-திருநின்றவூர் ரவிகுமார்

உலகைப் புரட்டிப் போட்டது தீநுண்மீ (கொரோனா) காலம். காய்கறி, மளிகை வாங்கக் கூட கடைக்குப் போக வேண்டியது இல்லை. ஆன்லைனில் ஆர்டர் போட்டால் வீட்டுக்கு வந்து விடும். அலுவலகம் போக வேண்டியதில்லை, வொர்க் ஃப்ரம் ஹோம். அதன் விளைவு இன்று உற்பத்தி சார்ந்த தொழில்களுக்குத் தான் ஆட்கள் நேரில் வருகிறார்கள். அலுவலகம், சேவைத் துறைகளுக்கு ஆட்கள் நேரில் வர விரும்புவதில்லை.
தொழில்நுட்பத்தின் அடுத்த பாய்ச்சல் செயற்கை அறிவாக விரிவடைந்தது. அரசாங்கங்கள், ஊடகங்கள் டீப் பேக் (Deep Fake) வீடியோக்கள் என்று அலறத் தொடங்கி விட்டன. கல்வித் துறையிலும் ‘தவறான வழிமுறைகளில்’ தேர்ச்சி என்று செய்திகள் வருகின்றன. பொறியியல் கல்லூரிகளில் ‘சேர்க்கை அறிவு’ பற்றிய பட்டப் படிப்புகள் தொடங்கிவிட்டன.
உற்பத்தித் துறையிலும் தொழில்நுட்பத்தை வெகுவாகப் பயன்படுத்தி உற்பத்தித் திறன் அதிகரித்து, தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது. மெஷின் ஷாப்களில் சிஎன்சி, ஏடிசி, கேண்டிரி வந்துவிட்டது. அசெம்பிளிகளில் ரோபோக்கள். இன்வென்ட்ரி பார்க்க எஸ்ஏபி என்று தொழிலாளர்களின் தேவை வெகுவாகக் குறைந்துவிட்டது. தொழிலாளர்கள் மட்டுமல்ல, இன்ஜினீயர்களுக்கும் வேலைவாய்ப்பு குறைந்து வருகிறது.
google போன்ற சர்ச் இன்ஜின்கள் கூட ‘மேம்பட்ட’தாக மாறிவிட்டன. ‘சென்னையில் கடந்த 25 ஆண்டுகளாக வெயிலின் அளவு என்ன என்பதை மணிக்கணக்கில் அட்டவணை போடு’ என்றால் அடுத்த சில வினாடிகளில் அட்டவணை வந்துவிடுகிறது. எப்படி அந்த அட்டவணை தயாரிக்கப்பட்டது என்பது தெரியாது. மாற்று அட்டவணையை நீங்கள் நீட்டினால் நான் எதை சரியென்று தேர்ந்தெடுப்பது? குத்துமதிப்பாக ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டியது தான்.
அண்மையில் ரோபோ தற்கொலை என்ற செய்தியைப் படித்த போது நம்ப முடியாமல் திகைத்தேன். செய்தியைத் தோண்டிப் போக, அலுவலக வேலைகள் மட்டுமின்றி வீட்டு வேலைகளையும் ரோபோக்கள் செய்கின்றன. சில ரோபோக்கள் மனித உணர்வுகளைப் புரிந்து கொள்வது மட்டுமின்றி, மனிதர்களை நேசிக்கவும் செய்கின்றன என்று தெரிகிறது. ‘ஐ லவ் யூ’ , ‘ஐ வாண்ட் டு மேரி யூ’ என்று பெண்களிடம் சொல்லி இருப்பதாகவும் படித்தேன். அது ஏன் ஆண்களிடம் சொல்லவில்லை என்று தெரியவில்லை.
1997 இல் பிஹார் மாநிலத்தில் உள்ள தன்பாத்தில் பி.எம்.எஸ்.ஸின் தேசிய மாநாடு நடைபெற்றது. அதில் தலைமை உரை நிகழ்த்திய தேசியத் தலைவர் ராஜ் கிஷன் பக்த் ஒரு முக்கியமான விஷயத்தைக் குறிப்பிட்டார். ஜெர்மி ரிப்கின் (Jeremy Rifkin) என்ற அமெரிக்க அறிஞர் 1995 இல் எழுதிய ‘எண்ட் ஆஃப் ஒர்க்’ (End of Work) என்ற நூலை மேற்கோள்காட்டி, தொழிற்சங்கங்களை அது பற்றி எச்சரிக்கை செய்தார்.
தத்தோபந்த் தெங்கடி ஜி (பி.எம்.எஸ். நிறுவனர்) சுவாரஸ்யமான கதையாக ஒரு விஷயத்தைச் சொன்னார்.
