அயோத்யா பயணம் – ஓர் இனிய அனுபவம்

-முரளி சீதாராமன்

சேலத்தில் வசிக்கும் திரு. முரளி சீதாராமன், ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். இவரது அயோத்தி பயண அனுபவம் இங்கே பதிவாகிறது...
அயோத்தி ராமர் கோயில் அருகே உள்ள அமர்ஜவான் சின்னம்

வட தமிழ்நாடு ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட – அயோத்தி பயணம் – ஸ்ரீராமர் ஆலய தரிசனம் – பிப்ரவரி 19  திங்கள்கிழமை அதிகாலை 3.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டோம்.

ஒரு ரயிலின் அனைத்துப் பெட்டிகளுமே ராம பக்தர்கள்! திரும்பிய பக்கமெல்லாம்  ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கம்.

500 ஆண்டுக்காலக் கனவு – ராம பிரானுக்கு அயோத்தியில் ஆலயம்! எத்தனை பேரின் உயிர்த் தியாகம்! எத்தனை தலைமுறையின் ஏக்கம்!

அப்படிப்பட்ட பேரனுபவம் நமக்குக் கிடைத்த பெரும் பாக்கியத்தின் உவகை அத்தனை பேர் கண்களிலும் வெளிப்பட்டது.

ராம பக்தர்கள் செல்லும் ரயில் என்பதால் மிக பலமான பாதுகாப்பு ஏற்பாடுகள்! ஆயுதம் தாங்கிய ரயில்வே போலீசாரின் கண்காணிப்பு!

அநாவசியமாக ரயில் பெட்டியின் கதவுகளைத் திறக்காதீர்கள் – முக்கியமான சில ஸ்டேஷன்களில் ரயில் நின்றாலும் நடைமேடையை ஒட்டிய கதவையே திறங்கள் – என்ற கண்டிப்பான வழிகாட்டுதல்!

ராமபக்தர்களின் பாதுகாப்பு, அயோத்தி செல்லும் போதும், திரும்பும் போதும் உறுதி செய்யப்பட்டது.

21 பிப்ரவரி அதிகாலை 3.15 க்கு அயோத்யா சென்றடைந்தது சிறப்பு ரயில்!

அயோத்தி சென்றடைந்ததுமே – இப்படி தமிழகத்தில் இருந்து வரும் ராமபக்தர்களை வரவேற்று வேண்டிய ஏற்பாடுகள் செய்வதற்காக அங்கே முன்னமே சென்று முகாமிட்டுள்ள  கோபிநாத் அவர்கள் – சேலம் மாவட்ட பாஜக பொறுப்பாளர் – வட தமிழக யாத்ரிகர்களை வரவேற்றார்.

உற்சாகத்துடன்  ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கமிட்டு, ரயில் பிளாட்ஃபாரத்திலேயே தெண்டனிட்டு நமஸ்கரித்து அயோத்தி மண்ணை பலரும் நமஸ்கரித்தனர்.

ஸ்ரீராம்! ஸ்ரீராம்! ஸ்ரீராம்!

அயோத்யா முழுவதும் திரும்பிய திசை எல்லாம் ராம நாம முழக்கம்தான்!

ஒரு சாதாரண சிற்றூராக இருந்த அயோத்யா, இன்று பல கோடி ரூபாய் மதிப்புள்ள வர்த்தகத் தலைநகராகவும் பரிணமித்து உள்ளது, உ.பி. யோகி அரசின் சாதனை!

சர்வதேச ரயில் நிலையங்களின் தரத்தில் அயோத்தி தாம் ரயில் நிலையம் ஜ்வலிக்கிறது!

தலைகள்! தலைகள்! திரும்பிய பக்கமெல்லாம் மனிதத் தலைகள்!

‘ஜெய் ஸ்ரீராம்!’ முழக்கம் – காவிப் பதாகை – தலைப்பாகையில் ஜெய் ஸ்ரீராம் – சங்கு முழங்கியபடி சிலர் என்று….

பக்தர்களின் வெள்ளம் – வெள்ளம் – வெள்ளம்!

