சாவர்க்கர்: அபாயமான போராளி மட்டுமல்ல, தீவிரமான சீர்திருத்தவாதி!

-திருநின்றவூர் ரவிகுமார்

இந்திய விடுதலைக்கு உழைத்த தியாகியரில் திலகம் போன்றவர் வீர சாவர்க்கர் எனபடும் விநாயக தாமோதர சாவர்க்கர். மராட்டியரான இவரே அரசியலில் ஹிந்துத்துவம் என்ற சித்தாந்தம் உருவாக அடித்தளமிட்டவர். அதன் காரணமாகவே இன்று பலராலும் அர்த்தமின்றி விமர்சிக்கப்படுபவர். ஆனால், பலரும் அறியாத அவரது இன்னொரு முகம்,  இவர் ஒரு அதிதீவிர சமூகச் சீர்திருத்தவாதி என்பதே. அதைப் பற்றி, திருநின்றவூர் ரவிகுமார் எழுதியுள்ள இக்கட்டுரை, ஜீரணிக்கக் கொஞ்சம் கஷ்டமான விஷயங்களுடன் நம்முடன் உரையாடுகிறது...
வீர சாவர்க்கர் (1883 மே 28- 1966 பிப். 26)

வீர சாவர்க்கர் ஹிந்து தேசியவாதி; மதச்சார்பின்மை பேசும் போலி அல்ல. மதச்சார்பின்மை என்ற பெயரில், இந்தியாவில் தேசிய இனமான ஹிந்துக்களுக்கு எதிராக (அவர்கள் ஜாதி, மொழி, வழிபாட்டு வேற்றுமைகளால் பிரிந்து கிடக்கிறார்கள்), வாக்கு வங்கியாகத் திரண்டிருக்கும் மதச் சிறுபான்மையினருக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களது வாக்குகளைப் பெற்று ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க முனையும் போலி மதச்சார்பின்மை பேசும் அரசியல்வாதி அல்ல அவர்; உண்மையான தேசியவாதி.

அவர் ஹிந்து தேசியவாதி மட்டுமல்ல. முற்போக்கான ஹிந்து சிந்தனையாளர். அவர் ஹிந்துப் பண்பாட்டைக் காப்பதற்காக மட்டும் பணி செய்யவில்லை; அதன் முன்னேற்றத்திற்காகவும் மறுமலர்ச்சி காகவும் பாடுபட்டவர்.

ஹிந்துக்களிடையே உள்ள ஏற்றத் தாழ்வுகள் பிறவியிலேயே ஏற்பட்டதல்ல. ஏற்றத் தாழ்வுகளுக்கான காரணம் ஹிந்து சமய நூல்களில் இருக்கிறது என்று அவர் கருதினார். தீண்டாமையையும் ஏற்றத் தாழ்வையும் அவர் கடுமையாக எதிர்த்தார்.

முற்போக்குச் சிந்தனைகள்

அவர் பசுவதையை எதிர்த்தார். அறிவியல், நடைமுறைக் காரணங்களால் பசுப் பாதுகாப்பையும் வளர்ப்பையும் ஏற்றுக் கொண்ட அவர், பசுவை தெய்வமாகக் கருதி வணங்குவதை ஏற்கவில்லை. நவீன அறிவியல்பூர்வமான கண்ணோட்டத்துடன் வாழ்க்கையை அணுகவும் பின்பற்றவும் வேண்டும். எதற்கெடுத்தாலும் சமய நூல்களில் – ஸ்மிருதி , புராணங்களில் – உள்ளது என்பதனால் அதன்படி வாழ வேண்டும் என்று சொல்வதை அவர் ஏற்கவில்லை.

சமய நூல்களில் கூறப்பட்ட கருத்துக்களை அறிவியல் உரைகல்லில் உரசிப் பார்த்து சரியானதை ஏற்கவும், ஏற்றதை உறுதியுடன் பின்பற்றவும் வேண்டுமென வலியுறுத்தினார். உதாரணத்திற்கு, 2010 பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் இங்கிலாந்து உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. தேவேந்திர காய் (71) என்ற இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ஆன்மிகத் தலைவர் தனது சமய நம்பிக்கையின்படி மரணத்துக்கு பின் தன் சடலத்தை நான்கு சுவருக்குள் அதே வேளையில் கூரைக்கும் சுற்றுச்சுவருக்கும் இடையே வெட்டவெளி இருக்கும் விதமான இடத்தில் எரியூட்ட வேண்டும் எனக் கோரினார்.

தேவேந்திர காய்

இங்கிலாந்து சட்டப்படி மனித சடலங்கள் முற்றிலும் சூழப்பட்ட இடத்தில்தான் (புகைபோக்கி இருக்கும்) எரியூட்ட முடியும். எனவே வடக்கு இங்கிலாந்து பகுதியான நியூ கேஸில் உள்ளூர் நிர்வாகம் அதை மறுத்துவிட்டது.

நீதிமன்றம் சென்ற தேவேந்திர காய், இது தனது மரணத்திற்குப் பின்னான வாழ்க்கை சம்பந்தப்பட்டது என்று வாதிட்டார்; வழக்கில் வெற்றியும் பெற்றார். சில மாதங்கள் கழித்து அவர் காலமானபோது, அவர் விரும்பியபடி அவரது சடலம், அந்நாட்டு சட்டத்திற்கு மரபுக்கும் மாறாக, வெட்டவெளியில் தகனம் செய்யப்பட்டது.

ஆனால், 1966 பிப்ரவரி 26-ஆம் தேதி காலமான சாவர்க்கர் மின் தகனம்/ எரிவாயு தகனம் முறையை இந்துக்கள் ஏற்றுக்கொண்டு பின்பற்ற வேண்டும் என்று அன்றே பிரசாரம் செய்தார் என்பது வியப்புக்குரியது. இந்தியாவில் இன்று நகர்ப்புறங்களில் அது பயன்பாட்டில் உள்ளது. இது சூழலியலுக்கு ஏற்றது. சமயக் கொள்கைகளுக்கு மாறானது என்று கருதினால், சமயக் கொள்கையை மாற்றுங்கள் என்பதே அவரது நிலைப்பாடாக இருந்தது.

அது மட்டுமின்றி, பட்டியல் இனத்தவர் முதல் பிராமணர் வரை  அனைவருக்கும் ஒரே மின்சார / எரிவாயு தகன மேடையைத் தான் பயன்படுத்த வேண்டும் என்றார். இது பொருளாதார ரீதியில் மட்டுமன்றி சமூக ரீதியிலும் சரியானது என்று இன்று நடைமுறையில் தெரிகிறது. சமூகநீதியை வலியுறுத்தும் ஆர்எஸ்எஸ் சகோதர அமைப்பான  ‘சாமாஜிகா சமரசதா’ அனைவருக்கும் பொதுவான சுடுகாடு என்பதை வலியுறுத்திச் செயல்படுத்தி வருவதை பலரும் அறிந்து பாராட்டி வருகிறார்கள்.

தங்கள் மதத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது எல்லா மதத்தினருக்கும் உள்ள பொதுவான எண்ணம். அதற்கு அவர்கள் கண்ட வழி எண்ணிக்கையைப் பெருக்குவது. எல்லா மதமாற்ற சக்திகளுக்கும் எளிய இலக்காக இருப்பது ஹிந்து மதம் என்பது இன்றைய நிதர்சனம்.

