-திருநின்றவூர் ரவிகுமார்
நான் ஏன் அரசியலை விட்டு விலகினேன்? ஏனெனில் நம்முடைய அரசியல் உண்மையில் இந்தியத் தன்மையுடன் இல்லை. இது ஐரோப்பிய இறக்குமதி. ஐரோப்பிய வழிமுறைகளை போலி செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் இதுவும் தேவை. நீயும் நானும் ஐரோப்பிய பாணி அரசியலில் தான் ஈடுபட்டிருந்தோம். நாம் அதைச் செய்யாவிட்டால் தேசம் எழுந்திருந்திருக்காது; வளர்ச்சி வந்திருக்காது. இன்னமும் அது தேவைப்படுகிறது, குறிப்பாக வங்காளத்தில். ஆனால் நிழலை விட்டு விட்டு சாரத்தைப் பிடிப்பதற்கான நேரம் வந்துவிட்டது....

ஆ. வேத ரிஷியின் வேத விளக்கம்
ஆ. 5. பாண்டிச்சேரியும் நாகபுரியும்
- காண்க: அத்யாயம்- 9
உலகப் போர் 1918 நவம்பரில் முடிவுக்கு வந்தது. போரின் போது ஏற்படுத்தப்பட்ட வதை முகாம்கள், கொடூரமான சிறைகளை எதிர்த்து உலகம் எங்கும் குரல் எழும்பியது. அதே வேளையில் தொற்று நோயும் பரவியது. ஒருபுறம் அரசியல் அழுத்தம், மறுபுறம் சிறைக் கைதிகளைப் பாதுகாக்க மருத்துவச் செலவு என்று வல்லரசுகள் பிரச்சினையைச் சந்தித்தன. பிரிட்டிஷ் அரசு பர்மாவில் உள்ள மாண்டலே சிறை மற்றும் அந்தமான் சிறை கைதிகளை, ‘நீ எங்கேயோ எப்படியோ போய் உயிர் பிழைத்துக் கொள். சிறையில் செத்தால் எங்களுக்கு பிரச்சினை’ என்று அரசியல் மன்னிப்பளித்து விரட்டி விட்டது. அந்தமான் சிறையில் இருந்த அரவிந்தரின் தம்பி பரீந்தர் விடுவிக்கப்பட்டார். அவர் சில காலம் பாண்டிச்சேரியில் இருந்து விட்டு பிறகு வங்காளம் சென்றார்.
1919 ஏப்ரலில் ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்தது. நாடு முழுவதும் கொத்தளிப்பு ஏற்பட்டது. பர்மாவில் உள்ள மாண்டலே சிறையிலிருந்து விடுதலையாகி இந்தியா வந்த லோகமானிய திலகர் பெருமான் தனது சீடரான ஜோசப் பாப்திஸ்தா என்பவரை பாண்டிச்சேரிக்கு அனுப்பினார் . அரவிந்தர் மீண்டும் அரசியலுக்கு வர வேண்டும் என்பது லோகமான்ய பாலகங்காதர திலகர் பெருமானின் விருப்பம். ஆனால் அரவிந்தர் அதை ஏற்க மறுத்து நீண்ட கடிதம் எழுதினார். 1920 ஆகஸ்ட் 1 ஆம் தேதி திலகர் பெருமான் காலமானதை அடுத்து அவருக்கு புகழஞ்சலி செலுத்தும் விதமாக அரவிந்தர் ஒரு கட்டுரை எழுதினார். அது பிபின் சந்திர பால் நடத்திய ‘இன்டிபென்டன்ட்’ பத்திரிகையில் வெளியானது. திலகரின் கோரிக்கையை ஏற்க மறுத்தாலும் அவர் மீது அரவிந்தருக்கு இருந்த மதிப்பும் மரியாதையும் வெளிப்படுத்துவதாக அந்தக் கட்டுரை இருந்தது.