அவ்வளவு கூட்டத்துக்கும் தரிசனம் மிக சுலபமாக – அதிகபட்சம் ஒரு மணி நேரத்தில்  ‘பால ராமரை’ தரிசித்து வெளியே வந்துவிடலாம்! அவ்வளவு நேர்த்தியான ஏற்பாடுகள்! செல்ஃபோன் உள்ளிட்ட உங்கள் பைகளை பாதுகாப்பாக வைத்துச் சென்று, பிறகு எடுத்துக்கொள்ள வசதியாக பாதுகாப்பு அறைகள்!

சாதாரணமாக ஒரு நாளில் 3 லட்சம் முதல் 4 லட்சம் பேர் வருவதாகக் கணக்கிடுகிறார்கள் – அதுவே விடுமுறை தினங்கள் என்றால் ஏழு லட்சம் வரை செல்கிறதாம்!

பகவான் ஸ்ரீராமன் தனது அருட் பெருங்கருணையால் எத்தனையோ சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியுள்ளான்.

கடைகள், அணிமணிகள் விற்கும் மையங்கள், சிறிதும் பெரிதுமாக உணவகங்கள், தங்கும் விடுதிகள் என்று அயோத்தியே ஒரு சுபிட்சப் பொருளாதாரத்தை நோக்கி விரைகிறது!

அயோத்தி, கரசேவகபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள காவிக்கொடி.

ஒரு ஆட்டோ ஓட்டுநர் ஒரு நாளுக்கு சர்வ சாதாரணமாக ஐயாயிரம் முதல் எட்டாயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கிறார்!

பெட்டிக்கடை போன்ற சிறிய கடைகளில் அயோத்தியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ராமரின் உருவப்படம் லேமினேட் செய்யப்பட்டு – கையடக்கமாக பர்சில் வைத்துக் கொள்வது போன்றது – பத்து ரூபாய்க்கு விற்கிறார்கள்.

இதுபோக ஹனுமன் படம், ராம – லக்ஷ்மண – சீதா தேவி – ஹனுமன் காலடியில் அமர்ந்த படம்…

பாசி மணி மாலை, ருத்ராட்ச மாலை, ராமன் படம் போட்ட டாலர்…  இப்படி ஏராளமாக விற்கிறார்கள்.

இத்தனை லட்சம் பேர் வருகிறார்கள். அந்த பக்தர்களில் சிலரால் ஒரே ஒரு கடையில் மட்டும் ஒரு நாளில் 200  ராமர் படம் விற்கிறது என்றாலும் படம் ஒன்றுக்கு 10 ரூபாய் வீதம் ராமர் படம் மூலம் மட்டும் வருமானம் 2,000 ரூபாய்!

மாதத்துக்கு 60,000 ரூபாய் பெட்டிக் கடைக்காரருக்கு வருமானம் – கையடக்க சைஸிலான ராமர் படம் மூலம் மட்டும்!

இதுபோக பாசிமணி மாலை, ருத்ராட்ச மாலை, ராமர் – சீதை – ஹனுமான் போட்ட டாலர்கள் இப்படியாக விற்பனையில் நாள் ஒன்றுக்கு இன்னொரு 2000 ரூபாய் வைத்துக் கொள்வோம் – இவை மூலம் மாதம் இன்னொரு 60,000 ரூபாய்.

ஆக மொத்தம் லட்சம் ரூபாய்க்கு மேல் ஒரு பெட்டிக்கடைக்காரரின் மாதாந்திர டர்ன் ஓவர்!

மகனே உன் சமர்த்து! நீ தனியாக ஆட்டோ வைத்துக்கொண்டு சரயூ நதி, ஹனுமார் கோயில், ராமர் ஆலயம் இப்படிப் போகிறாயா – 300 ரூபாய் வாடகை! அதே ஆட்டோவில் டிரைவரை ஒட்டி முன் சீட்டில் இருவர், பின்பக்கம் நான்கு பேர் எதிர் எதிர் சீட்டில் – ஆக மொத்தம் 6 பேருக்கு 300 ரூபாய் – தலா 50 ரூபாய் ஏற்பாடு செய்து கொள்கிறாயா? அது உன் சாமர்த்தியம்!

