-வ.மு.முரளி
அமெரிக்க- இந்திய வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான அரசியல் ரீதியான விமர்சனங்களுக்கு பதில் அளிக்கிறது திரு. வ.மு.முரளியின் இக்கட்டுரை....

இருதரப்பு வர்த்தகம் தொடர்பான அமெரிக்க – இந்திய வர்த்தகக் கூட்டறிக்கை கடந்த பிப். 7ஆம் தேதி அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது. இதன்மூலமாக கடந்த 6 மாதங்களாக நிலவிவந்த அமெரிக்காவுடனான நிச்சயமற்ற வர்த்தக நிலை மாறி, பழையநிலைக்குத் திரும்பி இருக்கிறது. தவிர, இருதரப்பு வர்த்தகத்தை மேலும் அதிகரிக்கும் விதமாக இந்த கூட்டறிக்கையின் அம்சங்கள் உள்ளன.
எனினும், இந்தியாவிலுள்ள எதிர்க்கட்சிகள் இந்தக் கூட்டறிக்கையை வழக்கம்போல குறை கூறி வருகின்றன. வெளிநாட்டு வர்த்தகத்திற்காக, அமெரிக்காவின் மிரட்டலுக்காக சொந்தநாட்டின் நலனை இந்திய அரசு விட்டுக்கொடுத்து விட்டதாக அவை குற்றம் சாட்டுகின்றன. ஆனால், உண்மை நிலை என்ன?
அ. விவசாயிகள் பாதிக்கப்படுவார்களா?
அமெரிக்க – இந்திய கூட்டறிக்கையில் அமெரிக்க பால்பண்ணைப் பொருட்களுக்கு வரிவிதிப்புச் சலுகை அளிக்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. உண்மையில் இந்த ஒப்பந்தத்தில், பால்பண்ணைப் பொருட்களுக்கு பிரத்யேக விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. பால், பாலாடைக்கட்டி, கோழி, இறைச்சி ஆகியவற்றிற்கு வகைப்படுத்தப்பட்ட விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
அரிசி, கோதுமை, சர்க்கரை, மக்காசோளம், சோயாபீன்ஸ் போன்ற பெரும் விவசாயப் பொருட்களுக்கு வரிச்சலுகைப் பட்டியலிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே இந்திய விவசாயிகள் இந்த ஒப்பந்தத்தால் எவ்வகையிலும் பாதிக்கப்பட மாட்டார்கள்.
மரபணு மாற்றப்பட்ட (ஜி.எம்) தானியங்கள், உணவுப்பொருட்கள், ஆகியவற்றின் மீதான இறக்குமதி தடை நீடிக்கிறது; எனவே, இந்தியாவின் சுகாதார, சுற்றுச்சூழல் தர நிர்ணயங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை.
தரிசுநில விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில், சிறுதானியங்கள் (சோளம், கம்பு, தினை, கேழ்வரகு, ராஜ்கீரா), நிலக்கடலை உள்ளிட்ட எண்ணெய் வித்துகள், புகையிலை ஆகியவற்றிற்கு எந்த விலக்கும் அளிக்கப்படவில்லை.
ஆ. அமெரிக்க விளைபொருள்கள் குவியுமா?

கூட்டறிக்கை அளித்துள்ள சலுகைகளால் அமெரிக்க விளைபொருட்கள் இந்தியச் சந்தையில் குவியும் என்ற அச்சம் பரப்பப்படுகிறது. ஆனால், இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தில் ஏற்கப்பட்ட குறைந்தபட்ச இறக்குமதி விலை (எம்.ஐ.பி.) உள்ள வரை, அச்சப்படத் தேவையில்லை.
உதாரணமாக அமெரிக்க ஆப்பிள்கள் இந்தியாவில் குவியுமா என்று ஒரு மனக்கணக்கு போட்டுப் பார்ப்போம். அமெரிக்க ஆப்பிளின் விலை (ஒர் கிலோவுக்கு) ரூ. 80 + 25 % வரி = ரூ. 100. இதுவே இந்தியாவுக்கு வரும் ஆப்பிளின் இறக்குமதி விலையாக இருக்கும். ஆனால், உள்நாட்டில் விளையும் ஆப்பிளின் கொள்முதல் விலையுடன் (ரூ. 75) ஒப்பிட்டால் இது அதிகமாகவே இருக்கும். எனவே அமெரிக்க ஆப்பிள்களின் இறக்குமதிக் குவிப்பால் இந்திய ஆப்பிள்கள் தேங்கிவிடும் என்ற அச்சம் அனுபவரீதியாக சரியானதல்ல.
