திருப்பரங்குன்றம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மார்ச் 18க்கு ஒத்திவைப்பு

-ஆசிரியர் குழு

“சட்டத்தின் முன் அனைவரும் சமம்; உயர் பதவிகளை வகிப்பதால் மட்டுமே யாரும் விதிவிலக்கு கோர முடியாது” என்று திருப்பரங்குன்றம் வழக்கில் நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இவ்வழக்கை வரும் மார்ச் 18ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று இந்து தமிழர் கட்சி தலைவர் ராம. ரவிகுமார், சென்னை உயர்நீதிமன்ற மதுரை  அமர்வில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீப திருவிழா அன்று தீபம் ஏற்ற வேண்டும் என கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி உத்தரவிட்டார்.

ஆனால், டிசம்பர் 3-ஆம் தேதி கார்த்திகை தீபத்திருந்தாள் தினத்தன்று, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று காரணம் கூறி திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்படவில்லை. இதையடுத்து மனுதாரர் மதுரை ஆட்சியர், காவல் ஆணையர் உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. மார்ச் 4-இல் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவின் முழு விபரம்  இது…

நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளதாவது:

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், திருப்பரங்குன்றம் கோயில் அறங்காவலர்கள் சத்யப்ரியா, மணிசெல்வன், பொம்மதேவன், சண்முகசுந்தரம், ராமையா ஆகியோரைச் சேர்க்கவும், காவல் ஆனையர் லோகநாதன், துணை ஆணையர் இனிகோ திவ்யன் ஆகியோர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யவும் நீதிமன்றம் நினைத்தது. 

அவர்களது வழக்கறிஞர்கள்,  “தீபத்தூண் அருகே ஐந்து பேரை பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும் என  மார்ச் 2இல் நீதிமன்றம் தெரிவித்த பரிந்துரையைப் பரிசீலித்து கவனமாக முடிவெடுக்க வேண்டும். அறநிலைய துறையுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்பட வேண்டும். அதற்கு அவகாசம் வேண்டும்” என்று கோரினர். 

இக்கோரிக்கையை ஏற்று, விசாரணையை இன்னும் இரு வாரங்களுக்கு ஒத்திவைக்கிறேன். அன்று அறங்காவலர்கள் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. காவல் துறை அதிகாரிகள் அடுத்த விசாரணைத் தேதியில் ஆஜராக வேண்டும். 

வழக்கு மார்ச் 18இல் விசாரணைக்கு எடுக்கப்படும். அன்று காவல் துறை அதிகாரிகள் தகுந்த பதில் அளிக்காவிட்டால், அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும். தினமும் விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகளை எச்சரிக்கிறேன். 

வழக்கு ஒத்திவைப்பு கலாசாரத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. இந்த மாத இறுதிக்குள் ஏதேனும் ஒரு வழியில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, வழக்கு முடிவுக்குக் கொண்டு வரப்படும். உயரதிகாரிகள் பொறுப்பற்ற கருத்துகளைத் தெரிவித்தால், அவர்களும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்படுவார்கள். 

சட்டத்தின் முன்பு அனைவரும் ஒன்றுதான். உயர் பதவிகளை வகிப்பதால் மட்டுமே யாரும் விதிவிலக்கு கோர முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.

$$$

Leave a comment