ஆனால் ஆட்டோ ஓட்டுநருக்கு ஒரு ட்ரிப்புக்கு 300 ரூபாய் வந்துவிடுகிறது. ஒரு நாளுக்கு மிகக் குறைவாக 10 சவாரி என்று வைத்துக் கொண்டால் கூட நாள் ஒன்றுக்கு ஆட்டோ ஓட்டுபவருக்கு 3,000 ரூபாய் குறைந்தபட்ச வருமானம்!

ஆனால் கூட்டம்தான் அலை அலையாக வந்துகொண்டே இருக்கிறதே! எப்படியும் நாள் ஒன்றுக்கு குறைந்தது 20 சவாரியாவது அகப்படாமல் போகாது!

200 ரூபாய் குறைந்த அளவு ரேட் வைத்தாலும் 20 சவாரிக்கு நாள் ஒன்றுக்கு 4,000 ரூபாய் வீதம் மாதம் ஒரு லட்சத்து இருபதாயிரம் (1,20,000) சம்பாதிக்கிறார் ஆட்டோ டிரைவர். நமது ஊர் ஜாக்டோ- ஜியோ போராளி அரசு ஆசிரியரின் ஒரு மாதச் சம்பளத்தை – சம்பள கமிஷன் மூலம் போராடி வாங்கும் ஊதியத்தை – அங்கே ஒரு ஆட்டோ டிரைவர் சம்பாதிக்கிறார்.

ஆன்மிகம் ஒரு பக்கம் பெருகினாலும், பொருளாதார ரீதியாக அது ஏற்படுத்தும் சுபிட்சம் பளிச் என்று தெரிகிறது!

எனக்குத் தெரிந்த அறைகுறை ஹிந்தியில் சரயூ நதி போவதற்கு ஆட்டோ நானே சவாரி பேசினேன்!

“சரயு நதி ஜானே கே லியே கித்னே ருப்யே பவான் மாங்த்தே ஹைங்?”

ஒருவேளை  ‘பவான்!’ என்று அழைத்தது அந்த ஆட்டோ டிரைவருக்கு இனிய அதிர்ச்சி போலும்.

பெரும்பாலும் சரள ஹிந்தியில் அவர்கள்  ‘ஆப்’ பிரயோகத்தை விட  ‘தும்’  பிரயோகத்தையே பயன்படுத்துகிறார்கள் அதற்குரிய வினைச் சொல்லுடன்! (அதுவும் பன்மைதான் – என்றாலும் நீங்கள் என்பதை விட ஒரு படி குறைவாக  ‘நீவிர்’ என்பது போல நெருக்கம் + INFORMAL அழைப்பு அது!

ஹிந்தி பரீக்ஷை எழுதித் தேர்ச்சி பெற்ற  ‘சாஸ்த்ரோக்த’ ஹிந்தி எல்லாம் அங்கே செல்லாது! LOCAL SLANG ஏராளம்!

சரயூ நதியில் மகா ஆரத்தி. மாலை 6.30 மணிக்கு திவ்யமான தரிசனம்!

ராமர் இறுதியில் அதே சரயூ நதியில் மூழ்கி தனது அவதாரத்தை முடித்துக் கொண்டு முக்தி பெற்ற ஸ்தலமும் உள்ளது!

அயோத்தியில் பார்க்க, பதினைந்து இருபது இடங்களுக்கு மேல் உள்ளன – நமது நேர அவகாசத்தைக் கணக்கிட்டு முக்கியமாக ராமர் ஆலயம், ஹனுமான் ஆலயம், சரயூ என்று சில இடங்களோடு நிறுத்திக் கொண்டோம்.

தங்குவதற்கான ஏற்பாடு மிக விரிவாக இருந்தது. ராஜஸ்தான், தெலுங்கானா, தமிழ்நாடு என்று வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக் கணக்கானோர் தங்கவும், உணவருந்தவும், குளித்து காலைக் கடன்களைக் கழிக்கவும் மிக விரிவான ஏற்பாடுகள்,  ‘தீர்த்த க்ஷேத்ர புரம்’ வளாகத்தில் செய்யப்பட்டு இருந்தன!

ஒவ்வொரு அறிவிப்புக்கும் தொடங்கும் முன்பு –  ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற முழக்கத்துடன் வெவ்வேறு பாரத மொழிகளில் அறிவிப்புகளைக் கேட்டது இனிய அனுபவம்!

