-மகாகவி பாரதி
அன்பே வழி என்ற கருத்துடைய ‘கதவு’ என்ற இக்கதை 1917-ஆம் ஆண்டு டிஸம்பர் 12-ஆம் தேதி வெளியான ‘சுதேசமித்திரன்’ வருஷ அனுபந்தத்தில், காளிதாசன் எழுதுவது என்ற குறிப்புடன் பிரசுரமாயிற்று. பின்னாளில், ‘கல்கி’ தீபாவளி மலரில் 1957-ஆம் ஆண்டு வெளியாயிற்று.

ஓர் ஊரில் ஒரு ராஜா இருந்தான். அவன் தன்னுடைய மந்திரியை நோக்கி, “மூலம் எது?” என்று கேட்டான். மந்திரி யோசனை பண்ணிப் பண்ணிப் பார்த்தான். ராஜா எதனுடைய மூலத்தை விசாரணை செய்கிறான் என்பதே மந்திரியின் புத்திக்குப் புலப்பட வில்லை. அந்த ராஜாவிடம் எதையும் திரும்ப விளக்கச் சொல்லிக் கேட்கக் கூடாது. அவனிடம் குறிப்பறிந்து வேலைசெய்ய வேண்டும்.
ஆதலால் மந்திரி சிறிது யோசனை செய்துவிட்டு, “நாளை வந்து சொல்லுகிறேன்” என்று சொல்லி விடைபெற்றுக்கொண்டு போனான்.
அன்று மந்திரி தன் வீட்டுக்கு வந்து, இரவில் போஜனம் செய் யாமல் உட்கார்ந்து யோசனை செய்துகொண்டிருந்தான். அவனுடைய பத்தினி ஒரு பொற்கிண்ணத்தில் பாலும் சோறும் பிசைந்து கொண்டு வந்தாள். இரண்டு கொய்யாப் பழங்களும் கொண்டு வந்தாள். அவன் அவற்றைக் கவனியாமலும் அவளை நிமிர்ந்து பாராமலும் யோசனை செய்து கொண்டிருந்தான்.
“என்ன யோசனை செய்கிறீர்??? என்று மந்திரியின் பத்தினி கேட்டாள்.
“ராஜா ஒரு கேள்வி கேட்டான். எனக்கு ஜவாப் தெரியவில்லை. திகைத்துக் கொண்டிருக்கிறேன்?” என்று மந்திரி சொன்னான்.
மந்திரியின் பத்தினி, “அது என்ன கேள்வி?” என்று வினவினாள்.
“மூலம் எது?” என்று மந்திரி ராஜாவின் வினாவைத் திருப்பிச் சொன்னான். மந்திரியின் மனைவி, “எதன் மூலம்?“?? ” என்று கேட்டாள். “அதை ராஜா குறிப்பிடவில்லை” என்று மந்திரி பெருமூச்சு விட்டான்.
அப்போது மந்திரியின் பத்தினி சொல்லுகிறாள்:- “உலகத்துக்கு மூலம் ஓம்” என்றாள். சரியென்று சொல்லி அவள் கொண்டுவந்த உணவை உண்டு மகிழ்வெய்தி அன்றிரவு நித்திரை செய்தெழுந்து மறுநாள் ராஜனிடத்தில் மந்திரி போய், “உலகத்துக்கு மூலம் ஓம்” என்று சொன்னான்.
“ஓம் என்பது யாது?” என்று ராஜா கேட்டான். அது பரப்ரஹ்ம ஸ்வரூபத்துக்குப் பெயர்” என்று மந்திரி சொன்னான்.
“சரி, ஓம் என்ற மந்திரத்தை முதலாவது கண்டுபிடித்தது யார்?” என்று ராஜா கேட்டான்.
மந்திரி, ‘இதென்னடா பயித்தியங் கொண்டவன் கேட்கிற கேள்விபோல் இருக்கிறதேயன்றி சமர்த்தனுடைய கேள்வியாகத் தோன்றவில்லை. ஓம் என்ற மந்திரத்தை ஆரம்பத்தில் எவன் கண்டு பிடித்தானோ! எவன் கண்டான்? இந்த மூடன் நம்மைக் கேட்கிறானே! நாம் எப்படி விடை சொல்லக்கூடும்?’ என்று மனஸில் சஞ்சலப்பட்டுவிட்டுக் கடைசியாக முன்போலவே, “நாளை வந்து சொல்லுகிறேன்” என்று சொல்லிவிட்டுப் போனான்.