சாவர்க்கர் கூறுகிறார்: “தங்கள் சமயத்தை பாதுகாத்துக் கொள்ள ஹிந்துக்கள் தங்களுக்கு தாங்களே விரித்துக்கொண்ட நிபந்தனைகள் நாளடைவில் ஹிந்து சமுதாயத்தின் முன்னேற்றத்திற்குப் பெரும் இடையூறாக, தடையாக மாறிப் போய்விட்டன”. அவ்வாறான தடைகள் ஏழு என்று அவர் வகைப்படுத்தியதுடன் அதை உடைத்தெறிய வழியும் காட்டினார்.  

சமூகச் சீர்திருத்தம்- ஏன், எதற்கு?

1936-இல், சாவர்க்கர் எழுதியுள்ளார்: “நான் நூற்றுக்கும் மேற்பட்ட முறைகள் சொல்லி உள்ளேன். யாருக்கும் எந்தச் சந்தேகமும் எழக் கூடாது என்பதற்காக மீண்டும் வலியுறுத்திச் சொல்கிறேன். இந்த ஹிந்து தேசத்தின் முன்னேற்றத்திற்கு, நமக்கு சமூகச் சீர்திருத்தமும் அரசியல் சீர்திருத்தமும், இரண்டும் தேவை. அரசியல் சீர்திருத்தம் என்பதை வாளாகக் கொண்டால் சமூகச் சீர்திருத்தம் என்பது கேடயம். இரண்டும் ஒன்றுக்கொன்று இசைவானதும், பரஸ்பரம் உதவி செய்வதுமாகும். ஒன்றில்லாமல் மற்றது செயல் திறனற்றது.”

சாவர்க்கர் தனது சஷ்டியாப்தபூர்த்தியின் (60 வயது நிறைவு) போது விடுத்த செய்தியில்,  ‘சமூகச் சீர்திருத்தம் செய்யாமல் நாம் விடுதலை பெற்றோம் என்றால் அந்த விடுதலை நீண்ட காலம் நீடிக்காது’ என்று கூறியுள்ளார். இதே கருத்தை டாக்டர் அம்பேத்கரும் கொண்டிருந்தார் என்பது நினைவுகூரத் தக்கது.

முன்னேறவிடாமல் பின்னிழுக்கும் ஏழு தடைகள்:

ஹிந்துக்களுக்கு ராணுவப் பயிற்சி தேவை; பொது தொடர்புமொழி தேவை; ஹிந்து வாக்கு வங்கி உருவாக வேண்டும் என்பது போன்ற சாவர்க்கரின் அரசியல் கருத்துக்கள் பொதுத் தளத்தில் விவாதங்கள் மூலம் பலரையும், சரியாகவோ, தவறாகவோ சென்றடைந்திருக்கின்றன. ஆனால் அவரது சமூகச் சீர்திருத்தச் சிந்தனைகள் மக்களிடம் சென்று சேர்ந்துள்ளதா என்பது கேள்விக்குறியே.

‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று அண்ணா(துரை) அன்றே சொன்னார் என்று மேடைகளில் முழங்கப்படுவதை பலரும் கேட்டிருப்போம். ஆனால் அது திருமூலர் எழுதிய திருமந்திரத்தில் உள்ள வாசகம் என்பதை சிலரே அறிவார்கள். அதுபோலவே, சாவர்க்கரின் சமூகச் சீர்திருத்தக் கருத்துக்கள் பலவும், அவருக்குப் பின் வந்த பல சுயநல அரசியல் சக்திகளால் தங்களுடைய சுய சிந்தனை போலவே உயர்த்திப் பிடிக்கப்படுவதைக் காண்கிறோம்.

அதேபோல, சாவர்க்கர் கூறிய பல விஷயங்கள் அவர் வாழ்ந்த சூழ்நிலையில் புரட்சிகரமானவையாகத் தெரிந்திருக்கலாம். அவையெல்லாம் புதியது என்று கூற முடியாது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கருணையுள்ளதோடு ஸ்ரீ ராமானுஜ ஆச்சாரியர் பலவற்றைச் சொல்லியும் செய்தும் காட்டியுள்ளார் என்பதை மறுக்க முடியாது. ஆனால் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளாக சாவர்க்கர் முன்வைத்தவை அவரது சொந்த சிந்தனைகளே என்பதையும் மறக்கக் கூடாது.

சாவர்க்கர் கூறிய ஏழு பந்திகள் *1 (தடைகள்):

1. ஸ்பரிச பந்தி - தீண்டாமை
2. ரொட்டி பந்தி - உடன் உண்ணாமை
3. பேட்டி பந்தி - ஜாதிக் கலப்பு திருமணம் செய்யாமை
4. விவசாய பந்தி - தொழிலால் வேற்றுமை
5. சிந்து பந்தி - கடல் தாண்டிப் போகத் தடை
6. வேதோக்த பந்தி - வேதம் படிக்க சில ஜாதியினருக்குத் தடை
7. சுத்தி பந்தி - வேற்று மதத்தினரை சேர்த்துக் கொள்ளத் தடை

இவற்றைப் பற்றி சாவர்க்கர் பலமுறை எழுதியுள்ளார். 1924 ஜனவரியில் நடந்த ஹிந்து மகா சபை மாநாட்டில் இது தொடர்பாக விரிவாகப் பேசியுள்ளார்.

ஸ்பரிச பந்தி:

‘வைதிகமானவர்’ வீடுகளில் கூட எருதுகளும் எருமைகளும் வளர்க்கப்படுகின்றன; தொடப் படுகின்றன. பூனையும் நாயும் கூட அவர்கள் வீட்டில் சகஜமாகச் சுற்றி வருகின்றன. இந்த நிலையில், மகாராஷ்டிரத்தில் உள்ள மஹர், பங்கி ஜாதியினரை (ஹரிஜனர், அருந்ததியினர்) பிற சமுதாயத்தினர் வீட்டுக்குள் அனுமதிப்பதில்லை என்ற கட்டுப்பாடு நிலவியது. நாடு முழுக்கவும் அதே நிலைதான் (இன்றும் பல இடங்களில் நிலவும் கொடிய வழக்கம் இது). அப்போது, வளர்ப்புப் பிராணிகளையும் விலங்குகளையும் விட தாழ்ந்தவர்களா சக மனிதர்கள்? என்று சாவர்க்கர் கேள்வி எழுப்பினர். பங்கிகளைப் பார்த்தாலே தீட்டு *2 என்ற அநியாயத்தை அவர் கடுமையாக எதிர்த்தார்.

