மேற்கத்திய விஞ்ஞானிகளுக்கு உத்வேகம் அளிக்கும் வேதங்கள்

-சான் பிராட்ரிக்

இன்று குவாண்டம் இயற்பியலில் நாம் காணும் பல விஷயங்கள் புதியவை  அல்ல. பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை; ஹிந்துக்களின் அடிப்படை தத்துவ தரிசனங்களில் இருந்து முளைத்து வந்தவை.

ஹிந்துயிசம் என்ற ஆன்மிக மரபு இந்தப் பூவுலகம் தோன்றிய காலம் பற்றிக் குறிப்பிடுவதுதான் நவீன அறிவியலுக்கு மிகச் சரியாக ஒத்துப் போகிறது. மிகவும் அறிவார்ந்தது, பல பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டது, சநாதன தர்மம். அதில் பல தத்துவ தரிசனப் பள்ளிகளும், தனக்கே உரிய மருத்துவம், உளவியல் நிபுணத்துவமும், கட்டடக்கலையும், வானியலும், பிரபஞ்சவியலும்,  மீபொருண்மையும், வானிலையியலும், கணிதம், பல்வேறு கலை வடிவங்களும் பிணைந்து உள்ளன. வடிவியல், நிலவியல், முக்கோணவியல், நுண்கணிதவியல், சுழியம், குறை மதிப்பியல், தசம பின்னவியல், பை, சைன், காஸ் போன்றவையும், பல பெரு வெடிப்புகள் கொள்கையும், வேறுபட்ட பரிமாணங்கள் கொண்ட பல உலகங்கள் குறித்த தேற்றங்களும் அதில் உள்ளன. இவை அனைத்தும் தொன்மையான வேத ரிஷிகளின் சீரிய சிந்தனையில் உருவானவை.

இவை அனைத்திற்கும் இடையேயான உறவு என்பது மேற்கத்திய அறிவியலாளர்களுக்குத் தெரியாதது மட்டுமல்ல, தெரியாததனாலேயே கேலிக்கு உள்ளானது. அது மட்டுமன்றி, அந்நியரின் ஆட்சியின் கீழ் அடிமைப்பட்டுக் கிடந்தபோது, பல இந்திய விஞ்ஞானிகளும் கூட இதுபற்றி அறியாமல் அதனால் கேலியாகப் பேசியுள்ளனர். இதெல்லாம் 1989 மற்றும் 1993 வரை.

அப்போது தீபக் சோப்ரா எழுதிய  ‘குவாண்டம் ஹீலிங், மூப்பற்ற உடல், காலத்தை வென்ற மனம்’ ஆகிய நூல்கள் வெளிவந்தன. நவீன அறிவியலுக்கும் நவீனக் கல்வியாளர்களின் கருத்துக்கும் ஒத்துப் போகக்கூடிய மதம் ஏதாவது இருந்தால் அது இதுதான் என்றாகியது.

ஹிந்துயிஸத்தின் அடிப்படையாக உள்ள கர்மக் கொள்கையும் மறுபிறப்பும் கூட அறிவியல் பூர்வமானதே. கர்மா என்றால் வினை அல்லது செயல். கர்மா பலவிதமான வழிகளில் வெளிப்படும் என்பது அடிப்படையான இயற்பியல். நமக்கு தெரிகின்றதோ, புரிகின்றதோ, இல்லையோ ஒவ்வொரு வினைக்கும் பதில் வினை உண்டு. நம்முடைய நம்பிக்கை முறைமை எதுவாக இருந்தாலும் ஒவ்வொரு விளைவுக்கும் ஒரு காரணம் உண்டு. இது வானவியலில் இயற்பியலையும் உயிரிகளையும் உளவியலையும் நரம்பியலிலையும் பொருந்தும் உண்மையாகும். இயற்கையில் எல்லாமே ஒரு சுழற்சியைப் பார்க்க முடிகிறது. அதுவே மறுபிறப்பு. தோன்றியது எல்லாம்  சாகும்; மீண்டும் புதிதாக வளரும். நாமும் அந்த இயற்கையின் வளர்ச்சியின் பகுதிதான். அந்தச் சுழற்சியின் ஒரு பகுதிதான்.