திலகர் பெருமான் காலமான பிறகு 1920 டிசம்பரில் நாகபுரியில் கூடவிருந்த காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை ஏற்று தேசத்திற்கு வழிகாட்டுமாறு அரவிந்தரை கேட்டுக்கொள்ள டாக்டர் பாலகிருஷ்ண சிவராம் மூஞ்சே பாண்டிச்சேரிக்கு வந்தார். டாக்டர் பி.எஸ். மூஞ்சே (12 டிசம்பர் 1872 – 3 மார்ச் 1848) சுதந்திரப் போராட்ட வீரர். இன்றைய சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிலாஸ்பூரில் பிறந்தவர். பம்பாய் மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றவர். கொழுத்த சம்பளத்தில் அரசு மருத்துவராக இருந்தார். அவருக்கு ராணுவத்தில் நாட்டம் அதிகம் இருந்தது. தென்னாப்பிரிக்காவில் நடந்த போயர் போரில் பிரிட்டிஷ் ராணுவத்தில் மருத்துவப் பிரிவில் அதிகாரியாக இணைந்து போரில் ஈடுபட்டார். இதே போரில் பின்னாளில் மகாத்மா காந்தி என்று போற்றப்பட்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியும் மருத்துவப் பிரிவில் சேவை செய்தார் என்பது இங்கு நினைவு கூரத்தக்கது. தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பிய பிறகு டாக்டர் மூஞ்சே நாகபுரியில் மருத்துவராக பணி தொடங்கினார்.
அப்போது கண் புரை அறுவை சிகிச்சையில் ஒரு புதுமையைச் செய்தார். அது தொடர்பாக ஆய்வறிக்கையை மருத்துவர் கழகத்திற்கு சமர்ப்பித்தார். அந்த அமைப்பு பிரிட்டிஷாரின் ஆதிக்கத்தில் இருந்ததால் அவரது ஆய்வுக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை. அவரும் அதைப் பெறுவதில் தொடர்ந்து வற்புறுத்தவில்லை. காரணம் அவரது சமூக, அரசியல் ஈடுபாடுகள். அவர் ஒரு சமஸ்கிருதப் புலவரும் கூட. அரவிந்தருக்கு நெருக்கமானவராக, அவருடன் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்.
அவர்தான் அரவிந்தரை மீண்டும் அரசியல் களத்திற்குக் கொண்டுவர பாண்டிச்சேரிக்கு நேரில் வந்து முயற்சித்தார். டாக்டர் மூஞ்சேவுடன் அவருக்கு உதவியாக ‘கேசவ ராவ் ஹெட்கே’ என்ற இளைஞர் பாண்டிச்சேரி வந்தார் . இவர்தான் பின்னாளில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் – ஆர்எஸ்எஸ் – என்ற தன்னார்வலர் இயக்கத்தைத் தொடங்கிய டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் (1 ஏப்ரல் 1889 – 21 ஜூன் 1940).
டாக்டர் ஹெட்கேவார் ஒரு பிறவி தேச பக்தர். சிறு வயதிலேயே பிளேக் நோய்க்கு பெற்றோரைப் பறி கொடுத்தார். அண்ணனின் அரவணைப்பில் வாழ்ந்தார். அண்ணனும் வசதியானவர் இல்லை . கேசவ்ராவ் ஹெட்கே நாகபுரியில் உள்ள நீல்சிட்டி பள்ளியில் படிக்கும் போது பிரிட்டிஷ் கல்வி அதிகாரியை எதிர்த்து மாணவர்களை ஒருங்கிணைத்து ‘வந்தே மாதரம்’ கோஷம் எழுப்பினர். அதற்காக பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர் டாக்டர் மூஞ்சே போன்றோரின் உதவியால் யவத்மாலில் இருந்த ராஷ்ட்ரீய வித்யாலயாவில் சேர்ந்து படித்தார். அப்போதிருந்தே டாக்டர் மூஞ்சே இவரை தன் மகன் போல அரவணைத்து வளர்த்தார். கேசவ்ராவும் அதை ஏற்றுக்கொண்டு அவருக்கு எல்லாவிதங்களிலும் தொண்டு செய்து வந்தார்.