1924 செப்டம்பர் 6 தேதி நாசிக் மாவட்டத்தில் அவர் சில பொதுக்கூட்டங்களில் பேசினார். அதில் ஒன்று அங்குள்ள ராமர் கோயில் வளாகத்தில் தீண்டத் தகாதவர்களாகக் கருதப்பட்ட மஹர் ஜாதி மக்களிடையே பேசியது. அங்கு அவர் பேசும்போது,  “உங்களை நான் தீண்டத்தகாதவர் (தலித்) என்று கருதவோ, கூப்பிடவோ மாட்டேன். மாறாக மஹர், மாங்க், தோர் என்று உங்கள் ஜாதி பெயரிலேயே கூப்பிடுவேன். ஏனெனில் நாம் அனைவரும் ஒன்றே. சற்று முன்பு ஒரு மஹர் (பட்டியல் இனத்தவர்) என்னிடம்  ‘நான் பங்கி இல்லை’ என்று சொன்னார். அதாவது பங்கியை (அருந்ததியர்) விட தான் உயர்ந்தவர் என்று அவர் குறிப்பிடுகிறார்…”

“நான் பாகூருக்குப் போயிருந்த போது அங்கு மஹர்களின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டேன். அங்கிருந்த மஹர் ஒருவர் எனக்கு குவளையில் பால் கொடுத்தார். நான் வாங்கி குடித்தேன். என்னைப் பார்க்க வந்திருந்த பங்கி ஒருவருக்கும் பால் கொடுக்கும்படி அவரிடம் சொன்னேன். அவர் தயங்கினார். நாம் எல்லோரும் (உயர் ஜாதியினர் மட்டுமல்ல) நம்மை விடத் தாழ்ந்தவர்கள் என்று சிலரை கருதுகிறோம். நாம் இந்த எண்ணத்தை விட்டு விட வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

வெறும் வாய்ச்சொல் வீரர் அல்லவே வீர சாவர்க்கர்! அவர் செயல்வீரர்.

மாற்றத்தை முதலில் அவர் தனது வீட்டிலேயே தொடங்கினார். தன் வீட்டில் ‘ஹல்திகுங்கும்’ பூஜா நடத்தினர். நம்மூரில் அதை சுமங்கலி பூஜை என்போம். அதற்கு எல்லா ஜாதிகளைச் சேர்ந்த பெண்களும் அழைக்கப்பட்டனர். அந்த நிகழ்ச்சிக்கு தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்த பெண்கள் குளித்து சுத்தமாகவும், தூய, மரபான ஆடை அணிந்தும் வந்தார்கள்.

மஹர் பெண்கள், பங்கி பெண்களுடன் அமர்வதற்கு முதலில் உயர்ஜாதிப் பெண்கள் தயங்கினார்கள். பிறகு மெல்ல தயக்கம் கலைந்து எல்லோரும் அந்த வீட்டில் ஒரே கூடத்தில் அமர்ந்தார்கள். அதே போன்ற நிகழ்ச்சிகள் பிறகு மற்ற குடும்பங்களுக்கும் பரவியது. சமூகச் சூழ்நிலை மெல்ல மாறத் தொடங்கியது.

ரத்னகிரியில் பங்கி சமூகத்தினரின் திருமண நிகழ்ச்சி ஒன்று நிச்சயமானது. திருமணத்தை நடத்தி வைக்க பிராமணர்கள் வர மாட்டார்கள் என்பதால் அவர்கள் மஹர் சமூகத்தைச் சேர்ந்த பூஜாரியை அழைத்தார்கள். ஆனால் பங்கிகள் மஹர்களை விடத் தாழ்ந்தவர்கள் என்று கருதப்பட்டதால் மஹர் பூஜாரி வர மறுத்துவிட்டார். அவர்கள் சாவர்க்கரை அணுகினார்கள்.

சாவர்க்கர் தனக்கு நெருக்கமான தாதியா தாமி, வாசுதேவ ஹர்திகார் என்ற இரண்டு பிராமணச் சீடர்களுக்கு திருமணச் சடங்குகளை சொல்லிக் கொடுத்தார். அது  பற்றிய சடங்கு நூல்களை அவர்களுக்குக் கொடுத்து படிக்கச் சொன்னார். அவர்களை பங்கி பகுதிக்கு அனுப்பி அந்தத் திருமணத்தை சிறப்பாக நடத்தி வைத்தார். அவர்களைக் கொண்டு மற்றும் பல திருமணங்கள் செய்து வைக்கப்பட்டன.

இந்த நூற்ராண்டிலும், கோயில்களில் தாழ்த்தப்பட்டவர்கள் நுழையத் தடை  தமிழகம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் நடைமுறையில் உள்ளது வேதனையானது. இது தவறு,  ஆண்டவன் சன்னிதியில் அனைவரும் ஒன்றுதான் என்று சாவர்க்கர் வலியுறுத்தினார்.

மகாராஷ்டிராத்தில் பிரபலமான விட்டோபா கோயிலில் தாழ்த்தப்பட்டவர்கள் நுழைய முடியாத நிலை இருந்தது. அந்தக் கோயில் நிர்வாகக் குழுவினர் சாவர்க்கரின் வாதத்தை ஏற்று,  ‘குளித்து தூய ஆடை அணிந்து வர வேண்டும்’ என்ற நிபந்தனையுடன் தாழ்த்தப்பட்டவர்களை கோயிலுக்குள் அனுமதிக்கச் சம்மதித்தனர்.

ஒரு பங்கி இளைஞரின் தலைமையில்,  ‘இறைவன் சன்னிதியில் ஹிந்துக்கள் அனைவரும் ஒன்றே’ என்ற சாவர்க்கரின் பாடலைப் பாடியபடி அவர்கள் நுழைந்தனர். கோயிலுக்குள் நுழைந்த மகிழ்ச்சியில் அவர்களால் நடக்கக்கூட முடியாமல் பிரகாரத்திலே அமர்ந்து விட்டனர். சாவர்க்கர் அவர்களை எழுப்பி கருவறை வரை அழைத்துச் சென்றார்.

தீண்டாமை தவறு என்று கண்டித்த சாவர்க்கர், அதன் காரணமாக மதம் மாறுவதையும் எதிர்த்தார். கிறிஸ்துவ, இஸ்லாமிய மதங்களிலும் ஜாதி வேற்றுமைகள் இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். புத்த மதத்திலும் சீக்கிய மதத்திலும் உயர்வு தாழ்வு இருப்பதையும் ஆதாரங்களுடன் அவர் விளக்கினார்.

சுருக்கமாகச் சொன்னால், ஜாதி வேற்றுமை விஷயத்தில் 1. மக்களை தர்க்கபூர்வமாகச் சிந்திக்குமாறு தூண்டினார். 2. தீண்டத் தகாதவர்கள் எனப்படும் ஜாதியினரிடையேயும் ஏற்றத்தாழ்வுகள் இருப்பதை – ஏதோ பிராமணர்களும் உயர் ஜாதியினரும்தான் தீண்டாமையைப் பின்பற்றுகிறார்கள் என்ற கருத்து நிலவுகிறது. இது தவறு என்று – சுட்டிக்காட்டினர். 3. முஸ்லிம், கிறிஸ்தவர்களிடையேயும் தீண்டாமை நிலவுகிறது என்பதை அம்பலப்படுத்தினார். 4. தீண்டாமை ஒழிப்பை, ஜாதி ஏற்றத்தாழ்வை செயல்களின் மூலம் அகற்ற வழிகாட்டினார் என்று கூறலாம்.

