நாவலர் ஞானபரம்பரையில் நன்மாணக்கர்கள்  

– கருவாபுரிச் சிறுவன்

நமது தர்மத்திற்கு நெருக்கடி வரும் போதெல்லாம் ஞானபுருஷர் ஒருவர் தோன்றுவார் என்பது ஸ்ருதி வாக்கியம். அதற்கு ஏற்றாற்  போல, யாழ்ப்பாணம் நல்லுாரில் தோன்றிய மகான் தான்  தவத்திரு ஆறுமுக நாவலர் அவர்கள். அவர் அக்காலத்தில் நடமாடும் மடாலயமாக திகழ்ந்தார்கள் என்றால் அது மிகையல்ல என்பதே உண்மை. அன்னாருடைய  ஞானப் பரம்பரை யாழ்ப்பாணம் மட்டுமின்றி வழிவழியாக தமிழகமெங்கும் விரவி  இருக்கிறது.... 

கல்லாலின் புடையமர்ந்து, நான்மறையாறு
        அங்கம் முதல் கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த
        பூரணமாய், மறைக்கு அப்பாலாய்
எல்லாமாய், அல்லதுமாய், இருந்தனை
       இருந்தபடி இருந்து காட்டி,
சொல்லாமல் சொன்னவரை நினையாமல்
        நினைந்து பவத்தொடக்கை வெல்வாம்.
           
        -பரஞ்ஜோதி முனிவர் (திருவிளையாடல் புராணம்).

எண்மலரால் பூஜிக்க…

ஆன்மாக்கள் யாவரும் உய்வு அடையும் பொருட்டு நித்தியமும் அத்தியாவசியக் கடன்களை முடித்து நீராடி, புறமாகிய திருக்கோயிலில்  ஞானரூபனாய் மூலஸ்தானத்தில் எழுந்தருளியிருக்கும் சதாசிவ மூர்த்தத்தை  அதிகாலையில் புன்னை, வெள்ளெருக்கு, செண்பகம், நந்தியாவர்த்தம், நீலோற்பவம், பாதிரி, அலரி, செந்தாமரை என்னும் அஷ்ட புஷ்பங்களைக் கொண்டும், சிவாகமத்தில் விதிக்கப்பட்டவாறு வெவ்வேறு எண்மலர்களைக் கொண்டும் பூசிப்பார்கள் சைவர்கள். அதுபோல அகமாகிய இதயக்கோயிலில் வீற்றிருக்கும் ஆன்ம நாயகனை உயிர்க் கொல்லாமை, ஐம்பொறியடக்கம், பொறை, அருள், அறிவு, வாய்மை, தவம், அன்பு என்கிற எண்மலர்களைக் கொண்டு நித்தம் பூசித்து வரின், கண்ணாடியைத் துளக்க பிரகாசம் வருவது போலும், பாசி படர்ந்த நீரில் கல்லெறிந்து பாசி விலக்கப்பட்டு நீர் தோன்றுவது போலும், எண்மலர் கொண்டு எம்பிரானை பூசிக்கும் ஆன்மாவின் கண்ணே சிவபெருமான் வெளிப்பட்டு நிலையான இன்பத்தை அளித்திடுவார்.

இதை திராவிட ஞானபானு ஸ்ரீமத் மாதவ சிவஞான யோகிகள், நமச்சிவாய மூர்த்திகளுக்கு நித்திய  வணக்கம் செய்யும் விதமாக இயற்றியதாக ஆன்றோர்கள் மேற்கோள் காட்டப்படும் ஸ்துதி:

இருதய நாப்பண்‌ அஞ்செழுத்‌ துருவின்‌
   இறைவனை, உயிர்க்கொலை செய்யாமை
அருள்‌, பொறி அடக்கல்‌, பொறை, தவம்‌, வாய்மை,
   அன்பு, அறிவ என்னும்‌எண்‌ மலர்கொண்டு
ஒருமையொடு அருச்சித்து இடுகஎன்று அடியர்க்கு
   ஒள்ளிய தீக்கைசெய்து உணர்த்தத்‌
திருஅமர்‌ துறைசை உறையருள்‌ குருவாம்‌
   திருநமச்‌ சிவாயர்தாள்‌ போற்றி!