மிகப் பரந்த மைதானம்! அதன் நடுவே நாட்டுக்காக உயிர்விட்ட ராணுவ வீரர்களின்  ‘அமர் ஜவான் ஜோதி’.

சத்ரபதி சிவாஜி மகராஜின் திருவுருவ பேனர்!

550 ஆண்டுகளுக்காக அயோத்தி ராமர் ஆலய நீதிக்காக உயிர்விட்ட தியாகிகளின் நினைவாக காவி த்வஜ ஸ்தம்பம்!

இவை மூன்றுக்கும் மெய்சிலிர்க்க அஞ்சலி செலுத்தும் ராம பக்தர்களின் கூட்டம்!

எங்களோடு தங்கியிருந்தவர்களில் மிக அதிசய மனிதர், காஞ்சிபுரத்திலிருந்து வந்திருந்த ராம பக்தராகிய சி.ஜீவரத்னம் முதலியார்!  93 வயது!

இந்த வயதிலும் தனது மகன் துணையுடன் ராம தரிசனம் செய்ய அயோத்யா வந்தது மட்டுமல்ல – ராமர் ஆலயத்தின் முகப்பிலிருந்து தரிசனம் முடிந்து வெளியேறும் வரை உற்சாகமாக நடை போட்டார்! வாக்கிங் ஸ்டிக் துணை இன்றி,  ‘எவரும் பிடித்துக் கொள்ளவும் கூடாது’ என்று தெரிவித்துவிட்டு சுயபலத்தில் நடந்த பெரியவர் ஜீவரத்தினம் – நமக்கெல்லாம் ஆதர்ச மனிதர்!

93 வயதில், செருப்பில்லாமல், துணை ஏதுமின்றி இயல்பாக நடக்கும் ஜீவரத்தினம் ஜி தான் நாங்கள் தங்கியிருந்த பகுதியின் மூத்த ராம பக்தர்!

அவர் காலில் செருப்பே அணிவதில்லை – காரணம் அவரது ஊர் காஞ்சிபுரம் – ப்ருத்வி ஸ்தலம்! காமாட்சி அம்மன் அரசாளும் பூமி! எனவே அதை செருப்புக் காலோடு மிதிக்க மாட்டாராம்.

இப்படி பல்வேறு அதிசய அபூர்வ பக்தர்களை நாம் பார்க்க முடிந்தது!

அயோத்தியில் – மேலும் உத்தரபிரதேசம் முழுவதும் – ஏன், வட மாநிலம் முழுவதும் இப்போது பரவி நிற்பது  ‘ஹிந்துத்வா’ என்பதையும் கடந்து  ‘ஸ்ரீராமத்வம்’!

செல்லும் போதும் திரும்பும் போதும் எங்கள் ரயில் கடக்கும் சிறு சிறு ஸ்டேஷன்களில் கூட – அடுத்த ரயிலுக்காகக் காத்து நிற்கும் கூட்டம் – எங்கள் அயோத்தி சிறப்பு ரயிலைக் கண்டதும் – எங்களைப் பார்த்து தன் எழுச்சியாக ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று உற்சாகமாக முழங்கினார்கள்!

அழைத்து வரப்பட்ட கூட்டம் அல்ல! ஏற்பாடு செய்யப்பட்ட கோஷம் போடும் நிகழ்ச்சி அல்ல!

ராமர் ஆலய ரயில் பயணிகளைக் கண்டதும் தன்னிச்சையாக அந்த உற்சாகம் பீரிடுகிறது!

அயோத்தி ராமர் ஆலயம் – ஏதோ ஒரு கட்சியின் அஜெண்டா ஆக இல்லாமல், ஏதோ ஒரு இயக்கத்தின் நடவடிக்கையாக இல்லாமல், அது ஒரு ஜீவனுள்ள இயக்கமாக, மக்களின் மூச்சுக் காற்றாகப் பரிணமித்து உள்ளதை இந்தப் பயணம் நமக்குப் புலப்படுத்தியது!

ஒரு ஆட்டோ டிரைவரிடம் பேச்சுக் கொடுத்தேன்! அவர்களில் பல இஸ்லாமியர்களும் உண்டு! ஆனால் எல்லாருக்கும் மோடி தெய்வம்! அவரால்தானே இத்தனை சவாரி ஓட்டி, வருமானப் பெருக்கம்!