நீண்ட இழைப் பருத்தி மீதான தடை விலக்கப்பட்டிருப்பதை சரணாகதி என்று சிலர் வர்ணிக்கின்றனர். உண்மைநிலை இதற்கு நேர்மாறானது. உள்நாட்டில் நீண்ட இழைப் பருத்திக்கு பற்றாக்குறை நிலவி வருவதையும், அதனைப் பூர்த்தி செய்யும் வகையில் உள்நாட்டு விளைச்சல் இல்லை என்பதையும் உணர்ந்தால், இந்தத் தடை விலக்கம், தேவை அடிப்படையிலான வியூகம் என்பது புரியவரும்.
சர்க்கரை ஆலைகளிலும் எத்தனால் ஆலைகளிலும் மிஞ்சும் கழிவு உலர் தானியப் பிண்ணாக்கிற்கு (டி.டி.ஜி.எஸ்.) அளிக்கப்பட்டுள்ள அனுமதி வரையறைக்கு உள்பட்டது. இந்தியாவில் கால்நடைத் தீவனத்தில் நிலவும் பற்றாக்குறையைப் போக்க இந்த அனுமதி பயன்படும். எனினும் இதன் இறக்குமதிக்கு குறிப்பிட்ட எல்லை நிர்னயிக்கப்பட்டிருக்கிறது.
இ. சிறு, குறு தொழில்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?
இந்த இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தால் அமெரிக்கப் பொருட்கள் இந்தியாவில் குவியும், அதனால் சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் (எம்.எஸ்.எம்.இ.) பாதிப்படையும் என்ற பிரசாரமும் முரணானது. அமெரிக்கா விதித்த அபராத வரி விதிப்புடன் சேர்ந்து 50% ஆக இருந்த அமெரிக்க இறக்குமதி வரி, தற்போது பரஸ்பர இருதரப்பு வரிவிதிப்பில் 18% ஆகக் குறைந்திருக்கிறது. நமது போட்டி நாடுகளுடன் (சீனா – 35 %, வியட்நாம் – 20 %, பங்களாதேஷ்- 20 %) ஒப்பிடுகையில், இந்தியா சாதகமான இடத்தில் இருக்கிறது. எனவே எம்.எஸ்.எம்.இ. தொழில் துறையினருக்கு இது சாதகம் என்பதே உண்மை.
தொழிலாளர் உழைப்பினை அதிக அளவில் சார்ந்துள்ள எம்.எஸ்.எம்.இ. துறையினர் சார்ந்த பொருட்கள் மீதான இருதரப்பு வரி பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய ஜவுளி, தோல், காலணி, பொம்மை, ரத்தினங்கள், ஆபரணங்களின் உற்பத்தி சார்ந்த ஏற்றுமதியில் கூடுதல் லாபம் கிடைக்கும்,. குறிப்பாக, இதனால் சூரத், மும்பை, கொல்கத்தா போன்ற தொழில் நகரங்கள் பெரும் பயன் அடையும்.
விமான உதிபாகங்கள் மீதான வரி பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டிருப்பதும், இந்தியாவுக்கு சாதகமானது. போயிங், ஏர்பஸ் போன்ற அமெரிக்க விமான நிறுவனங்களுக்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் உதிரிபாகங்கள் மீதான வரிச்சுமை குறையும். எனவே, உயர் தொழில்நுட்பம் கொண்ட இந்த உற்பத்தித் தொழில்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
ஈ. வெளியுறவுக் கொள்கை அடகு வைக்கப்பட்டதா?
