-ஆசிரியர் குழு


சென்னையில் நடைபெற்ற விஜயபாரதம் பிரசுரத்தின் ஆண்டு விழாவில், தமிழ் எழுத்தாளர்கள் பத்மன் (எ) நா.அனந்தபதமநாபன், செ.அருட்செல்வப்பேரரசன் ஆகியோருக்கு 2024ஆம் ஆண்டுக்கான பாரதி விருது வழங்கப்பட்டது.
2019இல் தொடங்கப்பட்ட விஜயபாரதம் பிரசுரம், தனது ஆண்டுவிழாவை முதல்முறையாக இந்த ஆண்டு புத்தாண்டு நாளில் (14.04.2024) கொண்டாடியது. சென்னை, சேத்துப்பட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, சென்னை, ரமணீயம் ரியல் எஸ்டேட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வி.ஜெகந்நாதன் தலைமை வகித்தார். விஜயபாரதம் பிரசுரத்தின் மையக்குழு உறுப்பினர் சேக்கிழான் வரவேற்புரையாற்றினார். விஜயபாரதம் பிரசுரத்தின் நிர்வாகி கார்த்திகேயன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

இந்நிகழ்ச்சிக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வட தமிழக பிரசாரத் துறைச் செயலாளரும் விஜயபாரதம் பிரசுரம் அறக்கட்டளையின் உறுப்பினருமான பா.நரசிம்மன் முன்னிலை வகித்தார். விஜயபாரதம் பிரசுரத்தின் மையக்குழு உறுப்பினர்கள் ராமகிருஷ்ண பிரசாத், சந்திரசேகர், கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியின் தொடக்கமாக, சென்னை, அம்பத்தூர் விவேகானந்தா வித்யாலயா பள்ளி மாணவ மாணவிகளின் ‘பாரதகானம்’ இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியின் செயலாளரும் வித்யாபாரதி மாநில துணைத் தலைவருமான ராமமூர்த்தி, பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
விஜயபாரதம் பிரசுரம் உருவான வரலாறு காணொலிக் காட்சியாக திரையிடப்பட்டது. மேலும், விஜயபாரதம் பிரசுரத்தின் ஆண்டுவிழா மலரும் வெளியிடப்பட்டது.

சென்னையைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநர் கார்த்திக் திருநாராயணன் தொகுத்து வெளியிட்ட ‘பிரதமர் மோடி அவர்களின் பாரத அரசு-2024’ என்ற தமிழ் நூலும், அதன் ஆங்கில வடிவமான ‘Prime Minister Modi’s Government of Bharath- 2024’ என்ற நூலும் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டன.
விஜயபாரதம் பிரசுரத்தின் வளர்ச்சிக்குத் துணை புரிந்து வரும் நூல் வடிவமைப்பாளர்கள் கௌரி, முரளி மஹராஜன், எழுத்தாளர் ஜனனி ரமேஷ், ஆயுஷ் டி.வி. மீனாட்சிசுந்தரம் ஆகியோர் விழாவில் கௌரவிக்கப்பட்டனர்.

பத்திரிகை உலகில் சிறப்பாகச் செயல்பட்டுவரும் ‘ஒரே நாடு’ ஆசிரியர் ராம.நம்பிநாராயணன், ‘பசுத்தாய்’ கணேசன், செங்கோட்டை ஸ்ரீராம், தேசிய பத்திரிகையாளர் நலச் சங்கத்தின் பொதுசெயலாளர் கோ.ஜெயகிருஷ்ணன், ‘விஜயபாரதம்’ வார இதழ் ஆசிரியர் பெ.வெள்ளைதுரை ஆகியோரும், எழுத்தாளர் கார்த்திக் திருநாராயணனும் கௌரவிக்கப்பட்டனர்.

‘தத்துவ தரிசனங்கள்’ நூலை (கிழக்கு பதிப்பகம்- 2016) எழுதிய எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான பத்மன் (எ) நா.அனந்தபத்மநாபனுக்கு 2024ஆம் ஆண்டின் சிறந்த எழுத்தாளருக்கான ‘பாரதி விருது’ வழங்கப்பட்டது.

மேலும், கிசாரி மோகன் கங்குலி ஆங்கிலத்தில் எழுதியிருக்கும் ‘The Mahabharata’ நூலை முழுமையாக ஏழு ஆண்டுகள் (2012- 2019) தொடர்ந்து கடுமையாக உழைத்து, தமிழில் மொழிபெயர்த்து இணையத்தில் ‘முழு மஹாபாரதம்’ என்ற பெயரில் அனைவருக்கும் கிடைத்திடச் செய்த அரும்பணிக்காக, எழுத்தாளரும் வரைகலைஞருமான செ.அருட்செல்வப்பேரரசனுக்கு, இந்த ஆண்டின் சிறந்த மொழிபெயர்ப்புக்கான ‘பாரதி விருது’ வழங்கப்பட்டது.
இவர்கள் இருவருக்கும் பொன்னாடை அணிவித்து, விருதுக்கான கேடயம், டாக்டர் ஹெட்கேவார் வாழ்க்கை வரலாறு நூல், ரூ. 10,000 பணமுடிப்பு ஆகியவை வழங்கப்பட்டன. விருது பெற்ற எழுத்தாளர்கள் இருவரும் ஏற்புரையாற்றினர்.
விழாவின் நிறைவாக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தென்பாரத மக்கள் தொடர்புத் துறைச் செயலாளர் பா.பிரகாஷ் சிறப்புரையாற்றினார். விஜயபாரதம் பிரசுரம் நிர்வாகி கார்த்திகேயன் நன்றி கூறினார்.
$$$
One thought on “எழுத்தாளர்கள் பத்மன், அருட்செல்வப்பேரரசனுக்கு பாரதி விருது!”