இரு ஆண்டுகள் நிறைவு: ஒரு மீள்பார்வை

-அ.ராதிகா

உலகெலாம் பதிப்பகத்தின் மையத் தளமாக ‘பொருள் புதிது’ என்ற இந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழில் நல்ல நூல்களை வெளியிட வேண்டும் என்ற இலக்குடன் திருப்பூரில் துவங்கப்பட்டுள்ள இப்பதிப்பகத்தின்  தகவல்கள், செய்திகள், நூலாக வெளியாக உள்ள கட்டுரைகள், கவிதைகள், தமிழர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் விவரங்கள் உள்ளிட்டவை இத்தளத்தில் வெளியாகும்… ‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்’ என்ற மகாகவி பாரதியின் ஆணையே எம்மை வழிநடத்தும் பெருமுழக்கம். 

-இந்தப் பிரகடனத்துடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் (2022 மார்ச் 1) பொருள் புதிது இணையதளம் தொடங்கப்பட்டது. இன்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இப்பணியை மீள் பார்வை செய்ய வேண்டியது நமது கடமை.

கடந்த இரு ஆண்டுகளில், ஒருநாள் கூட இடைவெளியின்றி, புதிய பதிவுகளை வலையேற்றி உள்ளோம் என்பதே மிகவும் திருப்தி அளிக்கிறது. இது வரையிலான 730 நாட்களில் 1,673 பதிவுகளை (கட்டுரைகள், கவிதைகள், மொழியாக்கங்கள்) நமது தளத்தில் பதிவேற்றியுள்ளோம்.

குறிப்பாக,  ‘பாரதி இலக்கியம்’ பகுதியில், மகாகவி பாரதியின் அனைத்துக் கவிதைகளும் பதிவேற்றப்பட்டுள்ளன. அவரது கட்டுரைகள், பிற படைப்புகள் தொடர்ந்து தொகுக்கப்படுகின்றன.

சுவாமி விவேகானந்தரின் பன்முகப் பரிமாணங்களை விளக்கும் ‘விவேகானந்தம்’, மகரிஷி அரவிந்தரின் புகழ் பரப்பும் ‘அரவிந்தம்’, மகாத்மா காந்தியின் நினைவுகளைப் போற்றும் ‘காந்தியம்’, அண்ணல் அம்பேத்கரின் சிறப்புகளைப் பதிவு செய்யும்  ‘அம்பேத்கரை அறிவோம்’ ஆகிய பகுதிகள் வாயிலாக, நூற்றுக் கணக்கான கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறோம்.

‘தொடர்கள் பகுதியிலும் ‘சிந்தனைக் களம்’ பகுதியிலும், தமிழகம் பேச மறந்த பல தலைப்புகளில் முக்கியமான எழுத்தாளர்களின் படைப்புகள் வெளியாகி உள்ளன. கவிதைக் கழனி பகுதியில் இனிய கவிதைகளும் இடம் பெற்றுள்ளன.

சென்ற 2023 ஆண்டில், நமது தளத்தில் வந்த 5 தொடர் கட்டுரைகள், இனிய நூல்களாகத் தொகுக்கப்பட்டு, தோழமை நிறுவனமான சென்னையில் உள்ள விஜயபாரதம் பிரசுரத்தால் வெளியிடப்பட்டுள்ளன. ‘பாரதி போற்றும் தேசிய கல்வி’ என்ற நூல் மட்டும் கோவையில் உள்ள சிவராம்ஜி சேவா அறக்கட்டளையால் வெளியிடப்பட்டது. அந்த நூல்களின் பட்டியல்:

-இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் தகவலாகும். நமது தளத்தில் வெளியாகியுள்ள மேலும் பல பதிவுகள், வரும் நாட்களில் நூல் வடிவம் பெற உள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த ஈராண்டுகளில் இணையதளத்தை உருவாக்கிய அளவிற்கு இதனை சந்தைப்படுத்துவதில் நாம் ஆர்வம் காட்டவில்லை. மிகவும் அறிந்தவர்களுக்கு மட்டுமே பதிவுகளின் இணைப்புகள் அனுப்பப்பட்டன. என்றபோதும் இதுவரை, சுமார் 53,500 தனிப்பட்ட பார்வையாளர்கள் சுமார் 4 லட்சம் (ஒப்பீட்டு நோக்கில் இது குறைவே) நமது தளத்தைப் பார்வையிட்டிருக்கிறார்கள். வரும் நாட்களில் இதனை பொதுவெளியில் விரிவாக அறிமுகம் செய்யத் திட்டமிட்டிருக்கிறோம்.

‘பொருள் புதிது’ இணையதளத்தை நாம் தொழில்ரீதியாகவோ, லாபநோக்குடனோ நடத்தவில்லை. இதனை ஒரு அறிவுப்பூர்வமான சேவாகாரியமாகக் கருதியே செய்து வந்துள்ளோம். இப்பணியை இதே நோக்கில் தொடர உள்ளோம். இதேபோன்ற சேவை நோக்குடன் எங்களுக்கு உதவிவரும் அனைத்து சகோதரர்களுக்கும் நன்றி.

தமிழகம் என்றும் தேசியத்தின் ஊற்றுக்கண்ணாக இருந்துள்ளது என்பதை இந்த இரு ஆண்டுகளில் இயன்ற வரை நமது தளத்தின் மூலம் நிலைநாட்டி உள்ளோம். ஆன்மிகத்தையும், தேசியத்தையும் இரு கண்களாகக் கொண்டு, தமிழ்மொழியை சுவாசமாகக் கொண்டு, நமது பயணம் தொடர்கிறது. வாசகர்களின் தொடர்ந்த ஆதரவை நாடுகிறோம்.

$$$

Leave a comment