-திருநின்றவூர் ரவிகுமார்
சுவாமி சகஜானந்த சரஸ்வதியின் ‘என் வாழ்க்கைப் போராட்டம்’ நூலை முன்வைத்து, நூல் அறிமுகமாக மட்டுமல்லாது, அக்கால சமூக வரலாற்றையும், மூன்று பகுதிகள் கொண்ட இத்தொடரில் எழுதி இருக்கிறார், திரு. திருநின்றவூர் ரவிகுமார்…. (இது இரண்டாம் பகுதி)…

- (பகுதி-1)
சுதந்திரப் போராட்டத்தில் சகஜானந்தர்
துறவி என்றால் எல்லாவற்றையும் விட்டுவிட்டு தனிமையில் மோட்சத்திற்கான வழியைக் கண்டடைய வேண்டும். இவரோ ஜாதி சங்கத்தில் ஈடுபடுகிறாரே என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
சகஜானந்தர் சொல்கிறார்” “இந்தக் கேள்விக்குப் பின்னால் இருக்கும் மனநிலை எனக்குப் புரியவில்லை. ஜாதி அரசியலில் நான் ஈடுபட்டது ஒரு விபத்து. சூழ்நிலையின் தாக்கத்தால் என்னை மீறிய சக்தியால் உந்தப்பட்டு அதில் ஈடுபட வேண்டியதாயிற்று. நான் திட்டமிட்டு அதில் நுழையவில்லை. ஒரு பாவச் செயலைச் செய்துவிட்டு அறியாமல் செய்துவிட்டேன் என்று கூறி தப்பிக்க முடியாது. ஆனால் நான் எந்தப் பாவமும் செய்யவில்லை. எந்த சுயநல நோக்கமும் இல்லாமல் தான் நான் சமூக சேவையில் ஈடுபட்டேன்.
ஒடுக்கப்பட்டவர்களாக, தாழ்த்தப்பட்டவர்களாக, ஆதரவற்றவர்களாக பூமிகார் பிராமணர்கள் இருந்தார்கள். அவர்களை உயர்த்த, அநீதியைக் களைய நான் பணிபுரிந்தேன்; மாற்றத்தை ஏற்படுத்தினேன். அத்தோடு நிற்கவில்லை, ஒட்டுமொத்த தேசத்தையும் உயர்த்துவது என் லட்சியம். அதுதான் என் சேவையின் நோக்கம். அதற்காகத்தான் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டேன். சிறு குழுவுக்கு சேவை என்பதை விட்டுவிட்டு தேசிய பணியில் ஈடுபட்டேன்”.
காந்திஜியைச் சந்தித்தது:
ஒத்துழையாமை இயக்கத்திற்கு மக்களின் மனங்களைத் தயார் செய்ய காந்திஜி பல மாநிலங்களுக்கு சென்றார். அவ்வாறு 1920 டிசம்பர் மாதம் பாட்னா வந்த அவரை சகஜானந்தர் சந்தித்து உரையாடினார். அதுபற்றி அவர் ‘பாடலிபுத்திரா’ என்ற பத்திரிக்கையில் (6 டிசம்பர் 1920) விரிவாக எழுதியுள்ளார்.
‘எதன் மீதும் பற்று இல்லாமல், யாரையும் தவறாகக் கருதாமல், வெறுப்புணர்வு இல்லாமல் இருப்பதே துறவியின் அடையாளம்’ என்று காந்திஜி சகஜானந்தரிடம் சொல்லி உள்ளார். ‘துறவியாக இருந்தாலும் தீமையை வெறுக்காமல் எப்படி வாழ முடியும்?’ என்று சகஜானந்தர் கேட்டார். அதற்கு, ‘தீமையை வெறுப்பதை நான் வெறுப்புணர்வாகவே கருதவில்லை’ என்று காந்திஜி பதிலளித்துள்ளார்.
‘கிலாபத் பிரச்சினை தீர்ந்தவுடன் முஸ்லிம் முல்லாக்களும் மௌலவிகளும் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இருந்து விலகி விட்டால் என்ன செய்வீர்கள்?’ என்று சகஜானந்தர் கேட்டார். ‘அவர்கள் அப்படிச் செய்ய மாட்டோம் என்று என்னிடம் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதை பெருந்தன்மையோடு நான் ஏற்றுக்கொள்கிறேன். அவர்கள் துரோகம் செய்ய மாட்டார்கள் என்று நம்புகிறேன்’ என்று காந்திஜி பதிலளித்துள்ளார்.