நன்கு படித்த இளைஞர்கள் கூட, நமது ஊர்  ‘படிக்கட்டு கிராப்’ புள்ளிங்கோ போல பைக்கில் சாகசம் செய்தபடி ஊர் சுற்றாமல், ஆட்டோ ஓட்ட முன்வருகிறார்கள்.

ஒரே குடும்பத்தில் தகப்பனார் மற்றும் அவருடைய இரண்டு மகன்கள் ஆட்டோ ஓட்டுவதும் உண்டு! அப்படியானால் அந்தக் குடும்ப வருமானம் எப்படிப் பெருகும் பாருங்கள் – மகன்கள் திருமணமாகி தனிக் குடித்தனம் போகாமல் இருந்தால்.

சற்றுப் படித்தவர் போலிருந்த ஆட்டோ டிரைவர் இளைஞரிடம் இயல்பாக எனது ஹிந்தியைக் கூர் தீட்டினேன்!

“ஆப்கே விசார் கே அனுஸார், பாரத் கே உத்தம் நேத்தா கௌன் ஹை?”

அந்த இளைஞர் கவிதை நடையில் பதில் அளித்தார்!

“ஸ்ரீராம் ஹமாரே த்ராதா ஹைங்!
மோடி ஹமாரே நேதா ஹைங்!”

(ஸ்ரீராம் எங்களைக் காப்பவர் – மோடி எங்கள் தலைவர்)

நிலைமை இவ்வாறு வட மாநிலங்களில், குறிப்பாக உ.பி, ம.பி, குஜராத்தில் ஆழமாக மோடி அலையாக உருக்கொண்டு இருக்கிறது!

ஆச்சரியம்! வாரங்கல் (தெலுங்கானா) ஒருகாலத்தில் கம்யூனிஸ்ட் கோட்டை! அதிலும் நக்சல் தீவிரவாத அமைப்புக்கள் பலம் வாய்ந்த பகுதி! இப்போது பல வீடுகளின் கூரைகளில் ராமர் படத்துடன் காவிக்கொடி காற்றில் படபடக்கிறது!

இது போக மத்தியபிரதேசத்தில் பல சிற்றூர்கள் – சிறிய ரயில் நிலையங்கள் – இவற்றை ரயில் கடக்கும் போது தென்படுவது ஏழை எளிய மக்களின் குடியிருப்புப் பகுதிகள் – சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்கள் என்று கூறப்படும் விளிம்பு நிலை மக்கள் வாழும் பகுதிகள் – அங்கெல்லாம் கூட காவிக்கொடிகள் ராமபிரானின் வில்லேந்திய உருவத்துடன் குடிசைகளின் மீதும், சிறிய சிறிய கட்டிடங்களின் மீதும் பறக்கின்றன!

எனவேதான் சொல்கிறேன் – அங்கெல்லாம் ஹிந்துத்வா என்ற பெரும் நதியின் அளவையும் தாண்டி அது வந்து  ‘ஸ்ரீராமத்வம்’ என்ற சமுத்திரமாக வட மாநிலங்கள் காட்சி அளிக்கின்றன!

அதென்ன ஜாக்டோ – ஜியோ நடத்துவது போல  ‘கோரிக்கை முழக்க’ ஆர்ப்பாட்டமா? அழைத்து ஆள் சேர்ப்பதற்கு?

சிறிய ஸ்டேஷன் – சிக்னல் கிடைக்க சற்றே தாமதம் – பக்கத்து தண்டவாளத்தில் இன்னொரு வழக்கமான ரயில் செல்ல வழிவிட வேண்டும். எங்களுடையது சிறப்பு ரயில் – எனவே இதைத் தான் ஓரம் கட்டுவார்கள்!

அந்த சிறிய ஸ்டேஷனில் எங்கள் ரயில் சற்று நேரமே நிற்கிறது – அல்லது மெதுவாக ஊர்ந்து நகர்கிறது!