ரொட்டி பந்தி:

பெயர்ப் பலகையில் ஜாதிப் பெயர்களை நீக்கிவிட்டால் மட்டும் ஜாதி ஒழிந்து விடாது; சட்டம் போட்டாலும் போய் விடாது. ஜாதி என்ற உணர்வு மக்கள் மனதில் இருக்கிறது. ஜாதிகளிடையே உயர்வு – தாழ்வு பாராட்டாமல் இருக்க வேண்டும். அதற்கு மக்கள் மனதில் மாற்றம் ஏற்பட வேண்டும். 1924 முதல் 1937 வரை சாவர்க்கர் ரத்னகிரி மாவட்டத்தில்  நிபந்தனைச் சிறையில் வைக்கப்பட்டிருந்தார். மாவட்டத்தை விட்டு வெளியே செல்லக் கூடாது, அரசியலில் ஈடுபடக் கூடாது என்பது பிரிட்டிஷார் விதித்த நிபந்தனை.

அந்தக் காலகட்டத்தில் சாவர்க்கர் சமூகச் சீர்திருத்தப் பணிகளை மேற்கொண்டு, மாவட்டம் முழுவதும் பயணம் செய்து வந்தார். விநாயகர் சதுர்த்தி விழாவில் பிராமணர்களுக்கு சாப்பாடு போட வேண்டும் என்பது மரபாக இருந்து வருகிறது, மகாராஷ்டிரா மாநிலத்தில். பிராமண போஜனத்தை மஹர், சாமார், பங்கி போஜனமாக மடைமாற்றம் செய்தார் சாவர்க்கர்.

வழக்கமாக விருந்தில் எல்லா ஜாதியினருக்கும் உணவு ஒரே மாதிரியாக தான் இருக்கும். அதில் மாற்றம் இருக்காது. ஆனால் பிராமணர்களும் உயர்ஜாதி மராட்டியர்களும் மையமான இடத்தில் அமர வைக்கப்படுவார்கள். தாழ்த்தப்பட்ட ஜாதினர் அரங்கிற்கு / வீட்டிற்கு வெளியே (சுற்றுச்சுவருக்கு உள்ளே) அமர வைக்கப்படுவார்கள். நண்பர் ஒருவர் அளித்த விநாயகர் சதுர்த்தி விருந்து விழாவுக்கு அழைக்கப்பட்ட சாவர்க்கர் பட்டியலினத்தவரையும் உள்ளே அழைத்து விருந்து பரிமாறுமாறு கேட்டுக் கொண்டார். அங்கிருந்தோர் மறுத்துவிட்டனர்.

உடனே, சாவர்க்கர் பட்டியலின மக்கள் உட்கார்ந்திருந்த இடத்திற்குச் சென்று அவர்களுடன் விருந்துக்கு அமர்ந்து விட்டார். விருந்துக்கு அழைத்தவருக்கு  சங்கடமாகிவிட்டது. பிறகு சில பிராமணர்கள் வந்து சாவர்க்கரையே உள்ளே வருமாறு அழைத்தனர். அவரோ பட்டியலினத்தவர்கள் வந்தால் மட்டுமே தானும் வருவதாகக் கூறிவிட்டார். அவரது வாதங்களைக் கேட்ட பிறகு மனம் மாறிய பிராமணர்கள் மற்றவர்களையும் தங்களுடன் சேர்ந்து சாப்பிட அழைத்தனர்.

1927 மார்ச் மாதத்தில் தாபோலி என்ற ஊரில் இருந்த பிரபல வெள்ளி வியாபாரியான எச்.கே.கோகலே (பிராமணர்) ஆயிரம் பேருக்கு விருந்திட முடிவு செய்து அழைத்தார். சாவர்க்கருக்கும் அழைப்பு வந்தது. முதல் நாள் விருந்துக்குப் பிறகு சாவர்க்கர், தீண்டத்தகாத ஜாதியினரையும் உடன் அமர்த்தி விருந்து உண்ண வேண்டும் என்றார். சில பிராமணர்கள் அவர் கருத்தை ஏற்கவில்லை. ஆனால் அவர் தொடர்ந்து தன் தரப்பு வாதத்தை முன்வைத்தார்.

அவரது வாதத்தில் இருந்த உண்மையின் வலிமையால் இரண்டாவது நாள்,  மூன்றாவது நாள் விருந்துகளில் தீண்டத்தகாதவர்கள் முதல் பிராமணர்கள் வரை அனைத்து ஜாதியினரும் ஒன்றாக அமர்ந்து விருந்துண்டனர். இதனால் அந்தப் பகுதியில் இருந்த அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஜாதிய ஏற்றத்தாழ்வு மக்கள் மத்தியில் மட்டுமல்ல, சமயத் தலைவர்கள் மத்தியிலும் உண்டு. இதற்கு ஓர் உதாரணம் மதுரை ஆதீனத்தில் நடந்த நிகழ்வு.

2021-இல் காலமான மதுரை ஆதீனம் உயிருடன் இருந்தபோது, அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமி தனக்குப் பின் இளைய பட்டமாக நித்தியானந்தா சுவாமியை நியமித்தார். நித்தியானந்தாவால் பொருளாதார ரீதியாகவும் வேறு பல வகைகளிலும் பயன் பெற்றவர் மதுரை ஆதீனம். அது மட்டுமன்றி தனக்குப் பின் சித்தாந்த ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் சரியான வாரிசு இவர்தான் என்று தெளிவாகத் தெரிந்து முடிவெடுத்து அறிவித்தார்.

ஆனால் மடத்தைச் சார்ந்தவர்கள் பீடாதிபதியின் கருத்தை ஏற்கவில்லை. காரணம், மதுரை ஆதீனம் பிள்ளைமார்களின் மடம். நித்தியானந்தா முதலியார் ஜாதியைச் சேர்ந்தவர். எனவே ஏற்க முடியாது என்று கலகம் செய்தனர். ஆனால், இந்த (ஜாதி) உண்மையை வெளிப்படையாகச் சொல்லாமல் நித்தியானந்தா பாரம்பரிய முறைப்படி சைவ சித்தாந்தம் கற்றவர் அல்ல, அவரது குரு யார், எந்தப் பரம்பரையைச் சேர்ந்தவர் என்றெல்லாம் கேள்வி எழுப்பி இளைய பட்டத்தைப் பிடுங்கிவிட்டனர். தற்போது ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் மதுரை ஆதீனகர்த்தராக இருக்கிறார்.

சித்தாந்த ரீதியாகவும் செயல்பாடுகள் ரீதியாகவும் பிரிந்து கிடக்கும் ஹிந்து மடாதிபதிகளை எல்லாம் அகில இந்திய அளவில் ஒன்று கூட்டியது விஸ்வ ஹிந்து பரிஷத். உடுப்பியில் நடந்த அந்த மாநாட்டில் பல்வேறு சமய பிரிவுகளைச் சேர்ந்த மடாதிபதிகள் எல்லாம் ஒரே குரலில், ஹிந்துக்களிடையே தீண்டாமை கூடாது; ஏற்றத்தாழ்வு கூடாது; அனைவரும் சரிசமமானவர்களே, என்று கூற வைத்தது. இது இந்திய சமூக, சமய வரலாற்றில் முக்கியமான நிகழ்வாகும்.

பேட்டி பந்தி:

சுய ஜாதிக்குள் திருமணம் என்பது ஜாதி முறைமையை வலுப்படுத்தும் காரணிகளில் முக்கியமானது. எனவே ஜாதி முறைமையை வலுவிழக்கச் செய்ய வேண்டும் என்றால் ஜாதிக் கலப்பு திருமணங்கள் நடக்க வேண்டும். இந்த விஷயத்தில் வீர சாவர்க்கரும் டாக்டர் அம்பேத்கரும் ஒத்த கருத்து கொண்டிருந்தனர்.

