-பிரம்மரிஷியார்
அன்றாட அரசியலில் பொருள்புதிது தளத்திற்கு ஆர்வம் இல்லை. ஆனால், தமிழ்ச் சமுதாயத்தைப் பாதிக்கும் எந்த ஒரு கருத்தாக்கம் குறித்தும் நாம் கவலைப்பட வேண்டிய இடத்தில் இருக்கிறோம். அண்மையில் நாடாளுமன்ற மக்களவையில் முட்டாள்தனமாக உளறிய தர்மபுரி எம்.பி. செந்தில்குமாரின் அசூயையான ஹிந்து வெறுப்புணர்வுப் பேச்சு அதற்கான எதிர்வினையைப் பெற்று, அவரும் மன்னிப்புக் கேட்டுவிட்டார். இனி திமுக என்ன செய்யப் போகிறது? பிரம்மரிஷியாரின் அற்புதமான கருத்தோட்டம் இதோ…

சென்னை வெள்ளச் செய்திகளில் ஒரு விஷயம் மறைக்கப்படுகின்றது, அது வரலாற்றிலே திமுக பாராளுமன்றத்தில் மன்னிப்புகேட்டு அவமானபட்டு நிற்பது.
திமுகவின் தர்மபுரி எம்.பி. செந்தில்குமார் நாடாளுமன்றத்தில் ஹிந்தி பேசும் மாகாணங்களை, பாஜக ஆளும் மாகாணங்களை “பசுமூத்திர மாகாணம்” என ஏளனமாகச் சொல்லி வகையாக மாட்டியதும் அது சர்ச்சையானதும் எல்லோரும் அறிந்தது.
ஆனால் எம்.பி. மிகத் தந்திரமாக டிவிட்டர் எக்ஸ் பக்கத்தில் மட்டும் மன்னிப்புக் கேட்டுவிட்டு, ஒன்றுமே அறியாதவர் போல மறுநாளும் அவைக்கு வந்தார்.
அங்கே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு பாஜகவினர் சீற, காங்கிரசார் தலையில் கைவைத்து அமர்ந்திருக்க, “இதுதான் இண்டியா கூட்டணியா, அந்தக் கூட்டணி இதனை ஏற்கின்றதா?” என பாஜகவினர் அஸ்திரத்தை ஏவிவிட்டார்கள்.
எல்லோரும் சேர்ந்து முறைக்க, திமுக அவைத்தலைவர் டி.ஆர்.பாலு எழுந்து “இதுபற்றி எங்கள் தலைவர் ஸ்டாலின் கடும் வருத்தம் தெரிவித்து இவரை மன்னிப்பு கேட்கச் சொன்னார்” என சொல்லிவிட, வேறுவழியில்லா தர்மபுரி எம்.பி. தலைகுனிந்தபடியே மன்னிப்புக் கோரிவிட்டார்.
இது வெறும் மன்னிப்போடு முடியும் விஷயம் அல்ல, திமுகவின் தேசிய அரசியலுக்கே முழுக்குப் போடும் விஷயம். இனி திமுக கும்மிடிப்பூண்டியினைத் தாண்ட முடியாது.
தேசிய அரசியல் எல்லோருக்கும் வராது, அப்படி ஒரு அரசியல் செய்ய காலச்சூழலும் முக்கியம்.
கருணாநிதி இந்த விஷயத்தில் சரியாக இருந்தார். காங்கிரஸ் சரிந்த காலங்களில் தேசிய அரசியலுக்குச் சென்றவர் ஹிந்தி எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பை எல்லாம் கைவிட்டு சமர்த்தாக அமர்ந்திருந்தார்.
அதனாலே 17 வருடகாலம் அவரால் தில்லியில் செல்வாக்காக இருக்க முடிந்தது.
அப்போதும்கூட, ராமர்பாலம் தொடர்பாக அவர் ராமனைச் சீண்டிவிட அது பெரும் சர்சையாகி வடக்கே வெடிக்க, அதன் பின்னரே வடக்கே காங்கிரஸ் மிகப் பெரிய வீழ்ச்சியினை அடைந்தது.
