-சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட்
இந்தியாவில் இடதுசாரிகளால் கட்டமைக்கப்பட்ட பொய்களால், சுதந்திரப் போராட்டவீரர் சாவர்க்கர் ஒரு வில்லனைப் போல தொடர்ந்து சித்தரிக்கப்பட்டு வருகிறார். இந்த அநீதியை எதிர்த்து, தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத் துணைவேந்தர் எழுதியுள்ள கட்டுரை இது....

பிப்ரவரி 26 சாவர்க்கரின் 60 வது நினைவு நாள். மிகச் சிறந்த தேசியவாதியான சாவர்க்கரை இந்த தேசம் அவர் வாழும் காலத்திலேயே தவறாக சித்தரித்து துச்சமாக நடத்தியது; அறிவியல் நோக்கோடு நாத்திகராக வாழ்ந்த அவரை மதவாதி என்றும் சதிகாரர் என்றும் முத்திரை குத்தியது.
விநாயக தாமோதர சாவர்க்கர்- கருத்தியல் உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தப் பெயரை இடதுசாரிகளின் ஆதிக்கத்தில் விழுந்து கிடந்த அறிவுலகம் கேலிச்சித்திரமாக ஆக்கியது. பன்முக ஆளுமை கொண்டவரை , அரசியல் கருத்துக்களின் மீது மட்டுமே கவனத்தை திருப்பி தவறாக சித்தரித்ததன் மூலம், அவரது அறிவின் ஆழத்தையும் இலக்கியப் பங்களிப்பையும் மனிதநேய மாண்பையும் அலட்சியப் படுத்தினார்கள். ஹிந்து சிந்தனையாளர்களை ஓரம் கட்டி ஹிந்து விரோத சிந்தனையை பெரிய அளவில் முன்னெடுக்கும் அவர்களது நோக்கத்துக்கு இது பொருந்தி வந்தது.
எனவே, சாவர்க்கரின் வாழ்க்கை பற்றியும் அவரது செயல்பாடுகள் பற்றியும் மறைக்கப்பட்ட, மங்கலாக உள்ள விஷயங்கள் மீதும் வெளிச்சத்தைப் பாய்ச்சி வரலாற்றாளர்களும் அரசியல்வாதிகளும் அவரை நடத்திய விதம் குறித்து கேள்வி எழுப்ப வேண்டியது அவசியமாகிறது.
சமய எல்லைகளைக் கடந்த சிந்தனையாளர்
தன்னை நாத்திகவாதியாக அறிவித்துக் கொண்டவர் சாவர்க்கர். ஹிந்துயிசத்தை மதமாகப் பார்க்காமல் அதை பண்பாடாக, நாகரிகத்தின் அடையாளமாகப் பார்த்தவர் . அவரது கண்ணோட்டத்தில் ஹிந்து என்பது ஹிந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்களின் ஒருங்கிணைந்த பாரம்பரியத்தின் வெளிப்பாடேயாகும். முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் அவர் ஹிந்து பாரம்பரியத்தில் இருந்து அந்நியப்படுத்திப் பார்த்ததற்கு காரணம் அந்நிய மண்ணில் தோன்றிய மதச்சட்டங்களுடன் அவர்களுக்கு இருந்த உறுதியான பிணைப்பு.
இது வெறுப்புணர்வினால் வந்தது அல்ல. 19 ஆம் நூற்றாண்டில் தேசியம் குறித்த ஐரோப்பிய சிந்தனைகளால் துளிர்த்தது; இந்திய சமயங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டுமென்ற ஆவலினால் கிளர்ந்தது.
அவரது நாத்திகம் அறிவியலை அடிப்படையாகக் கொண்டது . மதத் தலைவர்களின்/ பூசகர்களின் ஆதிக்கத்துக்கு எதிரானது. இதுவும் ஐரோப்பாவில் இருந்த பகுத்தறிவு இயக்கத்தின் தாக்கம் கொண்டது. சாவர்க்கர் மரபின் புனிதத் தன்மையை கேள்விக்குள்ளாக்கினார். ஹிந்துக்கள் இடையே இருந்த மூடநம்பிக்கைகளைக் கைவிடும்படி வற்புறுத்தினார். பசுவின் புனிதத் தன்மை பற்றி கேள்வி எழுப்பினார். சமுதாயத்திற்கு வலிமை தரும் இறைச்சி உணவை சாப்பிடும்படி சொன்னார். இவையெல்லாம் அவர் மீது சுமத்தப்பட்ட இறுகிய மதவாதி என்ற பிம்பத்தில் இருந்து வெகு தூரம் மட்டுமல்ல, அவர் பகுத்தறிவும் சீர்திருத்த கருத்துக்களையும் கொண்ட சிந்தனையாளர் என்பதை காட்டுபவை.