மேலும் இதே கருத்தினையுடைய வடமொழி சாஸ்திர ஸ்லோகம் ஒன்று:

அஹிம்சா பிரதமம் புஷ்பம்,புஷ்பம் இந்திரிய நிக்ரக:
ஸர்வ பூத தயா புஷ்பம் க்ஷமா புஷ்பம் விஷேஷத:
ஞான புஷ்பம் தப: புஷ்பம் சாந்தி புஷ்பம் தத்தைவ ச
சத்யம் அஷ்ட விதம் புஷ்பம் விஷ்ணோ: பிரீதி கரன் பவேத்:

இத்தகைய மலர்களைக் கொண்டு சிவபிரானைப் பூசித்து நிலையான இன்பத்தை அடைந்தோர் இருபதாம் நுாற்றாண்டில் ஒரு சிலரே! அவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அவர்கள் நமக்கு காட்டிச் சென்ற வழியில் சென்று, எக்காரணம் கொண்டு அதில் இருந்து  விலகாமல் பயணித்தால்  நாமும் அவர்களைப் போல நிலையான இன்பத்தைப் பெற்றிடலாம். 

இங்கு கோடிட்டுக் காட்ட முயலும் இச் செய்திகளுக்கு  சிறியேன் தகுதியுடைவனா… என  நினைக்கையில் ஒரு நிகழ்வு கண்முன் வந்து செல்கிறது.

உலகத்தைக் காத்து ரட்சிக்கும் பரம்பொருளாகிய சிவபிரான் முன்பெல்லாம் எழுந்தருளும்  சப்பரமும்  தேரும் வீதியுலா வரும் போது சைவக்கோயில் எனில் திருவெண்ணீறு பூசியும், வைணவக்கோயில் எனில் திருமண் அணிந்தும்  நின்றவாறு  ‘போகட்டும்! போகட்டும்!’ என்றும், ‘நிற்கட்டும்! நிற்கட்டும்!’ என்றும் ஒருவர் இறை  நாமாவளியை உரக்கக் கூறியவாறு தன் கையில் இருக்கும் அடையாளத்தை காட்டி அசைத்துக் காட்டுவதுண்டு. தற்போதெல்லாம் இந்த வழக்கம் திருக்கோயில்களில் வழக்கொழிந்து விட்டது. அந்த அடியவர் அவ்வாறு செய்வதால் மட்டுமே சுவாமி சப்பரமும், பரம்பொருளின் தேரும் நிற்கவில்லை என்பதும், நகர்ந்து செல்லவில்லை என்பதும் அனைவருக்கும் தெரியும்; அவருக்கும் தெரியும். இருந்தாலும் தேரும் சப்பரமும் நகர்ந்து செல்லும் சமயத்தில்  ‘போகட்டும்! போகட்டும்!’ என்றும், நிற்கும் சமயத்தில்  ‘நிற்கட்டும் நிற்கட்டும்!’ என்று உபச்சாரமாகச் சொல்லுவது மரபு. அதைப்போலவே அடியேனும். 

இக்கட்டுரையில் இடம் பெறும் செய்திகள் யாவும், நிலைத்த நிலையான  தன்மை கொண்டவை. இவற்றை அடியேன் ஒரு உபச்சாரமாக  எழுதுகிறேனே தவிர வேறு ஒன்றும் அறியேன் என மொழிந்து, நன்மாணக்கர்  யார் என்பதை தெரிந்து கொள்வதே இதன் நோக்கமாகும்.

அளவிலாத பெருமையர் ஆகிய
அளவிலா அடியார் புகழ் கூறுகேன்
அளவு கூட உரைப்பரிது ஆயினும்
அளவில் ஆசை துரப்ப அறைகுவேன் 

     -தெய்வச் சேக்கிழார் சுவாமிகள்

திருக்கூட்டம்:

‘அடியாருக்கும் அடியேன்’ என்பது ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனாரின் திருவாக்கு.  வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபின் வழிவந்த அடியார்களின் ஞானப் பரம்பரையை  ‘சந்தான பரம்பரை’ என்பர். திருக்கயிலாயத்தில் தொடங்கும் குரு-சிஷ்ய ஞான மரபினை சுருக்கமாகக் கூற வேண்டுமாயின்,

பூரணத்தை முழுமையாக தன்னுள் ஈர்த்துக் கொண்டு தனக்குப் பின் அணி செய்யும் பக்குவ ஆன்மாக்களுக்கு கால, நேர, தேச, இடம் பார்த்து மொழிந்து  அடுத்த நிகழ்வுக்கு அந்த ஆன்மாவைக் கடத்தும் ஓர் ஒப்பற்ற பணியை செய்து வரும் இப்பரம்பரையினரை தமிழகத்தில்  ‘ஆதினம்’ என்றும், மடாலயம் என்றும் தொன்றுதொட்டு அழைத்து வருகிறோம். 