இது காங்கிரஸுக்கும் தெரியும், கருணாநிதிக்கும் தெரியும். எனவே, ஸ்பெக்ட்ரம் வழக்கை அவர்கள் எடுக்க, கருணாநிதியாரோ ராமானுஜரை நைசாகத் தொட்டார்.
ஆம், எதைத் தொட்டால் தேசிய அரசியல் செய்ய முடியாது என்பதும், எதை எடுத்தால் அங்கே நுழையலாம் என்பதும் அவருக்குத் தெரிந்தது.
உண்மையில் கடைசிக்காலங்களில் கருணாநிதி ராமானுஜரைத் தொட்டது தேசிய அரசியலுக்கான வழி; ஆனால் காலம் அந்த வழியை அடைத்தே விட்டது.
அவர் முயன்ற பாதையினை இந்தக்கால திமுக மறந்தது; முக்கியமாக ஒரு விஷயத்தில் முற்றிலும் சொதப்பியது.
அதாவது, மற்ற மாகாணங்களில் எல்லா கட்சிகளும் யார் எதிரியோ அவர்களை மட்டும் கவனித்தார்கள்.
உதாரணமாக ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிரி காங்கிரஸும் சந்திரபாபுவும் தான். அவர் அதை மட்டும் கவனித்தார். இன்றுவரை சரியாகச் செல்கின்றார், சிக்கல் ஏதுமில்லை.
இதே சாயல் எல்லா மாகாணத்திலும் உண்டு.
சரத்பவாருக்கோ, மம்தாவுக்கோ பாஜக நேரடி சவாலாக இருக்கலாம். அது அவர்கள் நிலைப்பாடு.
ஆனால் திமுக தங்களை தேசிய கட்சியாகக் கருதி, தேசிய அரசியலில் பெரும் பாத்திரம் வகிக்கப் போவதாகக் கருதி, தன் மாகாண எதிரி அதிமுக என்பதை மறந்து பாஜகவுடன் மோதியது.
இதுதான் அவர்கள் சறுக்கிய இடம். அந்த சறுக்கலை மீண்டும் மீண்டும் செய்தார்கள், செய்கிறார்கள்.
ஒன்றிய அரசு, ஹிந்தி எதிர்ப்பு, நீட் எதிர்ப்பு என முழங்கி, பாஜகவினை தங்கள் பிரதான எதிரியாக வரிந்து, கடைசியில் தொடக்கூடாத் சநாதனத்தைத் தொட்டார்கள்.
இது 1970 அல்ல, இங்கிருப்பது (மத்தியில்) காங்கிரஸும் அல்ல. இது மாறிவிட்ட காலம். ராமர் கோயில் எழும்பும் காலம் என்பதை கணிக்கத் தவறி எதைச் செய்யச் கூடாதோ அதைச் செய்தார்கள்.
இப்போது இண்டியா கூட்டணியே உடைந்து, திமுகவினை ஒதுக்கிவைக்கும் காட்சி நடக்கின்றது.
ஐயா கருணாநிதி ராமானுஜரைத் தொட்டுச் செல்ல முயன்ற பாதையில் இருந்து விலகி ‘ராம்சாமி’ என கொந்தளித்ததன் விளைவு இது.
இன்னும் கூடுதலாக, இப்போது நாடாளுமன்றத்திலே தலைகுனிந்து நிற்கின்றார்கள். இனி தேசிய அரசியல் என்பது அவர்களுக்கு முடிந்துபோன கனவு.
ஆக, திமுக எங்கே சறுக்கியது என்றால் இப்படித்தான்.
திமுக அக்காலத்தில் இருந்தே அனைவருக்கும் பிடித்தமான கட்சி அல்ல; சாதுர்யமான நகர்வுகள் அல்லது கொள்கையினைக் காற்றில் வீசிய தருணங்களினால் தாக்குப் பிடித்து எபப்டியோ நின்றார்கள்.
ஜெயலலிதா இல்லா காலத்தில் ஆட்சிக்கும் வந்தார்கள்.
ஆனால் ‘யாரோ’ தவறாக வழிகாட்ட திசைமாறினார்கள்; யாரோ இவர்களை பாஜகவுடன் மோதவிட்டு அகில இந்தியக் கட்சி போல தவறாக வழிநடத்தி இன்று பெரும் சிக்கலில் சிக்கவைத்து விட்டார்கள்.