அப்படி யிருந்தபோதிலும் கருத்துச் சூழலில் ஆதிக்க சக்தியாக இருந்தவர்கள் அவரை வில்லனாக, பிரிவினைவாதியாக, மதவாதியாக சித்தரித்தார்கள். இந்த நாட்டின் மீது படையெடுத்து வந்த ஆக்கிரமிப்பாளர்கள் செய்த அட்டூழியங்களை மூடி மறைக்கவும் ஹிந்து அறிஞர்களை அவமதிக்கவும் வேண்டும் என்ற அவர்களுடைய திட்டத்திற்கு சாவர்க்கர் இரையானார். அவரது சீரிய , வண்ணமிகு கருத்துக்களை அவர்கள் திட்டமிட்ட ரீதியில் அறிவுலகில் இருந்து அகற்றினார்கள். ஹிந்து விரோதம் என்ற அவர்களது ஒற்றைப்பட்டையான கருத்தியலுக்கு இசையாத அறிஞர்களையும் ஹிந்துயிசத் தலைவர்களையும் புறமொதுக்கும் அவர்களது திட்டத்தின் ஒரு பகுதியாக சாவர்க்கரின் பங்களிப்பு ஒதுக்கப்பட்டது. இவர் அளவுக்கு அவர்களை பாதுகாப்பற்றவர்களாக உணரச் செய்தவர் யாராவது உண்டா ?
சிறந்த இலக்கியவாதி
வரலாற்றுக்கும் இலக்கியத்திற்கும் சாவர்க்கரின் பங்களிப்பு மகத்தானது. அவர் அரசியல் தலைவர் மட்டுமல்ல ,சீரிய எழுத்தாளர். சிறந்த கவிஞர். நல்ல நாடக ஆசிரியர். வரலாற்று அறிஞர். ஆனால், இதை அங்கீகரிக்க மறுத்தார்கள்.
அவரது இலக்கிய படைப்புகளில் இத்தாலிய புரட்சியாளர் ‘ஜோசப் மாஜினி’ யின் வாழ்க்கை வரலாறு, ‘1857 முதல் சுதந்திரப் போர்’ என்ற இந்திய சுதந்திரப் போராட்டம் பற்றிய விவரமான நூல் (இந்நூல் எரிமலை என்ற பெயரில் தமிழில் வந்துள்ளது), ‘ஹிந்துத்துவம்: யார் ஹிந்து?’ என்ற பண்பாட்டு தேசியத்தின் கருத்தியல் கருவூலமாக கருதப்படும் நூல் ஆகியவை அடங்கும்.
அந்தமான் தீவிலுள்ள செல்லுலார் சிறையின் இருட்டறையில் சாவர்க்கரின் படைப்பாற்றல் பிரகாசித்தது . அவர் எழுதிய ‘ஜெயஸ்துதி’ என்ற மராட்டியப் பாடல் இன்றும் தேசபக்தியைக் கிளப்பும் கனலாக விளங்குகிறது. அவர் இயற்றிய ‘சாகரபாராந்தமாலா’, தனது நண்பனும் நெருங்கிய கூட்டாளியுமான மதன்லால் திங்கராவின் மறைவையும் கடல் கடந்து சிறைப்பட்ட வேதனைகளையும் வெளிப்படுத்துகிறது. இவையெல்லாம் மிகக் கொடுமையான வதைகளுக்கிடையே, தன் தாய்நாட்டின் மீதான அன்பை இழக்காத, தலை நிமிர்ந்த ஆன்ம சக்தியைக் கொண்ட மனிதரின் வெளிப்பாடுகள்.
பண்பாட்டு வரலாற்றாளர்
வரலாற்றாளராகவும் சாவர்க்கர் தலைசிறந்து விளங்கினார். ‘ஆறு பொன்னேடுகள்’ என்ற அவரது நூல் ஆக்கிரமிப்புகளை எதிர்கொண்டு நின்ற இந்திய நாகரிகத்தின் வல்லமையை வரிசைப் படுத்துகிறது. மராட்டியப் பேரரசை முழுமையாக அவதானிப்பது அவரது ‘ஹிந்து பதபாதஷாஹி’ என்ற நூல் .
