சமூகத்தை எதிர்கொள்ளுதல்

-கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன்

சமூகத்தை எதிர்கொள்வது எப்படி என்று யாரும் நமக்கு கற்றுத் தருவதில்லை. அப்படி சரியாகக் கற்றுக் கொள்ளவும் இயலாது. நாமே கற்றுக் கற்றுத் தெளிய வேண்டிய பாடம் இது. கடைசிவரையில் கற்றுக்கொண்டே இருக்க வேண்டிய பாடமும் கூட. கோட்பாடுகள் வழியே, கொள்கைகள் வழியே, அரசியல் சார்புநிலைகளின் வழியே இதன் பாதை துலங்குவதில்லை. வாழ்வதன் மூலமாக மட்டுமே இதன் புகைமூட்டங்கள் அகலும்.

இளைஞர்கள் பலர் சமூகத்தை எதிர்கொள்வதில் ஏற்படுகிற இடர்பாடுகளை தாங்கள் நம்பும் கோட்பாடுகளோடு தொடர்பு படுத்திவிடுகிறார்கள். அவர்களுக்கு கோட்பாடுகளின் உள்ளடக்கமும் விளங்குவதில்லை. சமூகத்தை எதிர்கொள்ளும் வாய்ப்பும் கிடைப்பதில்லை. கோட்பாடுகளில் சமூகத்தை எதிர்கொள்ளும் பிரச்சினையை ஒப்படைக்கும்போது சமூகத்தை ஒருபோதும் எதிர்கொள்ள இயலாத இடத்தை நோக்கி அவர்கள் விரைவாக முன்னகர்ந்து விடுகிறார்கள்.

தாங்கள் தேர்வு செய்யும் கோட்பாடுகளுக்குத் தக்கவாறு “நான் பெண்ணாக இருப்பதால் இந்த சமூகத்தை எதிர்கொள்ள முடியாமல் இருக்கிறேன். இந்த சாதியில் பிறந்ததால் என்னால் இந்த சமூகத்தை எதிர்கொள்ள முடியவில்லை” என்று ஏதோ ஒருவிதத்தில் பிரச்சினையை முடித்து தீர்மானகரமாக பைசல் செய்து விடுகிறார்கள். பின்னர் நேர்கிற அனைத்து இடர்பாடுகளுக்கும் அதனையே காரணமாகச் சொல்லும் பழக்கம் உருவாகிவிடுகிறது. அவர்களிடம் ஒரு காரியத்தைச் சொல்ல விரும்புவேனெனில்  “பெண்ணாகப் பிறந்த முதல் உருப்படியும் நீங்களில்லை. அது போலவே உங்கள் சாதியில் பிறந்த முதல் மனிதரும் நீங்களில்லை” என்று சொல்வேன்.

நேரடியாக கடற்கரைகளில் சென்று மீன் வாங்குகிற பழக்கம் எனக்கும் நண்பர்களுக்கும் உண்டு. பக்கத்துக் கடற்கரையான பள்ளம் கடற்கரையில் வள்ளம் காலையில் ஆறு மணிமுதல் ஏழரை வரையில் திரும்பும். பள்ளத்து மீன்கள் தனிச்சுவை உடையவை. அதேவகை மீனை நீங்கள் வேறு எங்கேனும் வாங்கினால், அதன் சுவை பள்ளத்தில் கிடைக்கிற மீன்களோடு ஒருபோதும் பொருந்துவதில்லை. காரணம் என்ன என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. சின்னமுட்டத்தில் மீன் வாங்க வேண்டுமெனில் மாலை ஏழுமணிக்கு மேல் செல்ல வேண்டும். ஆனால் அங்கும் இங்குமே சுவை மாறுபாடு அதிகம்.