அந்த பதில் ஒரு மழுப்பலாக சகஜானந்தருக்குப் பட்டிருக்கிறது. ‘பதிலில் திருப்தி இல்லை என்றாலும், இப்போதைக்கு இதை ஏற்கிறேன்’ என்று சொல்லிவிட்டு சகஜானந்தர் அடுத்த விஷயத்திற்குப் போயிருக்கிறார்.
முஸ்லிம்கள் ஹிந்துக்களை தாக்குவது பற்றியும் அதற்கான தீர்வு பற்றியும் காந்திஜியின் கருத்துக்களைக் கேட்டார் சகஜானந்தர். அதற்கு, பகவத் கீதை மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும், அது இருக்கும் வரை ஹிந்துயிசத்தை யாரும் ஒன்றும் செய்து விட முடியாது என்றும், அது பொய்யாகிப் போனால் அப்படிப்பட்ட ஹிந்துயிசம் அழிந்து போவதே நல்லது என்றும் காந்திஜி பதிலளித்துள்ளார்.
சகஜானந்தர் சந்தேகப்பட்டபடியே கிலாபத் பிரச்சினைக்குப் பிறகு முஸ்லிம்கள் தப்லிக் மற்றும் தான்ஸீம் (இது தாம் வாழும் நாட்டை இஸ்லாமிய மயமாக்கும் நோக்கம் கொண்டது) அமைப்புகளில் ஈடுபாடு காட்டலானார்கள். காந்திஜிக்கு கடிதம் எழுதினார் சகஜானந்தர். அதில் தம்முடைய சந்திப்பு பற்றியும் அப்பொழுது தான் கூறிய விஷயங்கள் இப்பொழுது நடைபெறுவது பற்றியும் காந்திக்கு இழைக்கப்பட்ட துரோகம் பற்றியும் அதில் எழுதியிருந்தார். அதற்கு காந்திஜி அனுப்பிய பதில் கடிதத்தில், ‘முன்னர் முஸ்லிம்கள் பற்றி தான் கொண்டிருந்த மதிப்பு பற்றி இப்பொழுதும் தனக்கு வருத்தம் இல்லை’ என்று குறிப்பிட்டிருந்தார்.

காந்திஜியின் தாக்கம்:
காந்திஜியின் கொள்கைகள், போக்கு பற்றி சந்தேகம் இருந்தாலும், அவருடனான சந்திப்புக்குப் பிறகு, காந்தியின் ஆளுமை, அவரது தலைமைத்துவம் ஆகியவை சகஜானந்தரிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அதனால் அவர் காங்கிரஸுடன் இணைந்து அடுத்த பதினைந்து ஆண்டுகள் பயணித்தார். கதர் இயக்கத்தை கிராமம் கிராமமாக்க் கொண்டு சென்றார். சுதந்திரப் போராட்டத்தில் தனது தொடர்புக்கு வந்த இளைஞர்களை ஈடுபடுத்தினார்.
1922இல் ஓராண்டு சிறை, 1930 இல் உப்பு சத்தியாகிரகத்தில் ஈடுபட்டதற்காக ஆறு மாத சிறை, 1940 தேசவிரோத சட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுகள் சிறையெனத் தண்டிக்கப்பட்டவர் சகஜானந்தர். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டபோது அவர் சந்தித்த தலைவர்கள், சிறையில் அவர் எதிர்கொண்ட பிரச்சினைகள், பகவத் கீதை என பல சுவாரஸ்யமான விஷயங்களைக் கொண்டது சகஜானந்தரின் இந்தக் காலகட்டம்.
உதாரணத்திற்கு ஓரிரு நல்ல விஷயங்களைப் பார்ப்போம்.
சிறை சென்ற சங்கராச்சாரியார்:
சகஜானந்தர் ஹிந்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம், பிகாரில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே பேசப்படும் மைதிலி, போஜ்புரி மொழிகளில் வல்லவர். ‘ஏக தண்டி சன்யாசி’ (ஒற்றைக் கோள் ஏந்திய துறவி). ஆதிசங்கரர் முன்வைத்த அத்வைத சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டவர்.
நாகபுரியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டுக்கு சகஜானந்தர் தன் ஆதரவாளர்களுடன் சென்றார். அந்த மாநாட்டு அமைப்பாளரான டாக்டர் மூஞ்சே பற்றி சிறப்பாகக் குறிப்பிடுகிறார். அந்த மாநாட்டில் துவாரகா சங்கராச்சாரியாரும் கலந்து கொண்டார். (பின்னாளில் இவர் புரி சங்கராச்சாரியார் என்று அறியப்பட்டார்). சகஜானந்தரும் ஏக தண்டி என்பதால் சங்கராச்சாரியாருடன் அமர்ந்திருந்தார். வேறு சில சன்னியாசிகளும் அவர்களுடன் அமர்ந்திருந்தனர்.