1907 இல் சூரத் காங்கிரஸ் மாநாட்டில் தேசியவாதிகளுக்கும் மிதவாதிகளுக்கும் இடையே பிளவு தெளிவாக வெளிப்பட்டது. அரவிந்தர், டாக்டர் மூஞ்சே, அவரது சீடரான கேசவ்ராவ் ஹெட்கே போன்றோர் திலகர் பெருமானின் தலைமையை ஏற்று செயல்பட்டு வந்தனர். சூரத் காங்கிரஸ் மாநாட்டுத் தீர்மானத்தை விளக்கிப் பேச அரவிந்தர் நாகபுரிக்கு 1908 ஜனவரி 30 ஆம் தேதி வந்தார். மூஞ்சே மற்றும் அவரது நண்பர்களுடன் தங்கினார். அது வியாழக்கிழமை. அன்று மாலை வெங்கடேஷ் திரையரங்கில் அரவிந்தர் உரையாற்றினார். மறுநாள் வெள்ளிக்கிழமை காலை அதே இடத்தில் மீண்டும் உரையாற்றினர். அதன் பிறகு அவர் புறப்பட வேண்டும். ஆனால் மூஞ்சே , கேசவ ராவ் ஹெட்கே போன்றவர்களின் வற்புறுத்தலால் அரவிந்தர் அடுத்த நாள் இத்வாரி பஜார் என்ற இடத்தில் பேசினார். வியாழன் , வெள்ளி, சனி மூன்று நாட்களும் அவர் நாகபுரியில் இருந்தார். மூன்று நாட்களும் இளைஞர் கேசவ் ராவ் ஹெட்கே அவருடன் தங்கியிருந்து பணிவிடை செய்தார். உரைகளைக் கேட்டு தேசபக்தியில் மேலும் உறுதி கொண்டார் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ ?

அரவிந்தர் அலிப்பூர் சிறையில் ஓராண்டு காலம் இருந்தார். அப்போது அவரது வழக்கை நடத்த கேசவ்ராவ் ஹெட்கே வீடு வீடாகச் சென்று நிதி திரட்டினார். அரவிந்தரின் புரட்சிகரக் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட கேசவ்ராவை அவரது விருப்பப்படியே கல்கத்தா மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படிக்க டாக்டர் மூஞ்சே உதவினார். புரட்சிக் களமாக இருந்த வங்காளத்திற்கு படிக்க மட்டுமே போகவில்லை கேசவ் ராவ். 1910 லிருந்து 1916 வரை கல்கத்தாவில் தங்கிப் படித்தார். அதேசமயம், 1910 மார்ச் மாதமே அரவிந்தர் கல்கத்தாவை விட்டு வெளியேறி விட்டார். சந்திரநாகூர் வழியாக பாண்டிச்சேரிக்கு 1910 ஏப்ரல் வந்துவிட்டார் . அவரை கல்கத்தாவில் கேசவ்ராவ் சந்தித்தாரா என்று தெரியவில்லை.
1902 இல் அனுசீலன் சமிதியைத் தொடங்கியவர் பிரமதநாத் மிஸ்ரா என்ற தேச பக்தர். அரவிந்தர் அனுசீலன் சமிதியில் இணைந்து பணியாற்றினார். அதே சமிதியில் கேசவ் ராவும் இணைந்து புரட்சிகரச் செயல்பாடுகளில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு கோகன் என்ற ரகசிய பெயர் இருந்தது. இதை திரிலோகநாத் சக்கரவர்த்தி என்ற வங்கப் புரட்சியாளர் ;கொடும் சிறையில் முப்பது ஆண்டுகள்; என்ற தனது நூலில் பதிவு செய்துள்ளார்.
டாக்டர் மூஞ்சே பாண்டிச்சேரிக்கு வந்து அரவிந்தரைப் பார்த்த போது டாக்டர் ஹெட்கேவாரும் உடன் இருந்தார். அவர் அரவிந்தரையைச் சந்திப்பது இரண்டாவது முறை. இரண்டு முறையும் அரவிந்தருடன் என்ன கருத்துப் பரிமாற்றம் அல்லது விளக்கம் பெற்றார் என்பதைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. ஆனால் சந்திப்பின் தாக்கம் செயலில் வெளிப்பட்டதாகக் கருத முடிகிறது. அரவிந்தர் தாம் மீண்டும் அரசியல் களத்துக்கு வர முடியாது என்று டாக்டர் மூஞ்சேவிடம் சொல்லிவிட்டார். நாகபுரி திரும்பிய மூஞ்சே அங்கிருந்து மீண்டும் வற்புறுத்த, அரவிந்தர் மறுப்பு தெரிவித்து அவருக்கு அனுப்பிய நீண்ட கடிதம் ஆவணமாகியுள்ளது.