தவத்திரு ஆறுமுக நாவலர்:

நமது தர்மத்திற்கு நெருக்கடி வரும் போதெல்லாம் ஞானபுருஷர் ஒருவர் தோன்றுவார் என்பது ஸ்ருதி வாக்கியம். அதற்கு ஏற்றாற்  போல, யாழ்ப்பாணம் நல்லுாரில் தோன்றிய மகான் தான்  தவத்திரு ஆறுமுக நாவலர் அவர்கள். அவர் அக்காலத்தில் நடமாடும் மடாலயமாக திகழ்ந்தார்கள் என்றால் அது மிகையல்ல என்பதே உண்மை. அன்னாருடைய  ஞானப் பரம்பரை யாழ்ப்பாணம் மட்டுமின்றி வழிவழியாக தமிழகமெங்கும் விரவி  இருக்கிறது. இப்பெருந்தகையார் தன்நூலில் ஓரிடத்தில்  ‘அடியார்களே! நீங்கள் எனக்கு கைம்மாறு செய்ய வேண்டும் என்றால் எனது இரு கண்களாகிய சைவத்தையும் தமிழையும் பேணிக் காத்துப் போற்றுங்கள்!’ எனக் குறிப்பிடுகிறார். இப்பெருமானின் நற்குணங்கள் பல. அவற்றுள் ஒன்றை இங்கே நினைவு கூர்வது சிறப்பு.

உலகம் உய்யவும், சைவம் நின்று ஓங்கவும் உழைத்தோரை ஏனையப் புற இருள் போக்கு கின்ற செங் கதிரவன் போல் நீக்கும் திருத்தொண்டர் புராணம் என்பாம்-  என திருநாமம் இட்டார் தெய்வச் சேக்கிழார் பிரான்:

பூதம் ஐந்தும் நிலையில் கலங்கினும்
மாது ஓர் பாகர் மலர்த்தாள் மறப்பு இலார்;
ஓது காதல் உறைப்பின் நெறி நின்றார்;
கோது இலாத குணப் பெருங் குன்றுஆனார்;

கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்;
ஓடும் செம் பொனும் ஒக்கவே நோக்குவார்;
கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார்;

ஆரம் கண்டிகை ஆடையும் கந்தையே
பாரம் ஈசன் பணி அலது ஒன்று இலார்;
ஈர அன்பினர்; யாதும் குறைவு இலார்
வீரம் என்னால் விளம்பும் தகையதோ?

சைவர்களின் ஞானக் கருவூலம்:

தனிமனித ஒழுக்கம், பொது மனித வாழ்வியல், மனிதநேயம், அன்பு, அறம், தெய்வீக ஆற்றல், சட்ட வரைமுறைகள், அரசு அதிகாரிகள்,  நீதிபதிகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், வாணிபம், விவசாயம், ஏற்றுமதி இறக்குமதி, சமையல் கலை, சித்தாந்த நுணுக்கம்,  பேச்சு, எழுத்து  இன்னும் எத்தனையோ பயனுறு செய்திகளை நமக்கு தெளிவுற முழுமையாகத் தருவது பெரிய புராணம்.   

ஒரு சமயம் ஆறுமுக நாவலரின் மூத்த தமையனார் அவருடைய பக்தியை சோதிக்க, பெரிய புராணத்திலுள்ள செய்திகள்  எல்லாம் கட்டுக்கதை என நாவலரின் செவிக்கு எட்டுமாறு கூறிவிட்டார். இதனைக் கேட்ட நாவலர்  சகோதரர் என்று கூட பாராமல் கத்தி எடுத்துக் குத்தப் பாய்ந்தார். அருகில் நின்றோர் தடுத்து விட்டனர். அன்றிலிருந்து பேசுவதையும் முகம் காட்டுவதையும்  நிறுத்திக் கொண்டார். பல ஆண்டுகளுக்குப் பிறகு சகோதரர் இறக்கும் தறுவாயில் நாவலரை அழைத்து  ‘கங்கா தீர்த்தமும் திருநீற்றுக்காப்பும் எனக்குத் தா. நான் தவறேதும் செய்திருந்தால் பொறுத்துக் கொள்’ என கேட்டுக் கொண்டார்.

சைவத்தமிழ் நுாற்களை  அச்சிட்டும் திருத்தொண்டை  தன் வாழ்நாள் முழுவதும் உவந்து செய்த நாவலர் பெருமான் பெரிய புராணத்தை நின்று கொண்டு பயபக்தியுடன் தான் அச்சுக் கோர்ப்பார்களாம் இந்த இரு செய்திகளும் தெய்வச்சேக்கிழார் மீது நாவலர் பிரான் வைத்திருந்த ஒப்பற்ற தனிமதிப்பை சொல்லாமல் சொல்லிக்  காண்பித்து  அவரின் சிவபக்தியை உணர்த்துகிறது. 

சைவ உலகில் நாயன்மார் பெருமையினை எடுத்தியம்பியவர்கள் ஏராளம். பெரிய புராணத்தை யார் ஒருவர் தொட்டுப் படிக்கிறார்களோ, பாராயணம் செய்கிறார்களோ, அவர்கள் இம்மையில் புகழும் மறுமையில் அழியாப் புகழும் பெறுவார்கள் என்பது நாவலர் அவர்களின் ஞானபரம்பரையினருக்கும் அது சாலவும் பொருந்தும்.