இன்று குவாண்டம் இயற்பியலில் நாம் காணுபவை புதியவை அல்ல. சில விஷயங்கள் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை; அடிப்படை தத்துவ தரிசனங்களில் இருந்து முளைத்து வந்தவை. சிந்தனைக்கு/ நினைவுகளுக்கு நிறை உண்டு, பிரபஞ்சம் நிலையானது, பிரபஞ்ச அறிவும் விழிப்புணர்வும் இல்லாமல் உயிர்கள் தோன்றாது என்பனவெல்லாம் பாரதத்தில் அல்லது புராதன இந்தியாவில் தோன்றிய கருத்துகள். நேரத்திற்கு நிரை (தொகுப்பு /கூட்டம்) உண்டு. நவீன இயற்பியல்  ‘குரோனான்’ என்பதைப் போல நீண்டது என்கிறது. அதேபோல் ஈர்ப்பு விசையும் காலமும் தொடர்புடையது என்பதும் பாரதத்தில் தோன்றிய கருத்தே.

மனித சிந்தனைக்கும் நோக்கத்திற்கும் உட்படாத வரை  நுண்அணுக்கள் அசைவற்றுக் கிடக்கும் என்பதை இப்போதைய இயற்பியல் கண்டுபிடித்துள்ளது. விழிப்புணர்வு அதன் மீது செலுத்தப்படும் போது அவை உயிர் பெறுகின்றன அல்லது செயல்படத் தொடங்குகின்றன என்று கூறுகிறது. கருத்து அல்லது சிந்தனை ஜடப்பொருளைக் கட்டுப்படுத்துகின்றன. அதேபோல சிந்தனையின் உறைந்த நிலை தான் ஜடப்பொருள்கள் என்று  சாங்கிய காரிகையிலும் மற்ற ஹிந்து சாஸ்திரங்களிலும் சொல்லப்பட்டுள்ளது.

ஹிந்து வழிபாட்டு முறைகள் அறிவியல் பூர்வமானவை. யோகா என்பது ஆத்மாவுக்கும் மூர்த்திக்கும் (தெய்வீக உருவங்கள்) ஏற்படுகின்ற இணைப்பு. இது விழிப்புணர்வு நிலையில் அனைத்தும் தொடர்புடையவே என்பதன் பிரதிபலிப்பாகும். அசையும் அல்லது அசையாப் பொருளை வழிபடுவதென்பது நோக்கத்தால் பொருட்கள் செல்வாக்கு பெறுகின்றன என்பதன் பிரதிபலிப்பே ஆகும். வழிபடுபவன் ஒரு மலரை மூர்த்திக்கு அளிக்கும்போது ‘ஸ்வாஹா’ அர்ப்பணிக்கிறேன் என்கிறான்.  ‘ஸ்வாகா’ என்பது, அதன் பின்னால் உள்ள நோக்கம்/ உணர்வு. வழிபாடு என்பதற்கான சமஸ்கிருதச் சொல்  ‘உபாசனா’. இதன் பொருள் அந்த தெய்வ மூர்த்தியைப் போற்றுவது அல்ல, மாறாக அந்த மூர்த்தியின் அருகில் அமர்வது அல்லது அருகே இருப்பது என்று பொருள்.

குவாண்டம் இயற்பியலின்படி ஒருவருடைய சிந்தனையால் பொருள் பாதிப்படைகிறது என்பதும், படைப்பு பரந்து விரிந்து இருப்பதைக் காணும் போது பல உலகங்கள் என்ற கருத்தும் பெறப்படுகிறது. இது வேதக் கருத்தான பதினான்கு  லோகங்கள் என்ற கருத்தையே பிரதிபலிக்கிறது.

“ஏதோவொன்று அதிரும் போது உலகில் உள்ள எல்லா உயிரணுக்களும் அதனுடன் சேர்ந்து அசைகின்றன. எல்லாம் தொடர்புடையவையே. மனிதனின் மிகப் பெரிய சோகம் என்னவென்றால் தான் தனியானவன் என்ற மாயை நினைப்பு”

     -ஐன்ஸ்டீன்

1960களில்  ‘ஸ்ட்ரிங் கொள்கை’ உருவானது. அதன்படி ‘நாம் தனித்தனியான அணுக்களின் அசைவு என்று கருதியிருந்தது உண்மையில் தனியானது அல்ல. அனைத்தும் மெல்லிய இழையால் பிணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் அதற்கே உரிய தன்மையோடும் அலைவரிசையோடும் வெளிப்படுகின்றன என்று அந்தக் கொள்கை கூறுகிறது. வேதாந்தத்திலும், இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையே. நம் கைகளும் கால்களும் உடலுடன் எப்படிப் பிணைக்கப்பட்டுள்ளதோ அதுபோல’  என்று சொல்லப்பட்டுள்ளது.