அவரது எழுத்துக்கள் வெறும் வரலாற்றை ஆவணப்படுத்துபவை அல்ல. மாறாக வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு தங்களுடைய பண்பாட்டு அடையாளத்தை மீட்கும் செயலில் ஈடுபட இந்தியர்களைத் தூண்டியவை.
இந்தியாவைப் பீடித்த இடது சூழல் அவரது இந்தப் பங்களிப்புகளை அலட்சியப்படுத்தியதன் மூலம், இந்தியர்கள் தங்கள் பாரம்பரியத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாதபடி தடுத்து விட்டது.
வரலாற்றை எழுதுவதில் இரட்டை நிலைப்பாடு
வரலாற்றை விவரிப்பதில் இரட்டை நிலைப்பாடு என்ற இடதுசாரிகளின் திட்டத்தின் ஓர் அங்கம்தான் சாவர்க்கரை வில்லனாக சித்தரிப்பது. அவர்களது கருத்துக்கு ஒத்து வராதவர்களை தொடர்ந்து ஒதுக்கினார்கள்.
சாவர்க்கரை மதவாதி என்று முத்திரை குத்தியவர்கள் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு சற்றும் தொடர்பில்லாத, இஸ்லாமிய அகிலத்தை நிறுவ நடத்தப்பட்ட கிலாபத் இயக்கத்தைச் சேர்ந்தவர்களை விதந்தோதினார்கள்.
இரட்டை ஆயுள் தண்டனையும் சிறைக் கொடுமைகளையும் கொடும் செல்லுலார் சிறைவாசத்தையும் அனுபவித்த சாவர்க்கர் போன்ற தேச பக்தர்களை கோழைகள் என்றும், ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு ஒத்துழைத்தவர்கள் என்றும், பழி சுமத்தினார்கள். அதே வேளையில், ஆங்கிலேயர்களிடம் சலுகைகளையும் பதவிகளையும் பெற்றவர்களை இந்திய விடுதலைக்குக் காரணமான முக்கிய தலைவர்களாகக் கொண்டாடினார்கள். இதுபோன்ற ஒருபக்கச்சார்புடைய போற்றுதல்கள் தங்களுக்கு எதிரான குரல்களைப் புறந்தள்ளவும், நெருடலான உண்மைகளை மிதித்து மறைக்கவும் அவர்களுக்கு உதவியது.
அச்சத்தின் காரணமாகவே இடது சூழல் சாவர்க்கரை அங்கீகரிக்க மறுக்கிறது. இந்திய சமுதாயத்தை ஜாதி, சமயம், மாநில உணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் பிளவுபடுத்தும் அவர்களுடைய கருத்துகளுக்கு பண்பாட்டு ரீதியான ஒற்றுமை, தேச பெருமிதத்தை முன்னிறுத்தும் சாவர்க்கரின் கருத்துக்கள் பெரும் சவாலாக உள்ளன. இடதுசாரிகள் தங்கள் கருத்தியல் ஆதிக்கத்தை தக்க வைத்துக் கொள்ளவும் தங்களுக்கு எதிரான கண்ணோட்டத்தை தொடர்ந்து விளிம்பிலேயே தள்ளி வைக்கவும் சாவர்க்கரை பூதமாக சித்தரிக்கிறார்கள்.
அறிவுசார் பன்முகத்தன்மை மீது அச்சமும் ஹிந்து விரோத மனப்போக்கும்
சாவர்க்கருக்கு எதிரான பிரசாரத்தின் அடிஆழத்தில் இருப்பது ஹிந்து விரோத மனப்பான்மை. இது சாவர்க்கருக்கு எதிரானது மட்டுமல்ல. ஹிந்து பண்பாட்டுச் சிந்தனைகள், அறிஞர்கள் மீதான ஒட்டுமொத்த எதிர்ப்பின் ஒரு அங்கம். இடது கருத்தியல் சூழல் தொடர்ந்து ஹிந்து தலைவர்களையும் அறிஞர்களையும் பிற்போக்குவாதிகளாக, பிரிவினைவாதிகளாக சித்தரித்து, சமூக சீர்திருத்தம், கலாச்சார ஒற்றுமை, தேசப் பெருமிதம் ஆகிய தளங்களில் அவர்களது பங்களிப்பை புறந்தள்ளி வருகிறது.
