-கவிஞர் பெ.சிதம்பரநாதன்
இன்றைய உலகம் போர்ச்சூழலால் அவதியுறுகிறது. இதற்குத் தீர்வு என்ன? உலகம் ஏங்குகிறது. இந்நிலையில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன உலகம் வாழ வழிகாட்டிய தமிழ்க் கவிஞனின் ஒரு கவிதையை நினைவுபடுத்துகிறார் கவிஞர் பெ.சிதம்பரநாதன் அவர்கள். இதோ அந்த இனிய கட்டுரை...

செங்கோல் ஏந்திப் பொருளாட்சி செய்த மன்னர்கள் உண்டு. அருளாட்சி புரிந்த ஞானிகள் உண்டு. ஆனால், செங்கோல் ஏந்தி அறிவாட்சி செய்து வரும் ஒரு மொழி உண்டு என்றால், அந்த மொழி தமிழ் மொழியைத் தவிர வேறு எந்த மொழியாகவும் இருக்க முடியாது.
ஏனெனில், இந்த மொழி இலக்கியங்களை உற்பத்தி செய்த காலம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள். இந்தக் காலநீளத்தில் உலகத்தில் பல மொழிகள் எழுத்தில்லாமல் இருந்துள்ளன; நாடோடி மொழிகளாக இருந்துள்ளன.
கிரேக்கம், லத்தீன் முதலிய பழம்பெரும் மொழிகளின் வரிசையில், தனக்கே உரிய தனித்தன்மையோடு தமிழ் மொழி விளங்கியது.
சில மொழிகள் பேச்சு மொழிகளாகக்கூட இல்லாமல் அவை நடந்த சுவடுகள் அழிந்து விட்டன. தமிழோ, அது பைய நாவசைத்து, கையசைத்து, கண்ணசைத்துத் தவழ்ந்த காலம் தொட்டு, இன்றைக்கும் அது பேச்சு மொழியாகத் தொடர்கிறது.
தமிழ் இலக்கியங்களில் சங்க இலக்கியம், தமிழுக்கான பொற்கோபுரம். ஜார்ஜ் ஹார்ட், ஆல்பர்ட் சுவைட்சர், அதற்கு முன்பு கால்டுவெல், ஜி.யூ. போப், பெஸ்கி பாதிரியார் என அந்நிய நாட்டார்கூட, தமிழ் மொழியின் நயத்தை, நளினத்தை, நாகரிகத்தை அனுபவித்து ஆனந்தப்பட்டிருக்கிறார்கள். தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்த்திருக்கிறார்கள்.
நமது சான்றோர்கள் மகளுக்குச் சீதனம் கொடுத்த தந்தையைப் போலத் தமிழுக்குத் தங்க ஆபரணங்களை அணிவித்திருக்கிறார்கள். அந்த இலக்கியங்களில் குறுந்தொகையோ, முத்தொள்ளாயிரமோ, அகநானூறோ, புறநானூறோ அல்லது காப்பியங்களோ, சிற்றிலக்கியங்களோ, சமய நூல்களோ எதை எடுத்தாலும் அவை எல்லாவற்றிலுமே தமிழனின் விசாலப் பார்வையைக் கண்டு வியக்க வேண்டியுள்ளது.
தமிழ்ப் புலவன் உலகத்தைப் போற்றாமல் பாட முடியாது. சமுதாயத்தைச் சிந்திக்காமல் எழுத முடியாது. தமிழை உலக மகா சபையின் அரியாசனத்தில் அமர்த்த வேண்டும் என்ற ஆசையால் பாடினானா? அல்லது அவனுடைய சிந்திக்கும் சுபாவமே அப்படித்தான் இருந்ததா? என எண்ண வேண்டியுள்ளது.
அந்தப் புலவனுடைய சொந்த மொழி தமிழ் என்பதால் மட்டுமல்ல, அந்த மொழியின் மூலமாக உலகத்தை நேசிக்கும் உன்னதச் சிந்தனைகளுக்கான ஊடகமாக தமிழை உபயோகித்திருக்கிறான். உயிர்களை நேசிக்கும் விசாலப்பார்வையை தாம் யாத்த கவிதைகள் மூலமாகக் கவின்பெரு வனப்பைக் காட்டியிருக்கிறான்.