சில தலித்தியர்கள்,  தங்களிடம் சரக்கு இருக்கு, மிடுக்கு இருக்கு, அடுத்த ஜாதிப் பெண்ணைத் தூக்கு என்கிறார்கள். நாடகக் காதல் என்று மற்றொரு ஜாதித் தலைவர்கள் இதனைச் சாடுகிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு தென் தமிழகத்தில்,  ‘மறவனை வெட்டு, மறத்தியைக் கட்டு’ என்று கோஷமிட்டபடி ஒரு தலித்தியர் ஊர்வலம் விட்டார். இன்று அவர் மனம் மாறி தேசியம், சமூக நல்லிணக்கம் பற்றிப் பேசி வருவது வரவேற்கத்தக்க விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

அரசியல் தலைவர்கள் தங்கள் சுயநலத்திற்காகத் தூண்டி விடுகிறார்கள் என்று கூறினாலும், ஹிந்து சமுதாயம் இன்று கூட ஜாதிக் கலப்புத்  திருமணங்களை ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை.

அண்மைக் காலத்தில் நடந்த நிகழ்வு இது…

திண்டுக்கல் மாவட்டத்தில், வேடசந்தூர் அருகில் உள்ள பழைய மரம்பட்டி கிராமத்தில் பழனிசாமி என்ற கோனார் ஜாதியைச் சேர்ந்தவர்  ஹைதராபாத்தில் வேலைக்குப் போனார். அங்கு செட்டியார் வகுப்பைச் சார்ந்த பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரண்டு ஜாதியும் பிற்பட்ட வகுப்பைச் சார்ந்தவையே. ஆனால் கிராமத்தார் அந்த ஜாதிக் கலப்பு திருமணத்தை ஏற்க மறுத்து அந்தக் குடும்பத்தை ஊர் விலக்கம் செய்தனர்.

இது நிகழ்ந்தது 30 ஆண்டுகளுக்கு முன். ஆனல், இன்னமும் அவர் சொந்த ஊரில் தள்ளியே வைக்கப்பட்டிருக்கிறார்! 2017-இல் இவரது தந்தை இறந்தபோது தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்வும் கூட இவர் அனுமதிக்கப்படவில்லை!!

இதுபற்றி பழனிசாமி காவல் துறை, நீதித் துறை, முதலமைச்சரின் புகார் பிரிவு ஆகியவற்றில் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறுகிறார். இந்த வழக்கை விசாரிக்கச் சொல்லியுள்ளதாக மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் கூறுகிறார். வேடசந்தூர் தாசில்தார் விஜயலட்சுமி இந்த விஷயத்தைத் தீர்க்க சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த அமைதிக் குழுவை அமைத்துள்ளதாக்க் கூறுகிறார் -என்கிறது நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் (24-5-2023)  நாளேடு.

ஜாதிக் கலப்பு திருமணத்தை குடும்பங்கள் மட்டுமல்ல, ஊரே எதிர்க்கிறது என்ற அவல நிலை சமூகநீதி நிலைநாட்டப்பட்ட மாநிலமாகக் கூறிக் கொள்ளும் தமிழ்நாட்டிலேயே இன்றும் நிலவுகிறது. அப்படி என்றால், மராட்டிய மாநிலத்தில் சாவர்க்கர் வாழ்ந்த காலத்தில் சூழ்நிலை எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.

சாவர்க்கர் கூறுகிறார்: “கட்டாயம் ஜாதிக் கலப்பு திருமணம்தான் செய்ய வேண்டும் என்று நான் கூறவில்லை. ஒரு ஆணும் பெண்ணும் தங்களிடையே ஒத்த உணர்வு, பொருத்தமான உடல் தகுதி, பழக்கவழக்கங்கள், விருப்பு வெறுப்புகள், கல்வித் தகுதி  கொண்டவர்களாகவும் ஒருவர் மீது மற்றொருவரென ஈர்ப்புக் கொண்டவர்களாகவும் இருந்தால் அவர்கள் திருமணம் செய்துகொள்ள, அவர்கள் வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பது ஒரு தடையாக இருக்கக் கூடாது.”

ஜாதிக் கலப்பு திருமணத்தை ஆதரித்த சாவர்க்கர் மதம் மாறி திருமணம் செய்து கொள்வதை ஆதரிக்கவில்லை. காதலுக்காக, திருமணம் செய்து கொள்வதற்காக ஹிந்துக்கள் மதம் மாறக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். விவேகானந்தரும் கூட, ‘ஒரு ஹிந்து மதம் மாறுவதால், எண்ணிக்கை குறைவது மட்டுமின்றி, எதிரியின் எண்ணிக்கை அதிகரிக்கிறது’ என்று கூறியுள்ளதை இங்கு நினைவு கூரலாம்.

விவசாய பந்தி:

‘பார்ப்பனனே மலம் அள்ளத் தயாரா?’ என்று தமிழகச் சுவர்களில் தற்காலத்தில் சில இடங்களில் எழுதப்பட்டிருப்பதைப் பார்த்திருக்கலாம். ஆனால் இந்தியாவில் துப்புரவுத் தொழிலில் முன்னணியில் இருப்பவர் பிந்தேஸ்வர் பாதக் என்ற பார்ப்பனர். அவரது  ‘சுலப் இன்டர்நேஷனல்’ இன்று இந்தியாவில் துப்புரவுத் தொழிலில் மாற்றத்தையும் துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்வில் மகத்தான மறுமலர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இதற்காக அவருக்கு பத்மபூஷண் விருது உட்பட பல்வேறு விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதியிடம் விருது பெறும் பிந்தேஸ்வர் பதக்

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற கோஷமும் தமிழகத்தில் எழுப்பப்படுகிறது. ஆர்எஸ்எஸ்/ விஎச்பி அமைப்பினர் எந்த ஆரவாரமும் இன்றி இந்த விஷயத்தில் முன்னோடியாக உள்ளனர். எல்லா ஜாதியினரையும், குறிப்பாக பட்டியலினத்தவரைத் தேர்ந்தெடுத்து பயிற்சி அளித்து அர்ச்சகர் ஆக்கியுள்ளனர். குஜராத்தில் அப்படி நியமிக்கப்பட்டவர்கள் ஏராளம்.

அதுமட்டுமன்றி திருமணச் சடங்குகள், சவச் சடங்குகள் நடத்த பெண்களுக்கும் பயிற்சி அளித்து மகாராஷ்டிரத்தில் புரட்சி செய்துள்ளனர் ஆர்எஸ்எஸ் அமைப்பினர். குஜராத்தில் அர்ச்சகர் நியமனமும் மகாராஷ்டிரத்தில் பெண்களை திருமண, சவச் சடங்குகளில் ஈடுபடுத்தியதும்  ‘திராவிட மாடலுக்கு’ முன்னோடியாக, சவாலாக இருக்கின்றன.

ஆனால், சாவர்க்கர் வாழ்ந்த காலத்தில் சூழ்நிலை மிகவும் கடினமாக இருந்தது. அந்தச் சூழ்நிலையிலும் அவர் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தினார் என்பது கவனிக்கத்தக்கது.

