புதுவையில் பூத்த யோக மலர்- 5

-திருநின்றவூர் ரவிகுமார்

மகரிஷி அரவிந்தரின் 150 வது ஆண்டை முன்னிட்டு பிறப்பு முதல் பாண்டிச்சேரிக்கு வந்தடைந்தது வரை ‘பொருள் புதிது’ இணையதளத்தில் ஏற்கனவே தொடர் வெளிவந்தது. தற்போது, பாண்டிச்சேரி வந்த பிறகான அரவிந்தரின் வாழ்க்கை தொடராக உருப்பெறுகிறது. 'புதுவையில் பூத்த யோக மலர்' என்ற தலைப்பில் இத்தொடரை திரு. திருநின்றவூர் ரவிகுமார் எழுதுகிறார். இது அத்தியாயம்-5...

 அ. வேதபுரியில் வேதரிஷி

 அ-5. அவமானப்பட்ட ஆங்கில அரசு

கர்மயோகினி பத்திரிகையில்  ‘நாட்டு மக்களுக்கோர் செய்தி’ என்ற தலைப்பில் அரவிந்தர் எழுதிய கட்டுரையை முன்னிட்டு அவரை கைது செய்ய ஆங்கில அரசு முனைந்தது என்று ஏற்கனவே பார்த்தோம். அலுவலகத்தை சோதனை செய்து, அதனை அச்சிட்டு வெளியிடுபவரான மன்மோகன் கோஷ் என்பவரை கைது செய்தனர். மாவட்ட நீதிபதி அவரை குற்றவாளி என தீர்மானித்து ஆறு மாத சிறைத் தண்டனை விதித்தார். ஆனால் உயர்நீதிமன்றம் அவரை குற்றமற்றவர் என்று விடுதலை செய்தது.

கல்கத்தாவுக்குப் போயிருந்த அரவிந்தரின் நண்பரான நளினிகாந்த் குப்தா இந்த நல்ல செய்தியோடு பாண்டிச்சேரி வந்தார். அவர் வருவதற்கு சில நாட்கள் முன்பு அரவிந்தரின் மைத்துனர் (மனைவி மிருணாளினியின் ஒன்றுவிட்ட சகோதரர்) சௌரின் போஸ் பாண்டிச்சேரிக்கு வந்து அரவிந்தருடன் சேர்ந்து கொண்டார். எவ்வளவு நாட்கள் தான் சங்கர செட்டியாரின் விருந்தினராகத் தங்கி இருப்பது?  இப்போது மேலும் ஆட்கள் வந்து சேர்ந்து விட்டார்கள். எனவே அரவிந்தர் தனியாக ஒரு வாடகை வீட்டில் குடியேறினார்.

உயர்நீதிமன்றத் தீர்ப்பு வந்த அன்று சென்னையில் உள்ள    ‘தி ஹிந்து’ பத்திரிகைக்கு அரவிந்தர் எழுதிய கடிதத்தில்,  தாம் அரசியல் செயல்பாடுகளில் இருந்து விலகி விட்டதாகவும் தன்னுடைய யோக சாதனையை தொல்லையில்லாமல் தொடர்வதற்காக பாண்டிச்சேரியிலேயே தங்கி இருக்கப் போவதாகவும் எழுதி இருந்தார். வழக்கில் ஆங்கில அரசு தோற்றதால் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் அரசு கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அரவிந்தர் பிரிட்டிஷ் இந்தியா பகுதிக்குச் செல்ல தடை ஏதுமில்லை என்ற நிலை உருவாகிவிட்டது. ஆனாலும் அவர் பாண்டிச்சேரியிலேயே இருக்க முடிவெடுத்தார்.

karmayogin

1912-13 வாக்கில் பிரெஞ்சு அரசு தங்கள் பகுதியில் இருக்கும் அரசியல் புகலிடம் தேடி வந்துள்ள புரட்சியாளர்களை தங்களது இதர குடியேற்றப் பகுதிகளான அல்ஜீரியா மற்றும் இந்தோ சீனா பகுதிகளுக்கு அனுப்பி பிரிட்டிஷ் அரசிடம் இருந்து பாதுகாக்கலாம் என்று யோசித்தது. சுப்பிரமணிய பாரதியாரும் அவரது நண்பர்களும் எங்கு போகலாம் என்று ஆலோசித்துக் கொண்டிருந்தபோது, அரவிந்தர் தாம் பாண்டிச்சேரியை விட்டு வெளியேறப் போவதில்லையென உறுதியாகச் சொல்லிவிட்டார். பிறகு பிரெஞ்சு அரசும் அந்த எண்ணத்தைக் கைவிட்டு விட்டது. இப்படியாக, தற்காலிகமாக வந்தவர் நிரந்தரமாக பாண்டிச்சேரியிலேயே தங்கிவிட்டார்.

