-பேரா. இளங்கோ ராமானுஜம்
திருவேடகம், விவேகானந்தா கல்லூரியின் முன்னாள் துணை முதல்வரான பேரா. இளங்கோ ராமானுஜம், சுவாமி சித்பவானந்தரின் வழியில் ஆன்மிக சிந்தனைகளைப் பரப்பி வருபவர். அன்னாரது பொருள் பொதிந்த கட்டுரை இது…

சுவாமி விவேகானந்தரின் பார்வை பரந்து விரிந்த ஒன்று. அனைவரையும் அரவணைக்கும் பார்வை. மரத்தின் உச்சாணிக் கொம்பில் அமர்ந்து கீழே பார்க்கும் பறவைக்கு செடிகளும் மரங்களும், கடலும் ஆறும், பள்ளத்தாக்கும் உயர்ந்த மலையும் ஒரே சமவெளியாகத் தெரியும். சுவாமிஜியின் பார்வையில் உயர்ந்தவன்- தாழ்ந்தவன் என்ற பாகுபாடு இல்லை. யோகியின் கண்களுத்தாம் வித்தியாசங்கள் புலப்படாதே! வேறுபாடுகளைக் களைவதில் அவரது அணுகுமுறையில் உன்னதத்தைக் காணலாம்.
மக்களிடையே பாகுபாடுகள் இடையில் வந்தவை என்று அவர் தீர்மானமாக நம்பினார். அவரது கண்கள் சரித்திரத்தை ஊடுருவிப் பார்க்கின்றன. வரலாற்றின் துவக்கம் அது. பாரம்பரியத்தின் மங்கிய ஒளிகூட அதன்மேல் படாத காலகட்டம் அது. அகிலம் முழுதும் அறவோரே நிறைந்திருந்தனர். மகாபாரதமும் அதையே பறைசாற்றுகிறது. அது அறம் நிறைந்த சத்திய யுகம்; தியாகமும் சேவையும் மக்களின் இருகண்களாகத் திகழ்ந்தன; எங்கும் நீதியும் நேர்மையும் நிறைந்திருந்தது; அமைதி நிலவியது; செழுமை ஓங்கியது; மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்; உற்சாகம் என்ற உன்னத உணர்வே உள்ளத்தில் நிறைந்திருந்தது.
ஆனால் அது பலகாலம் நீடிக்கவில்லை. காலச்சக்கரத்தின் சுழற்சியில் மேலது கீழேயும், கீழது மேலேயும் இடம் மாறியது. சுவர்க் கடிகாரத்தின் ஊசல் ஒருகோடிக்குச் சென்று மறுகோடிக்கு வருவது போன்று அறம் நிறைந்த சமுதாயம் அறத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக மறக்க ஆரம்பித்தது; மறம் தலைதூக்கியது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சுயநலமும், காம, குரோத, லோப, மோக, மத, மாச்சரியமும் தங்களது ஆக்கிரமிப்புகளைத் தொடங்கின. மக்கள் அறத்தை மறந்தனர்.
அறம் மீண்டும் மீட்கப்பட வேண்டும் என்கிற முயற்சியில் சமூக சீர்திருத்தவாதிகள் பலர் மும்முரமாகினர். ஆனால், நூற்றாண்டுகள் கடந்தாலும் அறம் உயிர்பெறவில்லை. குறைகளைக் கண்ட அவர்களால் நிறைவை நிலைநிறுத்த முடியவில்லை. குறைகளை மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டும்போது அவர்களின் ஆற்றலின் திறம் குறைந்தது. எதிர்மறையின் உச்சத்துக்கே சென்ற அவர்களால் அறம் நிறைந்த உலகை உண்டுபண்ண முடியவில்லை. நலிந்தவனைக் கைதூக்கிவிட்டு உயரே கொண்டு செல்வதற்குப் பதிலாக, உயர்ந்தவனைக் கீழிறக்கி நலிந்தவன் அருகே கொண்டுவந்து சமநிலையை உருவாக்குவதிலேயே அவர்களை அறியாமல் அவர்களின் சக்தி வீணாகியது. அவர்களின் உதடுகள் சாபத்தையே வாரி வழங்கின. அவர்களின் அணுகுமுறை தோல்வியைக் கண்டது.