தங்கள் எல்லை, உயரம் தெரியாத நிலையில், திமுக யாருடைய வழிகாட்டலிலோ இன்று பெரும் சிககலில் வீழ்ந்துவிட்டது.
இதுகாலம் பேசிய பிராமண ஹிந்து துவேஷம், கடுமையான ஊழல் என எல்லாவற்றிற்கும் பதில் சொல்லும் காலத்துக்கு திமுகவினர் இப்போது வந்துவிட்டார்கள்.
இனி பெரும் பெரும் சிக்கல் வரலாம்; எப்படித் தப்புவார்களோ, தெரியாது.
“ராமன் எந்த காலேஜில் படித்தான்?” என ஐயா கேட்டு அப்போதும் காங்கிரஸ் அமைதி காத்ததுதான் அமேதி வரை அவர்களுக்கு ஏற்பட்ட பெரும் தோல்விக்கு அடிப்படை. இனி வாய்ப்பே இல்லை.
அப்படி ஒரு சவாலுக்கு காங்கிரஸும் இனி தயார் இல்லை.
திமுக உணர வேண்டியதெல்லாம் இனியும் சநாதன ஒழிப்பு, ஹிந்து எதிர்ப்பு, பிராமண எதிர்ப்பு, சமஸ்கிருத ஒழிப்பு, சமூகநீதி என்றெல்லாம் அரசியல் செய்ய முடியாது என்பது தான். அந்தக் காலம் மாறிவிட்டது.
அரசியல் நடத்த இவை அல்லாத வேறு காரணம் கண்டறிந்து தங்களைச் சரிசெய்தால் நிலைப்பார்கள், இல்லையேல் அக்கட்சிக்கு எதிர்காலமில்லை.
இனியும் ஹிந்து எதிர்ப்பு, ஹிந்தி எதிர்ப்பு, ஹிந்து கோயில் இடிப்பு என அரசியலைத் தொட்டால் அது வெகுமடங்கு வீரியமான மின்சாரமாக அவர்களையே திருப்பித் தாக்கும்; அப்படித்தான் தாக்கியிருக்கின்றது.
இது தொடக்கம்தான். திமுக தன்னைச் சரிசெய்து கொள்ளாவிட்டால் பெரும் பெரும் அதிர்ச்சிகள் அடுத்தடுத்து நடக்கும்.
இப்போதைக்கு அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி, ஐயா கருணாநிதி காட்டிச் சென்றதுதான்.
ராமானுஜரை சிக்கெனப் பிடித்து நாடெங்கும் உள்ள எல்லா இடங்களிலும் உள்ள ராமானுஜர் சிலையினை ஓடி ஓடி வணங்கினால் கொஞ்சம் நிலைமை மாறலாம். அப்படியே தனக்குப் பிடித்தமான ஹிந்து என கருணாநிதியார் சொன்ன சுவாமி விவேகானந்தரைச் சுற்றிவருவதும் கொஞ்சம் பலன் தரும்.
அதைத் தவிர எது செய்தாலும் பலனில்லை. இன்னும் பகுத்தறிவுடன் போராடுவோம் என்றால், அது பெரும் பெரும் அடிகளைக் கொடுக்கும்; காலம் அதைச் செய்யும்.
இதுவரை திமுகவுக்கு ஒத்துழைத்த காலம் மாறத் தொடங்கிவிட்டது. அதை இந்தியா முழுக்க உணர்கின்றது. திமுகவினரும் உணர்ந்தால் நல்லது. தங்களுக்குத் தவறான வழிகாட்டும் கும்பல்களை திமுக அடையாளம் கண்டால் இன்னும் நல்லது.
அரசியலில் எதை செய்யக் கூடாதோ, அதுவும் திராவிட நாத்திகப் பேச்சுக்களை எல்லாம் எங்கே பேசக் கூடாதோ அதையெல்லாம் பேசி இன்று தேசத்தின் உச்ச அவையில் அவமானப்பட்டு நிற்கின்றது திமுக.
திமுக என்பது ஒரு காலத்தில் காங்கிரசுக்கு மாற்று வேண்டும் என தேசம் முழுக்க எழும்பிய அலையில் உருவான கட்சி. அப்போது காலச்சூழல் வேறு.
1990களில் இருந்த நிலை வேறு.
