-கருவாபுரிச் சிறுவன்
தமிழக அரசின் இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள ‘கரிவலம்வந்தநல்லூரில்’ தொல்லியல் ஆய்வு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை வரவேற்கிறோம். இந்தப் புராதன ஊர் குறித்த கட்டுரையை இங்கு பதிவு செய்வதில் மகிழ்கிறோம்….

நடித்தேன் பொய்க்கூடு எடுத்து அவமே
நன்னாள் கழிய இந்நாளில்
படித்தேன் உனது திருநாமம்
பண்டை வினையின் பற்றறுத்தேன்
பிடித்தேன் பிறவிக் கடல் நீந்தப்
பெரிய புணையா உனதடியை
முடித்தேன் உள்ளத்து எண்ணமெல்லாம்
கருவை வாழும் முன்னோனே.
(திருக்கருவைப் பதிற்றுப்பத்து அந்தாதி- 5, வரதுங்கர் அருளிச் செய்தது)
முன்னுரை:
நல்லனவே செய்யும் நலம் தரும் பல திருப்பதிகங்களுள் மூவர் முதலிகள் பாடிய அருளிய பாக்களை தேவாரம் என்பர் நம் முன்னோர்கள். தேவாரத்தில் வழக்கிலுள்ள பாண்டி பதினான்கும் மூவர் முதலிகளால் பாடல்பெற்ற தலங்களாகும்.
அவற்றுள் திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி சீமையின் வடக்கு பகுதியில் உள்ள சங்கரன் கோயிலுக்கு அருகே அமைந்த திருத்தலம் கரிவலம் வந்த நல்லூர்.
இத்தலத்தின் ஊர் பெயரினைப் பற்றி சிந்திப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
அமைவிடம்:
திருவாலவாய் என்னும் மதுரையில் இருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் ராஜபாளையத்திற்குத் தெற்கே 21 கி.மீ. தொலைவிலும், சங்கரன்கோவிலுக்கு வடக்கே 10 கி.மீ. தொலைவிலும் இத்தலம் உள்ளது.
இத்தலத்தினைச் சுற்றிலும் 20 மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அவை யாவும் இக்கரிவலம் வந்த நல்லூரோடு வரலாற்றில் தொடர்புடைய பகுதியாக காலம் தொட்டு விளங்கி வருகின்றன.

தொன்மையும் புராண வரலாறும்:
வற்றாத ஜீவநதியாக 1980ஆம் ஆண்டு வரை ஒடிய ஆறு இவ்வூருக்கு வடக்கே உள்ளது. அதன் பெயர் நிட்சேப நதி. இந்நதியின் சிறப்பினைப் பற்றி எட்டிச்சேரி ச.திருமலைவேற்கவிராயர் அவர்கள் திருக்கருவை தல புராணத்தில் 25 செய்யுள்களில் பாடிப் பரவுகிறார்.
அவற்றில் ஒன்று இதோ…
அந்த நதி தன்னில் மனவிருப்போடு சித்திரை விசுவாம் அத்தினத்தில் வந்து படிந்தவர் சாயுச்சியம் பெறுவார் ஐயமில்லை வழுத்தற்கொண்ணா நிந்தையுறும் பாதகர் சாணினும் புனிதராவர் எனில் நிகழ்த்தும் அந்தச் சுந்தர நிட்சேப நதிப்புனல் படிந்தோர் பெறும் பேறு சொல்வதென்னே! (25)
இந்நதிக்கரையில் தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கோலோச்சியிருந்த ரோமானியப் பேரரசுகளான அகஸ்டஸ், டைபீரியஸ் போன்றோரின் தங்க நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன என்றும், இவ்வூருக்கு அருகினில் உள்ள மாங்குடி, பெருமாள்பட்டி ஆகிய கிராமங்களில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நுண்கற்கருவிகள் கிடைத்தன என்றும் தொல்லியல் துறையின் இரட்டையர்களாக விளங்கியவர்கள் தன் பதிவுகளில் பதிவு செய்கிறார்கள்.
