெல்கட்டும்செவல்   380
27சிற்றம்பலப்பேரி              பட்டகுறிச்சி270
28பெரியகுளம்அரியூர்              492
29மதுபேரி பெரியகுளம்அரியூர்249  
30கண்டியப்பேரிஅரியூர்  460
31பெரியகுளம்பெரும்பத்துார்  520
32காளைப்பேரி                     குவளைக்கண்ணி ஊராட்சி147
33பெரியகுளம்மணலுார் ஊராட்சி  280
34உடப்பன் குளம்வயலி ஊராட்சி  193
35காலாடிபேரிதிருமலாபுரம் ஊராட்சி  210
36பெரியகுளம்  கூடலுார், சங்குபுரம் ஊராட்சிகள்   610
37சிறுதாங்கி    வயலிமிட்டா, சங்குபுரம்120
38மந்திகுளம்பனையூர் ஊராட்சி  813
39கன்னசம்பு கண்மாய்  துரைசாமியாபுரம் ஊராட்சி120
40பெரியகுளம்  கரிவலம் வந்தநல்லுார், 
41.வீரபராக்கிரமன் குளம்  சென்னிகுளம் ஊராட்சி416
42தென்மலை  தென்மலை ஊராட்சி612
43பெரியகுளம்பருவக்குடி ஊராட்சி218  
44ஒப்பானையாள் குளம்  பருவக்குடி ஊராட்சி  80
45வழுதி குளம்காரிச்சாத்தான் ஊராட்சி    420
46பிள்ளையார் குளம்பிள்ளையார்குளம்  110
47மறுகால் பேரிகலிங்கப்பட்டி ஊராட்சி498
48சிறுதனி    182  சத்திரப்பட்டி182
49மருதவேலிபந்தப்புளி         126  
50செவல்குளம்  பந்தப்புளி  360
51மருதன்குளம்மாங்குடி  714  
52முடிவணங்கான்  பெருமாள்பட்டி372
53  முத்தாநதிதத்தநரி430
54பெரியகுளம்  வடகரை   462
55நந்திபேரி    சிவலிங்கபுரம்290
56மணிமுடி    அருணாசலபுரம்172
57நரிக்குளம்நரிக்குளம்280  
58சங்கரபேரி  வலையப்பட்டி  113
59பெரியகுளம்கீழாண்மறை நாடு841
60. கூத்தாடிக்குளம்  திருவேங்கடம்  380
61.விருதுநகர் வெம்பக்கோட்டை நீர்தேக்கம்    வெம்பக்கோட்டை, சல்வார்பட்டி, சங்கர்நத்தம், படந்தால், பனையடிப்பட்டி, பந்துவார்ப்பட்டி, சூரங்குடி, ஒத்தையால், கோட்டையச்சேரி, ஓ.மேட்டுப்பட்டி8,100
62.பெரியகுளம்    கொள்ளபட்டி613
63.பெரியகண்மாய்    நென்மேனி ஊராட்சி550
64.இருக்கன்குடி நீர்த்தேக்கம்  விருதுநகர், தூத்துக்குடி மாவட்டப் பகுதிகள்; மேலமடை மற்றும் 11 கிராமங்கள், 3 கண்மாய்கள் –நன்செய் 1,274 , புன்செய் 9,156  
  நிறைவாக, செண்பகவல்லி கால்வாய் தடுப்பணை  நீர், வைப்பாறு மூலம் வங்கக்கடலில் கலக்கிறது.  

மக்களுக்கு பணிவான வேண்டுகோள்

தேசத்தின் மீதும், இயற்கை வளங்களின் மீதும் பற்றும் பக்தியும்  ஈடுபாடும் கொண்ட செல்வந்தர்கள் இவ்விஷயத்தை தத்து எடுத்து இதற்கான நிரந்தர தீர்வினைக் காண்பதற்கு முன்வரலாம்.

இரு மாநிலங்களும் காலம் தாழ்த்தி சாக்குப் போக்கு சொல்லும் இவ்விஷயத்தில் தடையாக உள்ள சட்ட திட்டங்களை நீக்க மத்திய , மாநில அரசுகள் முன்வரலாம்.