சாவர்க்கரின் ஆதரவாளர்களில் ஒருவர் பாகோஜி என்பவர். பிரபல அரசு ஒப்பந்ததாரர்; பணக்காரர்; பண்டாரி ஜாதியைச் சேர்ந்தவர். அவர்தான் பாகேஸ்வர் (சிவன்) கோயிலைக் கட்டியவர்.

சாவர்க்கர் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி அவர்  ‘பதிதபாவன்’ கோயிலைக் கட்டினார். பதிதன் –  தாழ்ந்த நிலையில் இருப்பவர், பாவன் – உயர்த்துபவர். தாழ்ந்த நிலையில் இருக்கும் ஜீவன்களை உயர்த்தும் கடவுளின் கோயில் அது. அந்தக் கோயிலில் தாழ்த்தப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். அது மட்டுமன்றி கோயில் பூஜாரியாக ஒரு தாழ்த்தப்பட்டவரே நியமிக்கப்பட்டார்.

இதே போன்றதொரு புரட்சிகரமான செயலை கேரளத்தில் நாராயண குருவும் செய்துள்ளார். ஈழவ ஜாதியைச் சேர்ந்தவரான அந்தத் துறவி ஈழவ மக்கள் வாழும் பகுதியில் அவர்களுக்கென சிவன் கோயிலை எழுப்பியதும் அங்கு பயிற்சி பெற்ற ஈழவர்களையே பூஜாரிகளாக நியமித்ததும் குறிப்பிடத்தக்கது. இன்று நாராரயண குருவின் சீடர்களால் நிர்வகிக்கப்படும்  ‘நாராயண தர்ம பரிபாலன யோகம்’ கேரள சமூக மாற்றத்தில் பெரும் பங்கு வகிக்கிறது.

மெக்காலே புத்திரர்களால் இந்தியர்கள் மட்டம் தட்டப்படுவது இந்தியாவில் மட்டுமல்ல, இப்பொழுது அமெரிக்காவிலும் நடக்கிறது. திறமைக்கு முக்கியத்துவம் கொடுக்கும், இட ஒதுக்கீட்டு முறை இல்லாத அமெரிக்காவில் பல இந்தியர்கள் பணிக்குச் செல்வது அதிகரித்துள்ளது. இந்நிலையில் அங்குள்ள இந்தியர்களிடையே பணியிடத்தில் ஜாதி வேற்றுமை காட்டப்படுவதாக மெக்காலே புத்திரர்கள் கூப்பாடு போட ஆரம்பித்தனர். அதன் விளைவாக அமெரிக்காவில் பணியிடத்தில் (இந்தியர்களிடையே) ஜாதிப் பாகுபாட்டை தடுக்கும் சட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதை இங்கு ஊதிப் பெரிதாக்கிக் காட்டிய இந்திய ஊடகங்கள் அங்கு நிறவேற்றுமையால் கருப்பர்கள் தாக்கப்படுவதை கண்ணிருந்தும் பார்க்காமல் கடந்து செல்கின்றன. இந்தியர்களை மட்டம் தட்ட இந்தியர்களை விட சிறந்தவர்கள் உலகில் வேறு எவரும் இல்லை என்பது நகைமுரண் தான்.

இதன் உச்சமாக அன்றும் இன்றும் பல செயல்கள் நடந்து வருகின்றன. வங்க மாநிலத்தில் முன்ஷிகன்ச் என்ற இடத்தில் உள்ள காளி கோயிலில் தாழ்த்தப்பட்டவர்கள் நுழைய அனுமதி இல்லை. ஹிந்து மகாசபை, ஆரிய சமாஜம், பிரம்ம சமாஜம் போன்ற அமைப்புகளின் சமூகச் சீர்திருத்தச் செயல்பாடுகளால் சமுதாயத்தில் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டிருந்த சூழ்நிலை. எனவே தாழ்த்தப்பட்டவர்கள் ஒன்றுகூடி கோவிலுக்குள் நுழைந்து விடுவார்களோ என்று அச்சப்பட்ட நிர்வாகம் காவலுக்கு 25 முஸ்லிம் குண்டர்களை நியமித்தது.

இன்றைய கொங்கண் பகுதியில் உள்ள பார்வதி கோயில் நிர்வாகமும் அது போன்ற சூழ்நிலை ஏற்படுமோ என்று அஞ்சி முஸ்லிம்களை காவலுக்கு நியமித்தனர். பாதுகாப்புப் பணி என்று கோயிலுக்கு உள்ளேயும் வெளியேயும் முஸ்லிம்களை வளைய வர அனுமதித்த கோயில் நிர்வாகம், தாழ்த்தப்பட்ட ஹிந்துக்களை அனுமதிக்க மறுத்தது.  

‘ஹிந்து சமுதாயம் ஒருங்கிணைக்கப்படாததாக, பலவீனமாக, பல தலைமுறைகளாக மரபு என்ற பெயரில் நூற்றுக்கணக்கான பிரிவுகளாக துண்டு துண்டாகப் பிரிந்து கிடக்கிறது. இந்நிலை மாற வேண்டும்’ என்று சாவர்க்கர் விரும்பினார். அது என்று நிகழும்?

சிந்து பந்தி:

இது பிராமணர்களுக்கு இருந்த தடை. பிராமணர்கள் தினசரி செய்ய வேண்டிய பல கிரியைகள் பூமியின் மீது நிலைத்து செய்ய வேண்டியவை. கடல் பயணத்தில் செய்ய முடியாது. எனவே கடல் கடந்து பிராமணர்கள் செல்லத் தடை இருந்தது *3. இன்று நிலைமை மாறிவிட்டது. பொருளாதார மாற்றங்களும் விமானப் பயணமும் அதை எளிதாக்கிவிட்டது.

அண்மையில் ஒரு வைணவ பாகவதரின் யூ-டியூப் பார்த்தேன். அதில், அந்நிய தேசத்தில் வர்ணாசிரம தர்ம முறை இல்லை. அங்கு நம் பாவங்களைத் தொலைக்கும் புண்ணிய நதிகளோ, திவ்ய தேசங்களோ இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக அங்கு கருத்தியல் கற்போ, நெறி கற்போ, கலாச்சார கற்போ கிடையாது. இந்த மூன்று காரணங்களுக்காக இந்தியா தவிர வேறு நாடுகளுக்கு ஆச்சாரத்தை அனுஷ்டிக்கும் பிராமணர்கள் போகத் தடை உள்ளது, என்று நவீன விளக்கம் கொடுத்தார்.

போன மாதம் (மே 22 -24) ஆஸ்திரேலியா சென்ற இந்தியப் பிரதமர் மோடிக்கு அங்கு பூரண கும்ப மரியாதை வழங்கி வரவேற்றார்கள். அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் வாமதேவ சாஸ்திரி (டாக்டர் டேவிட் பிராலே) போன்ற வேதாச்சாரியார்கள் உருவாகியுள்ள நிலையில்,   மேற்சொன்ன பாகவதரின் விளக்கம் அர்த்தமற்றதாகவும் கையாலாகாத தனமாகவுமே தெரிகிறது.