ஆடும் தில்லை அம்பலவன் அடிகள் மறவா அன்புடையோன்
பீடு பெறவே செந்தமிழைப் பேணி வளர்த்த பெரும்புலவன்
நீடு சைவம் நிலவுலகில் நிலவச் செய்த குருநாதன்
நாடு புகழும் ஆறுமுக நாவலன் பேர் மறவாமே!

-கவமணி தேசிகவிநாயகம் பிள்ளை 

அம்பலவாண நாவலர்:

நாவலர் பெருமானிடம்  பாடம் பயின்றவர்கள் பலர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் அம்பலவாண நாவலர். ஆறுமுக நாவலரின் பிரிவாற்றாமையால்  ‘சற்குருமணி மாலை’ என்னும்  பிரபந்தத்தை இயற்றியவர். தன் குருநாதரின் பணிகளில் ஒன்றான பெரிய புராணத்தை எங்கும் பரப்பும் நோக்கில்  தமிழகம் வந்த அவர், கண்டனுார், காரைக்குடி, தேவகோட்டை, நாட்டரசன்கோட்டை, மதுரை, திருவாவடுதுறை, திருநெல்வேலி போன்ற தலங்களில் சொற்பொழிவு செய்து வெற்றியும் கண்டார்கள்.  திக்கெல்லாம் புகழ் பரப்பும் திருநெல்வேலிச் சீமையில் திருஞானசம்பந்தப் பெருமானுக்கு ஆலயம் எடுப்பித்தவர் இவரே. மேலும் பல்வேறு சிறப்புகளைக் கொண்டவர் அன்னாரிடம் வடமொழியைக் கற்றுத் தேர்ந்தவர் தான் வி.சிதம்பரம் ராமலிங்கம் பிள்ளையவர்கள்.

வேதநெறி தழைத்து ஓங்க மிகு சைவத்துறை விளங்கப்
பூதபரம்பரை பொலியப் புனிதவாய் மலர்ந்து அழுத
சீதவள வயல் புகலித் திருஞான சம்பந்தர்
பாதமலர் தலைக் கொண்டு திருத்தொண்டு பரவுவாம்!

      -தெய்வச் சேக்கிழார் சுவாமிகள்

வி.சிதம்பரம் ராமலிங்கம் பிள்ளை:

திருநெல்வேலி இந்துக் கல்லுாரியில் ஆசிரியராகப் பணியாற்றவர். ஆசிரியர் பணிக்குப் பின் துறைசையாதினத்தில் வித்துவானாகத் தொண்டு புரிந்தவர். சைவ சித்தாந்தம் தொடர்புடைய பல நூற்களைப் பரிசோதித்து ஆதினத்தின் வாயிலாக வெளியீடு செய்த பெருந்தகையார்.  இவரின் கட்டுரைகள் யாவும் நுண்மான் நுழைபுலம் பெற்றவை. ஆண்டுதோறும் திருநெல்வேலி, விக்கிரம சிங்கபுரத்தில், சித்திரை மாதம், ஆயில்ய நட்சத்திர தினத்தன்று நடக்கும் ஸ்ரீமத் மாதவ சிவஞான யோகிகள் குருபூஜையில் கலந்துகொண்டு வழிபாடு இயற்றும் நியமம் உடையவர்.

அங்கு த.ஆறுமுகநயினாப் பிள்ளையவர்கள் தன் மகனுக்கு சித்தாந்தப் பாடங்களை போதித்தருள வேண்டும் என கேட்டுக் கொள்கிறார். அதன்படியே அப்பெருந்தகையாரிடம் சித்தாந்தப் பாடங்களை நன்று கற்றுக்கொண்டவர்தான் நம் பிரியத்திற்குரிய பேட்டை ஆ.ஈஸ்வரமூர்த்தி பிள்ளையவர்கள்.

இசைந்தெழும் அன்பில் எழுந்த படியே
பசைந்தெழும் ஈசரைப் பாசத்துள் ஏகச்
சிவந்த குருவந்து சென்னிகை  வைக்க
உவந்த குருபாதம் உள்ளத் துவந்ததே!