1907 இல் கேசவ் ராவ் ஹெட்கே நாகபுரியில் அரவிந்தருடன் மூன்று நாட்கள் உடன் இருந்தார். அதன் விளைவாக தீவிர தேசியவாதிகள் மீதான அவரது மதிப்பும் மரியாதையும் மேலும் உயர்ந்தது. அலிப்பூர் வெடிகுண்டு வழக்கில் அரவிந்தருக்காக அவர் நிதி திரட்டி அனுப்பினார். மருத்துவம் படிக்க கல்கத்தாவைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் அங்குள்ள தேசியவாதிகளின் செயல்பாடுகளில் பயிற்சி பெற முடிவெடுத்தார். அனுசீலன் சமிதியில் தீவிரமாகச் செயல்பட்டார். 1920 இல் பாண்டிச்சேரியில் அரவிந்தரைச் சந்தித்த பிறகு அவரது சுதந்திரப் போராட்டச் செயல்பாடுகள் அதிகரித்தன. அது மட்டுமன்றி 1925இல் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தைத் தொடங்கினார். சங்கத்தைத் தொடங்க அரவிந்தர் தான் வித்திட்டார் என்று எப்படி சொல்ல முடியும்? அனுமானத்துக்கு ஆதாரம் என்ன என்ற கேள்வியை எழுப்பலாம்.
அரவிந்தரின் தம்பி பரீந்தர் அலிப்பூர் வெடிகுண்டு வழக்கில் குற்றவாளியெனத் தீர்மானிக்கப்பட்டு அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்டார். பின்னர் தண்டனைக் காலம் முடிவடையும் முன்னமே விடுவிக்கப்பட்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். வெளியே வந்தவர் உடலாலும் உள்ளத்தாலும் தளர்ந்திருந்தார் . அண்ணன் அரவிந்தருடன் சில காலம் தங்கியிருந்தார் . உடல்நலம் தேறியவுடன் அவருடைய பழைய ஆன்மிகத் தேடல் மீண்டும் வந்தது. அவர்தான் அரவிந்தருக்கு யோக, தியான சாதனாவை சொல்லிக் கொடுத்த லீலீயை அறிமுகப்படுத்தியவர். மீண்டும் இங்கும் அங்குமாக பயணம் செய்த அவர் வங்காளத்தில் தங்களது பழைய நண்பரான மோதிலாலைப் பார்த்தார்.
அவர் ஏற்கனவே சந்திர நாகூரில் அரவிந்தரை மறைத்து வைத்து பாண்டிச்சேரிக்கு அனுப்பியவர்; அரவிந்தர் பரீந்தருடன் தேசிய விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டவர். அரவிந்தர் யோக மார்க்கத்திற்கு திரும்பிய பிறகு மோதிலாலும் அதே பாதையைத் தேர்ந்தெடுத்தார் . அதற்காக வங்காளத்தில் ஒரு சங்கத்தை ஆரம்பித்தார். அதற்காக ஒரு பத்திரிகையை நடத்தினார்.

அவரது அமைப்பையும் அதன் செயல்பாடுகளையும் மோதிலாலின் நடத்தைகளின் ஏற்பட்டுள்ள ஆணவ போக்கையும் பார்த்த பரீந்தர் அவரைப் பற்றி புகார் கடிதத்தை அரவிந்தருக்கு அனுப்பினார். அத்துடன் தன்னை அரவிந்தர் சீடராக ஏற்றுக்கொண்டு ஆன்மிகப் பாதையில் வழி காட்ட வேண்டுமென்று கேட்டிருந்தார்.
அதற்கு அரவிந்தர் நீண்ட பதில் கடிதம் எழுதினார். அந்தக் கடிதம் டாக்டர் மூஞ்சேவும் டாக்டர் கேசவ்ராவ் ஹெட்கேவாரும் பாண்டிச்சேரி வந்ததற்கு ஓரிரு மாதங்கள் முன்பு எழுதப்பட்டது. அது வங்க மொழியில் எழுதப்பட்டிருந்தது. அரவிந்தர் வழக்கமாக ஆங்கிலத்தில்தான் எழுதுவார். ‘ஆர்யா’ பத்திரிகை தொடங்கி அவரது முக்கிய, இறுதி படைப்பான ‘சாவித்ரி’ வரை அவர் எழுதியது ஆங்கிலத்தில்தான். பரீந்தருக்கு எழுதிய கடிதம் மொழியால் மட்டுமன்றி, எழுதப்பட்டிருந்த விஷயத்தாலும் யாருக்கு எழுதப்பட்டது என்பதாலும் முக்கியத்துவம் பெறுகிறது.