இந்தியாவுக்கு டொமீனியன் அந்தஸ்து கேட்டு காங்கிரஸ் தீர்மானம் போட்டது. இது கிலாபத் இயக்கத்தினரால் முன்வைக்கப்பட்டது (பிரிவினைக்கு முதல் வித்து?). முழு சுதந்திரம் வேண்டும் என்று கூறி அந்தத் தீர்மானத்தில் சங்கராச்சாரியார் கையெழுத்திட மறுத்தார். ஒரு புத்திசாலியான காங்கிரஸ் தலைவர் – சகஜானந்தர் அவர் பெயரைக் குறிப்பிடவில்லை – சங்கராச்சாரியாரிடம், ‘இதில் கையெழுத்திடுவதால் இதுதான் உங்கள் கருத்து என்று ஆகிவிடாது. இன்றைய நாளில் காங்கிரசின் கருத்து இது என்ற அளவில் மட்டுமே கருத வேண்டும். இதை மாற்ற வேண்டும் என்றால் அடுத்த கூட்டத்தில் தான் முடியும். இந்தக் கூட்டத்திற்கு நீங்கள் வந்ததைப் பதிவு செய்தால் மட்டுமே அடுத்த கூட்டத்திற்கு உங்களுக்கு அனுமதி கிடைக்கும்’ என்று நச்சியமாகப் பேசி கையெழுத்தைப் பெற்று விட்டார்.
பின்னர், ஆங்கில அரசு இந்தக் கையெழுத்தை காட்டி அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டி சங்கராச்சாரியாரை கைது செய்து சிறையில் அடைத்தது.
சங்கராச்சாரியாரும் மற்ற ஹிந்து சன்யாசிகளும் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டது, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைத் தண்டனை பெற்றது, முஸ்லிம்கள் முன்வைத்த தீர்மானத்தை ஆதரித்ததற்காக ஹிந்து சங்கராச்சாரியார் சிறைப்பட்டார் (இது சகஜானந்தரின் கண்ணோட்டம்), என்ற செய்திகள் சகஜானந்தரின் நூலில் இருந்து நமக்கு கிடைக்கப் பெறுகின்றன. தண்டனை முடிந்து வெளியே வந்த சங்கராச்சாரியார் தன்னை ‘சுத்தி’ செய்து கொண்டதுடன், அத்துடன் அவர் இது போன்ற போராட்டங்களில் இருந்து சுத்தமாக விலகி விட்டதையும் சகஜானந்தர் குறிப்பிடுகிறார்.
சிறையில் புரிந்தது கீதை:
பகவத் கீதை தன் வாழ்வின் பிரிக்க முடியாத அங்கம் என சகஜானந்தர் கூறுகிறார். கீதைக்கு எழுதப்பட்டுள்ள பல்வேறு அறிஞர்களின் விளக்க உரைகளையும் ஹிந்தி, மராத்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம் என பல மொழிகளில் எழுதப்பட்ட விளக்க உரைகளையும் அவர் வாங்கிப் படித்துள்ளார். அது பற்றி தம் ஆதரவாளர்களுடன் பேசியும் உள்ளார்.
கீதை அத்வைதம் பற்றியும் ஆன்மிகம் பற்றியும் பேசுவதாக ஒரு பொதுவான புரிதல் அவருக்கு இருந்தது. அது தவிர சிறப்பான கருத்து ஏதும் ஆரம்பத்தில் அவருக்கு இல்லை. அது மட்டுமன்றி வாழ்க்கையே புரட்டிப் போடும் என்றெல்லாம் நம் நாட்டிலும் வெளிநாட்டிலும் பல அறிஞர்கள் பேசுவதைப் படிக்கும் போது அவருக்கு, இதில் அவ்வளவு சிறப்பு ஒன்றும் இல்லையே, என்ற நினைப்பும் எழுந்துள்ளது.
இந்த நிலையில்தான் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக 1922இல் அவரை ஆங்கில அரசு சிறையில் அடைத்தது. அங்கு அவரைப் பார்க்க வந்த மார்வாரி ஆதரவாளர் ஒருவர் அவரிடம் சிறிய பகவத் கீதை நூலைக் கொடுத்துள்ளார். ஏராளமான நேரம் தனிமை, விளக்கவுரைகள் ஏதுமற்ற கீதை நூல் – என்ற சூழ்நிலையில் அவர் பகவத் கீதையை தன் அறிவு, அனுபவத்தின் அடிப்படையில் தியானித்து உள்வாங்கிக் கொண்டார். அது அவரிடம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
அவரது உள்ளம் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தது. அதுவரை அவர் வாழ்வில் இருந்த துன்பங்கள், கவலைகள், துயரங்கள் எல்லாம் கீதையின் ரகசியம் புரிந்தவுடன் காணாமல் போய்விட்டதாகவும் ஒருவிதமான ஆழ்ந்த அமைதி தன்முள் கவிழ்ந்ததாகவும் சகஜானந்தர் அந்த அனுபவம் பற்றி எழுதியுள்ளார்.