    -திருமூல தேவ நாயனார்

ஆ.ஈஸ்வரமூர்த்தி பிள்ளை:

திருநெல்வேலி, திருமங்கை நகர் பேட்டையில் தாம் வாழ்ந்த வீடு, மனை போன்றவற்றை சந்தானக்குரவர்களில் ஒருவராகிய மெய்கண்ட தேவநாயனாரின் குருபூஜையை வழுவின்றி நடாத்திட வேண்டும் என்பதற்காக சாசனம் எழுதி வைத்தவர் த.ஆறுமுகநயினாப் பிள்ளையவர்கள்.  இப்பெரியார் ஆக்கிய நூற்களில் முதன்மையானது  ‘நற்குடி வேளாளர் வரலாறு’. யாழ்ப்பாணம் சென்று தன் சைவ சமயப்பணியை தனக்கேயுரிய பாணியில் செய்து வந்தவர்.

அன்னாரின் தவப்புதல்வரே ஆ.ஈஸ்வரமூர்த்தி பிள்ளையவர்கள்; தந்தை செய்த தர்மத்தை அணுகளவு கூட பிசகாமல் தன் இறுதிக்காலம் வரை நடாத்திக் காட்டியவர்கள். எடுத்துக் கொண்ட பணியில் திறம்பட நின்று நிரூபித்து வெற்றியும் கொண்ட ஞானவான்  பிள்ளையவர்கள். அவர்கள் ஆசிரியர் பணி செய்த இடங்களில் எல்லாம் சைவ  சித்தாந்த சபையை நிறுவி ஞானப்பயிரை தழைக்கச் செய்தவர்கள். சங்கரன்கோவில் மக்களுக்கு அப்பெருமானார் கொடுத்துச் சென்ற பொக்கிஷம் அதுவேயாகும். அன்னாரின் மாணவர்கள்  பலருள் சங்கரன் கோயில் மாநகரில் குறிப்பிடத்தக்க சைவப்பெரியவர்கள் ச.ரத்தினவேலன், மா.பட்டமுத்து, பி.திருமலைவேலு மற்றும் பலர் ஆவார்கள்.  

ஞானத்தால் தொழுவார்சில ஞானிகள்
ஞானத்தால் தொழு வேனுனை நானலேன்
ஞானத்தால்தொழுவார்கள் தொழக்கண்டு
ஞானத்தாய் உனை நானும்  தொழுவனே.

     -ஆளுடைய அரசர்

சிவத்தொண்டர் மா.பட்டமுத்து:

சைவம், தமிழ் வளர்க்கும் பெருமைக்குரிய புனிதமிகு புன்னைவனமான சங்கரன் கோயில் மாநகரில் எழுந்தருளி திருவருள் பாலிக்கும் அன்னை கோமதியம்பிகையின்  மீது பாடப்பட்ட பக்திப் பனுவல்களை  ராஜ கோபுர வாயிலின் கீழே நல்ல மனம் படைத்த  புண்ணியவான்கள் சலவைக்கற்களால் பதித்து வைத்துள்ளார்கள். அதில் ஒரு பாடலில்…

வைகறை எழுந்து நாகசுனை தோய்ந்தருள் வழங்கும் வெண்காப்புமிட்டு
வார்ந்த கண்டிகை தரித்து அஞ்செழுத்துன்னி நன் மணிசினகரம் புகுந்துன்
பெய்கழல் பணிந்து நாவாரப் புகழ்ந்து...

-என்ற  வரிகளுக்கு  இலக்கணமாகவும் இலக்கியமாகவும் திகழ்பவர் தான் சங்கரன்கோவில் சைவ சரபம் மா.பட்டமுத்து அவர்கள்.  

இத்தலத்தில் வாழ்வாங்கு வாழ்ந்த பிள்ளையவர்களிடம் பாடம் பயின்ற மாணக்கர்களில் ஒருவராகவும், யாழ்ப்பாணம் நல்லுார் தவத்திரு ஆறுமுக நாவலரின் நிறைவான ஞான பரம்பரையில் கொடிவழிச் சீடராகவும் நம் கண்முன்னே திகழ்பவர் மதிப்பிற்குரிய ஐயா அவர்கள். அவரைப் பற்றி…