அதில்…
“முதலாவதாக, உன் யோக சாதனாவிற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். ஆனால் முதலில் நீ முழுமையாக அவரிடத்தில் சரணடைய வேண்டும். அவர், அந்த தெய்வீக சக்தி தான் என்னையும் உன்னையும் வழிநடத்துபவர் என்பதை ஏற்று சரணடைய வேண்டும். லீலீ எனக்கு சொல்லிக் கொடுத்தது மற்றும் சிறையில் எனக்கு கிடைத்த திறப்புகளும் தெய்வீக வழிகாட்டுதல்களும் அனுபவங்களும் ஏராளம். என்றாலும் எனக்குள் சஞ்சலம் லேசாக இருந்தது. பாண்டிச்சேரிக்கு வந்த பிறகு அது முற்றிலும் அகன்று விட்டது. கடந்த பத்தாண்டுகளில் எனது யோக அனுபவம் பக்குவப்பட்டாலும் முழுமை அடைந்ததாக சொல்ல முடியவில்லை. சுருக்கமாக என்னுடைய யோக கொள்கையை சொல்கிறேன் கேள்.
என் யோகக் கொள்கை அடிப்படையில் ஒருங்கிணைப்பது. அறிவின் ஒற்றுமை, செயல்களின் ஒருங்கிணைவு , வளர்ச்சியில் ஒருங்கிணைவு, மனதை உயர்த்தி விஞ்ஞானம் எனப்படும் உயர்வான தளத்தில் உள்ள தெய்வீக சக்தியுடன் ஒருங்கிணைவது. அது மட்டுமே சரியான முழுமையை தரும். வழக்கமாக உள்ள யோக வழிகளில் மனம் மற்றும் அறிவு ஆன்மாவை உணர்ந்து கொண்டு அதில் திருப்தி அடைந்து நின்றுவிடும். மனத்தினால் அறியப்படும் எல்லாம் முழுமையற்றது. துண்டு துண்டாக சிதறியது. ஏனெனில் அதுதான் மனதின் இயல்பு. எனவே எல்லையற்றதும் முழுமையானதுமானதை மனதினால் அறிய முடியாது.
மனம் அதை சமாதி நிலையில் பிடிக்கும். பிறகு விட்டுவிடும். அதற்கு வேறு வழி இல்லை. இங்கும் அங்குமாக சிலர் அந்த விடுதலை நிலையை, சமாதி நிலையை, அடைந்திருக்கிறார்கள். ஆனால் அதனால் பயன் என்ன? தெய்வீக ஆன்மா எப்போதும் அங்கே இருக்கிறது. அது மனிதன் தன்னை விரும்பி ஏற்றுக் கொள்ள வேண்டுமென விழைகிறது. தனிமனித வாழ்விலும் கூட்டமாகவும் வாழ்க்கையில் தெய்வீகம் நிலை பெற வேண்டும். பழைய யோகங்கள் வாழ்க்கையை பொய் என்கின்றன. அல்லது இறைவனின் விளையாட்டு என்கின்றன. தெய்வீகத்தையும் வாழ்க்கையையும் ஒருங்கிணைப்பதில்லை . அதன் விளைவாக வாழ்க்கை சத்தற்றதாக உள்ளது. இந்தியா சரிந்து விட்டது.
மோத்திலாலின் அமைப்பைப் பற்றி கேட்டுள்ளாய் . அதன் முதல் படியை நான்தான் போட்டேன். என்னுடைய தெய்வீக வாழ்க்கை நூலை நளினிகாந்த் ‘தேவ ஜீவனம்’ என்ற பெயரில் வங்க மொழியில் மொழி பெயர்த்து வெளியிட்டார். தேவ ஜீவனத்தை விரும்புகின்ற சமூகம் தேவ சங்கம். மோதிலால் இதை சந்திரநாகூரில் ஒரு சிறிய வடிவில் ஆரம்பித்தார். அவரது பலவீனமான ஆணவத்தின் நிழல் அதன் மீது படிந்ததால் விரிவடைய வேண்டிய அது ஒரு குறுகிய சமயப் பிரிவு போல மாறிவிட்டது. இந்த நிலையில் சங்கம் எதற்கு என்று நீ கேட்கலாம். அதன் தேவையென்ன என்று வினவலாம்.. சொல்கிறேன்.