பள்ளத்தில் இருந்து வரும் பெண் மீன்வியாபாரிகளில் பலரும் எனது நண்பர்கள். கண்டதும் “பிள்ளை வந்துற்றாம்பிள்ள” என்பார்கள். சிறுவயதிலிருந்தே என்னைக் கண்டு வரும் தாய்மார்களும் அவர்களில் உண்டு. அவர்கள் எவரானாலும் அவர்களிடம் மீன்வாங்கும்போது ஏதேனும் ஒரு செள்ளையேனும் கிள்ளி எனக்கு அதிகமாகத்தான் போடுவார்கள். ஒருபோதும் அவர்களிடம் பேரம் பேசுவதில்லை. சிலசமயம் இவ்வளவுதான் தருவேன் என்று சொல்லுவேன். அவ்வளவுதான். அவர்கள் ஏற்ற விலை சரியாகத்தானிருக்கும். தந்துவிடுவார்கள். பேரத்தில் ஈடுபடாதவன் தங்களுடைய சக்தி விரயத்தைப் பெருமளவிற்குக் குறைக்கிறான் என்பது அவர்களுக்குத் தெரியும்.

பேரம் பேசுபவர்களுக்கென்று அதிகமாகி சொல்லிக் குறைக்க ஒரு விலை உண்டு. பேரம் பேசாதவர்களை அவர்களுக்குத் தெரியும். அவர்களிடம் அவர்கள் சிலசமயம் நஷ்டப்படுவதும் கூட உண்டு. நீங்கள் கடற்கரையில் சென்று மீன்வாங்கிப் பார்த்தால்தான் உயிருள்ள மீன்களின் விலை என்ன என்பது விளங்கும். காலையில் அங்கே ஏலத்தில் மீன்களை வாங்கி பின்னர் ஊர் ஊராய்க் கொண்டு நடந்து விற்கிறாளே அந்த அம்மை. அவளுக்குத்தான் தெரியும் சமூகத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதும், சமூகம் என்றால் எவ்வாறான பல பக்கமும் திறக்கும் கத்தி அது என்பதும்.

கணவனை சிறிதிலேயே பறிகொடுத்த எனது பெரியம்மை ஒருத்தி கடைவைத்து நடத்தினாள். என்ன ஒரு கம்பீரம் இன்னமும். வார்த்தைகளை அவள் பிரயோகிப்பதே வினோத அழகில்தான் இருக்கும். வாள் வீசுவது போன்ற பதத்தோடு வரும் வார்த்தைகள். தராசு போல நிற்பவை அவை. ஆனால் வைத்திருக்கும் அன்பில் குறை தோன்றாது. ஏற இறங்கப் பார்ப்பதில் எவ்வளவோ அர்த்தங்களை சுட்டிக் காட்டிவிடுவாள். இரண்டு குழந்தைகளையும் மடியில் கட்டிக் கொண்டு அண்ணனையும் அக்காவையும் வளர்த்தும் போதிலிருந்து பார்த்த கம்பீரம். வாழ்க்கையை மேற்கொண்டு எதிர்த்து வாழும்போது மட்டுமே பல விஷயங்கள் கிடைக்கின்றன. கிடைத்தவை பின்னர் வழியை ஏற்படுத்துகின்றன. வாழாமல், எதிர்கொண்டு பாராமல் இருந்தால், வழி உருவாவதில்லை.

கோட்பாடுகளின் வழியே சமூகத்தை எதிர்கொள்ளப் பழகுதல் கற்பனைக் கப்பலில் கரையேறுதல் போல.

வாழ்வில் தன்போக்கில் நின்று நிமிரும் பெண்களிடமிருந்து கற்க எவ்வளவோ பாடங்கள் இருக்கின்றன. அவர்களெல்லாம் ஒல்லிக் குச்சுகள் இல்லை. அசைக்க முடியாதவர்கள். நமது பெண்ணியக் குடுக்கைகளுக்கு அவர்களெல்லாம் வெறும் ஒல்லிக் குச்சுகள் என்னும் எண்ணம் உண்டு. அவர்கள் அறிந்து வைத்திருக்கும் சமூகத்தின் சிறுநுனி கூட இவர்களுக்கு விளங்காது. ஒரு நாலுமுக்குச் சாலையில் ஒரு சிறிய பெட்டிக்கடையாக இருந்தாலும் கூட பரவாயில்லை. ஒரு பெண் அங்கு நின்று நிலைத்து விட்டாளெனில், அவள்தான் அந்த சுற்றுவட்டாரத்திற்கு சாமி. அது சாமானிய காரியம் இல்லை. அவள் சொல்லில் ஊர் அதிரும். அவளுக்கு இங்கே நிலைப்பது எப்படியென்று தெரியும்.