இங்கு தான் மாற்றி யோசித்தார் சுவாமி விவேகானந்தர் (Out of the box thinking). மீண்டும் அனைவரையும் அறவோராக்க வேண்டுமென்ற அவரது யுக்தி, நமது பழங்காலத் துறவிகள் சொன்ன வேதாந்தத்தைக் கையிலெடுத்தது. சிகரத்தின் உச்சிக்கே சென்று அவர் கர்ஜனை செய்தார்- “நான் மீண்டும் உலகை அறவோரால் நிரப்புவேன்” (I want to Brahminize the whole world) என்று சூளுரைத்தார். ‘Brahmin’ என்ற வார்த்தை ஒரு சமுதாயத்தின் பிரிவைக் குறிப்பிடவில்லை. பண்பட்டவர் என்பதே அதன் பொருள்.
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.
(திருக்குறள்- நீத்தார் பெருமை - குறள் எண்:30)
பொருள்: எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால் அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.
– என்பது தானே திருவள்ளுவர் சொன்னது? சமூகம் முழுதும் பண்பட்டவர்களே நிறைந்திருக்க வேண்டும் என்பது தான் சுவாமிஜியின் அவா.
சமூக சீர்திருத்தவாதிகளின் அணுகுமுறை எதிர்மறை விளைவை ஏற்படுத்தியதால், சுவாமிஜி வேதாந்தத்தின் வித்துக்கள் நலிந்தவன் மனதில் விதைக்கப்பட்டால் அவனது தன்னம்பிக்கை உறுதிபெறும்; தைரியமாக எழுந்து நிற்பான்; அவனிடமுள்ள தாழ்வு மனப்பான்மை அகலும் என்று திட்டவட்டமாக நம்பினார். இதை நடைமுறைப்படுத்த சரியான களம் இந்த பாரத பூமியே. ஏனென்றால் இங்குதான் ஆன்மிகம் மனிதனின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து இருக்கிறது. பாரதத்தின் ரத்தநாளங்களில் பாய்ந்தோடிக் கொண்டிருப்பது இந்த உன்னதமான உணர்வே. இந்த உணர்வை மனதில் பதிப்பதற்கு அதிகமாக மெனக்கெட வேண்டியதில்லை. சொன்னால் இறுக்கமாகப் பற்றிக் கொள்வார்கள் நமது மக்கள். அதற்குக் காரணத்தையும் சொல்கிறார் சுவாமிஜி.
மேற்கத்திய நாடுகளில் தனது ஆன்மிகப் பயணத்தை முடித்துவிட்டு சுவாமிஜி ஜனவரி 15 , 1897 அன்று கொழும்பில் கால் பதித்தபோது அவருக்கு மக்கள்வெள்ளம் பலத்த வரவேற்பைக் கொடுத்தது. அதை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. “நான் ஒன்றும் வியாபாரநிமித்தம் வெளிநாடு சென்று வீடு திரும்பும் கோடீஸ்வரனில்லையே! போரில் வெற்றிவாகை சூடி வீடு திரும்பும் போர்வீரன் இல்லையே! அனைவரையும் அடக்கியாளும் அரசியல்வாதியில்லையே! நான் ஒரு சாதாரண சந்நியாசி! நான் அணிந்திருக்கும் உடையைத் தவிர என்னிடம் வேறு சொத்து என்ன இருக்கிறது? எனக்கு இவ்வளவு வரவேற்பா?” என்று ஆச்சரியப்படுகிறார் சுவாமிஜி. ஆனால் அதுதானே ஒரு ஹிந்துவின் உன்னதமான உணர்வு. எளிமையான வாழ்வு வாழும் ஒரு துறவி பாரதத்தில் வழிபாட்டிற்கு உரியவர். மேற்கத்திய நாடுகளிலோ செல்வச்செழிப்பில் மிதப்பவரே போற்றப்படுவார். இதுதான் மண்ணின் வேறுபாடு! வேதாந்தக் கருத்துக்களின் மூலம் நலிந்தவனை தன்னம்பிக்கை உடையவனாக்க ஏற்ற களம் பாரதம்தானே!