நமக்குள் தெய்வீகம் நிறையட்டும். தெய்வீகத்தில் நாம் ஒருங்கிணைவோம் என்கிறார்கள். அது உண்மைதான். ஆனால் உண்மையின் ஒரு பகுதி தான் அது. நம்முடைய விவகாரம் வடிவமற்ற ஆன்மாவுடன் மட்டுமன்று. வாழ்க்கையும் நமக்கு உள்ளது. வடிவமும் ஒழுங்கும் இல்லையென்றால் வாழ்க்கை சிறப்பாகாது. வடிவமற்றது உருவமும் ஒழுங்கும் கொண்டு தோன்றுவது மாயை ஆகாது. வடிவெடிப்பதற்கு ஒரு நேர்மறையான தேவை இருப்பதால்தான் அது உருவெடுத்துள்ளது. நாம் உலகியல் செயல்களை ஒதுக்கிவிட வேண்டியதில்லை. அரசியல், வர்த்தகம், தொழில், அமைப்பு , கவிதை, கலை, இலக்கியம் எல்லாம் இருக்கும். ஆனால் அவை எல்லாம் புதிய வடிவம் புதிய வாழ்க்கை பெறும்.
யோக சாதனாவுக்கு நீ தகுதி உள்ளவனா என்று கேட்டுள்ளாய். அதைச் சொல்ல நான் என்ன கடவுளா? காய்ச்சி அடித்து வடிக்கப்பட்ட இரும்பு போன்றவன் நான். யாரும் கடவுள் அல்ல. ஆனால் எல்லோருள்ளும் இறைவன் இருக்கிறான். அவனை வாழ்க்கையில் வெளிப்படுத்துவதே தெய்வீக வாழ்க்கையின் நோக்கம். இதை யாரும் செய்ய முடியும். சிலர் சிறிய அளவில், சிலர் பெரிய அளவில் வெளிப்படுத்தக் கூடியவர்கள் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். உன்னைப் பற்றி நீ சொன்னதை, உன் தகுதி பற்றிச் சொன்னதை நான் ஏற்கவில்லை. ஆனால் தகுதி மற்றும் நிலை எதுவாக இருந்தாலும் இறைவனின் சுண்டுவிரல் பட்டாலும் அது மனிதனிடம் , பெரிய அளவிலோ சிறிய அளவிலோ, ஆன்மா விழிப்புறும். அளவு இங்கு முக்கியமல்ல.
கஷ்டங்கள் ஏராளமாக வரலாம். காலம் அதிகமாகலாம். தெய்வீகத்தின் அளவு வேறுபடலாம். இவ்வளவு ஏன் சில நேரங்களில் அது தோன்றாமலும் போகலாம். உள்ளிருக்கும் இறைவன் சிரமங்களைப் பற்றியும் குறைபாடுகள் பற்றியும் கவலைப்பட மாட்டார். என் மனதிலும் இதயத்திலும் வாழ்விலும் உடம்பிலும் குறைபாடுகள் கொஞ்சம் நஞ்சமா இருந்தன? பட்ட கஷ்டங்கள் தான் கொஞ்சமா? எனக்கு நீண்ட காலம் ஆகவில்லையா? ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் கடவுள் என்னை சுத்தியல் கொண்டு அடித்து வடிக்கவில்லையா? நான் இறைநிலையை அடைந்தேனா இல்லையா என்று எனக்கு இன்றும் தெரியவில்லை. ஆனால் இறைவன் விருப்பம் எதுவோ நான் அதுவாக ஆவேன் . அது போதும். இது எல்லோருக்கும் பொருந்தும். நம்முடைய வலிமையினால் அல்ல இறைவனின் வல்லமையால் அந்த யோக வழி வெற்றி பெறும்.
நான் ஏன் அரசியலை விட்டு விலகினேன்? ஏனெனில் நம்முடைய அரசியல் உண்மையில் இந்தியத் தன்மையுடன் இல்லை. இது ஐரோப்பிய இறக்குமதி. ஐரோப்பிய வழிமுறைகளை போலி செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் இதுவும் தேவை. நீயும் நானும் ஐரோப்பிய பாணி அரசியலில் தான் ஈடுபட்டிருந்தோம். நாம் அதைச் செய்யாவிட்டால் தேசம் எழுந்திருந்திருக்காது; வளர்ச்சி வந்திருக்காது. இன்னமும் அது தேவைப்படுகிறது, குறிப்பாக வங்காளத்தில். ஆனால் நிழலை விட்டு விட்டு சாரத்தைப் பிடிப்பதற்கான நேரம் வந்துவிட்டது.