பிளாட்ஃபாரத்தில் அடுத்து வரும் தங்கள் ஊருக்கான பாஸஞ்சர் ரயிலுக்காக காத்திருக்கும் கூட்டம்! பலர் கிராமவாசிகள் தலையில் முண்டாசுடன் வடக்கத்திய உடையில்! பல கிராமத்துப் பெண்மணிகள் கையில் மூங்கில் கூடையை வைத்து இடுப்பில் ஏந்தியபடி!

அவர்கள் கூட இந்த –  ‘அயோத்தி சிறப்பு ரயிலை’க் கண்டவுடன் உற்சாகம் பீறிட்டு எழ எங்களைப் பார்த்து  “ஜெய் ஸ்ரீராம்” என்று முழங்குகிறார்கள் என்றால்…

அந்த அளவுக்கு அயோத்தியும், ராமர் ஆலயமும் மக்கள் மனதை ஊடுருவி இருக்கின்றன!

எனவே மோடியும் அமீத்ஷாவும்  “400 சீட் நமது இலக்கு” என்று வெறுமனே அறைகூவல் விடவில்லை!

அதுவரை நமது அருணன்களும், பால பாரதிகளும், புதிய தறுதலைகளும், கார்த்திகைச் செல்வன்களும்…  இ.ண்.டி. கூட்டணி ஒரு மகத்தான இடதுசாரி எழுச்சியை உண்டாக்கி மோடியைப் பதவியில் இருந்து அப்புறப்படுத்தும் கனவுகளில் மிதக்கட்டும்!

***  

இந்த அயோத்தி பயணம் சங்க ஏற்பாட்டில் 1990 / 92 கால கட்டங்களில் ச் சென்றவர்கள், அல்லது செல்ல முயன்று கைதானவர்கள் – அவர்களில் ஒரு சிலர் காலமாகி இருந்தால் அவர்களது குடும்பத்தினர் இப்படி தேர்ந்தெடுத்த சிலருக்காக ஏற்படுத்தப்பட்டது.

அடியேன் இதில் மேற்படி எந்தப் பிரிவிலும் இல்லை. 2020 ஆம் ஆண்டு ராமர் ஆலயக் கட்டுமானப் பணிக்காக பொது மக்களிடம் நன்கொடை வசூலிக்கும் இயக்கம் நடைபெற்றது.

‘ஸ்ரீராம ஜன்ம பூமி தீர்த்த க்ஷேத்ர ட்ரஸ்ட்’ – மூலம் நன்கொடைகள் சேகரிக்கும் பணிக்காக வெவ்வேறு தொகைகள் கொண்ட நன்கொடை ரசீதுகள் கட்டுக் கட்டாக வந்து இறங்கின!

அடியேன் மிக எளிய சேவையாக அதற்கான  ‘கார்யாலய ப்ரமுக்’ ஆக எனது சேவையைச் செய்தேன்.

சுமார் 3 மாத காலம் தினமும் ஆபீஸ் போவது போல காலை 9.30 மணிக்கு வந்தால் – நடுவில் ஒரு மணி நேரம் லஞ்ச் டைம் – பிறகு மாலை 7.00 / 8.00 மணி வரை ரசீது புத்தகங்களை குழுக்களுக்கு ஒப்படைத்தல், அவற்றைப் பதிவு செய்தல், வசூலான/ வசூலாகாத ரசீது புத்தகங்களை திரும்ப வாங்கி கணக்கை நேர் செய்தல், வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட தொகைகளுடன் ஒப்பிடுதல், கம்ப்யூட்டரில் எக்ஸெல் ஷீட்டில் பதிவேற்றுதல்….  இப்படி முழுக்க முழுக்க ஆஃபீஸ் டெஸ்க் ஒர்க் செய்த நான்கு / ஐந்து பேர்களில் அடியேனும் என்னை ஈடுபடுத்திக் கொண்டு உழைத்தேன் – மன்னிக்கவும் சேவை – சிரமதானம் செய்தேன்.

அதை அங்கீகரித்து எனக்கு ஸ்ரீராமபிரானை அயோத்தி சென்று தரிசிக்க வாய்ப்புக் கொடுத்த ராம ஜன்ம பூமி தீர்த்த க்ஷேத்ர ட்ரஸ்ட் அமைப்புக்கு எனது மனமார்ந்த நன்றி!

ஜெய் ஸ்ரீராம்!

$$$

Leave a comment