இதுவரை கடைபிடித்த வெளியுறவுக் கொள்கையை அடகு வைத்தே புதிய வர்த்தகக் கூட்டறிக்கை வெளியாகியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. ரஷ்யாவிடமிருந்து இதுவரை வாங்கி வந்த கச்சா எண்ணை இனி குறையும். இது நமது வெளியுறவுக் கொள்கையில் மூன்றாம் தரப்பின் தலையீடாக இல்லையா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. இந்த வர்த்தகக் கூட்டறிக்கையைப் பொருத்த வரை, வெளியுறவுக் கொள்கையைப் பற்றியதல்ல. அதனைத் தவிர்த்தே புதிய கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதேசமயம், இந்தியாவின் தேசியநலன், எரிபொருள் தேவை தொடர்பான வெளியுறவுக் கொள்கை தொடரும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
அரிய கனிமங்கள் இறக்குமதிக்கு இதுவரை இருந்த கட்டுப்பாடு இனி இருக்காது. அதிலும் அமெரிக்காவின் ‘பி.ஏ.சி. சிலிகா’ திட்டத்தில் இந்தியா இணைந்துள்ளதால், அரிய உலோகங்களின் விநியோகச் சங்கிலியில் தடையின்றிச் செயல்பட முடியும். இதற்காக பிற போட்டி நாடுகளைச் சார்ந்திருப்பதும் குறையும்.
இந்தியாவில் மடிக்கணினி தயாரிப்பில் (லேப்டாப்) உரிம முறைக்கு மாற்றாக அங்கீகார முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது. அத்துடன் புதிய ஒப்பந்தம் காரணமாக செயற்கை நுண்ணறிவு, செமி கண்டக்டர்கள் போன்ற உயர் தொழில்நுட்பம் கொண்ட அமெரிக்கப் பொருட்களின் எளிதான வரவு, லேப்டாப்களின் அதிகபட்ச விலையைக் குறைத்து, கட்டுக்குள் கொண்டுவரும். இது இந்தியாவின் தேசியப் பாதுகாப்பிற்கும் வலுச்சேர்க்கும்.
இந்த இருதரப்பு ஒப்பந்தம் இரு நாடுகளின் ஏற்றுமதி- இறக்குமதி வர்த்தகத்தை இரு நாடுகளும் மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பாகும். இதில் எந்த ஒரு நாடும் சரணடைந்துவிட்டதாக வர்ணிப்பது இயல்பான நிலையை பிரதிபலிக்காது. இந்திய அரசின் ‘வளர்ந்த பாரதம்-2047’ கனவில் அமெரிக்காவுடனான வர்த்தகம் 500 பில்லியன் டாலர்களை (இன்றைய மதிப்பில் ரூ. 45 லட்சம் கோடி) எட்ட வேண்டும் என்ற இலக்கும் உண்டு. அதற்கு இந்தக் கூட்டறிக்கை வழிவகுக்கும்.
உ. சாமானிய மக்களுக்கு இதனால் பயனில்லையா?
அமெரிக்க- இந்திய வர்த்தகக் கூட்டறிக்கை உடனுக்குடன் நடைமுறைக்கு வந்துவிட்டது. அதிகபட்ச வரிவிதிப்பு உடனுக்குடன் நீக்கப்பட்டு, பரஸ்பர 18 % வரி விதிப்பு அமலாகிவிட்டது. இதன் பலன்கள் பொருளாதாரத்தில் வெளிப்படத் தொடங்கும். அது சாமானிய மக்களுக்கும் பயனுள்ளதாகவே இருக்கும்.
இந்தக் கூட்டறிக்கையின்படி, உயிர் காக்கும் மருந்துப் பொருட்கள், மருத்துவ சாதனங்களின் விலை குறையும். குறிப்பாக, புற்றுநோய்க்கான நவீன மருந்துகள், இதய நோயாளிகளுக்கான பேஸ்மேக்கர்கள், ஹார்ட்- லங்க்ஸ் இயக்கக் கருவிகள் மீதான வரிக்குறைப்பால் அவற்றின் விலை பெருமளவில் குறையும். இது அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்போருக்கு வரப்பிரசாதமாகும்.
அமெரிக்க ஆல்கஹால் தயாரிப்புகளின் (ஒயின், ஸ்பிரிட்) இறக்குமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பது கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. ஆனால், குறைந்தபட்ச இறக்குமதி விலைக்கு (எம்.ஐ.பி.) குறைவாக அவற்றை இறக்குமதி செய்வது தடுக்கப்பட்டிருக்கிறது. எனவே உள்நாட்டு உற்பத்தியாளர்கள் கவலைப்படத் தேவையில்லை. நுகர்வோரின் தேர்வு, உள்நாட்டு மது உற்பத்தி என்ற இரு அம்சங்களையும் சமண் செய்வதாக எம்.ஐ.பி. ஏற்பாடு இருக்கும் என்று இந்திய அரசு விளக்கம் அளித்திருக்கிறது.
$$$