சமூகத்தை எதிர்கொள்ளுதல் என்பது பெண்களுக்கு மட்டுமே உரிய பிரத்யேகமான பிரச்சினையும் இல்லை. அது அனைவருக்கும் உரியது. குழந்தைப் பருவத்தில் இருந்தே அது அனைவரிடமும் தொடங்கிவிடுகிறது. தேநீர்க்கடைகள் முதற்கொண்டு மால்கள் வரையில். பள்ளியில் தொடங்கி கல்லூரிகள் என வாழ்க்கைப்பாதை முழுவதிலும் அதன் சீரடி இருக்கும். சமூகத்தை எதிர்க்கப் பழகுதலில் இருந்து அந்த பெரிய வித்தை கைகூடாது. எதிர்ப்பும் சமரசமும் இணக்கமும் தற்காப்பும் உயிருணர்ச்சியும் கலந்து முயங்கும் ரசம் அது. இவை அனைத்தும் சரிவிகிதத்தில் கலந்தால்தான் வாழ்க்கையை மோதுவது என்றால் என்ன என்பதே விளங்கும். முரட்டுத்தனமாக அகந்தை கொண்டு மட்டுமே மோதுவதால் வாழ்வு வசமாகாது.

எல்லாவிதமான இடர்பாடுகளுக்கும் மத்தியில் வாழ்ந்து விடுவதே ஸ்தாபிப்பது. நீங்கள் அத்தனை இடர்பாடுகளுக்கும் மத்தியில் வாழ்ந்துவிட்டால், நீங்கள் வாழ்ந்ததன் தடத்தில் நீங்கள் வாழ்வை எதிர்கொண்டவிதமும், வாழ்வு உங்களை எதிர்கொண்ட விதமும் பாடங்களாகப் பதிந்திருக்கும். வாழ்க்கையின் மீது நீங்கள் விட்டுச் செல்லப் போகிற ஒரேயொரு தடயமும் இது மட்டும்தான். வாழ்க்கையின் சவால்களை ஏற்று வாழ்வைத் தொடங்கும்போது குறைகள் மட்டுமே தோன்றிக் கொண்டிராது. நிறைகளும் தெரியும். இனிமைகளும் பிடிபடும். இடர்பாடுகள் இன்று நேற்று தொடங்கியவை அல்ல. மனிதன் உருவான காலத்திலிருந்தே இடர்பாடுகள் பின்தொடர்கின்றன.

நீங்கள் வாழ்ந்த இடத்திலிருந்து இடம்பெயர்ந்து புதிய இடம் ஒன்றில் ஸ்தாபித்து வாழ்ந்து பாருங்கள். வாழ்வது என்பதே ஸ்தாபித்தல்தான். அதற்கு ஒரு அனாதை போல வாழ்ந்து பார்க்க வேண்டும். அப்பனின், பாட்டனின் எச்சத்தில் வாழ்வதெல்லாம் போதம் கெட்ட சவச்சோறு உண்பது. ருசி கெட்டது. கூட்டத்துடன் கூட்டமாக அல்ல, சுயமாக கூட்டத்துடன் ஓர்மை குன்றாது வாழ அப்போது விளங்கும். சமூகத்தை எதிர்கொள்ளுதல் அவ்வளவுதூரம் எளிமையில்லை. ஆனால் அது தருமே வாழ்வின் ரசம் நன்கு. வாழ்வை எதிர்கொள்ளுதலும் சமூகத்தை எதிர்கொள்ளுதலும் அதுவொரு வித்தை. கணந்தோறும் உயிர்ப்புடன் நம்மை நிலைநிறுத்திக் கொள்ளவேண்டிய வித்தை.

அனாதை என்பதை உணர்ந்து எதிர்கொண்டு பழகி தானே உருவாக்கும் தனித்த வாழ்வை வாழத் தெரிந்தவனே அருமையுணர்வான். அவன் அறிந்த பாடம் ஏடுகள் அறியாது.

$$$

Leave a comment