தாஸியும் செட்டியும்

பாரதி எழுதிய பொழுதுபோக்குக் கதைகளில் இதுவும் ஒன்று. இந்தக் கதையில் நீதி போதனையும் சொல்லப்படுகின்றது. இந்தக் கதை  ‘சுதேச மித்திரன்’ காரியாலயமே நடத்தி வந்த  ‘கதாரத்னாகரம்’ மாதப் பத்திரிகையில் 1920 ஆம் ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் இதழ்களில் பிரசுரமானது.

பேய்க் கூட்டம்

இது ஒரு கற்பனைக் கதைதான். அதிலும் தன்னையே ஒரு கதாபாத்திரமாக்கிக் கொண்டு, மேலும் தன்னைத் தானே பகடி செய்துகொண்டு, நம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறார் மகாகவி பாரதி. இரு பகுதிகளாக வெளியான இக்கதை, இங்கு ஒரே பகுதியாக்கிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யப் புரட்சி, கந்த புராணம், திருவாசகம், ஆற்காடு நவாபின் சரண், அச்சமில்லை என்ற மகாகவியின் பாட்டு- இவை எல்லாம் சமத்காரமாக கதையினிடையே உலா வருவதைப் படியுங்கள், ரசியுங்கள்!

மிளகாய்ப் பழச் சாமியார்

மகாகவி பாரதியின் வேதபுர நிகழ்வுக் கதைகளில் இதும் ஒன்று. பெண் விடுதலையை நேசிக்கும் கவிஞரின் கருத்தை அறிந்த பெண் சாமியாரான மிளகாய்ப் பழச் சாமியார் அவரை நேரில் சந்தித்து ஒரு கோரிக்கையை வைக்கிறார். அது என்ன?

புதுப் பேய்

வேதபுரம் (புதுவை) தொடர்பான இன்னொரு கதை இது. எலிக்குஞ்சு செட்டியாரின் மகள் காந்திமதிக்கு பிடித்த பேய் இன்னதென்று கண்டறிய முடிகிறதா? படியுங்கள், மகாகவி பாரதியின் நையாண்டி புலப்படும்!

உஜ்ஜியினி

நூறாண்டுகளுக்கு முன்னமே, பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுத்த இதழாளர் மகாகவி பாரதி. ”பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி பேணி வளர்த்திடும் ஈசன்; மண்ணுக்குள்ளே சில மூடர் - நல்ல மாதர் அறிவைக் கெடுத்தார்...” என்று முரசுப் பாட்டில் முழங்கும் கவிஞர், பெண் விடுதலைக்காக பல கட்டுரைகளையும் கவிதைகளையும் எழுதி இருக்கிறார். ஆணும் பெண்ணும் நிகர் என்று அன்றே அறிவுறுத்திய மகாகவியின் கதை இது...

கலியுக கடோற்கசன்

சமகால நிகழ்வுகளை நமது முன்னை வரலாற்றுப் பெருமையுடனும், கனவுகள் மிக்க எதிர்காலத்துடனும் ஒப்பிட்டு, சமுதாயத்துக்கு வழிகாட்டுபவரே உண்மையான எழுத்தாளர். அந்த வகையில், மகாகவி பாரதி தமிழ் எழுத்தாளர்களுக்கெல்லாம் முன்மாதிரியாகத் திகழ்கிறார். இந்தக் கதையில் அதீத பலசாலி ஒருவனது திறன்களை பகடியாக வர்ணிக்கும் பாரதி, அவன் வைத்திருந்த சில காகிதங்களில் இருந்த குறிப்புகளை மிகவும் கேலியாக குறிப்பிடுகிறார். ‘ஹோம்ரூல்’ இயக்கத்தையும் இடையே போகிற போக்கில் நையாண்டி செய்கிறார். இறுதியாக “ஹிந்துக்களுடைய மூல பலமாகிய மந்திர சாஸ்திரத்தை இடைக்காலத்து மூடர் இவ்வளவு சீர்கெடுத்து வைத்திருப்பதையும், அதைத் தற்காலத்து மூடர்களிலே பலர் நம்புவதையும் நினைக்கும்போது எனக்கு மிகவும் வருத்தமுண்டாயிற்று” என்று அவர் குறிப்பிடுவதிலிருந்து, தேசநலன் கருதும் உன்னத எழுத்தாலனை அவரிடம் தரிசிக்கிறோம்.

வண்ணான் தொழில்

முந்தைய கதையில் குள்ளச்சாமியின் பிரதாபங்களைச் சொன்ன மகாகவி பாரதி, அதில் கூறியபடியே, இக்கதையிலும் அவரது பிரதாபத்தைத் தொடர்கிறார். முதுகின் மேலே கிழிந்த பழங் கந்தைகளையெல்லாம் ஒரு பெரிய அழுக்கு மூட்டை கட்டிச் சுமந்து கொண்டு வந்த குள்ளச்சாமியிடம், “ஏ சாமி, உனக்கென்ன பயித்தியமா? கந்தைகளைக் கட்டி ஏன் முதுகிலே சுமக்கிறாய்?” என்று கேட்கிறார் பாரதி. அதற்கு, “நீ நெஞ்சுக்குள்ளே சுமக்கிறாய், நான் முதுகின் மேலே சுமக்கிறேன்” என்று சொல்லி ஓடிப்போய் விட்டார். “உடனே நான் பொருள் தெரிந்து கொண்டேன்” என்கிறார் பாரதி....