வீட்டுக்கு வந்து தன் மனைவியிடம் ராஜனுடைய கேள்வியைச் சொல்லி, “இந்த ஸங்கடத்துக்கென்ன செய்யலாம்?” என்று கேட்டான். அப்போது மந்திரியின் மனைவி, “நம்முடைய நகரத்துக்கு மேற்கே இரண்டு காதம் தூரத்தில் ஒரு மலை இருக்கிறது, அந்த மலையில் ஒரு குகையில் மெளன ஸ்வாமிகள் என்பதாக ஒரு பரதேசி இருக்கிறார். அவரிடம் போய்க் கேட்டால் இதற்கு விடை எழுதிக் காட்டுவார்!” என்று சொன்னாள்.
மறுநாள் பொழுது விடிந்தவுடனே, மந்திரி பல்லக்கில் ஏறிக் கொண்டு மலைக்குப் போய் மேற்படி மெளன ஸ்வாமியைக்கண்டு, “ஓம் என்ற மந்திரத்தை ஆரம்பத்தில் யார் கண்டு பிடித்தது?” என்று கேட்டான்.
அவர் பின்வருமாறு கையினால் மணல்மேல் எழுதிக்காட்டினார்:
“இந்த மந்திரம் ஆதியில் பராசக்தியால் பாமசிவனுக்கு உபதேசம் செய்யப்பட்டது. அதன் குறிப்பே விநாயகர். செவி பெரிதாகவும் வாய்மூடியும் விநாயக முத்திரை தரித்து வீடேறி எவன் சக்தி உபாசனை செய்கிறானோ அவனுக்கு மூலாதாரத்தில் ஓம்கார மந்திரம் தெரியும்படி விநாயகர் கருணை செய்வார். இது அநாதியான மந்திரம். ஆனால் பூமண்டலத்தில் இது முதலாவது அகஸ்தியருடைய புத்திக்குப் பிரகாசப்பட்டது” இங்ஙனம் மெளனஸ்வாமி கையால் எழுதிக் காட்டினதை மந்திரி ஓர் ஏட்டில் எழுதுவித்துக் கொண்டு ராஜனிடம் கொடுத்தான்.
ராஜர, “அந்த மெளன ஸ்வாமியிருக்கும் இடத்துக்கு நான் நேரில் போய் அவரிடம் சில கேள்விகள் கேட்கவேண்டும்” என்று சொல்லி மந்திரியையும் கூட்டிக்கொண்டு, இருவருமாக மெளன ஸ்வாமி இருக்கும் குகைக்கு வந்து சேர்ந்தார்கள்.
ராஜா மெளன ஸ்வாமியிடம் கேட்டான், “மூலம் எது?” என்று. அப்போது மந்திரியை நோக்கி மெளன ஸ்வாமி கண்ணைக் காட்டினார்.
மந்திரி, “உலகத்துக்கு ஓம்காரமே வேர்?” என்றான்.
அதற்கு ராஜா, “உம்மைக் கேட்கவில்லை. நீர் சும்மா இரும், நான் மெளன ஸ்வாமியிடம் இன்னும் தெளிவான மறுமொழியை எதிர்பார்க்கிறேன்” என்றான்.
அப்போது மெளன ஸ்வாமி எழுதிக் காட்டுகிறார்? ‘ “ஓம்காரமே சிருஷ்டியின் காரணம், ஓம்காரமாவது காதல்- ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள தொடர்பு. அதனால் படைப்புண்டாகிறது. அந்தக் காதலை ஸாமான்ய மனுஷ்ய வியாபாரமாகக் கருதி நடப்போர் மனுஷ்யர்; மிருக வியாபாரமாகக் கருதி நடப்போர் மிருகங்கள்; தேவ வியாரபாரமாக -அதாவது ஆத்ம சம்பந்தமாக, அதாவது ஸதியாகிய பத்தினியை சக்தியாகவும் தானேயாகவும் எண்ணி நடப்போர் தேவர். இந்த அறிவே ஞானம். அன்பைத் தவிர வேறு ஞானம் கிடையாது, யேசு கிறிஸ்துநாதர் அன்பின் அவதாரமாக வந்தவர். அவர் சொன்னார், நானே கதவு என்று, அதாவது அன்புதான் கதவு. அதைத் திறந்தால் விடுதலையாகிற மாளிகைக்குள்ளே பிரவேசிக்கலாம்” என்று எழுதிக் காட்டினார்.
இன்பத்தை அடைய வேண்டுமானால் அதற்குத் தானாகிற கதவைத் திறந்து அன்பு வடிவமாக நிற்பதே உபாயம் என்பது இக்கதையின் தாத்பரீயம், சக்தி துணை.
$$$