குவாண்டம் இயங்கியலிலும், பார்ப்பவனுக்கும் பார்க்கப்படுவதற்கும் இடையே இடைவெளி இல்லை என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு துகளும் அது மற்றதிலிருந்து எவ்வளவு தூரம் விலகி இருந்தாலும் நுண்இழையால் அவை தைக்கப்பட்டு/ இணைக்கப்பட்டு உள்ளது என்றும், வெளிப்படும் தன்மையில் ஒன்று மற்றொன்றைச் சார்ந்தே இருக்கின்றன என்றும் கூறப்பட்டுள்ளது. “உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருள்களின் வடிவிலும் பிரம்மம் உள்ளது. ஞானிகள் எல்லாவிதமான இருப்புகளிலும் தன்னைக் காண்கிறார். தன்னில் எல்லாம் உறைந்திருப்பதையும் காண்கிறார்” என்கிறது ஈசோவாஸ்ய உபநிஷதம்.

வேதாந்தத்தின் கருத்துக்களின்படி பிரபஞ்சத்தில் உள்ள வெளி (ஆகாசம்) பல பரிமாணங்களைக் கொண்டது. அவற்றில் முக்கியமானது 64 பரிமாணங்கள். அவை ஒவ்வொன்றும் மேலும் பல துணைப் பரிமாணங்கள் கொண்டதாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பூமியில் வாழும் நமக்கு மூன்று பரிமாணங்களை மட்டுமே அனுபவிக்க முடியும். நம்முடைய புலன்களுக்கு மற்ற பரிமாணங்களின் மூலம் அனுபவம் சாத்தியமில்லை. குவாண்டம் இயற்பியலிலும் நாம் இதே போன்ற கருத்துக்களைப் பார்க்கிறோம்.

இயற்பியலாளர்கள், துகள்கள், அலைகள் வடிவில் அனைத்தையும் வரையறை செய்கிறார்கள். வேதத்தில் பரமாணு என்று அழைக்கப்படுவது  ‘பிரபஞ்ச அணு’வாகும். அதேபோல விருத்தி என்பது  ‘மன அலைகள்’ ஆகும்.

ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் இமயமலையைச் சார்ந்து வாழ்ந்த ரிஷிகள், மனிதன் ஒரு நேரத்தில் ஒரு விஷயத்தை மட்டுமே கவனித்துப் புரிந்து கொள்வான் என்றும், அவ்வாறு அவன் புரிந்து கொள்வதும் மாயை என்று கூறியுள்ளனர். மாயை என்பது உண்மையைப் பற்றிய போலியான நகல் என்று பொருள்.

திரைப்பட பிலிம் சுருள் சக்கரத்தில் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொன்றும் தனித்தனி சட்டகம். ஆனால் வேகமாக ஓட்டும் போது கால இடைவெளி குறைந்து நமக்கு தொடர்ச்சியாகத் தெரிகிறது. வேதாந்தமும் தேற்ற இயற்பியலும், இரண்டும், ஒரே விஷயத்தைத் தான் கூறுகின்றன. அதாவது பிரபஞ்ச அறிவுக்கு நாம் அனைவரும் பொருட்கள். அல்லது இன்னொரு விதத்தில் சொல்லப்போனால், நாம் விழிப்புணர்வு கொண்டவர்கள் என்பதே ஒரு கனவு தான்.

மதம் எதை  ‘கடவுள்’ என்கிறதோ அதை இயற்பியல்  ‘ஒருங்கிணைந்த தேற்றம்’ என்கிறது. இரண்டும் ஒரே விஷயத்தை வெவ்வேறு மொழிகளில் அடையாளம் காட்டுகின்றன. அதாவது கவனிப்பவரின் விழிப்புணர்வு அல்லது விழிப்புணர்வுடன் கவனிப்பவர் தன்னையே அனுபவத்தில் தெரிந்து கொள்ளுதல்.

ஸ்ட்ரிங் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு ஈர்ப்பு விசையையும் குவாண்டம் இயங்கியலையும் ஒன்றுசேர்த்து நேரம், வெளி ஆகியவை தொடர்பான  ‘குவாண்டம் ஈர்ப்பு விசை’ என்ற கொள்கை உருவானது. ஐன்ஸ்டீன் பிறப்பதற்கு 7,000 ஆண்டுகளுக்கு முன்னரே, பொருள்கள் பூமியின் மேற்பரப்பில் இருந்து தெறித்து விழாமல் ஈர்த்து வைத்திருக்கிறது ஒரு சக்தி என்று வேதாந்தம் கூறியுள்ளது.