  • ‘ஆசிரியர் பணி அரன் பணியே’ என்ற புகழ்மொழிக்கு ஏற்ப கணிதத்துறையில் பணியாற்றிய அன்னார் இருமொழிப் புலமையுடன் சைவத்தொண்டாற்றும்  கண்ணியம் மிகுந்த சிவநேயர்.
  • இளமைக் காலத்தில் பிள்ளையவர்கள் நடாத்திய சமய இதழில் அனல் பறக்கும் கட்டுரைகளை அருள் மணக்க எழுதிய சைவ சமய நன்மாணக்கர். அதனால் தான் அன்னாரின்  எதிர்கால நலன் கருதி  ‘சயிலாதி’ என்ற புனைப்பெயரில் பிள்ளையவர்கள் இவர்களுடைய கட்டுரையை தணிக்கை செய்து சேர்த்துக் கொள்வார்களாம்.
  • சைவ மரபுகளை பிசிறு தட்டாமல் அப்படியே சைவர்கள் பின்பற்ற வேண்டும் என்கிற பெருநோக்குடையவர்.
  • சாத்திரம், தோத்திரம் மற்றும் தலப்பனுவல்களில் நுட்ப திட்பப் புலமையுடன் திகழ்பவர்.
  • எங்கு சென்றாலும் அங்குள்ள சிவாலயத்தில் நடத்தப்பெறும் விதிக்கப்பட்ட கால பூஜை ஒன்றில் கலந்துகொண்டு வழிபாடு செய்யும் நியமம் உடையவர்.
  • இடர்  களைந்து இன்பம் நல்கும் நால்வர் பெருமக்களாகிய சமயக்குரவர்கள் வழிபாட்டினை இடையறாமல் செய்து காட்டும் ஈடு இணையில்லாத சிவத்தொண்டர்.
  • திருமுறைகளும் சித்தாந்த சாத்திரங்களும்  சிவவாக்கு என்பதை அறிந்து  கொண்ட இவர்கள், தேவாரம் பாடியே பல திருத்தலங்களுக்குச் சென்று ஆரவாரம் இல்லாமல் தன்னை நாடி வரும் அன்பர்களை அழைத்துக் கொண்டு உழவாரப் பணிகள் செய்தும், அத் திருக்கோயில்களில்  திருப்பணிக்கும் வித்திட்ட சைவ வித்தகர். 
  • தனது சொல்லாற்றலாலும், எழுத்தாற்றலாலும் உலகச் சைவர்களுக்கு மிகவும் பிரபலமானவர்.
  • மெய்கண்டதேவ நாயனாரின் அடிச்சுவட்டில் அட்சரம் பிசகாமல் நின்று, என்றும் சைவர்களின் உள்ளங்களில்  குடியிருக்கும் ஆயில்ய நாளுக்குரிய ஸ்ரீமத் மாதவ சிவஞான யோகிகளை ஆன்மாக்கள் வாழ்நாள் உள்ளளவும் திரிகரணத் துாய்மையுடன் வணங்கி வழிபட்டால் சகல செளபாக்கியமும் பெறலாம் என வாழ்ந்து மற்றவரையும் வழிபடச் சொல்லும் மாண்பினர்.
  • வாழ்நாளில் தன்னை விட இளம் வயது சிவாச்சாரியப் பெருமக்களையும், இளம் வயது துறவிகளையும் தரிசித்து அளவளாவி மகிழ்ந்தாலும், அவர்களது திருவடியில் நெடுஞ்சாணாக வீழ்ந்து வணங்கும் உயர்பண்பினைக்  கொண்டவர். (இந்நிகழ்வினை சிறியேன் பன்முறை கண்டு இருக்கிறேன்).
  • சைவ சமயக் கொள்கையில் உறுதியாக இருக்கும் உண்மைச் சைவர்களில் முக்கியமான இச்சிவனடியார், தன்வாழ்நாளில் தீந்தமிழ்ப் பதிகங்களையும், தெய்வீக சிவநெறிக்கருத்துக்களையும் சிறு சிறு நுாற்களாக அச்சிட்டு வெளியீடு செய்த வெளியீட்டாளர்.
  • சைவ ஆதின கர்த்தாக்களின் அன்பினையும், ஆசிகளையும் பெற்ற முதுபெரும்அறிஞர்.
  • சைவத்திற்கு எதிராகச் செயல்படுவர் யாராயினும்  அவர்களுக்கு கண்டனமும், சைவ சமய திருநுாற்கள் வாயிலாக உண்மையை எடுத்து இடித்துரைக்கும் அஞ்சா நெஞ்சர். (அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற கொள்கையை வலியுறுத்தும் தி.க, தி.மு.க, மற்றும் அதன் கூட்டணி அரசிற்கு தாமதிக்காமலும்,  அன்றைய முதலமைச்சருக்கு  தன் எதிர்ப்பினை ஆணித்தரமாகவும் நாளேடு மூலம் கடும் கண்டனத்தை கட்டுரை வாயிலாக  காட்டியவர்). 
