-ராம் மாதவ்
அமெரிக்க அதிபர் டிரம்ப் வெனிசூலா அதிபரை சட்டவிரோதமாக கைது செய்தது இப்போது உலக தலைப்புச் செய்திகளில் மறைந்துவிட்டது. அமெரிக்காவின் ஆணவப் போக்கை உலகம் விரும்பாமல் இருந்தாலும் அமைதி காக்கிறது. அதன் காரணம் என்ன என்று அலசுகிறார், தில்லியில் உள்ள இந்தியா ஃபவுண்டேசனின் தலைவர் திரு. ராம் மாதவ்…

அமெரிக்க அதிரடிப் படையினரால் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டு தூக்கிச் செல்லப்பட்ட நிகழ்வுடன் இந்தப் புத்தாண்டு தொடங்கியது. டொனால்ட் டிரம்ப் ஆட்சியின் இந்த துணிச்சலான செயலால் உலகமெங்கும் திகைப்பும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி உருவாகியுள்ள ‘டான்ட்ரோ டாக்டரின்’_ என்ற புதிய சொல்லாடலை விமர்சகர்கள் போட்டியிட்டுக்கொண்டு தங்கள் வசதிக்கேற்ப விளக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆச்சரியப்படத்தக்க வகையில் (வெனிசுலா தலைநகரான) கராகஸ் கடந்த சில நாட்களாக அமைதியாக இருக்க, மதுரோவின் ஆதரவாளர்கள் மட்டும் ஜனவரி 4ஆம் தேதி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மதுரோவின் ஆட்சியில் எங்கும் பரவி இருந்த ஆயுதமேந்திய தனியார் தீவிரவாதப் படையான ‘கோலிக்டிவோ’ எதிர்க்கட்சி தலைவர்களின் வீடுகளையும், அமெரிக்க ஆதரவாளர்கள் என்று அவர்கள் சந்தேகப்படுபவர்களின் வீடுகளையும் தாக்கி வந்தார்கள்.
வெனிசூலாவில் டிரம்ப் ஆட்சியின் செயல் சர்வதேசச் சட்டங்களுக்கு எதிரானது. ஐ.நா. சபை , சர்வதேச நீதிமன்றம் போன்ற பல பரிமாணங்களைக் கொண்ட உலக அமைப்புகளின் கையறு நிலையை இது மீண்டும் ஒரு முறை வெளிப்படுத்தி உள்ளது.
அமெரிக்கப் படையினரின் செயல் திரைப்பட சாகசம் போல் இருந்தாலும், இது போன்ற ஒருதலைப்பட்சமான செயல்களில் அமெரிக்கா ஈடுபடுவது புதிதல்ல. 1983-இல் அமெரிக்க சிறப்பு அதிரடிப் படையினர் கிரேனேடாவில் இருந்த கம்யூனிச ஆட்சியை அகற்ற அந்த நாட்டில் அதிரடியாகப் புகுந்தார்கள். அதன் பிறகு ஆறாண்டுகள் கழித்து பனாமா நாட்டில் இருந்த இடதுசாரி சர்வாதிகாரியான மேனுவல் நோரிக்காவை இப்படித்தான் கைது செய்தார்கள். ஜார்ஜ் புஷ் 2003-இல் இராக் அதிபர் சதாம் உசேனையும் இப்படித்தான் ஐ.நா.வின் அனுமதி பெறாமல் பிடித்தார். அதேபோலத் தான் டிரம்ப்பும் கடந்த ஆண்டு சிரியா, ஈரானைத் தாக்கிய போது ஐ.நா.வின் சம்மதத்தைக் கேட்கவில்லை. 2011- இல் ஒசாமா பின் லேடனைப் பிடித்த போதும் பாகிஸ்தானின் வான்பரப்பில் நுழைய அதன் அனுமதியை அமெரிக்கா கோரவில்லை. இது போன்ற ஒவ்வொரு நிகழ்வின்போதும், உலகில் சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதும் பலர் மகிழ்ச்சி தெரிவிப்பதும் நடந்துள்ளது.