ஆனால் ’சிந்து பந்தி’ மிகவும் உறுதியாக இருந்த காலத்தில் சாவர்க்கர் இந்து சமுதாய முன்னேற்றத்திற்கும் மறுமலர்ச்சிக்கும் இதுவும் ஒரு தடை என்று குறிப்பிட்டுள்ளார். அவர் கடல் கடந்து போனவர் மட்டுமல்ல, கடலில் குதித்து தப்பி ஓடி அதை சர்வதேசப் பிரச்னையாக்கிய சாகசக்காரர். வர்ணாசிரமத்தைப்  பின்பற்றுகின்றார் என்று ஈ.வெ.ரா.வால் அவதூறு செய்யப்பட்ட வ.வே.சு ஐயரும் கடல் தாண்டிச் சென்றவர்தான்; சாவர்க்கரின் நண்பர் வேறு!

இந்தத் தடை இன்று ஒழிந்து போய், ஹிந்து நெறியும் ஹிந்து கருத்தியல் கற்பும் இந்து கலாச்சார கற்பும் அந்த போக பூமியைத் தூய்மைப்படுத்தி வருகின்றன. அதனால்தானோ என்னமோ பெருமாளும் முருகனும் அங்கு கோயில் கொண்டுள்ளார்கள் போலும். அங்குள்ள அர்ச்சகர்களுக்கு நல்ல சம்பளமும் இருப்பிட, வாகன வசதிகளும் செய்து தரப்படுவதால் அங்கும் விரைவில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக்க வேண்டும் என்ற கோஷம் எழலாம்.

வேதோக்த பந்தி:

இன்று செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.), அணு இயற்பியல், கணினித் துறை, நுண் உயிரியல் ஆகியவை அறிவுலகில் உச்சமாக கருதப்படுவதைப் போன்று அன்று அறிவுலகின்  உச்சமாக வேதங்கள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அது அனைத்து ஜாதியினருக்கும் பொதுவாக இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. காலப்போக்கில் அது ஒரு சில வகுப்பினருக்கு மட்டுமே உரியதாக மாறிப் போனது.

அந்தக் குறிப்பிட்ட (பிராமணர்) ஜாதியினரைத் தவிர மற்றவர்கள் வேதம் பயில்வது கிடக்கட்டும், வேத சப்தத்தைக் கூட காதால் கேட்கக் கூடாது என்ற தடையும் இருந்தது. மீறிக் கேட்பவர்கள் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்றும் சொல்லப்பட்டது. அப்படித்தான் எழுதப்பட்டிருக்கிறது என்று காஞ்சிப் பெரியவரும் (தெய்வத்தின் குரல் – நூலில்) சொல்லியிருக்கிறார். ஆனால், அப்படி எத்தனை பேர் காதில் ஈயம் ஊற்றப்பட்டுள்ளது என்றால் பதில் இல்லை.

‘ஏழு, எட்டு வயதில் காயத்ரி மந்திரத்தைக் கற்கத் தொடங்கும் பிராமணச் சிறுவனுக்கு அதை சரியாக உச்சரிக்கவும் தெரியாது, பொருளும் தெரியாது; தொடர்ந்து பயிற்சியினால் அவன் தேர்ச்சி அடைகிறான். அதேபோல தீண்டத் தகாத ஜாதியைச் சேர்ந்தவனுக்கும் முறையான பயிற்சி கொடுத்தால் அவனும் தேர்ச்சி அடைவான்’ என்கிறார் சாவர்க்கர்.

1929 –ஆம் ஆண்டு மே மாதம் நாசிக்கில் தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த பலருக்கு சாவர்க்கர் பூணூல் அணிவித்து காயத்ரி ஜபத்தைச் சொல்லிக் கொடுத்தார். ‘வேதத்தையும் அதுபோல சொல்லிக் கொடுத்தால் தாழ்த்தப்பட்டவனும் தேர்ச்சி அடைவான்’  என்று சாவர்க்கர் எழுதியுள்ளார். *4  இதற்கு மிகச் சரியான உதாரணம் டாக்டர் அம்பேத்கர். அவர் சமஸ்கிருதத்தையும் வேதத்தையும் கற்றுத் தேர்ந்தவர்.

இந்த வேதத் தீண்டாமை ஒரு வருணத்தினருக்கும் மற்றொரு வருணத்தினருக்கும் இடையே இருந்தது என்று மட்டுமே கருத முடியாது. பிராமண ஜாதிக்குள்ளேயும் அது இருந்துள்ளது. பிராமண சமுதாயத்தின் வெவ்வேறு உட்பிரிவுக்குள் வேதத் தீண்டாமை நிலவியது. அதுபற்றி சாவர்க்கரின் நெருங்கிய நண்பரும் நூலாசிரியருமான டாக்டர் கோட்போலே தன் சொந்த அனுபவத்தை எழுதியுள்ளார்:

1965-இல் எனது தாயார்  ‘மந்திர ஜகார்’ (அது ஒரு சமயச் சடங்கு. அதில் சிவபெருமானைப் புகழ்ந்து மந்திரங்களை ஓதுவார்கள்) நடத்த விரும்பினார். நான் எங்களுடைய குடும்பப் புரோகிதரை அணுகி அதற்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டேன். அவர் அதற்கு மேலும் சில புரோகிதர்களை அழைத்திருந்தார்.

குறிப்பிட்ட நாளில் அவர்கள் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தனர். வந்தவர்களில் இரண்டு பிராமணர்கள் கேட்டார்கள்,  ‘யார் யக்ஞமான்’? ’ (இந்த யக்ஞத்தைச் செய்பவர் யார்?) என்று கேட்டார்கள். செய்பவர் கோட்போலே என்று கேட்டவுடன் அவர்கள் எழுந்து விட்டார்கள்.

‘ ஓ…கோட்போலேக்கள் அபஸ்தம்பிகள். *5 நாங்கள் ரிக் வேதிகள். இங்கு அந்த மந்திரங்களை நாங்கள் ஓத மாட்டோம்’  என்று கூறி விட்டார்கள்; எங்கள் வீட்டை விட்டுச் சென்று விட்டார்கள்.

1965-இல் கூட பிராமணர்கள் தங்கள் பிரிவைச் சாராத வேறொரு பிரிவைச் சார்ந்த பிராமணர்களின் வீட்டில் வேத காரியங்களைச் செய்ய மறுத்தனர். அப்படியானால் நூறு ஆண்டுகளுக்கு முன்பு நிலைமை எப்படி இருந்திருக்கும்?  என்று அவர் தனது நூலில் எழுதியுள்ளார்.

சுத்தி பந்தி:

இன்று காஷ்மீரில் நிலவும் பிரச்னைகளுக்குக் காரணம் அங்குள்ள முஸ்லிம்களின் மனப்போக்கும் மக்கள்தொகையும் தான். அவர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இல்லை என்று பல தலைவர்கள் சொன்னாலும் அவர்கள் இந்தியாவுக்கு, ஹிந்துக்களுக்கு எதிராக இருக்கிறார்கள் என்பதே நடைமுறையில் வெளிப்படும் நிதர்சனம்.

அங்குள்ள முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் ஹிந்துவாக இருந்து வாள்முணையில் பலவந்தமாக முஸ்லிமாக மதம் மாற்றப்பட்டவர்கள். இதற்கு அவர்களின் பெயர்களுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் குடும்ப / ஜாதிப் பெயர்களே சாட்சி.