அந்தச் சிறிய நூலை கதர்த் துணியில் சுற்றி போற்றிப் பாதுகாத்ததாகக் கூறும் அவர், திலகர் பெருமான் எழுதிய ‘கீதா ரகசியம்’ என்ற நூலுடன் தனக்குள்ள மாறுபாடுகள், தன்னுடைய புரிதலின் அடிப்படையில் பின்னாளில் ‘கீதையின் இருதயம்’ என்ற நூலை எழுதியுள்ளார்.
நேருவைச் சந்தித்தது:
சிறையில் இருந்த போது பல தலைவர்களை சகஜானந்தர் சந்தித்து உரையாடி உள்ளார். சாதாரணத் தொண்டர்களுடனும் பழகி உள்ளார். அது பற்றிய குறிப்புகள் ஆங்காங்கே இந்த நூலில் விரவிக் கிடக்கின்றன.
லக்னோ சிறையில் இருந்த போது பண்டித ஜவஹர்லால் நேருவைச் சந்தித்துள்ளார். அவருடன் நீண்ட உரையாடலை நிகழ்த்தியுள்ளார். அது பற்றிய குறிப்பு சுவாரஸ்யமானது.
இருவரும் ஒரே சிறையில் வெவ்வேறு பிரிவுகளில் இருந்துள்ளனர். ஒருநாள் மதிய உணவுக்குப் பின் சந்திப்பதாக இருந்தது. அது கோடைக் காலம். வசதியான வாழ்க்கை கொண்ட நேரு வெயிலில் நீண்ட தூரம் கஷ்டப்பட்டு தன்னைச் சந்திக்க வருவதற்கு பதிலாக, தானே நேருவின் சிறையறைக்கு வருவதாக சகஜானந்தர் கூறினார்.
அதற்கு நேரு, ‘ஒரு வக்கீலாக இந்த நீதிமன்றத்திற்கும் அந்த நீதிமன்றத்திற்கும் வெயிலில் அலைந்திருக்கிறேன். வெயில் ஒரு பிரச்சினை இல்லை. நானே உங்கள் இடத்துக்கு வருகிறேன் ‘ என்று பணிவுடன் கூறி உள்ளார். அதேபோல வந்து, நீண்ட நேரம் பல விஷயங்களைப் பற்றி எந்த மேட்டிமையும் இன்றி சகஜமாக உரையாடிச் சென்றுள்ளார். இதைக் குறிப்பிட்டு சகஜானந்தர் நேருவைப் பற்றி தன் உயர்ந்த அபிப்பிராயத்தைப் பதிவு செய்துள்ளார்.
சில தலைவர்கள் இதுபோல இருப்பதை சுட்டிக்காட்டும் சகஜானந்தர் பல தலைவர்கள் அதுபோல இல்லை; சுயநலமும் பகட்டும் கொண்டிருந்தார்கள் என்பதையும், அனேகமாக எல்லாத் தொண்டர்களும் சிறையில் காந்தியின் கொள்கைப்படி நடக்காமல் அதற்கு மாறாக நடந்து கொண்டதையும் குறிப்பிடுகிறார்.
சிறையிலும் வெளியிலும் அவருக்கு காங்கிரஸ்காரர்களுடன் ஏற்பட்ட கசப்பான அனுபவம், பல்வேறு விஷயங்களில் காங்கிரசின் செயல்பாடுகள், காந்திஜியின் மழுப்பலான நிலைபாடுகள் ஆகியவற்றால் சகஜானந்தர் நம்பிக்கை இழந்தார். காங்கிரஸிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டார். பதினைந்து ஆண்டுகால காங்கிரஸ் தொடர்பும் துண்டிக்கப்பட்டது. நேரடி அரசியல் களத்தில் இருந்து அவர் வெளியேறினார். ஆனால் அவரது தேச சேவைப் பணி வேறு வகையில் தொடர்ந்தது.
(தொடர்கிறது)
என் வாழ்க்கைப் போராட்டம் The Struggle of My Life (ஆங்கில நூல்) ஆசிரியர்: சுவாமி சகஜானந்த சரஸ்வதி மொழி மாற்றம்: ராமசந்திர பிரதான் வெளியீடு: ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் விலை: ரூ. 1395-
$$$