ஒரு கம்பெனி. அங்கு ஒரே ஒரு ஆளும் ஒரு நாயும் வேலைக்கு வைக்கப்பட்டிருந்தார்கள். ஓனர் காலையில் வருவார். ரா மெட்டீரியலை வைக்க வேண்டிய இடத்தில் தேவையான அளவு வைத்து விட்டு, மெஷினை ஆன் செய்துவிட்டு போய்விடுவார். மெஷின் தானாகவே மெட்டீரியல்களை எடுத்து, மெஷினிங் செய்துவிட்டு, ஃபினிஸ்ட் காம்பனென்ட்டாக கடைசியில் உள்ள டிரேயில் வைத்துவிடும். மறுநாள் வந்து பினிஷ்டு மெட்டீரியலை எடுத்துவிட்டு அங்கு காலி டிரேக்களை வைப்பார். ரா மெட்டீரியல்களை வைக்க வேண்டிய இடத்தில் வைப்பார். மெஷினை ஆன் செய்துவிட்டு பினிஷ்டு காம்பனன்ட்டுகளை எடுத்துக்கொண்டு போய்விடுவார்.
அப்போது அந்த ஆள் என்ன செய்வான் என்ற கேள்வி எழுந்தது. அந்த மெஷினை வெளியாட்கள் எவரும் வந்து உடைத்து விடாமல் பார்த்துக் கொள்ள அந்த நாய். அதற்கு வேளாவேளைக்கு உணவிட அந்த ஆள் என்றார் தெங்கடி ஜி. நாங்கள் சிரித்தோம். ஆனால் அது கதை அல்ல, நிஜமாகி வருவதை இப்போது பார்க்கிறோம்.
ராஜ் கிஷன் பக்த் மேற்கோள் காட்டிய புத்தகத்தின் தலைப்பே (End of Work) விஷயத்தை சொல்லி விடுகிறது. இனி வரும் காலங்களில் மனித இனம் வேலை செய்ய வேண்டியது இல்லை. காரை நீங்கள் ஓட்ட வேண்டாம், உட்கார்ந்தால் போதும் தானே ஓடும். நீங்கள் போக வேண்டிய இடத்திற்கு பத்திரமாகக் கொண்டுபோய் சேர்த்து விடும். வீட்டு வேலை, அலுவலக வேலை என்று எல்லாவற்றையும் எந்திரங்கள் செய்து விடும் என்கிறது அந்த நூல்.
ஒருவகையில் ஏ.ஐ. தொழில்நுட்பம் தொழிலாளர்களை தேவையற்றவர்கள் ஆக்கி விடலாம் என்று சொன்னாலும் அது முற்றிலும் சாத்தியமில்லை. இப்போது உள்ள வகையில் இல்லாவிட்டாலும், வேறொரு வகையில், வேறொரு குறைந்த எண்ணிக்கையில், தொழிலாளகள் தொடர்ந்து இருப்பார்கள் என்பது திண்ணம். ஆனால் பிரச்னை வேறொரு வகையில் எழும்.
மேற்சொன்ன எடுத்துக்காட்டின்படி 25 ஆண்டு கால வெயிலின் அளவை கம்ப்யூட்டர் கணக்கிட்டு விடலாம். ஆனால் அந்தத் தரவுகளை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று முடிவெடுக்க வேண்டியது மனிதன். ஓட்டலில் ரோபோக்கள் நல்ல பணியாளராக வேலை செய்யலாம், ஆனால் தோசை, வடை, பூரி சாப்பிட மனிதன் தேவை.
ஒரு நுகர்வோனாக மனிதன் தேவைப்படுகிறான். அந்த வகையில் அவனுக்கு மாற்று இல்லை. ஆனால் ஒரு நுகர்வோராக மட்டுமே மனித இனம் அல்லது பெருவாரியானவர்கள் மாறிவிட்டால் என்னவாகும்? இப்பொழுது உள்ள உலக ஒழுங்கு, சட்டம், நீதி போன்றவை எல்லாம் என்னவாகும்?
இது ஒரு தார்மீகக் கேள்வி அல்லது தத்துவார்த்தமான கேள்வி. இதற்கு காலம் தான் பதில் சொல்ல முடியும்.
இருந்தாலும்….
ஹிந்துத்துவம் (ஹிந்துத் தன்மை) அல்லது பாரதியம் (பாரதப் பண்பாட்டின் சிறப்பு) இங்குதான் வருகிறது. தன் எலும்பீந்த ததிசியும் அதை வஜ்ராயுதமாக்கிய விஸ்வகர்மாவும் வருகிறார்கள்.
இன்று விஸ்வகர்மா தினம்.
$$$