-ஆசிரியர் குழு
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் வழக்கில், உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் ஏளனம் பேசிய தமிழக அரசு, தற்போது நீதிமன்ற அவமதிப்பு வழக்கின்போது (பிப். 2), நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளது. இதுதொடர்பான சில பத்திரிகை செய்திகள் இங்கே…

திருப்பரங்குன்றம் தீபத்தூண் தொடர்பான அவமதிப்பு வழக்கில்
மன்னிப்பு கோரினார் மதுரை ஆட்சியர்
விசாரணையை மார்ச் 2-ம் தேதிக்கு தள்ளிவைத்தது உயர் நீதிமன்றம்
மதுரை: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர், துணை ஆணையர், கோயில் செயல் அலுவலர் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத் திருநாளான கடந்த டிச. 3-ஆம் தேதி தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என மதுரையைச் சேர்ந்த ராம.ரவிகுமார், அரசபாண்டி உள்ளிட்டோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தீபத்தூணிலும் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டார். ஆனால், அந்த உத்தரவை மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் நிறைவேற்றவில்லை. இதுதொடர்பான நீதிமன்ற அவமதிப்பு மனு மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த விவகாரத்தில் தொடர்ந்து நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டதாக மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீண்குமார், டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், மாநகர காவல் ஆணையர் லோகநாதன், துணை ஆணையர் இனிகோ திவ்யன், திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவலர் யக்ஞ நாராயணன் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளக் கோரி அரசபாண்டி தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. ‘சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது அகில இந்திய பணி விதிகள் (நடத்தை) 1968-ன் அடிப்படையில் துறைரீதியான மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறைச் செயலருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான அனைத்து மனுக்களும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு நேற்று (பிப். 2) விசாரணைக்கு வந்தன.
ஆட்சியர் பிரவீண்குமார், காவல் ஆணையர் லோகநாதன், துணை ஆணையர் இனிகோ திவ்யன், கோயில் செயல் அலுவலர் யக்ஞ நாராயணன் ஆகியோர் ஆஜராகினர். அவர்களது தரப்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
ஆட்சியர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘நீதிமன்ற உத்தரவை மீற வேண்டும் என்ற எண்ணத்தில் எதையும் செய்யவில்லை. சூழலைக் கருத்தில் கொண்டே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தவறு என்றால், நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன். நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைக்க வேண்டும்’ என்று கூறப்பட்டது.
மற்ற அதிகாரிகள் தரப்பிலும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரப்பட்டது. இதைத் தொடர்ந்து நடந்த வாதம்:
நீதிபதி: ‘‘திருப்பரங்குன்றம் மலை மேல் யாரையும் அனுமதிக்க முடியாது. அதனால் வரும் பிரச்சினைகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’’ என்று காவல் துறை தரப்பில் பேசியதாக கூறப்படுகிறதே? அப்படி சொன்னது யார்?
அரசுத் தரப்பு: எந்த அலுவலரும் அது போன்ற வார்த்தைகளை சொல்லத் துணிய மாட்டார். ஒருவேளை, அவ்வாறு கூறியிருந்தால், வெளிப்படையாக மன்னிப்பு கோரட்டும். ஆட்சியர், காவல் ஆணையர், துணை ஆணையர் ஆகியோர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகின்றனர். அதை ஏற்று அவமதிப்பு வழக்கை முடித்துவைக்க வேண்டும். நீதிபதி கோரும் அனைத்து பதில் மனுக்கள், பிரமாணப் பத்திரங்களையும் தாக்கல் செய்ய தயாராக இருக்கிறோம்.
நீதிபதி: மற்றவர்களைக் கூட மன்னிக்கலாம். ஆனால், நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆட்சியர் எப்படி 144 தடை உத்தரவு பிறப்பிக்கலாம்? அவ்வளவு தைரியமா?