மேற்கத்திய நாடுகளில் ஆன்மிகம் ஒரு அலங்காரப் பொருளாகவே இருக்கிறது. பத்தோடு பதினொன்றாகவே உள்ளது – வரவேற்பறையை அழகுபடுத்தும் ஒரு ஜப்பானிய ஜாடியைப் போன்று. ஆனால் பாரதத்தையே அலங்கரிப்பது ஆன்மிகம்தானே! நமது நெஞ்சங்களை நிறைத்திருப்பது அந்த உன்னதமான உணர்வு ஒன்றே! அதை மற்றவர்களிடம் பகிர்வதில் நமக்குத்தான் எவ்வளவு மகிழ்ச்சி! ஒவ்வொரு முறையும் பாரதத்தை பகைவன் வென்றபொழுது அவனது நாட்டை தனது ஆன்மிக சிந்தனைகளால் -பகையை மறந்து- மூழ்கடித்தது நமது பாரதம். பிரபஞ்சம் முழுவதும் நன்னெறிகளால் நிரப்புவதுவே பாரதத்தின் நோக்கமாக இருந்தது. பீரங்கியின் பிளிறலோ, துப்பாக்கியின் சத்தமோ, வாளில் தோய்ந்த ரத்தமோ அதைச் செய்யவில்லை. மாறாக கத்தியின்றி, ரத்தமின்றி, சத்தமின்றி வாழ்க்கைக்கு உயிரூட்டக் கூடிய தத்துவங்கள், இரவெல்லாம் கண்ணுக்குத் தெரியாது விழும் பனித்துளிகளைப்போல லட்சக்கணக்கான மலர்மொட்டுக்களின் மீது வீழ்ந்து அவற்றை மலரச்செய்தது போன்று, பகைவனுக்கும் அருளை வழங்கியது பாரதம். இப்போது சொல்லுங்கள், வேதாந்தக் கருத்துக்களின் மூலம் நலிந்தவனை தன்னம்பிக்கை உடையவனாக்க ஏற்ற களம் பாரதம் தானே!
மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள். மூன்று நாளில் சலிப்புத் தட்டும் புலனின்பத்தால் பாரதப் புதல்வனை வென்றுவிட முடியாது. அவனது பார்வை புலனின்பத்துக்கு அப்பால், காலஓட்டத்துக்கு அப்பால், பிரபஞ்சத்துக்கு அப்பால் உள்ள தெவிட்டாத பேரின்பத்தையே நாடியிருக்கிறது. இன்னும் கொஞ்சம் மேலே, இன்னும் கொஞ்சம் மேலே செல்லத் துடிக்கும் அவனது ஆன்மா பரம்பொருள் ஒன்றோடுதான் இணையத் துடிக்கிறது. நாயின் குரைப்பொலி வீறுகொண்டு நடைபோடும் யானையின் காதுகளில் வீழாது. பாரதப் புதல்வனிடம் இரண்டு நாளில் சப்பென்றாகிவிடும் புலனின்பத்தின் ஆட்டம் தோற்றுப்போகும். அவனது பார்வை உன்னதத்தை நோக்கியே இருக்கும். ஆர்ப்பரிக்கும் கங்கையின் போக்கைக்கூட வந்த வழியே திருப்பிவிட்டு சிவனின் சிரசை மீண்டும் தொட்டுவிடச் செய்யலாம். ஆனால் பாரதப் புதல்வனால் ஆன்மிகத்தையும், சனாதன தர்மத்தையும் விட்டுவிட முடியாது. வல்லான் வகுத்ததே வாய்க்கால் (Survival of the fittest) என்ற கொள்கையின் அடிப்படையில் தனது புஜ பராக்கிரமத்தைக் கொண்டு உலகை வென்ற நாடுகள் தற்போது இருக்குமிடம் தெரியவில்லை. ஆனால் இன்னும் அன்றிலிருந்து இன்றுவரை உன்னத நெறிகளை -ஒரு தாய் தன் குழந்தையை மார்போடுஅணைத்திருப்பதைப் போல- பாரதம் இன்னும் காப்பாற்றி வந்திருக்கிறது. உடல்பலம் ஆன்மபலத்துக்கு முன்பு தோற்றுத்தான் போனது. இப்போது சொல்லுங்கள், வேதாந்தக் கருத்துக்களின் மூலம் நலிந்தவனை தன்னம்பிக்கை உடையவனாக்க ஏற்ற களம் பாரதம்தானே!