பார்க்கும் இடந்தோறும் எங்கெனும் கருவைப்பிரான் சிவலிங்கத் திருமேனியாக காட்சி தெரிவதால் தன் அரண்மனையையும் ஆட்சி பீடத்தினையும் இவ்வூருக்கு அருகே இருந்த சோலைசேரி என்னும் நகரில் மாற்றி அமைத்துக் கொண்டார் என்பது மன்னர் வரதுங்க ராம பாண்டியர் வரலாறு. அவருடைய முன்னோரால் நிர்மாணம் செய்யப்பெற்று அப்பெருமான் வாழ்ந்த அரண்மனையின் எச்சங்களையும் எஞ்சிய கோட்டை சுவற்றையும் இன்றும் சோலைசேரி ஆற்றின் கரையில் காணலாம். இதனைத் தான் லிங்கத்திடல், கோட்டை மேடு என தொல்லியல் துறையினர் அழைக்கின்றனர்.

கரிவலம் வந்த நல்லூர் – பெயர் காரணம்:
ஆதியில் இந்திரன், ஜெயந்தன் என்ற விண்ணுலக அரசர்கள் முன்வினைப்பயன் காரணமாக களாவனமாக இருந்த இப்பகுதியில் வேடுவர் குலத்தில் பிறந்து, காரி, சாத்தான் என்ற பெயரில் வாழ்ந்து வந்தார்கள். அவர்களின் பூர்வ ஜென்ம புண்ணியப் பயனால் இக்களாவனத்தில் பல கற்பங்களுக்கு முன்பு தோன்றிய பால்வண்ண நாதர் என்னும் திருநாமத்தினைப் பெற்ற சிவலிங்கத்தை பூசித்தார்கள். அவர்களைத் தொடர்ந்து இந்திரனின் வாகனமான ஐராவதமும் காட்டுயானையாகப் பிறந்து முகலிங்க நாதரை சலம் பூவோடு பூசனை புரிந்தது.
தேவலோகத் தலைவரான இந்திரனின் யானை அனுதினமும் வலம் வந்து பூசித்த காரணத்தால் இத்தலம் ‘கரி வலம் வந்த நல்லுார்’ என பெயர் பெற்றது.
கரி என்ற சொல்லுக்கு தமிழ் அகராதி, அடுப்புக்கரி, நிலக்கரி, கருந்தை, கந்துள், எரிந்த கட்டை , கருகு, கண்மை, சான்று, குறைகூறு, நஞ்சு, தாளி, சின, வெறு, உறை, உறுப்பு, கழுதை, வைரம், யானை என்று பொருள் உரைக்கும்.
ஒரு சில நாத்தீக அன்பர்கள், கரடியும், பன்றியும் கருப்பாகத் தானே இருக்குது. அது இவ்வூர்கோயிலையும் வலம் வருகிறதே அப்போது அதன் பெயராகக் கூட இருக்கலாமே என சில வேடிக்கையாகக் கேட்பதுண்டு. வாஸ்தவம் தான். இருப்பினும் இடம் பொருள் ஏவல் படி தலச்சிறப்பு, மூலஸ்தான சதாசிவ மூர்த்தியின் பெருமை போன்றவற்றை குறிப்பறிந்து பார்க்கும் போது கரி என்ற சொல்லுக்கு கரத்தை உடையது யானை என்ற சொல்லே நேரான பொருளாக விளங்குகிறது என்பதை தமிழ் கூறும் நல்லுலகம் நன்கு அறியும்.
வேறு பெயர்கள்:
இவ்வுலகம் உய்யத் தோன்றிய சமயக்குரவர்களில் ஒருவரான திருஞான சம்பந்த நாயனார் அவதாரம் செய்த தலமான சீர்காழிக்கு பன்னிரெண்டு பெயர்கள் உண்டு என்பதை,
பிரமபுரம் வேணுபுரம் புகலி பெரு வெங்குருநீர்ப்
பொருவில் திருத்தோணிபுரம் பூந்தராய் சிரபுரமுன்
வருபுறவஞ் சண்பை நகர் வளர்காழி கொச்சைவயம்
பரவு திருக்கழுமலமாம் பன்னிரெண்டு திருபெயர்த்தால்…
என்று, நம் தெய்வச் சேக்கிழார் சுவாமிகள் பெரிய புராணத்தில் பாடியுள்ளார். அதைப் போலவே, இக்கரிவலம் வந்த நல்லுாருக்கும் பன்னிரெண்டு பெயர்கள் உண்டு என்ற செய்தியை இத்தலத்தின் புராண ஆசிரியர் அகவல் விருத்தத்தில் தலவிசேட சருக்கத்தில் கீழ்க்கண்டவாறு பாடியுள்ளார்.
பத்தி செய் மாநகர மகத்திய நகர மநாதிபுரம் பாவநாசஞ் சித்துருவ ஞானபாசுர மமுதாசலஞ் சிவசக்தி புரஞ்சீவன் முத்தி புரியுபயபுரி கரிபுரமம் புரபுரமிம் முந்நீர் ஞால நத்து கரிவலநகரந் திருக்களாவன மிந்த நகர்ப்பேராமல்.