அரசுத் தரப்பு: 10 ஆண்டு உழைத்து ஆட்சியராக வந்திருக்கும் இளைஞரின் வாழ்வை கருத்தில் கொள்ள வேண்டும். தவறுகள் நிகழ்ந்திருக்கலாம். ஆனால், நீதிமன்றத்தை அவமதிக்க வேண்டும் என்ற நோக்கில் எதையும் செய்யவில்லை. எனவே, ஆட்சியர் தரப்பில் கூடுதலாக பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும். இவ்வாறு வாதம் நடந்தது.
பிறகு, ஆட்சியர் மீதான அவமதிப்பு வழக்கை தனியாகவும், மற்ற அதிகாரிகள் மீதான அவமதிப்பு வழக்கை தனியாகவும் பிரித்து நீதிபதி உத்தரவிட்டார். ‘‘அடுத்த விசாரணைக்கு ஆட்சியர் மட்டும் ஆஜராக வேண்டும்’’ என்று உத்தரவிட்டு, வழக்கை மார்ச் 2-க்கு தள்ளிவைத்தார்.
- நன்றி: இந்து தமிழ் திசை (03.02.2026)
$$$
திருப்பரங்குன்றம் வழக்கு:
நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்ட மதுரை ஆட்சியர் பிரவீண் குமார்.
மதுரை திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மதுரை ஆட்சியர் பிரவீண் குமார் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரினார்.
மதுரை திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமான இடத்தை விட்டு, மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று இந்து தமிழர் கட்சித் தலைவர் ராம ரவிகுமார், சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத் திருவிழா அன்று தீபம் ஏற்ற வேண்டும் என கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி உத்தரவிட்டார்.
ஆனால், டிசம்பர் 3-ஆம் தேதி கார்த்திகை தீபத்திருநாள் அன்று, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறி திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்படவில்லை. இதையடுத்து மனுதாரர் மதுரை ஆட்சியர், காவல் ஆணையர் உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், சி.ஆர்.பி.எஃப். வீரர்களுடன் தீபம் ஏற்ற உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நீதிபதி மீதான விமர்சனங்களும், அரசியல் ரீதியான விவாதங்களும் எழுந்தன.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, காணொலி காட்சி வாயிலாக தமிழக தலைமை செயலாளர் முருகானந்தம், சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் ஆகியோர் ஆஜராகி விளக்கமளித்தனர்.
அப்போது, ‘நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததற்கு உரிய பதிலைச் சொல்லியே ஆக வேண்டும்’ என்று இருவரிடமும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் காட்டமாகக் கூறினார்.
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அமர்வு முன்பு இன்று (பிப்.2) இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இன்றைய விசாரணையின்போது, மதுரை ஆட்சியர் பிரவீண் குமார், காவல் ஆணையர் லோகநாதன், துணை ஆணையர் இனிகோ திவ்யன் மற்றும் திருப்பரங்குன்றம் கோவில் செயல் அலுவலர் நாராயணன் ஆகியோர் நேரில் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்தனர்.
இதில் மாவட்ட ஆட்சியர் பிரவீண் குமார் தாக்கல் செய்த பதில் மனுவில், “மதக்கலவரம் ஏற்படும் சூழல் இருந்ததாகத் தகவல் வந்ததால், விரும்பத்தகாத செயல்கள் எதுவும் நடக்கக் கூடாது என்பதற்காக அப்போதைய சூழலை கருதி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சூழல் கடினமாக இருந்தது. சுமார் 1,500 பேர் மலையேற முயன்றனர். அவர்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் பலனளிக்கவில்லை” என்று கூறியுள்ளார்.
மேலும், நீதிமன்ற உத்தரவை மீற வேண்டும் என்ற எண்ணத்தில் எதையும் செய்யவில்லை என்றும், இந்த விவகாரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருவதாகவும் தெரிவித்துள்ள மதுரை ஆட்சியர் பிரவீண் குமார், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மதுரை காவல் ஆணையர் தரப்பிலும் இதே விவரங்கள் அடங்கிய பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக நடைபெற்ற விசாரணையின்போது, சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டக் கூடாது என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மதுரை ஆட்சியர், காவல் ஆணையர் ஆகியோர் சட்டம்-ஒழுங்கு பிரச்னையை குறிப்பிட்டு பதில் மனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- நன்றி: தினமணி (03.02.2026)
$$$
திருப்பரங்குன்றம் விவகாரம்… அரசியலாக்கியதா திமுக?