பிரெஞ்சு இந்தியா சட்டப்படி அவர்களது ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் அந்நியர் நீண்ட காலம் தங்க வேண்டுமென்றால், அவர்கள் எங்கிருந்து வந்தார்களோ அந்த நாட்டைச் சேர்ந்த உயரதிகாரி அவருக்கு நன்னடத்தைச் சான்று வழங்க வேண்டும். அல்லது பிரஞ்சு பிரமுகர்கள் ஐவர் அந்த அந்நியருக்கு நன்னடத்தைச் சான்று கொடுக்க வேண்டும். அரவிந்தருக்கு ஆங்கில அரசு நற்சான்று கொடுக்காது என்பதால் இரண்டாவது விஷயம் ஆலோசிக்கப்பட்டது. ராஜேந்திரன், சிர் நாயுடு, பியா, சங்கர செட்டியார், முருகேச செட்டியார் என்ற ஐவர் அரவிந்தருக்கு சான்று வழங்க முன்வந்தனர். அவர்களது துணிவும் பெருந்தன்மையும் பாராட்டத்தக்கது. அவர்கள் அளித்த நற்சான்றை ஏற்றுக் கொண்டு, பிரஞ்சு இந்திய அரசு அரவிந்தரை பாண்டிச்சேரியில் தொடர்ந்து தங்க அனுமதித்தது.

ஆனால் ஆங்கில அரசுக்கு அரவிந்தர் பிரஞ்சு ஆட்சிப் பகுதியில் இருப்பது பிடிக்கவில்லை. அவரை எப்படியாவது அங்கிருந்து கிளப்ப முயன்றது. முதலில் நந்தகோபால் என்ற உள்ளூர் ரவுடியைக் கொண்டு ஆள்கடத்தல் மூலமாக அரவிந்தரை பிரிட்டிஷ் இந்திய பகுதிக்குக் கடத்தி வர முயன்றனர். எதிர்பாராதவிதமாக அது தோல்வியடைந்தது மட்டுமின்றி, நந்தகோபாலே பாண்டிச்சேரியை விட்டு ஓடும்படியாகி விட்டது.

பிறகு மயூரேசன் என்பவன் மூலம் ஆங்கில காவல்துறை வேறொரு முயற்சியை மேற்கொண்டது. மயூரேசன் தேசியவாதிகளுடன் நெருக்கமாகி , அவர்களது கையேடுகள், கடிதங்கள் , திட்டங்கள் என சில ஆவணங்களை போலியாகத் தயாரித்தான்.  அத்துடன் காளி படம் வரைந்த தாளில் வங்கமொழியில் எதையோ எழுதி அதையும் தமிழ்க் கடிதங்களுடன் இணைத்து ஒரு டப்பாவில் போட்டு பாண்டிச்சேரியில் தங்கியிருந்த வ.வெ.சு.ஐயர் வீட்டுக் கிணற்றில் போட்டு விட்டான்.  “தமிழ் பேசும் தேசியவாதிகளும் வங்க மொழி பேசுபவர்களும் இணைந்து சதித் திட்டம் தீட்டி உள்ளனர்; அதற்கு ஆதாரம் இருக்கிறது. எனவே வ.வெ.சு ஐயர் மற்றும் அரவிந்தர் வீட்டை சோதனையிட வேண்டும்” என்று,  பிரெஞ்சு காவல் துறையிடம் புகார் அளித்தான்.

வ.வெ.சு. ஐயர் வீட்டு வேலைக்கார பெண் கிணற்றில் நீர் எடுக்கும் போது அந்த டப்பாவைப் பார்த்து, அதைக் கொண்டு வந்து ஐயரிடம் கொடுத்தாள் . ஐயர் அதை சீனிவாசச்சாரியா மற்றும் சுப்பிரமணிய பாரதியாரிடம் காட்டினார். உடனே  அனைவரும் சேர்ந்து அரவிந்தரைப் பார்த்தார்கள். அரவிந்தர் எல்லாவற்றையும் காவல்துறையிடம் காட்டி உண்மையைச் சொல்லி விடும்படி கூறினார். அவர்களும் அப்படியே செய்தனர். ஆனால் ஏற்கனவே மயூரேசனின் புகார் பதிவாகி இருந்தபடியால் விசாரணை செய்ய முடிவானது.

அரவிந்தர் வீட்டுக்கு சோதனையிட வந்த அதிகாரி அங்கு சில புத்தகங்கள் மட்டுமே இருப்பதைக் கண்டார். அரசு விரோத கையேடுகளோ சதித் திட்டம் தீட்டியதற்கான சான்றுகளோ அவருக்குக் கிடைக்கவில்லை. அங்கிருந்த புத்தகங்களில் சில கிரேக்க மற்றும் இலத்தீன் மொழியில் இருப்பதையும் பார்த்தார் .  “இவருக்கு லத்தீன் தெரிந்திருக்கிறது, கிரேக்க மொழி தெரிந்திருக்கிறது” என்று வியப்புடன் கூவினார். விசாரணை  ‘மரியாதை நிமித்தமான சந்திப்பாக’  மாறியது. தேசியவாதிகள் மயூரேசன் மீது கொடுத்திருந்த புகாரின் பேரில் அவன் மீது பிரெஞ்சு அரசு நடவடிக்கை எடுக்க முனைந்தது. அவன் கடலூருக்கு தப்பிச் சென்று ‘அரசியல் அகதி’யாக பிரிட்டிஷ் இந்தியாவில் அடைக்கலம் புகுந்தான்.