பன்னிரெண்டு பெயர்கள்:
அநாதிபுரம், பாவநாசம், சித்துருவம், ஞானபாசுரம், அமுதாசலம், சிவசக்திபுரம்
சீவன் முக்திபுரி, உபயபுரி, கரிபுரம், அம்பரபுரம், கரிவலம், திருக்களாவனம்

மருவித் திரிதல்:
சங்கர நயினார் கோயில் சங்கரன் கோவில் என்றும், தஞ்சாவூர் தஞ்சை என்று மருவினாற்போல, கரிவலம் வந்த நல்லூரை ‘கருவை’ என மரூஉவாகி அழைக்கலாயினர்.
திரு என்னும் அடைமொழி பெற்று திருக்கருவை என்று இலக்கிய உலகில் மேன்மையை உணர்த்துகிறது.
கல்வெட்டு:
தி.வை .சதாசிவபண்டாரத்தார், மு.அருணாசலம், அ.கி.பரந்தாமன் போன்ற வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடும் பிற்காலப் பாண்டியர்களில் ஒருவர் வரதுங்க ராமபாண்டியர்.
இவர் புகழ் வேண்டாத பெருமனத்தராயும், பரம்பொருளின் மீதுள்ள பேரன்பினால் சிறந்த சிவபக்தராய் விளங்கினார். உண்மையை உணர்ந்த உத்தமரான இவர் இக்கோயிலுக்கு மட்டுமல்லாது தனது ஆட்சிக்கு உட்பட்ட கோயில்களில் செய்த தொண்டு மேன்மேலும் சிறப்புற, கோயில் மதிற்சுவர், செப்புப் பட்டயத்தில் சாசனத்தை வெட்டச் செய்து சூரிய சந்திரர் உள்ள வரை தடை படாமல் நடைபெற வேண்டும் என நிவந்தங்கள் பலவற்றையும் நிர்மாணித்துள்ளார்.
மன்னர் பிரானின் திருப்பணிகள் பற்றி பேசும் கல்வெட்டுக்களில்,
கரிவலம் வந்த நல்லுரை ‘ஆரிய நாட்டுக் கரிவர நல்லுார்’ என குறிப்பிடுவது இங்கு நோக்கத்தக்கதாகும்.
அந்தாதியில் அநாதிபுரம்:
ஞானத்தின் உச்சியில் வாழ்ந்த மன்னர் பெருமான், இப்படித்தான் வாழ வேண்டும் என வாழ்ந்து காட்டிய வள்ளல்.
அப்பெருமான் அருளிய ஞானக் கொடைகளில் திருக்கருவையந்தாதிகளும் பிரமோத்திர காண்டமும் சைவத்தமிழர்களுக்கு கிடைத்த ஞானப்பொக்கிஷம்.
மிருககுணத்தை மனித குணமாகவும், மனிதனை மகான்களாகவும், மகான்களை தெய்வமாகவும் உயர்த்தும் உன்னதப் பாக்களைக் கொண்டது திருக்கருவையந்தாதிகள்.
இவற்றில் கருவை என்ற சொற்றொடரை பல்வேறு இடங்களில் அழகிய அடை மொழியோடு பயன்படுத்துகிறார் மன்னர்.
சான்றிற்கு சில…
# கண்டேன் கருவைப் பெருமான் – திருக்கருவைக் கலித்துறை அந்தாதி – 18
# சீரணிந்த தென் கருவைச் செல்வனே – திருக்கருவை வெண்பா அந்தாதி – 1
# கருவை வாழும் முன்னோனே – திருக்கருவைப் பதிற்றுப்பத்து அந்தாதி – 5
# அன்னத்தொகுதி வயற்கருவை – திருக்கருவைப்பதிற்றுப்பத்து அந்தாதி – 6
# செந்தமிழ்க் கருவை – திருக்கருவைப்பதிற்றுப்பத்து அந்தாதி – 86
இவ்வாறாக பரம்பொருளின் பெருமையையும், மகத்துவத்தையும் ஊரின் வளத்தையும், தமிழின் தனிச்சிறப்பினையும் அடையாளம் காட்டும் வரதுங்கர் கருவை என்ற சொல்லை பல்வேறு பாடல்களில் கருத்தோடு அழுத்தமாகவும் ஆழமாகவும் கையாண்டுள்ளார் என்பதை உணர முடிகிறது.