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இந்த விவகாரத்தை அரசியலாக்கியதா திமுக? நீதிமன்ற அவமதிப்பை தவிர்க்காதது ஏன்? என்றும் அரசியல் விமர்சகர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக நீதிமன்ற உத்தரவை அவமதித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீண் குமார் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார். மதக்கலவரம் ஏற்படும் சூழல் இருந்ததாலேயே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் நோக்கம் இல்லை என்றும் அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
முன்னதாக, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவை அமல்படுத்தாமல், சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஏற்படும் என்ற காரணத்தைக் காட்டி, வழக்கமாக தீபம் ஏற்றப்படும் இடத்திலேயே தீபம் ஏற்றப்பட்டது. இதனால், மதுரை ஆட்சியர் பிரவீண்குமார், காவல் ஆணையர் லோகநாதன், கோயில் செயல் அலுவலர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் நேரில் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்தனர்.
அமல்படுத்த முடியாத சூழல்
அதில், “நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த முடியாத சூழல் அன்று ஏற்பட்டது. அதன் காரணமாகவே 144 தடை உத்தரவு போடப்பட்டது. நீதிமன்ற உத்தரவினை வேண்டும் என்றே மீற வேண்டும் என்று இதனை செய்யவில்லை. சட்டம் ஒழுங்கு, அமைதி, மத கலவரம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகவே 144 தடை உத்தரவு பிறப்பித்தோம். தவறாக இருந்தால் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீண்குமார் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தீபம் ஏற்றும் நாளில் போலீசாரின் பேரி கார்டுகளை எல்லாம் தூக்கி எறிந்ததாகவும், அடுத்தடுத்து வந்த பிரச்சினைகள், மதக் கலவரம் ஏற்படும் சூழல் இருந்ததாலேயே அவ்வாறு 144 தடை உத்தரவு பிறப்பிக்க இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேபோல, காவல் ஆணையர் லோகநாதன் தாக்கல் செய்த பதில் மனுவிலும் மதுரை மாவட்ட ஆட்சியர் கூறிய தகவல்களே இடம்பெற்றிருந்தன. ஆனால், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், “மதுரை மாநகர காவல்துறை ஆணையர், துணை ஆணையர், கோயில் செயல் அலுவலர் ஆகியோரை மன்னிக்கலாம். 144 தடை உத்தரவு போட்ட மதுரை மாவட்ட ஆட்சியரை எப்படி மன்னிக்க முடியும்? திருப்பரங்குன்றம் வழக்கில் தர்கா நிர்வாகம், மற்ற எதிர்மனுதாரர்கள் மேல்முறையீடு சென்றதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் கோயில் செயல் அலுவலர் மேல்முறையீடு சென்றதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், மதுரை மாநகர காவல்துறை ஆணையர், துணை ஆணையர், கோயில் செயல் அலுவலர் ஆஜராக தேவையில்லை என்றும், மதுரை மாவட்ட ஆட்சியர் மீண்டும் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டு, இந்த வழக்கு மார்ச் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அரசு நிச்சயமாக கடைபிடிக்க வேண்டும்
பொதுவாக நீதிமன்ற உத்தரவை அரசு நிச்சயமாக கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு இருக்கும் நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிமன்றத்தின் சார்பில் உத்தரவிட்ட உடனேயே மக்கள் அனைவரும் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அரசு சார்பில் அதற்கு எதிர்மாறாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இந்த வழக்கில்அரசு சார்பில் பாஜகவுக்கு எதிராக நிலைப்பாடே இதற்கு காரணம் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு அதனைச் செயல்படுத்த அரசு முயற்சி செய்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது. தமிழகத்தில் ஓரிரு மாதங்களில் தேர்தல் தேதி அறிவிக்க இருக்கும் போது இது போன்ற நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அரசுக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
- நன்றி: தமிழ் சமயம் (03.02.2026)
$$$