இப்போது அப்படி அல்ல. பாஜக காலம் உச்சத்தில் இருக்கின்றது. எங்கும் அவர்களுக்கு பெரும் எதிர்ப்பு இல்லை; எல்லா இடத்திலும் வளர்கின்றார்கள்.
அப்படி காற்று அங்கே அடிப்பதைக் கண்டு பலர் அமைதி காக்கும் போது, திமுக பட்டம்விட்டு பாராசூட்டுடன் குதிக்க முயல்வது அறிவுடைமை அல்ல.
ராம்சாமி, ஹிந்து எதிர்ப்பு, ஆரியம்- பாசிஸமெல்லாம் காலாவதியான அரசியல், சநாதான எதிர்ப்பை வைத்து இனியும் ஓட்டு வாங்கி அரசியல் செய்ய முடியாது. இது நிஜம்.
ஏதோ ஒரு கும்பல் திட்டமிட்டு திமுகவினை பாஜகவோடு மோதவிட்டு இப்படி அடிவாங்க வைக்கின்றது. இந்திய அரசியலோ, உலக நிலவரமோ அவர்களுக்குப் புரியவே இல்லை.
திமுக எனும் சிறிய குடத்தைக் கொண்டு கங்கையினை அள்ளி முடக்கி விடலாம் என யார் நம்புகின்றார்கள் என்பதும், அதனை திமுகவும் ஏன் ஏற்கின்றது என்பதும் தெரியவில்லை.
தமிழ்நாட்டில் திமுக எதுவும் செய்யலாம்; கைதுகள் செய்யலாம்; ஜால்ரா ஊடகங்களைக் கொண்டு ஆடலாம். இன்னும் எதெல்லாம் முடியுமோ அனைத்தையும் செய்யலாம்; பல விஷயங்களை மடைமாற்றலாம்.
அதையே தமிழகம் தாண்டியும் செய்ய முடியும் என எப்படி எதிர்பார்க்க முடியும்?
அந்த அளவு தவறான நபர்கள், தவறான போதனை வழிகாட்டலில் கட்சியினைச் சிக்கவைத்து விட்டார்கள். இனியும் சுதாரிக்காவிட்டால், இன்னும் வறட்டு சித்தாந்தம் என பேசிக்கொண்டிருந்தால், எதுவும் மிஞ்ச இருக்காது.
மோடி காலத்தில் இருந்துகொண்டு வி.பி.சிங் காலத்தில் இருப்பதைப் போல பேசினால் எடுபடாது. வி.பி.சிங்கை அவரின் சொந்த உ.பி. மக்களே மறந்துவிட்டனர்; அவரின் கொள்கை குழப்பமானது என ஒதுக்கிவிட்டனர் என்பதை திமுக ஏன் மறந்தது என்பது தெரியவில்லை.
காலத்துக்கு ஏற்ப மாறாத எதுவும் நிலைக்காது; காலத்துக்கு ஏற்ப மாற மாட்டோம் என வீம்பு பிடிக்கும் எல்லாமும் அழியும். அதுவும் ஊழல் முதற்கொண்டு எல்லா பலவீனங்களும் கொண்ட திமுக தாக்குப் பிடிப்பது பெரும் சிரமம்.
நேற்று டி.ஆர்.பாலு, ‘முதல்வர் ஸ்டாலின் எம்.பி. செந்திலிடம் சர்ச்சையாகப் பேச வேண்டாம் என அறிவுறுத்தியதாக’ சொன்னபோது, பாஜகவிடம் இருந்து எழுந்த குரல் “இதே வார்த்தையினை தன் மகன் உதயநிதியிடம் அவர் சொன்னாரா?” என்பது.
கவனியுங்கள்… உதயநிதி நாடாளுமன்ற உறுப்பினர் அல்ல. ஆனாலும் அங்கும் அவரைப் பற்றி ஏன் பேசுகின்றார்கள் என்றால், பாஜகவினர் ஒரு முடிவோடுதான் இருக்கின்றார்கள் என்பதை எளிதில் ஊகிக்கலாம்.
- திரு. பிரம்மரிஷியார், முகநூல் எழுத்தாளர். இது இவரது முகநூல் ஆக்கத்தின் மீள்பதிவு.
$$$