நாம் எப்போதுமே ஆன்மிகத்தின் உச்சத்தில்தான் இருக்கிறோம். மற்ற மதங்கள் தனிப்பட்ட ஒரு ஞானியைச் சுற்றியே பின்னிப் பிணைந்து இருக்கின்றன. ஆனால் சனாதன தர்மமோ கொள்கைகளின் அஸ்திவாரத்தில் கட்டப்பட்டது; பலமானது. கண்ணுக்குப் புலப்படாத, அறிவுக்கு எட்டாத, பாரம்பரியத்தின் மங்கிய ஒளிகூட படாத அந்தக் காலகட்டத்தில், பெயரைக்கூட சொல்ல விரும்பாத தலைசிறந்த ஞானிகளும், முனிவர்களும் பரம்பொருளைத் தியானம் செய்து அந்த தவத்தின் விளைவாகப் பெற்ற ஆன்மிகப் பொக்கிஷங்களே நம் மதத்தின் அடித்தளமாக இன்றைக்கும் திகழ்கின்றன. அதுவே நம் தேசத்தை நிறைத்திருக்கிறது. ஆம்! நிச்சயமாக வேதாந்தக் கருத்துக்களின் மூலம் நலிந்தவனை தன்னம்பிக்கை உடையவனாக்க ஏற்ற களம் பாரதம்தானே!
நமது மதத்தின் உன்னதமான தத்துவம் சொல்வது இப்பூவுலகிலுள்ள அனைத்தும் ஒரே பரம்பொருளின் வெவ்வேறு தோற்றங்களே. விஞ்ஞானமும் இவ்வுலகிலுள்ள அனைத்துப் பொருள்களும் ஒரே பொருளின் வெவ்வேறு தோற்றங்களே என்று தானே கூறுகிறது? நமது மதமும், விஞ்ஞானமும் ஒரே செய்தியைத் தான் பகர்கின்றன. மாபெரும் கடலின் மேற்பரப்பில் தோன்றும் சிற்றலைகளும்,பேரலைகளும் கடல்நீரின் வெவ்வேறு வடிவங்களே. அனைத்திற்கும் ஆதாரமாய் இருப்பது கடல்தான். அதைப் போன்று இப்பிரபஞ்சத்தில் சஞ்சரிக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் ஆதாரமாய் இருப்பது ஒரே இறைவனே. அவரே அனைவரிடமும் ஜீவிக்கிறார். பிறகு என்ன வேறுபாடு மனிதர்களுக்கிடையில்! இதை சாமானியனுக்குத் தெளிவுபடுத்தினால் அவன் இழந்த தன்னம்பிக்கையை மீண்டும் பெறுவான்.
The other great idea that the world wants from us today, the thinking part of Europe, nay, the whole world - more, perhaps, the lower classes than the higher, more the masses than the cultured, more the ignorant than the educated, more the weak than the strong - is the eternal grand idea of the spiritual oneness of the whole universe…There is but one Soul throughout the universe, all is but One Existence.
- Swami Vivekananda.
இப்போது சொல்லுங்கள் வேதாந்தக் கருத்துக்களின் மூலம் நலிந்தவனை தன்னம்பிக்கை உடையவனாக்க ஏற்ற களம் பாரதம்தானே!
சுவாமிஜி ஒரு நிகழ்ச்சியைக் கூறுகிறார்.
செப்டம்பர் 11, 1893 அன்று சர்வமத மகாசபையில் சுவாமி விவேகானந்தர் உரை நிகழ்த்தி அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியபோது, அவரை பிரமிப்பில் ஆழ்த்தியது ஒரு ஆப்பிரிக்கா நீக்ரோ இளைஞனின் அற்புதமான பேச்சு. அவரை புருவத்தை உயர்த்திப் பார்க்கவைத்த பேச்சு. அவனை மனமாரப் பாராட்டிய சுவாமிஜியால் பிறகு அவனைச் சந்திக்க இயலவில்லை. அவன் கூட்டத்தில் கரைந்து எங்கோ சென்றுவிட்டான்.