மனிதர்களை மட்டுமல்ல, ஜீவராசிகள் அனைத்தையுமே தனது சிந்தை நிரம்பிய அன்பில் கரைத்துக் கொண்டுள்ளான். அதனால்தான் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற ஒரு பிரகடனம் வெளியானது. ‘ஆருயிர்களுக்கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்’ என்பதை வரம் போலக் கேட்டான்.
இந்தப் பின்னணியில், எத்தனையோ வைடூரியங்களுக்கு மத்தியில், எத்தனையோ மாணிக்கங்களுக்கு மத்தியில் ஒரு கோஹினூர் வைரம் பார்ப்பவர்களுக்கு அவரவர் கோணத்தில் ஒரு பரிமாணத்தைக் காட்டுவதைப் போல அழகூட்டுகிறது. அக்கவிதை – ஒப்பற்ற கவிதை – ஓங்கி உலகளந்த உன்னதக் கவிதை. அது என்னைக் கவர்ந்தது என்று சொல்வது எனது பேதைமை. அது எவரைத்தான் கவராது என்பதே அதன் பெருமை.
மூன்றாவது உலக யுத்தம் மூளக் கூடாது என்று உருவான ஐ.நா.சபையில் இந்தத் தமிழ்க்கவிதை, அச்சபை அங்கத்தினர்களான 195 நாடுகளின் மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட வேண்டிய கவிதையாகும்.
அக்கவிதையை அந்தந்த நாடு தனது மொழியில் படித்து ஜீரணித்துச் சிந்திக்கத் தலைப்படுமானால், அந்த நாட்டின் ஆரோக்கியம் உலக நாகரிகத்திற்கு உரிய தனது பங்களிப்பைத் தருவதாகவே அமையும்.
அந்தக் கவிதை ஏதோ நீதிபோதனை செய்வதைப் போலத் தொடங்கவில்லை. நம்மை ஆச்சரியப்படுத்தும் ஒரு வாசகத்தோடும், அதேபோல என்ன என்று நாமே கேட்கும் ஓர் எதிர்பார்ப்போடும் இனம் புரியாத ஏதோ ஒரு தூண்டுதலோடும் தொடங்குகிறது.
‘உண்டால் அம்ம இவ்வுலகம்’ அதுதான் அந்தக் கவிதையின் முதல் வரி. ‘உண்டால்’ என்கின்ற அந்த வாசகத்திற்குள் வசித்துக் கொண்டிருப்பவர்கள் யார்?
இந்திர லோகத்தில் கற்பக விருட்சமும், காமதேனுவும் உள்ளன. அவை மட்டுமல்ல, இந்த பூலோகத்தில் கிடைக்கும் அமிழ்தம் சுவையானதாக இருந்தாலும், இந்திரலோகத்து அந்த அமிழ்தத்திற்கு ஈடாகாது. அது அத்தனை சுவையுடையது. அத்தனை சுகம் தருவது! நம்மைச் சுத்திகரிக்கக்கூடிய மகத்தான மருத்துவக் குணங்களைக் கொண்டது அந்த அமிழ்தம்.
இந்த அமிழ்தத்தைத் தனியொருவன் தானே உண்டு சாகாமல் வாழலாம் என்று எண்ணுவானேயானால், அந்த அமிழ்தத்திற்கு எந்தச் சிறப்பும் இல்லை. அதை உண்டவனுக்கும் எந்த மரியாதையும் ஏற்படாது.
ஏனெனில், அதை உண்ணாதவர்கள் பலர் சாகவும், அதை உண்ட இவன் மட்டும் சாகாமல் இருப்பதும் என்றால், அதனால் இவனுக்கு என்ன மரியாதை வரும்?