சும்மா

பகவத்கீதையின் பத்தாவது அத்தியாயமான விபூதி யோகத்தில் பகவான் கிருஷ்ணர் கூறிய கருத்துகளையே, சுருக்கமாக இக்கதையில் குள்ளச்சாமி வாயிலாகக் குறிப்பிடுகிறார் மகாகவி பாரதி. ”ஹிந்துஸ்தானத்து மகா யோகிகளின் மகிமையால் இந்த தேசம் இன்னும் பிழைத்திருக்கிறது. இனி இந்த மண்ணுலகம் உள்ளவரை பிழைத்திருக்கவும் செய்யும்” என்று அதே குள்ளச்சாமி கூறுவதாக எதிர்கால தீர்க்கதரிசன வாக்கையும் மகாகவி இதில் பதிவு செய்கிறார்...

செய்கை

....தெய்வத்தை நம்பிச் செய்கைப் பொறுப்பில்லாமல் இருப்போரெல்லாம் சோம்பேறிகளென்று நினைப்பது குற்றம். உண்மை அப்படியில்லை. இயற்கையின் வலிமையிலே இயற்கையின் கொள்கைப்படி, இயற்கையே மனிதரின் செயல்களையெல்லாம் நடத்துகிறான். இது மறுக்க முடியாத சத்தியம். இதை உணர்ந்தவன் ஞானி: இந்த ஞானமுண்டாகித் தான் செய்யும் செய்கைகளுக்குத் தான் பொறுப்பில்லையென்றும் தெய்வமே பொறுப்பென்றும் தெரிந்துகொண்டு நடக்கும் பெரியோர் சோம்பலிலே முழுகிக் கிடப்பதில்லை. அவர்கள் அக்னியைப் போலே தொழில் செய்வார்கள். ....

கடற்கரையாண்டி

ஒரு நாள், நடுப்பகல் நேரத்திலே, நான் வேதபுரத்தில் கடற்கரை மணலின் மேல் அலைக்கு எதிரே போய் உட்கார்ந்திருந்தேன். காலை முதலாகவே வானத்தை மேகங்கள் மூடி மந்தாரமாக இருந்தபடியால் மணல் சுடவில்லை. உச்சிக்கு நேரே சூரியன். மேகப் படலத்துக்குட்பட்டு சந்தேகத்தால் மறைக்கப்பட்ட ஞானத்தைப்போல் ஒளி குன்றியிருந்தான். அலைகள் எதிரே மோதின. வடகீழ்த் திசையிலிருந்து சில்லென்ற குளிர்ந்த காற்று வீசிற்று.....

கடல்

வேதபுரம் கடற்கரையில் துயிலும் கவிக்கு ஒரு கனவு வருகிறது. அதிலும் ஒரு தூக்கம் தூங்குவதாகவே கனவு வருகிறது. அதையும் (கனவுக்குள்ளே ஒரு தூக்கம்) என்று அடைப்புக் குறிக்குள் சொல்லிச் செல்லும் நையாண்டி, மகாகவி பாரதியின் நகைச்சுவை உணர்வும், எந்தக் கதை சொன்னாலும் இறுதியில் இறை நம்பிக்கைக்குக் கொண்டுசெல்லும் லாவகமும், கடல் கதையில் அலை அலையாய் வருகின்றன...

புதிய கோணங்கி

மகாகவி ஒரு தீர்க்கதரிசி. அவர் தனது அசரீரி போன்ற கவிதையை மிக அழகான கதைக்குள் திணித்து இங்கே முரசறிவித்திருக்கிறார். அந்த முண்டாசுக் கோணங்கி வேறு யாருமல்ல, நமது மகாகவியே தான்.

பிழைத்தோம்

கதையில் தத்துவம் சொல்லலாம். புரியாத சித்தாந்தத்தையும் கூட எளிதாக விளக்கலாம். இதோ மகாகவியின் ஒரு கதை...

பிங்கள வருஷம்

‘சோதிடந்தனை இகழ்’ என்று புதிய ஆத்திசூடியில் பாடிய மகாகவி பாரதி, இக்கதையில், சோதிடர்களின் தரத்தை விமர்சிக்கிறார். எனினும், நமது பாரம்பரிய சோதிட ஞானத்தை பாரதி முற்றிலும் நிராகரிக்கவில்லை என்பது இக்கதையின் இறுதியில் ‘தெய்வ வாக்கு’ என்று அவர் (காளிதாசன்) சொல்வதிலிருந்து தெரிகிறது.

மழை

ஒரு நாளில் நாம் எத்தனையோ நிகழ்வுகளைக் காண்கிறோம். அவற்றில் நாமே பாத்திரமாகவும் பங்கேற்கிறோம். அவற்றை பிறர் ருசிக்கும் வகையில் எழுத்தில் பதிவு செய்யும் கலை அனைவர்க்கும் வாய்ப்பதில்லை. இதோ, மகாகவி பாரதி தனது அனுபவத்தை எத்துணை அற்புதமாக அரிய கவிதையைச் செருகி கதையாக்கி இருக்கிறார், பாருங்கள்! “மழை வர்ஷமாகச் சொரிந்தது. ராமராயரும், பிரமராய அய்யரும் மற்றோரும் குடல் தெறிக்க ஓடி வந்து சேர்ந்தார்கள். நானும் வேணு முதலியாரும் கொஞ்சம் நனைந்து போயிருந்தோம். மற்றவர்கள் ஊறுகாய் ஸ்திதியில் இருந்தார்கள்.” என்ற வர்ணனையை சற்றே கற்பனை செய்து பாருங்கள்.... அவரது மேதமை புரியும்!