ஆனாலும் சுவாமிஜி அவனைப்பற்றி தெரிந்தவர்களிடம் விசாரிக்கும்போது அவன் ஆப்பிரிக்காவின் மையப்பகுதியில் நாகரிகமே கொஞ்சமும் தெரியாத மனித மாமிசத்தை உண்டு வாழும் (Cannibal) இனத்தைச் சேர்ந்தவன் என்று தெரியவருகிறது. ஒருமுறை அவனையும், அவனது பெற்றோரையும் அடுத்த பகுதியைச் சேர்ந்த மற்றொரு நரமாமிசம் உண்ணும் தலைவன் பிடித்து அவனது பெற்றோரைக் கொன்று தின்றுவிடுகிறான். ஆனால் அன்றிரவே இச்சிறுவன் தப்பித்து ஆப்பிரிக்காவின் கடற்கரைப் பகுதிக்கு ஓடிவந்த சமயம் ஒரு அமெரிக்கக் கப்பலில் தஞ்சம்புகுந்து அமெரிக்காவில் கல்வி பயின்று தன்னை அறிவிலும், நன்னெறிகளிலும் உயர்த்திக்கொண்டு ஒழுங்குப்பாட்டின் உச்சத்துக்கே சென்றுவிட்டான். அவனது அருமையான கருத்தாழம் மிக்க உரையே சுவாமிஜியைக் கவர்ந்தது.
இந்த நிகழ்ச்சியை கும்பகோணத்தில், அன்றைய மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் பட்டங்கள் பெற்ற அறிஞர்களிடம் பகிர்ந்துகொள்கிறார். பிறகு அந்தக் கற்றறிந்த அறிஞர்களிடம் கூறினார்:
“After that, what was I to think of your doctrine of heredity!”; பாரம்பரியம் அறிவையும், அறியாமையும் தீர்மானிக்கிறதா? கெட்டிக்காரத்தனம் DNAயில் எழுதப்பட்டிருக்கிறதா? இல்லை, இல்லவேயில்லை. இப்பூமியில் பிறந்த அனைவருக்கும் அளப்பரிய ஆற்றல் உள்ளது. அதை நினைவூட்டவே நான் இந்த ஜென்மம் எடுத்திருக்கிறேன். அதுவே என் லட்சியம். ஆணோ பெண்ணோ, பணக்காரனோ ஏழையோ, பலமானவனோ பலவீனமானவனோ, உயர்ந்த குலமோ தாழ்ந்த குலமோ, அனைவரிடமும் எல்லையற்ற ஆன்மா, எல்லையற்ற சக்தி, எல்லையற்ற திறமை இருக்கிறது. இதை உலகுக்கு உரக்கச் சொல்வேன். ஒவ்வொருவருக்கும் மனதில் புரியும்படிச் சொல்வேன்”
தமிழ்மண்ணில் பிறந்த நாம் பெருமைப்பட வேண்டிய செய்தி என்னவென்றால், சுவாமிஜி இதே கும்பகோணத்தில்தான், “எழுமின்,விழிமின், காரியம் கைகூடும்வரை ஓயாது உழைமின்” என்ற எழுச்சி மிகுந்த மந்திரத்தைச் சொன்னார்.
அனைவரையும் அறவோர் ஆக்க வேண்டும் என்ற விதையை கும்பகோணம் மண்ணில் விதைத்து, அதன்பின் உலகெங்கும் அந்தச் செய்தியை உரக்கச் சொல்லி, மனித இனத்தின் துயரத்தைத் துடைத்து, அவர்களை தங்களிடமுள்ள மகத்தான ஆற்றலை உணரச் செய்து, இந்த அற்புதமான தத்துவத்தைப் பறைசாற்றும் அத்வைத மதமே உலகத்தினர் அனைவர்க்கும் பொதுவான மதமாக இருக்க முடியும் என்று முடிவாகச் சொல்கிறார் சுவாமிஜி.
“Thus there is a great opening for the Vedanta to do beneficent work both here and elsewhere. This wonderful idea of the sameness and omnipresence of the Supreme Soul has to be preached for the amelioration and elevation of the human race here and elsewhere. Wherever there is evil and wherever ignorance and want of knowledge, I have found out by experience that all evil comes, as our scriptures say, relying upon differences, and that all good comes from faith in equality, in the underlying sameness and oneness of things. This is the great Vedantic ideal.”
அத்வைதம் என்ற அற்புதமான தீர்வை உலகுக்குக் கொடுத்தது நமது வேதகால முனிவர்களே என்பதை எண்ணி நாம் பெருமிதம் அடைவோம். அனைவரையும் அறவோர் ஆக்குவோம். அதற்கு ஏற்ற களம் பாரதமே.
$$$