இந்திரனுக்கே கிடைக்கக்கூடிய அந்த இனிய அமிழ்தத்தைத் தான் மட்டுமே உண்டு வாழ்வது என்பதை அவன் ஒப்புக்கொள்ள மாட்டான்; சகித்துக்கொள்ள மாட்டான். தான் உண்டதைப் போலவே தன்னுடைய சக மனிதர்களும் அந்த அமிழ்தத்தை உண்ணுவது சாத்தியப்படுமானால்தான் அதனை இவனும் உண்பான்.
அப்படியென்றால், அந்த அமிழ்தம் சமூகப் பொதுவுடைமையானால் அனைவருக்குமான அமிழ்தமாகும். தான் மட்டுமே உண்ணும் தனியுடைமையானால் அதைத் தவிர்க்கிற – அதைத் தாழ்வாகக் கருதுகிற சான்றோன் அவன்.
அத்தகைய சான்றோர்களை, இந்தப் பாட்டெழுதிய கவிஞன் ‘முனிவிலர்’ என்கிறான்.
அவர்கள் சினமற்றவர்கள். ‘சினம் எனும் சேர்ந்தாரைக் கொல்லி’ என்று வள்ளுவன் வரையறுத்துச் சொன்னதை, வாழ்க்கையில் பின்பற்றுபவர்கள். அதனால்தான் எதிர்மறையாக அவர்களை ‘முனிவிலர்’ எனக் குறிக்கப்படுகிறார். உடன்பாட்டு முறையில் உரைப்பதென்றால் ‘முனிவிலர்’ என்பது, உண்மையில் அவர் ஒரு சாந்தசொரூபி, சாத்வீகி என்பதுதான்.
அவர்கள் உறக்கமில்லாதவர்கள். அதற்கான காரணம், அவர்களுடைய மனம் துன்பப்படுபவர்களுக்காக ஓயாமல் சிந்திக்கிற மனம். பிறருக்காக சிலுவை சுமப்பவர்கள். அவர்களின் துயர விடுதலைக்குத் தங்களை ஒப்படைத்துக் கொள்பவர்கள். அத்தகைய சான்றோர்கள் உள்ள சமுதாயம், எத்தனை நாகரிகமுடையதாக இருக்கும் என்பதை நாம்தான் எண்ணிப் பார்க்க வேண்டும்.
அதுமட்டுமல்ல. அவர்கள் ‘நாமார்க்கும் குடியல்லோம்’ என்று எதற்கும் அஞ்சாமல் நீதிக்காக முதல் குரல் கொடுப்பவர்கள், தீயவற்றை எதிர்க்க முந்தி நிற்பவர்கள், சிறுமை கண்டு சீறும் போராளிகள்.
அவர்களுக்கிடையில் ஒரு பந்தயம். பந்தயத்தில் வெற்றி பெற்றால் புகழ். அதனைப் பெறுவதில் உள்ள சிக்கல்கள் பல.
புகழை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால், அந்தப் புகழைப் பெறுவதற்காக முள்கிரீடம் தரிக்க வேண்டும். கல்லைக் கட்டிக் கடலில் வீசப்படுவதைச் சகித்துக் கொள்ள வேண்டும். விஷக்கோப்பையை ஏந்திக் குடிக்க வேண்டும். சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும். கல்லால் அடிபட வேண்டும் என்றெல்லாம் இருக்குமானால், அந்தப் புகழை இத்தனை சித்ரவதைகளுக்குப் பிறகும் அடைவதற்கு எவர்தான் விரும்புவார்? விரும்பவே மாட்டார்.
ஆனால், இச்சான்றோர்களோ, தங்கள் இன்னுயிரையும் கொடுத்து அந்தப் புகழைத் தன்வயப் படுத்துவார்கள். காரணம், புகழின் பலன் அவர்களுக்குப் பூஜ்ஜியம். மற்றவர்களுக்கோ சுவர்க்கம்.
