-ஆசிரியர் குழு

பொருள் புதிது தளத்தின் தோழமை அமைப்பான ‘விஜயபாரதம் பிரசுரம்’ நிறுவனம், இந்த ஆண்டுமுதல் பாரதி விருதுகளை எழுத்தாளர்களுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. நமது தளத்தின் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான எழுத்தாளர்கள் திரு. நா.அனந்தபத்மநாபன் (பத்மன்), திரு. செ.அருட்செல்வப்பேரரசன் ஆகியோர் முறையே இந்த ஆண்டுக்கான சிறந்த எழுத்தாளர், சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுகளுக்குத் தேர்வு பெற்றுள்ளனர். அவர்களுக்கு நமது வாழ்த்துகள்!
இதுதொடர்பாக, விஜயபாரதம் பிரசுரத்தின் நிர்வாகி திரு. கார்த்திகேயன் கூறியதாவது:
2019ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் ‘விஜயபாரதம் பிரசுரம்’ தேசிய மறுமலர்ச்சி இயக்கமான ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பிரசார வெளியீட்டு நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தின் முதலாம் ஆண்டு விழா வரும் புத்தாண்டன்று மாலை 6.00 மணியளவில், (குரோதி ஆண்டு, சித்திரை 1, ஞாயிற்றுக்கிழமை – 14.04.2024) சென்னையில் நடைபெறுகிறது.
தமிழக ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகமான சேத்துப்பட்டில் உள்ள ‘சக்தி’ கார்யாலயத்தில் இவ்விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் சிறந்த எழுத்தாளருக்கான பாரதி விருது திரு. நா.அனந்தபத்மநாபனுக்கும் (நூல்: தத்துவ தரிசனம்), சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான பாரதி விருது திரு. செ.அருட்செல்வப்பேரரசனுக்கும் (பணி: கிசாரி மோகன் கங்குலி ஆங்கிலத்தில் எழுதிய நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு- முழு மஹாபாரதம்) வழங்கப்படுகிறது.



இந்நிகழ்வுக்கு சென்னை, ரமணீயம் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. வி.ஜகந்நாதன் தலைமை வகிக்கிறார். கண்ணதாசன் பதிப்பகத்தின் தலைவர் திரு. காந்தி கண்ணதாசன் முன்னிலை வகிக்கிறார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தென்பாரத மக்கள் தொடர்பு செயலாளர் திரு. பா.பிரகாஷ் சிறப்புரை ஆற்றுகிறார். முன்னதாக, விவேகானந்தா கல்விக்குழும மாணவர்களின் ‘பாரத கானம்’ இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்வில் ஆண்டுவிழா மலரும் வெளியிடப்பட உள்ளது.
இந்த ஆண்டு தேர்தல் காலமாக இருப்பதால் ஆண்டு விழாவை எளிமையான முறையில் நடத்துகிறோம். வரும் ஆண்டுகளில் மேலும் புதிய துறைகளில் சாதனை படைத்துவரும் எழுத்தாளர்களை விருது வழங்கி கௌரவிக்கவும் திட்டமிட்டுள்ளோம்.
தமிழ் கூறும் நல்லுலகில் தேசிய சிந்தனையை வலுப்படுத்தும் பணியில் ‘விஜயபாரதம் பிரசுரம்’ மேற்கொண்டுவரும் சீரிய பணியில் இந்த ஆண்டுவிழா ஒரு முக்கியமான மைல் கல்லாகும். இவ்விழாவுக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம் – என்றார்.
தமிழகத்தின் பாரம்பரியத் திருநாளான புத்தாண்டன்று ஆண்டு விழா நடத்தும் விஜயபாரதம் பிரசுரத்தை வாழ்த்துகிறோம். மகத்தான தேசிய கவிஞர் மகாகவி பாரதியின் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள பாரதி விருதுகளை இவ்விழாவில் பெறும் அன்பிற்குரிய தோழர்களையும் வாழ்த்துகிறோம். இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு வாசக அன்பர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
$$$