செண்பகவல்லி அணை தொடர்பாக  பொது சேவையில் ஈடுபட்ட எம்.எல்.ஏ., எம்.பி.,கள்,  இது நாள் வரையிலும் முன்னெடுத்த முயற்சிகள், ஆக்கப்பூர்வமான செயல்கள் என்னென்ன என்பதையும்,  அதற்கான ஆதாரங்களுடன்  பொதுவெளியில் வெளியிட்டு தங்கள் தரப்பை குறிப்பிட்ட காலத்திற்குள்  நிரூபித்துக் கொள்ளலாம்.

பொது தர்ம நோக்கோடு  பல ஆண்டுகளுக்கு முன்பாக வழக்கு தொடுத்த விவசாயிகளுக்கு  இடையூறு செய்யும்  நபர்களைத் தேடி தாமாக முன்வந்து  நீதிபதிகள் அவர்களுக்கு  அறிவுரை வழங்கலாம்.

இவ்விஷயத்தில் விவசாயக்குழு, நிபுணர் குழு, ஆய்வறிக்கை குழு  என தமிழக அரசு அமைத்து தாமதப்படுத்தும் நோக்கத்திற்கு மக்கள்  எள்ளளவு கூட மதிமயங்கி விடக் கூடாது என்பதைக் கவனத்தில் கொள்ளலாம்.

இதை வைத்து அரசியல் செய்யும் போலி அரசியல்வாதிகளை மக்கள் இனம் கண்டு கொண்டு எதிர்வரும் காலங்களில் நடைபெறும் தேர்தலில் அவர்களுக்கு தகுந்த பாடங்களை கற்ப்பிக்கலாம்.

பிரதமருக்கு விண்ணப்பம் 

தற்போது பாரதத்தின் பிரதமராக இருக்கும்  நரேந்திர  மோடி அவர்களின் கவனத்திற்கு இவ்விஷயத்தைக் கொண்டு செல்ல அனைத்து வழிகளிலும் முன்னெடுக்க வேண்டும்.

அவர்களின் தனிச்சிறப்பு மேற்பார்வையில் உடைந்து போன செண்பகவல்லி தடுப்பணையை மீண்டும் சரி செய்ய வேண்டும். அதற்கான கட்டுமானத் தொகைக்கு, நான்கு மாவட்டத்தில் வாழும் மக்களும்  நபர் ஒன்றுக்கு ரூபாய் 1 மட்டும்  வசூல் செய்து ஆக்கப்பூர்வமான அனுமதியை மத்திய அரசு  அளிக்க வேண்டும். 

தென்காசி, விருதுநகர்,  தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் வாழும் மக்கள், விவசாயிகளின் மனமும் வயிறும் குளிர வேண்டும் என எல்லாம் வல்ல அன்னை கோமதியம்பிகை  சமேத சங்கரலிங்க சுவாமியின் திருவடியை நினைந்து பிரார்த்திக்கிறோம்.

இதுவே தருணம்… இதுவே மிகச் சரியான நேரம்…

செண்பகவல்லித்தாயே வாருவாயாக… வறண்ட பூமியில் தண்ணருளை சுரந்து நல்வாழ்வு தருவாயாக… என ஒவ்வொரு அன்பர்களும் இதற்காக  அவரவர் வீடுகளிலும், வழிபாட்டிடங்களிலும் பிரார்த்தனை செய்வீர்களாக.

வாழ்க பாரதம்! வாழ்க மணித் திருநாடு! 

***

வாழ்த்து

வாழ்க!அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க! தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க! தீயதெல்லாம் அரன் நாமமே
சூழ்க! வையகம் துயர் தீர்க்கவே.

   -திருஞானசம்பந்த நாயனார்
வான்முகில் வழாது பெய்க!
மலிவளம் சுரக்க மன்னன்
கோன் முறை அரசு செய்க!
குறைவிலாது உயிர்கள் வாழ்க!
நான்மறை அறங்கள் ஓங்க!
நற்றவம் வேள்வி மல்க
மேன்மை கொள் சைவ நீதி
விளங்குக உலகமெல்லாம்.

     -கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகள்
சீதமழை முகில் பொழிக!
தேசமெலாம் பயிர் விளைக! செல்வம் ஓங்க!
மாதர்குழாம் மக்கள்குழாம் மனையறங்களுடன்
பொலிந்து மலிந்து வாழ்க!
மேதகு சீர் சைவநெறி வேதநெறி
தழைத்தோங்க! மேலும் மேலும்
பூதலமேல் சிவபெருமான் ஆலயங்கள்
பூசனைகள் பொலிக மாதோ!

     -திரிகூடராசப்ப கவிராயர்

$$$

Leave a comment