நாம் இந்தியாவின் உண்மையான ஆன்மாவை எழுப்ப வேண்டும். அதற்கிணங்க எல்லா செயல்களையும் செய்ய வேண்டும். கடந்த பத்தாண்டுகளாக என்னுடைய யோக சக்தியை அந்நிய அரசியல் கப்பலில் செலுத்தி வருகிறேன். அதற்கு சிறிது பலனும் கிடைத்துள்ளது. இன்னும் தேவையான அனைத்தையும் நான் செய்வேன். ஆனால் அந்தப் பணியை நான் வெளிப்படையாக மீண்டும் ஏற்றுக் கொண்டு இப்போதுள்ள அரசியல் தலைவர்களுடன் இணைந்து செயல்பட்டால், அது அந்த அந்நிய சக்திகளை, சட்டங்களை ஆதரிப்பதாக ஆகிவிடும். அது போலியான அரசியல் வாழ்க்கை.
இப்போது எல்லோரும், குறிப்பாக வங்காளிகள், உணர்வெழுச்சி கொண்டவர்களாக உள்ளார்கள். சுலபமான வழியைத் தேர்ந்தெடுக்கிறார்கள். சிந்தனைத் திறன் இல்லாமல் அறிவு வேண்டும் என்கிறார்கள். உழைக்காமல் பலனை எதிர்பார்க்கிறார்கள். சுலபமான விதிகளைப் பின்பற்றி ஆன்மிக உயர்நிலையை அடைய வேண்டுமென்கிறார்கள். இதெல்லாம் நீண்ட காலம் நிலைக்காது.
விரிவான மற்றும் உறுதியான ஒருங்கிணைப்பின் அடிப்படையில் தான் எனது யோக மார்க்கம் அமைக்கப்பட்டுள்ளது. முழுமையான, உறுதியான, அசைக்க முடியாத சக்தி தேவைப்படுகிறது. அறிவு சூரியன் பிரகாசமாக ஒளி வீச வேண்டும். அதைக் கொண்டு அளவற்ற அன்பு, ஆனந்தம், ஒருங்கிணைவு ஏற்படுத்தப்படும். எனக்கு ஆயிரக்கணக்கான சீடர்கள் தேவையில்லை. அற்ப ஆணவத்தை விடுத்து இறைவனின் கருவியாக இருக்கக்கூடிய முழுமையான மனிதர்கள் நூறு பேர் இருந்தால் போதும்.
வழக்கமான குரு-சீடன் என்ற விஷயத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் குருவாக வேண்டும் என்றும் விரும்பவில்லை. என்னுடைய தொடர்பினால் சிலருக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். அவர்களால் மற்ற சிலருக்கு. அவர்களுள் தூங்கிக் கொண்டிருக்கும் தெய்வீகம் விழிப்புற வேண்டும். தன்னை உணர வேண்டும் . அப்படி தன்னை உணர்ந்து விழிப்புற்ற மனிதர்களால் இந்த தேசம் உயர்வடையும்”
-என்று அந்தக் கடிதத்தில் எழுதியுள்ளார்.
மேற்கண்டது அரவிந்தரின் நீண்ட கடிதத்தின் சாரம். இதை இன்னும் சுருக்கமாகச் சொன்னால் , தன்னை அர்ப்பணிப்பது (சரணாகதி), இணைப்பு, அமைப்பு, லட்சியத்திற்காக கஷ்டங்களை ஏற்றுக் கொள்வது, ஐரோப்பிய வழியைப் பின்பற்றாமல் இந்திய வழியைக் கண்டடைந்தல், உணர்வின் அடிப்படையில் இல்லாமல் அறிவின் துணையுடன் பணிபுரிதல் என்பன இந்த கடிதத்தில் உள்ளன. இது அரவிந்தரின் கருத்து. இதை உள்வாங்கிக் கொண்டு அதற்கான வழிமுறையாக ஆர்எஸ்எஸ் ஸின் லட்சியத்தை, செயல் முறையை வடிவமைத்தார் டாக்டர் கேசவ்ராவ் ஹெட்கேவார் என்றால் அது மிகையல்ல.
தொடர்கிறது…
$$$
One thought on “புதுவையில் பூத்த யோக மலர்- 10”