  • சில ஆண்டுகளுக்கு முன்பு சங்கரன்கோவிலில் ரதவீதியில் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் ரதவீதியில் இருக்கும் எண்மர் பலிபீடத்தில் ஒன்றாகிய ஈசான திக்கு பலிபீடத்தை அன்றைய நகராட்சி நிர்வாகம் இடித்து சிவவழிபாட்டிற்கு களங்கம் விளைவித்தது. விடிந்தால் சங்கரலிங்கப் பெருமானுக்கு கொடியேற்றம் செய்யப்பெற்று திருவிழா ஆரம்பம்.  கொடியேறிய பின்  ஸ்ரீ பலிநாதர் காலையிலும் மாலையிலும் முதலில் வீதி வலம் வருவாரே! வரவில்லை என்றால் கொடித்தடையாகி விடுமே! அஷ்டதிக்கு பாலகர்களின் திருவருள் மக்களுக்கு கிடைக்காமல் போய் விடுமே! பெருமான் தடையில்லாமல் வீதிவுலா வர வேண்டுமே! என்பதை எண்ணிய இப்பெருந்தகையார் தன்னிடம் பாடம் பயின்ற மாணவர் ஒருவர் அரசின் உயர்பதவியில் இருப்பதை அறிந்து அவர் மூலம் மேல்மட்ட அதிகாரிகளிடம் பேசி, நிலைமையை எடுத்துரைத்து, அந்தப் பதற்றமான சூழலில், தன்னுடன் இருக்கும் உழுவல் அன்பர்களின் உதவியோடு அன்றே கோமதியம்பிகை  திருவருளால் அப்பீடத்தை இரவோடு இரவாக ஸ்தாபித்து சிறு கும்பாபிஷேகத்தையும், அஷ்ட பலிபீடத்திற்கும் அபிஷேக ஆராதனைகளையும் நிகழ்வித்து காமிகாகமப் பிரகாரம் உற்ஸவம் தடையின்றி நடத்திட உறுதுணையாக நின்ற சைவ உறைப்பு மிக்க நெஞ்சுரம் கொண்ட அஞ்சா நெஞ்சர்.  
  • ஆறுமுகநாவலர், அம்பலவாண நாவலர், சிதம்பரம் ராமலிங்கம் பிள்ளைய, ஆ.ஈஸ்வரமூர்த்தி பிள்ளைய ஆகியோர் எப்படி திருத்தொண்டர் மாக்கதையை மக்களிடம் பரப்பி, சிவஞான ஒளியை எங்கும் பரவச் செய்து மகிழ்ந்தார்களோ அது போல, பெரிய புராணத்தை பன்முறை பாராயணம் செய்து, பழகும் அன்பர்களுக்கு  பாடம் பயிற்றுவித்து பக்தி மணம் பரப்பி அப்பணியை வழுவாமல் செய்த பெரிய புராணப் பித்தர்.
  • விநாயக புராண நன்னூலினை பதிப்பு வரலாற்றில் இரண்டாம் முறையாக அச்சு வாகனமேற்றி  அப்பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் பாகுபாடு இல்லாமல் கச்சியப்ப முனிவர் பிரானின் கருணையை கச்சிதமாகப் பெற்று பகிர்ந்தளித்தவர்.
  • பாண்டியரில் இருவர், பட்டரில் இருவர் என்ற மொழிக்கு இணங்க… பட்டர்களாகிய ஸ்ரீமத் மாதவ சிவஞான யோகிகளுக்கு ஆங்கிலத்திலும், கச்சியப்ப முனிவருக்கு தமிழிலும் செம்பாகமாக நூலியற்றிய நூலாசிரியர்.
  • தன்னிடம்  பழகிய அன்பர்கள்  கடைசி வரை சைவப்பணியில்  உறைப்புடன் இருக்க வேண்டும் என்கிற உயர் நோக்கம் கொண்டவர்; மேலும், மறந்தும் கூட நேரான பாதையில் இருந்து அவர்கள் தவறிவிடக் கூடாது என்பதில் கவனமாய் இருப்பவர்.
  • சைவப்பணிகளில் சமரசம், பிறகு பார்த்துக் கொள்ளலாம், புறச்சமய தெய்வ ஆராதனை, நவக்கிரக பூஜைகள், நவீனர்களின் புதுபுது தெய்வ வழிபாடு போன்ற கொள்கைகள்,  சைவ சமயத்தைச் சீரழிக்கும் என்பதை உணர்ந்து கொண்ட அன்னார்  தன்னுடைய சமயப்பணியில் மேற்கண்ட எந்தவித செயலுக்கும் எள்ளளவு இடம் கொடுக்காதவர்.
  • வாழ்நாளில் பல்வேறு சிறப்புகளை உடைய இப்பெருந்தகையார், கோமதியம்பிகை மாதர் சங்கம் மூலம்  ‘ஞானத்திரு’ என்ற தலைப்பில் சிவமணம் கமழும் சஞ்சிகையாக பழநி ஈசான சிவாசாரிய சுவாமிகளின் வாழ்வியல் குறிப்புகளை 21ஆம் நுாற்றாண்டில் முதன்முதலில் அச்சிட்டு வெளியீடு செய்த நிலைத்த பெருமைக்குரியவர் ஆவார்.
  • கோமதியம்பிகை சமேத சங்கரலிங்கப் பெருமான், சற்குரு வேலப்ப தேசிகரை ஆத்மார்த்த மூர்த்தியாகக் கொண்ட அன்னாரின் வாழ்வியல் நமக்கு கற்றுத் தரும் பாடம், முன்னோர் முதுமொழிகள் யாவும் முதல்வன் பாதத்தில் பற்றச் செய்யும், அது நல்லன எல்லாம் தரும், அல்லன எல்லாம் போக்கும் என்பதே.   
தூக்கு சீர்திருத் தொண்டத் தொகைவிரி
வாக்கினால் சொல்லவல்ல பிரான் எங்கள்
பாக்கியப் பயனாப்பதி குன்றை வாழ்
சேக்கிழான் அடி சென்னி இருத்துவாம்.