பாரதத்தில் வாழ்ந்த சிறந்த சிந்தனையாளர்கள், சிறிய அணுக்கள் அளவில் உள்ள சக்தி வெகு தூரத்தில் உள்ள பொருள்களின் மீது (மற்றொரு அணுக்கள் மீது) தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று கூறியுள்ளனர். அது இன்று ‘அணுநிரை தைப்பு’ (Quantum Entanglement) எனப்படுகிறது. அது மட்டுமன்றி அவர்கள் நினைவு / சிந்தனைக்கு நிறை (வலு /எடை) உண்டு என்றும் கூறியுள்ளானர். நினைவு அல்லது நோக்கத்திற்கு மற்ற பொருள்கள் அல்லது சக்தியின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்றும் கூறியுள்ளனர். நோக்குபவர் நோக்கப்படும் பொருளின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறார் என்றும் கூறியுள்ளனர். அவர்கள் கூறியதற்கு ஆயிரம் ஆண்டுகள் கழித்து நவீன இயற்பியலாளர்கள் அதே விஷயத்தைப் பார்ப்பவர்கள் ஏற்படுத்தும் தாக்கம் (Observer Effect)  என்று கண்டுபிடித்துக் கூறுகின்றனர்.

நவீன இயற்பியலாளர்கள் பண்டைய ரிஷிகளிடமிருந்து வேறுபட்ட மொழியில், சொற்றொடர்களில் ஆனால் ரிஷிகள் சொன்ன அதே விஷயத்தை கூறுகின்றனர். இருவரும் ஒரே மாதிரியான முடிவுக்கு வருகின்றனர். ஒரே மாதிரியான தேற்றத்தை முன்வைக்கின்றனர். ஒருவர் கணிதவியல் சமன்பாடுகளின் மூலம் விளக்குகிறார். மற்றொருவர் தத்துவ மொழியைப் பயன்படுத்துகிறார். ஒருவர் புறவயமான, பௌதீக நிலையில் பேசுகிறார். மற்றொருவர் உள்ளார்ந்த நிலையிலும் ஆன்மிக மறை நிலையிலும் பேசுகிறார்.

நேரம் என்பது சாஸ்வதமானது, எங்கும் இருப்பது என்று வேதம் கூறுகிறது. குவாண்டம் இயற்பியலோ நேரத்தை அழிக்க முடியாது. அதுவே எல்லா அசைவுகளையும் கட்டுப்படுத்துகிறது என்று கூறுகிறது. ஹிந்து தர்மமானது பிரம்மன் என்பதை  ‘இறைவன்’ என்று கூறாமல் முழுமையான, அனைத்தையும் ஒருங்கிணைக்கக் கூடிய கருத்து /கொள்கை என்றே  அங்கீகரிக்கிறது. அணுவும் அண்டமும் ஒன்றின் பிரதிபலிப்பே மற்றொன்று. ஒவ்வொரு ஹிந்துவும்  ‘அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் இருக்கிறது’ என்று நம்புகிறார். நவீன இயற்பியலாளர்கள் இதை  ‘மேன்மையான இருப்பு’ (Super Position) என்கிறார்கள்.

ஹிந்துயிஸத்தில் உள்ள மந்திரமான ‘அகம் பிரம்மாஸ்மி’ என்பதிலும்  ‘’வணக்கம்’ என்று கூறுவதிலும் இதே விஷயம் வெளிப்படுகிறது. இரண்டிலும் நாம் எல்லோரும் பிரபஞ்ச உண்மையின் வடிவங்கள். ஆன்மிகத் தளத்தில்,  ‘ஆன்மாவும் பிரம்மனும் விழிப்புணர்வு நிலையில் ஒன்றே’ என்ற கருத்து வெளிப்படுகிறது. எனவே மேற்கத்திய இயற்பியலாளர்கள் பலரும் வேதங்கள், உபநிஷதங்கள், பகவத் கீதை ஆகியவற்றின்பால் வெகுவாக ஈர்க்கப்பட்டும் அவற்றின் செல்வாக்கிற்கு ஆட்பட்டும் இருப்பது வியப்பளிக்க்க் கூடிய விஷயமல்ல.