பிரிட்டிஷ் அரசு வேறொரு முயற்சியை மேற்கொண்டது. பிஜோய்க்கு ஒரு மைத்துனன் இருந்தான். அவன் பெயர் நாகேன் . அவனுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் பிஜோய் அரவிந்தரிடம் அனுமதி பெற்று அவனை கல்கத்தாவில் இருந்து பாண்டிச்சேரிக்கு வரவழைத்தான். அவனுடன் அவனது தோழன் பைரன் ராய் என்பவனும் வந்தான். அவன் நன்றாக சமைப்பான். எனவே அவனும் அரவிந்தரின் வீட்டில் தங்க அனுமதிக்கப்பட்டான்.

சில வாரங்கள் கடந்த பிறகு ஒருநாள் அவன் திடீரென்று மொட்டை அடித்துக் கொண்டான் . அதை பார்த்தது,  ‘இது நன்றாக இருக்கிறது’ என்று மோனியும் மொட்டை அடித்துக் கொண்டான். பைரன் அவனை  ‘மொட்டை அடிக்காதே’ என்று தடுத்தும் அதைச் செய்ததால் அவனிடம் கோபமாக சண்டை போட்டான். அரவிந்தர் முன்பு இது நடந்ததால் அவர், என்ன விஷயம் என்று கேட்டார். அழுது கொண்டே தான் ஒரு பிரிட்டிஷ் உளவாளி என்றான். நிரூபி என்று கேட்டதும் அவன் வீட்டை விட்டு வெளியே சென்றான். சிறிது நேரம் கழித்து நூறு ரூபாயுடன் திரும்பி வந்தான்.

தானொரு உளவாளி. ஆனால் இங்கு வந்த பின்பு இங்குள்ள சூழ்நிலையைப் பார்த்த பிறகு மனம் மாறிவிட்டது. தன்னை விடுவிக்கும்படி பிரிட்டிஷ் உளவுத்துறைக்குச் சொன்னதால் தனக்கு பதிலாக வேறு ஒருவரை அனுப்புவதாகவும் வருபவனுக்கு அடையாளம் தெரிய தன் தலையை மொட்டை அடித்துக் கொள்ளும்படி சொல்லப்பட்டதால் சிரைத்துக் கொண்டதாகவும் மோனியினால் அந்தத் திட்டம் பாழானது என்றும் உண்மையைச் சொல்லிவிட்டான். தான் சொன்னதை நிரூபிப்பதற்காக வெளியே சென்று பிரிட்டிஷ் உளவுத் துறையினரிடம் இருந்து பொய் சொல்லி பணம் பெற்று வந்ததையும் கூறி தன்னை மன்னிக்கும்படி அரவிந்தரிடம் வேண்டினான். இப்படி பிரிட்டிஷ் அரசின் முயற்சிகள் ஒவ்வொன்றாக தோல்வியில் முடிந்தன.

அதன் பிறகுதான் பிரிட்டிஷ் அரசு தனக்கு எதிரான தேசியவாதிகளை வெளியேற்றும்படி பிரெஞ்சு அரசுக்கு அழுத்தம் கொடுத்தது. அதனால் பிரெஞ்சு அரசு அவர்களை வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்யலாமா என்று யோசித்தது. அது பற்றி நாம் ஏற்கனவே பார்த்தோம். இப்படி பல்வேறு முயற்சிகளைச் செய்தும் பிரிட்டிஷ் அரசு தோல்வி அடைந்தது. பாண்டிச்சேரி அரவிந்தரின் நிரந்தர வசிப்பிடமாக மாறியது.

பல முயற்சிகள் தோல்வியில் முடிந்தாலும், பிரிட்டிஷ் அரசு அரவிந்தரை தன் எதிரியாகவே பார்த்தது. தொடர்ந்து அவரைக் கண்காணித்து வந்தது. 1937 வரை அவரைக் கண்காணித்தது;  அதன் பிறகே சற்று தளர்த்தியது. அதற்கு காரணம் 1937 இல் சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி ஏற்பட்டதேயாகும். இதை அரவிந்தரின் சீடரான டி. கோதண்டராமா ராவ்  ‘குருவின் காலடியில்’ என்ற நூலில் பதிவு செய்துள்ளார். அவர் சென்னை மாநில கல்லூரி மாணவராக இருந்த போது அரவிந்தரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டார். பாண்டிச்சேரிக்குச் சென்று அரவிந்தருடன் சில ஆண்டுகள் உடனிருந்தார். அவரிடம் யோகமும் தியானமும் பயின்றார்.

இவ்வாறு பிரிட்டிஷ் அரசின் பல்வேறு முயற்சிகள் தோல்வி அடைந்தன. பாண்டிச்சேரி அரவிந்தரின் நிரந்தர வசிப்பிடமாக மாறியது.

தொடர்கிறது…

$$$

Leave a comment