முன்பு ஆட்சி செய்த ஹிந்து மன்னர் ஒருவர் அவர்களுடன் பேசி அவர்களை மீண்டும் ஹிந்துக்களாக, தாய்மதம் திருப்ப முயற்சித்தார். மதம் மாறிய முஸ்லிம்களும் அதை ஏற்றுக்கொண்டனர். ஆனால் சில பிராமணர்கள், அவர்களை மீண்டும் ஹிந்துக்களாக ஏற்றுக் கொள்ள முடியாது. அதற்கு சாஸ்திரத்தில் இடமில்லை என்றனர்.

அதை மீறி மன்னர் அவர்களை ஹிந்துக்களாக்க முடிவெடுத்தால்  தற்கொலை செய்து கொள்வோம் என்று கூறியதுடன், கத்தியுடன் ஆற்றில் இறங்கி விட்டனர். எனவே மன்னர் தன் முயற்சியில் பின்வாங்கினார்.

இன்று பிராமணர்களின் பெயரைச் சொல்லி, நாள் குறித்து இஸ்லாமிய பயங்கரவாதிகள் கொல்லும் போது, அன்றைய நிகழ்வுக்கு வெஞ்சினத்துடன் காலம் பழி தீர்க்கிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் சொந்த  நாட்டிலேயே அவர்கள் அகதிகளாக இருக்கும் நிலை மனதைப் பிழிகிறது.

தங்கள் கடவுளே உண்மையானவர். தாங்கள் செல்லும் வழியே சரியானது. அந்த வழியில் மற்ற மதத்தினரைக் கொண்டுவரும் கடமை தங்களுக்கு உள்ளது – என்பதில் உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் உறுதியாக உள்ளனர். ஹிந்துக்கள் கிறிஸ்துவ, முஸ்லிம்களைப் பார்த்து, ஹிந்து மதத்திற்கு வாருங்கள் என்று அழைப்பதும் இல்லை. தானாக ஹிந்து மதத்தின் உயர்வைப் புரிந்து கொண்டு வந்தாலும் அப்படி வருபவர்களை யாரும் ஏற்பதில்லை. மதம் மாறிப்போனவர்கள் தாய்மதம் திரும்புவதையும் ஏற்பதில்லை. இது சரியானது அல்ல என்று சாவர்க்கர் எழுதியும் பேசியும் உள்ளார்.

ஆரிய சமாஜம் சுத்திச் சடங்குகளை உருவாக்கி, தாய்மதம் திரும்புவர்களை வரவேற்றது. விஎச்பி இன்று நாடு முழுவதும் தாய்மதம் திரும்புவதை தன் செயல் திட்டத்தில் ஒன்றாக வைத்துள்ளது.

ஒரு மேல்நாட்டு அறிஞர், கிறிஸ்தவர். ஹிந்து மதத்தின் மேன்மையைப் புரிந்துகொண்டு ஹிந்துவாக மாற விருப்பம் தெரிவித்தார் காஞ்சி பரமாச்சாரியாரிடம். காஞ்சி முனிவர், “நீ நல்ல கிறிஸ்தவனாக இருந்து கொண்டே மோட்சத்தை அடைய முடியும். எனவே நீ ஹிந்துவாக மாற வேண்டாம். நல்ல கிறிஸ்தவனாக வாழ்” அவரிடம் என்று சொன்னார். இதை அவரது சிஷ்ய கோடிகள் புளகாங்கிதத்துடன் சொல்கிறார்கள், எழுதுகிறார்கள்.

திருபுவனம் ராமலிங்கம்

ஆன்மிகத்தின் உயர்ந்த நிலையில் இருந்து காஞ்சி முனிவர் அதைச் சொல்லி இருக்கலாம். ஆனால், சாதாரண, சமூகச் சூழ்நிலைக்கு அது சற்றும் பொருந்தாதது என்பதே நடைமுறை யதார்த்தம்.

எங்களை மதமாற்றம் செய்யாதே என்று சொன்ன ஹிந்துவை (திருபுவனம் ராமலிங்கம்) முஸ்லிம் பயங்கரவாதிகள் கொன்ற சம்பவம் தமிழகத்தில் சமீப கால (2019 பிப்ரவரி 5) நிகழ்வு. ஹிந்துக்கள் ஆக்ரோஷமாக இருக்க வேண்டியது இல்லை; குறைந்தபட்சம் விழிப்போடு இருந்தாலே போதும் (Not aggressive but assertive Hindu) என்று ஆர்எஸ்எஸ் தலைவர்கள் ஒருவரான கி.சூரியநாராயண ராவ் அடிக்கடி கூறுவார்.

சாவர்க்கர் ஹிந்து சமுதாய வளர்ச்சிக்குத் தடையாக இருப்பன என்று கூறிய ஏழு விஷயங்களில் ஓரிரண்டு தற்போது பொருளிழந்து போயிருக்கலாம், மாறி இருக்கலாம். ஆனால் சில விஷயங்கள் / அம்சங்கள் இன்றும் தீவிரத்துடன் இருப்பதை மறுக்க முடியாது. இதற்கெல்லாம் தீர்வு என்று பலர் பலவற்றைச் சொன்னாலும், அடிப்படையான விஷயம் சுயமறதியில்  ஆழ்ந்திருக்கும் ஹிந்துக்கள் விழிப்படைவதும், உலக அரங்கில் தங்கள் நிலையை சரியாகப் புரிந்து கொள்வதுமேயாகும். அதுவே சுதந்திர வீர சாவர்க்கருக்கு நாம் செய்யும் சரியான போற்றுதலாகும்.

உதவிய நூல்கள்:

1. Veer Savarkar – the man who could have prevented partition- By Uday Mahurkar & Chiraya Pandit  (2021)

2. Rationalism of Veer Savarkar- By  Dr. V S Godbole (2004)

 அடிக்குறிப்பு விளக்கங்கள்:

*1. பந்த் - பந்தி - என்றால் தடை, நிறுத்தம் என்று பொருள்.

*2. கேரளத்திலும் தீயா சமூகத்தினரைப் பார்த்தாலே தீட்டு என்ற கொடிய வழக்கம் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தது.

*3. மகாத்மா காந்தியின் வாழ்விலும் கடல் கடந்து படிக்கச் செல்ல சமுதாயத் தடை இருந்தது குறித்து அவர்  ‘சத்தியசோதனை’ நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

காண்க: சாதிக் கட்டுப்பாடு

*4. தாழ்த்தப்பட்டவர்களுக்கு பூணூல் அணிவித்து காயத்ரி ஜபம் செய்வித்து அவர்களை உயர்த்த வேண்டும் என்று மகாகவி பாரதியும் கூறி இருக்கிறார். கனகலிங்கத்திற்கு அவரே பூணூல் அணிவித்திருக்கிறார்.

காண்க: ஜாதிக் குழப்பம்

*5 அபஸ்தம்பிகள் என்றால் சமயச் சடங்குகளுக்கு எதிரானவர்கள் என்று பொருள். ஆனால் இங்கு மந்திர ஜகார்  சமயச் சடங்கைச் செய்பவரே  அவர் (கோட்போலே) தான்.

$$$

Leave a comment