‘என்னுடைய கருத்துக்கள் பலவற்றிலும் வேதாந்தத்தின் தாக்கம் மிகுந்து இருப்பதைக் காணலாம்.  ‘பல வகையான பெருக்கம்’ என்பதில் அது வெளிப்படையாகத் தெரியும். அது க் கருத்து. உபநிஷத காலம் முதலே  ‘'ஆத்மா= பிரம்மன்’ என்ற அவதானிப்பு உலகில் நடக்கின்ற எல்லாவற்றிற்கும் சாரமாகக் காணலாம். உலகிலுள்ள மனங்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை ஒன்று. உண்மையில் விழிப்புணர்வு என்ற ஒற்றை தான் எல்லாமுமாக பரவி இருக்கிறது. விழிப்புணர்வை பன்மையில் பார்ப்பதற்கு எந்த முகாந்திரமும் இங்கில்லை. தனி மனிதர்கள் என்று நாம் கட்டமைப்பது தற்காலிகமானது. அதுவும் கூட போலியானது, தவறானது. இங்குள்ள மோதல்கள் முரண்பாடுகள் அனைத்திற்கும் ஒரே தீர்வு தொன்மையான உபநிஷதங்களின் ஞானத்தில் மட்டுமே உள்ளது'.

   -எர்வின் சுரோடிங்கர்,
   (நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர்).

இந்தியத் தத்துவம் பற்றி ரவீந்திரநாத் தாகூருடன் உரையாற்றிய பின்பு அதுவரை பைத்தியக்காரத்தனமாகத் தெரிந்த குவாண்டம் இயற்பியலின் பல கருத்துக்கள் தெளிவாகப் பொருள்பட ஆரம்பித்தன. வேதாந்தம் கற்றவர்களுக்கு குவாண்டம் கொள்கை கேலிக்குரிய விதமாகப் படாது.

-வார்னர் ஹைசன்பர்க்,

(நோபல் பரிசு பெற்ற ஜெர்மானிய இயற்பியலாளர்).

உலகத்தில் உள்ள மதங்களிலேயே ஹிந்து மதம் மட்டும் தான் இந்த பிரபஞ்சம் எண்ணற்ற மரணங்களையும் மற்றும் மறுபிறப்புகளையும் கண்டுள்ளது என்ற கருத்தை ஏற்றுக் கொண்டுள்ளது. காலம் குறித்து நவீன வானவியல் அறிவியலுக்கு நெருக்கமான கருத்துக்களைக் கொண்ட ஒரே மதம் அதுதான். நம்முடைய இரவு -பகல் கொண்ட ஒரு நாளில் இருந்து பிரம்மாவின் இரவு - பகல் கொண்ட ஒரு நாள் என்பது 8.64 பில்லியன் ஆண்டுகள் என்பது வரை நீண்ட கால கணக்கைச் சொல்கிறது ஹிந்து மதம். இது பூமி அல்லது சூரியனின் வயதை விட நீண்டது. அல்லது பெருவெடிப்பு காலத்தில் பாதியளவு. அவர்கள் இதைவிடவும் மிக நீண்ட காலக் கணக்கை வைத்துள்ளார்கள்.

    -கார்ல் சகான்

நம்மால் புரிந்து கொள்ளக்கூடிய, உணரக்கூடிய விஷயங்கள் எல்லாம் அடிப்படையான ஒரே மூலத்திலிருந்து வந்தவையே. ஆகாசத்தை எல்லாம் நிரப்பிக் கொண்டிருக்கின்ற பிராணன் அல்லது உயிர் சக்தி தான் எல்லாப் பொருள்களின், பரிமாணங்களில் முடிவற்ற சுழற்சிக்கு ஆதாரமாக, அடிப்படையாக உள்ளது.

-நிக்கோலா டெஸ்லா

நவீன இயற்பியல் பருவங்கள் மாறுவதை மட்டுமின்றி, உயிரினங்களின் பிறப்பு மரண சுழற்சியை மட்டுமின்றி, உயிரற்ற பொருள்களிலும் இந்தச் சுழற்சி ரிதம் இருப்பதைக் காட்டுகிறது. நவீன இயற்பியலாளர்களுக்கு சிவ நடனம் என்பது நுண் அணுக்களின் நடனமாகும்.

  -பிரிட்ஜ் ஆஃப் காப்ரா,
  (சூழலியல் மையத்தின் இயக்குனராக உள்ள, நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர்).

குறிப்பு:

திரு. சான் பிராட்ரிக் (Sean Bradrick) ஒரு யோகி. அமெரிக்க சநாதனி. ஒரு ஹிந்துவின் வக்காலத்தும் வழிகாட்டுதலும்  (A Hindu’s Guide to Advocacy and Activism) என்ற அவரது நூல் அண்மையில் வெளிவந்துள்ளது.

நன்றி: நியூஸ் 18.காம் (17-01-2024)
https://www.news18.com/opinion/opinion-hinduism-and-quantum-physics-how-vedas-inspired-western-scientists-8744008.html

தமிழில்: திருநின்றவூர் ரவிகுமார்

$$$

Leave a comment