     -ஸ்ரீமத் மாதவ சிவஞான யோகிகள்

குவயலம் போற்றும் கொடிவழியினர்:

ஸ்ரீ தெய்வச்சேக்கிழார் சுவாமிகள் பொன்னடி போற்றி!
ஸ்ரீ மெய்கண்ட தேவன் திருவடி போற்றி!
ஸ்ரீமத் சிவஞான யோகிகள் மலரடி போற்றி!

மேற்கண்ட ஞானக் கொடி வழியில் வரும் சிவநேயர்கள், ஒவ்வொரு ஆன்மாக்களும் உய்வடைய வேண்டும் என்ற பெருநோக்கில் பெரிய புராணம் என்னும் அட்சய பாத்திரத்தை கையில் எடுத்து பன்முறை பரிமாறியவர்கள்; அதைத் திறம்பட செயல்படுத்தி இமாலய வெற்றியும் கண்டவர்கள். தன் வாழ்நாளில் சைவ சமயத்தைத் தவிர பிறவற்றை மறந்தும் கூட சிந்திக்காத சிவச்சிந்தனையாளர்கள்.

ஆறுமுக நாவலரிடம் பயின்ற அம்பலவாண நாவலர், வி.சிதம்பர ராமலிங்கம்  பிள்ளைக்கு வடமொழி சொல்லித் தருகிறார். இப்பெரியாரிடம் பேட்டை பிள்ளையவர்கள் சித்தாந்தப் பாடங்களை கற்றுக் கொள்கிறார். இவர்களிடம் தாமாக முன்வந்து சித்தாந்தப் பாடம் பயின்றவர்களில் நம் கண்முன்னே காட்சியாய் சாட்சியாய் இருப்பவர் சைவ சரபம் என்கிற மா.பட்டமுத்து அவர்கள். 

இச்சிறப்புகளுக்கு மகுடமாக தவத்திரு ஆறுமுக நாவலர், அம்பலவாண நாவலர், சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈஸ்வரமூர்த்தி பிள்ளையவர்கள், சைவநன்மணி ச.ரத்தினவேலன், சிவத்தொண்டர் மா.பட்டமுத்து ஆகியோரை நமச்சிவாய மூர்த்திகளின் திருச் சன்னிதிக்கு துறைசை ஆதின குருமகா சன்னிதானங்கள் வரவழைத்து,  அவர்களது  சைவ சித்தாந்த சமயப்பணிக்காக  தம் திருக்கரத்தால் பொன்னாடை போர்த்தி, திருநீறு தந்து  ருத்திராக்கம் அணிவித்து,  ஆசிக்கவசமாக அவர்களைப் பாராட்டியது இங்கு குறிப்பிடத்தக்கது.

இவர்கள் அனைவருமே தம் காலத்தில் வாழ்ந்த  ஆதின கர்த்தாக்களின் ஈர அன்பிற்குப் பாத்திரமாகிய சைவ சமயப்பணியை செவ்வனே செய்துள்ளார்கள்; செய்கிறார்கள். ‘மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம். நால்வர் பொற்றாள் எம்முயிர்த்துணையே’ என்ற கற்பக விருட்சமாகவும் காமதேனுவுமாகிய மந்திரத்தை மனதில் உச்சரித்துக் கொள்வோமாக. 

நமசிவாய தேவன் துதி   

கயிலாய பரம்பரையில் சிவஞான போத நெறி காட்டும் வெண்ணை
பயில்வாய்மை மெய்கண்டான் சந்ததிக்கோர் மெய்ஞ்ஞான பானுவாகிக்
குயிலாரும் பொழிற்றிருவா வடுதுறைவாழ் குரு நமச்சிவாயதேவன்
சயிலாதி மரபுடையோன் திருமரபு நீடுழி தழைக மாதோ!

    -ஸ்ரீமத் மாதவ சிவஞான யோகிகள்

திருச்சிற்றம்பலம்.

வாழ்க பாரதம்!  வாழ்க மணித்திருநாடு!

$$$

Leave a comment