செம்பஞ்சுக் குழம்பு!

-திருநின்றவூர் ரவிகுமார்

உலகில் உள்ள உயிருள்ளவற்றையும் (இடம் பெயராத தாவரங்கள், இடம்பெயரும் ஊர்வன, பறப்பன, விலங்குகள், மனிதர்கள்), உயிரற்ற ஜடப் பொருள்களையும் உடலாய்க் கொண்டு, அவற்றின் உள்ளே உயிர் போல மறைந்து நிற்கிறான் பரமன். அவனை எப்படி அடையாளம் காண்பது? மிகச் சிறந்த யோகிகள், ‘மாதங்களில் நான் மார்கழி’ என்று ஸ்ரீமத் பகவத் கீதையில் பட்டியலிட்டபடி, எல்லாவற்றிலும் மங்களகரமாக இருப்பவன் பரமன் என்று அவனை தியானிக்கிறார்கள்.

ஆனால் உயிருள்ளவை, உயிரற்றவை எல்லாம் தோன்றுவதும் மாறுபாடு அடைவதும் மறைவதும் அழிவதுமாக இருக்கின்றன. இதையெல்லாம் பரமன் விளையாட்டாகச் செய்கின்றான். இதை, “உலகம் யாவையும் தாமுளவாக்கலும் நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கிலா அலகிலா விளையாட்டுடையார்” என்கிறார் கம்ப நாட்டாழ்வார்.

இப்படி நாம் எந்த விதத்தில் சிந்தித்தாலும், அது உலகமாகவோ பிரபஞ்சமாகவோ உருவமாகவோ பண்பாகவோ எந்த விதத்தில், நினைத்தாலும் அது மாறிக்கொண்டே இருப்பதால் எளியவர்களாகிய நம்முடைய சிந்தைக்கு அப்பாற்பட்டவனாக, தியானிக்க முடியாத  அசரணர்களாக ஆகி விடுகிறோம்.

அசரண என்றால் கதியற்றவர்கள் என்று பொருள். அப்படி யாரும் உலகில் இல்லை. அவர்கள் எல்லோருக்கும் கதியாக, வழியாக, ரக்க்ஷையாக “ஸ்ரீ பிராட்டி” இருக்கிறாள். அவளே பரமனை அடையாளம் காட்டுகிறாள். பரமனிடத்தில் சேர்ப்பிக்கிறாள், என்கிறார் ஸ்ரீ வேதாந்த தேசிகர்.

யத்ஸங்கல்பாத் பவதி கமலே யத்ர தேஹிந்யமீஷாம்
ஜந்ம ஸ்த்தேம ப்ரளய ரசநா ஜங்கமாஜங்கமாநாம் |
தத் கல்யாணம் கிமிபி யமிநாமேக லக்ஷ்யம் ஸமாதௌ
பூர்ணம் தேஜ: ஸ்ப்புரதி பவதீ பாதலாக்ஷா ரஸாங்கம் ||

கமலே – பெரிய பிராட்டியே

யத்ர தேஹிநி – உலகத்தை உடலாகக் கொண்ட பரமனிடத்தில்

அமீஷாம் – இந்த

ஜங்கம அஜங்கமாநாம் – ஜங்கமம், தாவரம் ஆகிய வஸ்துக்களின்

ஜந்ம – பிறப்பு

ஸ்த்தேம – நீடித்து நிற்றல்

ப்ரளய – அழிவு ஆகிய

ரசநா – செயல்

யத் ஸங்கல்பாத் – எவருடைய சங்கல்பத்தால் (நினைப்பினாலே)

பவதி – நடைபெறுகிறதோ

தத் – அந்த

கல்யாணம் – மங்களமானதாய்

யமிநாம் – யோகிகளுக்கு

ஏக லக்ஷ்யம் – ஒரே இலக்காக

பூர்ணம் – எங்கும் நிறைந்திருப்பதாய்

கிம் அபி – அற்புதமான

தேஜ: – (எம்பெருமான் என்னும்) தேஜஸ்

பவதீ பாத – உன்னுடைய திருவடிகளின்

லாக்ஷா ரஸ – செம்பஞ்சுக் குழம்பை

அங்கம் – சின்னமாக

ஸ்ப்புரதி – பிரகாசிக்கின்றன

பொருள்:

பெரிய பிராட்டியே! உன் நாயகனான எம்பெருமான், சேதனம் – அசேதனம் ஆகிய சகல வஸ்துக்களையும் தனக்கு உடலாகக் கொண்டு, தான் ஆத்மாவாக நிற்பவன். தாவரம், ஜங்கமம் ஆகிய பிரபஞ்சம் முழுவதன் படைப்பு – காப்பு – அழிவு ஆகிய செயல்கள் எல்லாவற்றையும் தன் சங்கல்பத்தாலே, நினைப்பினாலே, நிகழ்கின்றவன். அவன் மங்கள சொரூபமானவனாக இருந்து மங்களமான வஸ்துக்களுக்கு எல்லாம் மங்களத் தன்மையை  அளிப்பவனும் அவனே.

யோகியர் தம் இந்திரியங்களை அடக்கி அவனையே இலக்காகக் கொண்டு தம் உள்ளத்தால் தியானிக்கின்றனர். ஸ்வரூபத்தாலும் குணங்களாலும் பரிபூரணமாக எங்கும் நிறைந்து நிற்பவன் அவனே. இவ்வாறு மிக அற்புதமான தேஜோ வடிவமாய் விளங்கும் எம்பெருமானது திருமார்பில் நீ கணமும் பிரியாது உறைகிறாய். உன் திருவடியில் பூசிய செம்பஞ்சுக் குழம்பு அவன் திருமார்பில் படுவதால் அது அழகிய சின்னமாக நின்று அவன் திருமேனியையே அழகுறச் செய்கிறது.

அவனுடைய இத்துணை பெருமைக்கும் உன் திருவடிச் சின்னமே காரணமாகின்றது. இந்தச் சின்னங்களைக் கண்டுதானே அவனை பரம்பொருள் என்று வேத வேதாந்தங்கள் பேசுகின்றன.

"அகலகில்லேன் இறையுமென்று
    அலர்மேல் மங்கை உறை மார்பா!
நிகரில் புகழாய்!"

     -நம்மாழ்வார்
  • (இன்று- ஆக 25 – வரலக்ஷ்மி விரதம்)

$$$

Leave a comment