காலந்தோறும் கருவையம்பதி:
பதினெட்டாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் வாழ்ந்த பாட்டிசைக்கும் பாவலன் தொண்டை நாட்டு நமச்சிவாயப் புலவர், “செய்யாரத் தடம் புடை சூழ் கருவை வாழும் திருக்களாவீச்சுரரே” என்று ஊரின் வளத்தை சிறப்பித்து பாடும் போது கருவை என்னும் சொற்பதத்தைப் பயன்படுத்துகிறார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் நிறைவுப்பகுதியில் வாழ்ந்த சிவகரி – சேத்துார் சமஸ்தானத்தில் அவைக்களப்புலவராக வாழ்ந்தவர்கள் மலைச்சாயப்பாடிய சங்குப்புலவர் மரபில் வந்த திருமலைவேற் கவிராயர்.
இவர் பால்வண்ண நாதர் மீது பாடிய தனிப்பாடல்களிலும், சிற்றிலக்கியங்களுக்கும் திருக்கருவை என்ற அடைமொழியோடு பெயர் சூட்டி அருளிச் செய்துள்ளார்.
சற்குருநாதர் குன்றக்குடி மேலமடம் நான்காவது பட்டம் கணபதி சுவாமிகளின் சீடர் கல்லல் குக மணிவாசக சரணாலய சுவாமிகளும், மற்றொருவரான அப்பாவுக்கவிராயரின் சீடர் சி.ஆ.ராமசாமியா பிள்ளையவர்களும் பாடிய சிற்றிலக்கியங்கள் மற்றும் இத்தலம் தொடர்புடைய நூற்களிலும் பல்வேறு புலவர்கள் தென்கருவை, திருக்கருவை, கருவாபுரி என்று ஊரின் பெயரை முன்னிறுத்தி வாடாத பாமாலைகளைப் புனைந்துள்ளார்கள் என்பதையும் அறிய முடிகிறது.
நிறைவாக,
இலக்கிய உலகில் திருக்கருவை, தென்கருவை என்ற சிறப்பு பெயர்களோடு முன்னோரின் மூத்த அருள் நூல்களுக்குப் பின்னே தன்னை இணைத்துக் கொண்டு சைவத்தமிழ் இலக்கிய உலகில் நேர்கொண்ட பார்வையோடும், நிமிர்ந்த நன்னடை இட்டும், தன் பயணத்தை கருணை மிகுந்த திருக்கருவையம்பதியாகத் தொடர்கிறது இக்கரிவலம் வந்த நல்லூர் என்னும் இத்திருத்தலம்.
இத்தலத்தைப் பாடிய புலவர்களில் ஒருவரான சீ.ஆ.ராமசாமி பிள்ளை என்பவர் ‘ஒப்பில்லாவல்லி பத்து’ என்னும் பதிகத்தில் ஒப்பனையம்பாளின் பிரபாவத்தையும் நம் உய்ய வேண்டிய வழிமுறையையும் எவ்வளவு நயந்து சொல்லுகிறார் பாருங்கள்… படியுங்கள்.
பொருள் புரிந்து படிக்க படிக்க மனத்தில் ஒப்பனையாள் ஒய்யாரமாய் கொலுவீற்றிருப்பதை உணருவீர்கள்.
சாண்கும்பியின் பொருட்டாக நன்னாட்கள் விரு தாவாய்க் கழித்து விட்டேன் சத்துவ மிகுந்த பரநித்த அடியாருறவு சார்கிலேன் நன்னெறியிலா வீணர் பால் நட்டுபல பாவம் புரிந்தயான் மேம்படுவ தெவ்வாறு சொல் வேதாவை யீன்ற நற்றாதா முதற் பெரிய விண்ணவரும் நிலையீதெனக் காணாத செம்பவள மாமேரு வுள்ளங் களிப்பக் கலந்த கொடியே! கால் காட்டி என்னையும் கண்பார்! என்அன்னையே! கைவிடேல் ஏழையம்மே! மாணவடியாரிதய மாமலர்க் கோயில் வளர் வாழ்வே! விளங்கும் ஒளியே! வாசமலர் மாதுறைய வீசுபுகழ் தென்கருவை வளர்ரொப்பிலா வல்லியே! (கும்பி - வயிறு, வேதா - பிரம்மா, தாதா - மகாவிஷ்ணு, மாமேரு - சிவபெருமான்)
வாழ்க பாரதம்! வாழ்க மணித்திருநாடு!
$$$