நீதிபதிக்கு எதிரான அவதூறு; தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கிடுக்கிப்பிடி

சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான அறிவிலிகளின் அவதூறுகளை வன்மையாகக் கண்டித்துள்ள உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்பதை சில தினங்களுக்குள் அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஜன. 28, 2026இல் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான செய்தி...

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்கக் கோரி, ராம. ரவிகுமார்  தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் குறிப்பிட்ட அந்த தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவு பிறப்பித்து இருந்தார் (டிச. 1, 2025).

ஆனால் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி, அந்த உத்தரவை அமல்படுத்தாமல் தமிழ்நாடு அரசு இருந்தது. பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளையும் அவரே விசாரித்தார். இதற்கிடையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வும், தனி நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதனின் உத்தரவை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியிருந்தது (ஜன. 6, 2026).

இதனிடையே தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை வளாகத்தில் திமுக ஆதரவு வழக்கறிஞர்கள் சிலர் போராட்டங்களை நடத்தினர். மேலும் நீதிபதிக்கு எதிரான புத்தகமும் கீழைக்காற்று பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. மாநில அரசு இதனைக் கண்டுகொள்ளவில்லை.

எனவே, பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி, உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். “சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிராக அவதூறு பரப்புவோர், போராட்டம் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அதில் வலியுறுத்தி இருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை கடந்த ஜன. 28ஆம் தேதி,  உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் அரவிந்த் குமார், பிரசன்னா பி.வரலே ஆகியோர் அடங்கிய அமர்வில்  விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மனுதாரர் மணி, “நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்புக்காக அவர் தொடர்ச்சியாக விமர்சிக்கப்படுகிறார். அவருக்கு எதிராக அவதூறு கருத்துக்கள் பரப்பப்படுவதோடு போராட்டங்களும் நடத்தப்படுகின்றன. இது தடுக்கப்பட வேண்டும்” என தனது வாதத்தை முன்வைத்தார்.

குறிப்பாக யூ-டியூப்பர்கள் என்ற பெயரில் அரசியல் சார்புடன் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் குறித்து அவதூறு கருத்துக்களைப் பரப்பி வருவதாகவும் அவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையையும் காவல்துறையோ தமிழக அரசோ எடுப்பதில்லை என்பதையும் சுட்டிக் காட்டினார்.

அப்போது பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், `தமிழ்நாடு அரசு சார்பிலான வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு வந்துள்ளனரா?’ என கேள்வி எழுப்பினர். மேலும், `நீதிபதிக்கு எதிராக நீதிமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்துவது, அவருக்கு எதிராக அவதூறு பரப்புவது தொடர்பாக மாநில அரசு ஏன் நடவடிக்கை எடுக்காமல் உள்ளது?’ என கேள்வி எழுப்பினர்.

`ஒரு குறிப்பிட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கினார் என்பதற்காக நீதிபதிக்கு எதிராக அவதூறு பரப்புவது, போராட்டம் நடத்துவது உள்ளிட்டவை தடுக்கப்பட வேண்டும்’ என்று கூறிய நீதிபதிகள், `இந்த விவகாரத்தில் ஏராளமான புகார்க் கடிதங்கள் கொடுக்கப்பட்டும், ஏன்  இன்னும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருக்கிறது?’ என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அப்போது பேசிய மனுதாரர் மணி, “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உத்தரவு பிறப்பித்த காரணத்தினால் மட்டுமே யூ-டியூபர்கள் அவதூறு கருத்துக்களை பரப்புகிறார்கள். அதனை தமிழக காவல்துறை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறது” என்று குற்றம் சாட்டினார்.

அப்போது மீண்டும் பேசிய நீதிபதிகள், “மனுதாரர் கூறிய விஷயங்கள் மிகவும் முக்கியமானவை. எனவே இந்த விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடுகளை அறிந்துகொள்ள விரும்புகிறோம்” என கூறியதோடு, “என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை உயர் அதிகாரிகளிடம் கேட்டு தெரிவியுங்கள்” என தமிழக அரசுத் தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு, சிறிது நேரத்திற்கு வழக்கை ஒத்தி வைத்திருந்தனர்.

பிற்பகலில் வழக்கு விசாரணைக்கு மீண்டும் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக அவதூறுக் கருத்து பரப்பியோர் மீது சென்னை பெருநகர காவல் ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார்.  போராட்டம் தொடர்பான விடியோக்களைத் தருமாறு சமூக வலைதளங்களுக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது” என்று மாநில அரசுத் தரப்பு பதில் அளித்தது.

அவர்களிடம், “நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீதும் அவதூறு கருத்துக்கள் பரப்பப்பட்டவர்கள் மீதும் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து தமிழ்நாட்டின் தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், காவல் துறை டிஜிபி ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டு  நீதிபதிகள் வழக்கை பிப். 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

உயர் நீதிமன்ற நீதிபதி திரு. ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களின் தீர்ப்பை தமிழக முதல்வரே நேரடியாக விமர்சித்ததையும், நீதிமன்றத் தீர்ப்புகளை ஏற்க மாநில அரசு மறுத்ததையும், அரசியல் சாசனச் சிக்கலாகவே சட்ட நிபுணர்கள் கருதுகின்றனர். இந்நிலையில், உச்ச நீதிமன்றமும் இவ்விஷயத்தில் சாட்டையைச் சுழற்றத் தொடங்கி இருப்பது, திமுக அரசுக்கு பெரும் சிக்கலை வரும் நாட்களில் ஏற்படுத்தும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

$$$

Leave a comment