-சீரங்கத்தான்

பாரிமுனைதான் கோயம்பேடு ஆக இருந்த 60 வருடத்துக்கு முந்தைய காலம். மதராசிலிருந்து எல்லா திசைகளுக்கும் பேருந்து புறப்படும் மத்திய பஸ் நிலையமும் அப்போது பாரிமுனை மட்டும்தான். அன்று நான் ஒரு ஆறாம் கிளாஸ் அரை டிராயர் பாலகன். கரூருக்கு பஸ் பிடிக்க அலைந்து கொண்டிருந்தேன். ‘மெட்ராஸ்-டு-வாட்ராப்’ என்றதொரு பெயர்ப் பலகை. நடத்துனரிடம் கேட்டேன், கரூர் செல்லுமா? என்று. ‘திருச்சி வரை போய் அங்கு வேற பஸ் மாறிக் கொள்’ என்றார். ஏறினேன். இலக்கை அடைந்தேன்.
அந்த விசித்திரமான ‘வாட்ராப்’ எனும் ஊர்ப் பெயர் என் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது. இதன் பொருள் என்ன என்று பலரிடம் வினவினேன். விடையாக ஒரு பெரியவர் கூறினார் ‘வத்திராயிருப்பு’ என்பது இதன் இயற்பெயர். “இங்கு ஒரு பெரிய சிவன் கோயில் உள்ளது. இந்த சிறிய ஊர் மதுரைக்கு தெற்கே சங்கரன்கோவில் அருகில் உள்ளது” என்றார். வத்திராயிருப்புக்கு பெயர்க் காரணம் அறிய முடியாமல் இந்தச் செய்தியை மனதில் பதிவிட்டு கிடப்பில் போட்டு விட்டேன். நாட்கள் கடந்தன.
ஐம்பது வருடங்கள் கழிந்தன. சித்தர்கள் வாழ்ந்து சிறப்புக் கூட்டிய சதுரகிரி மலைக்கு பயணம் திடீரென்று ஒரு நாள் ஏற்பட்டது. சதுரகிரி மலைக்குப் போகும் வழியில் ‘வத்திராப்பு’ என்னும் ஊர் பலகையைக் கண்டவுடன் பழைய நினைவு தலைதூக்கியது. பரவசத்துடன் கால் பதித்து பக்தியுடன் சிவன் கோயில் தரிசித்து விட்டு தாணிப்பாறையில் சிற்றுந்துவைக் கிடத்தி விட்டு சதுரகிரிமலை ஏறினோம்.
கொட்டும் அருவிகளில் நீராடி, நீரோடைகளில் கோலம் போட்டு, மண்வாசனை முகர்ந்து, மரப் பச்சையில் கண் குளிர்ந்து, வழிநடை சித்தர்கள் குகையில் சிறு தவம் இருந்து, கரடு முரடான முரட்டு பாதையில் மலை ஏறிய அனுபவத்தை என்னவென்று சொல்ல?
மலையுச்சி முகர்வதன் முன் இருட்டிவிட, டார்ச் லைட்டும் பைரவராக நாய்களும் எங்களை வழிநடத்த, ஒரு வழியாக இரவு 8 மணிக்கு உச்சி போய் சேர்ந்தோம். இருட்டுப்பாதையில் தீப்பந்த ஒளியில் அருள்மிகு சுந்தரலிங்கனாரைத் தரிசித்து விட்டு அன்ன சத்திரம் ஒன்றில் அடைக்கலம் புகுந்தோம்.
நடுங்கும் குளிரில், தரையில் அமர்த்தி சூடான இலவச உணவு. தங்குவதற்கு தகரக் கொட்டாய். படுக்கப் பாயாக கோணிப்பை. போர்த்திக்கொள்ள கோணிப் பையால் கோர்த்த போர்வை. ஊளையிடும் வாடைக்காற்று. உண்ட களைப்பில் உடல் கொண்ட உறக்கம் சொர்க்கானுபவம். வந்த அதிதிகளுக்கு அன்னமிட்டு, தங்க இடமளித்து அன்பு உபசரிப்பு செய்த அந்த அன்னமிட்ட கைகளுக்கு அவசியம் உண்டு சிவானுபூதி…
ஆடம்பர விடுதி… சொகுசான மெத்தை… என என்ன இருந்தாலும் இந்த அனுபவத்திற்கு ஈடாகாது. நம் வாழ்க்கையில் சில அனுபவங்கள். நம் நினைவை விட்டு அகலாது.
இதனைப் படித்து பரவசமடையும் நம் அனைவருக்கும் சதுரகிரி சித்தர்களின் ஆசி வந்து சேரட்டும்.
சரி பீடிகை போதும்… தலைப்பின் பொருளுக்கு (subject matter) வருவோம். ஆங்கிலேயனுக்கு வாட்ராப் watrap – உள்ளூரில் வத்திராயிருப்பு – கற்றவனுக்கு வற்றாயிருப்பு. இப்படியாக ஊருக்கு பல பெயர்கள் சொல் வழக்காக இருக்கலாம். பொருள் புரிந்து கொள்வோம், வாருங்கள்.
$$$
One thought on “வாட்ராப்பும் வைத்தமாநிதியும் -1”