இந்த ஒரு சார்பான கருத்தியல் ஆதிக்கம் கல்வி மற்றும் கலாச்சார விவாதங்களில் ஹிந்து குரல்களை அலட்சியப்படுத்துவது, கேலி செய்வதன் மூலம் வெளிப்படுகிறது. பகுத்தறிவு, சீர்திருத்தம், சமூக ஒற்றுமை ஆகியவற்றை வலியுறுத்துவதன் மூலம் சாவர்க்கர் அவர்களது ஆதிக்கத்துக்கு நேரடி சவாலாக விளங்குகிறார்.
பொதுவான பண்பாட்டு அடித்தளத்தின் மீது அவர் கட்டமைக்கும் ஒன்றுபட்ட இந்தியா என்ற தரிசனமானது ஜாதி, மத அரசியலைத் தூண்டி பிரிவினைவாதம் பேசுவோருக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது. சாவர்க்கரின் கருத்துக்களை அவர்கள் பரிசீலிக்க மறுப்பது அறிவின் அடிப்படையில் அல்ல, தங்களது கருத்தியல் ஆதிக்கம் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தின் காரணமாகத்தான்.
வீர சாவர்க்கரின் மரபு மிகவும் பெரியது மட்டுமல்ல, மதவாதி அல்லது தேசியவாதி என்று சிமிழுக்குள் அடக்க முடியாதபடி, மகத்தானதும் கூட. அவர் சிந்தனையாளர். எழுத்தாளர். வலிமையான ஒன்றுபட்ட இந்தியாவுக்காக உழைத்த சமூக சீர்திருத்தவாதி. காலனிய சிந்தனை ஆதிக்கத்திலிருந்து விடுபட்டவர். பிரிவினை வாதத்துக்கு எதிரானவர். இலக்கியம், வரலாறு, பண்பாட்டுச் சிந்தனைகள் என பல தளங்களில் அவரது பங்களிப்பு மகத்தானது. அவரது நெடுநோக்கு கொண்ட கருத்துக்கள் இன்றும் பொருத்தமானவையாக இருக்கின்றன.
சாவர்க்கரை கேலிச்சித்திரமாக ஆக்குவதன் மூலம் இடதுசாரிகள் சாவர்க்கருக்கு மட்டுமல்ல, தேசத்திற்கே அவமரியாதை செய்கின்றனர். இந்தியர்கள் தங்கள் வரலாற்றை, பாரம்பரியத்தைப் பற்றி ஆழமாகத் தெரிந்து கொள்ள விடாமல் தடுக்கின்றனர்; அறிவுசார் நேர்மையின்மையை வளர்க்கின்றனர்.
சாவர்க்கரின் மரபை மீட்டெடுப்பது அவர் மீது இழைக்கப்பட்ட நீண்டகால தவறுகளைச் சரி செய்வது மட்டுமல்ல, பல்வேறு கருத்துக்களுக்கு விளைநிலமாக இருக்கும் இந்தியா என்ற உண்மைக்கு வலு சேர்ப்பதாகும்.
சாவர்க்கர் மீதான அவதூறுகளைக் கடந்து அவரது உண்மையான உருவைத் தெரிந்து கொள்ள வேண்டும். பன்முக ஆளுமை கொண்ட அந்த அறிஞரின், எவ்வளவு மறைத்தாலும் அதை எல்லாம் மீறி வெளிப்படும் அவரது அறிவின் வெளிச்சம் நமக்கு உத்வேகம் அளிப்பதாக உள்ளது.
ஞானத்தையும் நீதியையும் தேடும் பயணத்திற்கு தைரியமும் தளர்ச்சியில்லா முயற்சியும் லட்சியத்தின் மீதான உறுதியும் அவசியம் என்பதை அவரது வாழ்க்கையும் களமாடல்களும் நமக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன. கட்டமைக்கப்பட்ட பொய்களையும் அவதூறுகளையும் புறமொதுக்கி அவரது கருத்துக்களை முன்னெடுப்பதன் மூலம் அவரது உண்மையான வடிவுக்கு மரியாதை செய்வோம்.
- கட்டுரையாளர், தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உள்ளார்.
- நன்றி: சன்டே கார்டியன் (23 பிப்ரவரி -1 மார்ச் 2025 இதழ்)
- தமிழில்: திருநின்றவூர் ரவிகுமார்.
$$$