அதேசமயம் தீய வழியில் திருட்டு முறையில் ஏமாற்றிச் செயல்பட்டால், இந்த உலக உடைமைகள் அனைத்தையும் பெறலாம் என்று வருமாயின், அந்தப் பழிக்கு நாணமடைந்து இச்சான்றோர்கள், அப்படிக் கிடைக்கும் அந்த உலக உடைமைச் சுகங்களை ஏற்க உடன்படவே மாட்டார்கள்.
எப்பேர்ப்பட்ட மனத்திண்மையுள்ள, உண்மையுள்ள, மேன்மையுள்ள சான்றோர்களாக இவர்கள் இருக்க வேண்டும் என்பதை எண்ணிப் பாருங்கள்.
சபலங்களுக்குள் சிக்கிச் சஞ்சலப்படாத நெஞ்சுக்குரிய நேர்மையாளர்கள் அவர்கள். தராசு முள் போலச் சார்பற்று நிற்கும் சான்றாண்மை உடையவர்கள் அவர்கள்.
அவர்கள் ஓய்வு என்று ஒரு நாளும் இருப்பதில்லை. ஓயாமல் உழைப்பவர்கள். அத்தகைய அருளாளர்கள், நெறியாளர்கள், நேர்மையாளர்கள் எப்போதும் தனக்கென எதையும் செய்து கொள்ள விரும்பவே மாட்டார்கள்.
அன்பு நிறைந்த அவர்களின் எலும்பும், பிறருக்கானது. அத்தகைய எழுதா உயிலை விட்டுச் செல்பவர்கள் அவர்கள்.
மக்கள் மத்தியில் இவர்கள் மலிந்து காணப்பட மாட்டார்கள். ஆனாலும், இவர்கள்தான் இந்த ஜனசமூகத்தின் இயக்கத்திற்கு அச்சாணியாக இருப்பவர்கள். இந்த அச்சின் வலிமையால்தான் சமூகம் இயங்குகிறது. மொத்த மரத்தின் கனத்தையும் தாங்கும் மூல சக்தி இந்த ஆணி வேருக்குள்தான் உள்ளது.
மதுரையில் கணவனை இழந்து வீதியில் தலைவிரி கோலமாக, தனக்கு ஏற்பட்ட தாங்க முடியாத துயரத்தை ஆகாயமே அதிரும்படியாகக் குரல் எழுப்பிய கண்ணகி கேட்ட முதல் கேள்வியே, இந்த மாமதுரையில் “சான்றோரும் உண்டுகொல்?” என்பதுதான்.
சான்றோர் இல்லாத ஒரு சமுதாயம், நீதிமன்றம் இல்லாத ஒரு தேசத்தைப் போன்றதுதான். சட்டமில்லாத அந்தச் சமுதாயம் விலங்குகள் வாழும் வனத்திற்குச் சமமானதாகத்தான் இருக்குமே தவிர, நயத்தக்க நாகரிகமுள்ள சமுதாயமாக இருக்காது.
அதனால்தான் எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருந்தாலும், அவர்கள் சிகரங்களாக இருப்பவர்கள், கோபுரங்களாகத் தெரிபவர்கள், கொடிகளாகப் பறப்பவர்கள்.
செயற்கை வைரங்கள் அல்ல, கோஹினூர் வைரங்கள். அத்தகைய நல்லோர் இருப்பதால்தான் இந்த உலகம் உழல்கிறது. இந்தச் சமுதாயம் சுழல்கிறது.
இந்தக் கவிஞன் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதிய “உண்டால் அம்ம இவ்வுலகம்” என்ற இந்தப் புறநானூற்றுக் கவிதை, இன்றைக்கும், ஏன் என்றைக்குமே நமக்கு மட்டுமல்ல, இந்த நாநிலத்திற்கே அவசியமானதாக உள்ள கவிதை என்றால், அது மிகையல்ல.
ஏனெனில், நீரில் குளித்தால், தேக அழுக்கு நீங்கும். ஆனால், மன அழுக்கு நீங்க, அகம் தூய்மையாக வேண்டும்.
அதற்கு ‘உண்டால் அம்ம இவ்வுலகம்’ என்ற இதுபோன்ற கவிதைதான் உரிய மருந்தாகும்.
$$$