இந்தச் சம்பவத்திலும் கூட நியாயமான கோபம் தொலைக்காட்சிகளில் வெளிப்பட்டாலும், லத்தீன் அமெரிக்க மக்கள் சாலைகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவில்லை. பெருவாரியானவர்கள் அமைதியாகவே இருக்கிறார்கள். இயற்கை வளம் கொழிக்கும் இந்தப் பகுதியில் உருவாகி வரும் அதிகார சக்திகளின் போட்டியே மக்களின் இந்த கமுக்கமான எதிர்வினைக்குக் காரணம். வன்முறை, போதைப் பொருள்கள், பாதுகாப்பின்மை இவற்றிற்கு எதிரான பொதுமக்களின் மனநிலையே மிதவாத அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாகத் திரண்டு வருகிறது.
கடந்த எண்பது ஆண்டுகளில் லத்தீன் அமெரிக்கா பல்வேறு அலைகளைப் பார்த்து வருகிறது. 1959 இல் 32 வயதான புரட்சிகர மாணவர் தலைவரான பிடல் காஸ்ட்ரோ கியூபாவில் அதிகாரத்தைக் கைப்பற்றினார். அதன்மூலம் இடதுசாரி சர்வாதிகாரிகளின் அலை முதலில் கிளம்பியது. அதன் பிறகு பிரேசில், அர்ஜென்டினா, சிலி, உருகுவே, பொலிவியா, நிகரகுவா, கிரனெடா, எல்-சால்வடார், பனாமா, பெரு, கவுதிமாலா என்று பல நாடுகள் அவர்களின் (இடதுசாரி சர்வாதிகாரத்தின்) கீழ் வந்தன. இது அமெரிக்க எதிர்ப்பு மனநிலையை எழுப்பியது. லத்தீன் அமெரிக்கா தனது அலட்சியத்தால் பனிப்போர் போட்டியில் சிப்பாயாகி அடிபட்டது . பனிப்போர் பயத்தினால் 1980, 90 களில் ரொனால்ட் ரீகனும் சீனியர் ஜார்ஜ் புஷ்ஷும் கம்யூனிஸ எதிர்ப்புத் தலைவர்களுக்கு ஊக்கம் அளித்தனர். அதனால் ஜனநாயக அலை வீசத் தொடங்கியது.

ஆனால் இந்த புதிய நூற்றாண்டில் இடது சாய்வு கொண்ட ஆதிக்கவாதிகளின் எழுச்சி அலை மீண்டும் கிளம்பியது. இது ‘பிங்க் அலை’ என்று சொல்லப்பட்டது. வெனிசூலாவில் ஹ்யூகோ சாவேஸ் , பிரேசிலில் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, அர்ஜென்டினாவில் நெஸ்டர் கிர்சினர், பொலிவியாவில் எவோ மொராலெஸ், ஈக்வடாரில் ராபாயெல் கொரெரா , உருகுவேயில் தபாரே வாஸ்குவேஸ் என சர்வாதிகாரிகள் உருவாகி , பல நாடுகளில் பிங்க் அலை பரவியது.
கடந்த இரண்டு தசாப்தங்களாக லத்தீன் அமெரிக்காவில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டதால் போதைப் பொருள், ஆயுதக் கும்பல்களின் அபாயகரமான வளர்ச்சி ஏற்பட்டது. ஐ.நா. அமைப்பின் மதிப்பீட்டின்படி உலகில் 3,700 டன் கோகைன் போதைப்பொருள் பயன்படுத்தப்படுகிறது. அதைத் தயாரிக்கப் பயன்படும் கச்சாப் பொருளான ‘கோகா’ உலகில் பொலிவியா, பெரு, கொலம்பியா என்ற மூன்றே நாடுகளில் தான் உற்பத்தியாகிறது.
ஒட்டுமொத்த லத்தீன் அமெரிக்காவும் போதைப் பொருள் களமாகியுள்ளது. ஆயுத, போதைப் பொருள் வியாபாரத்தால் மாஃபியா தலைவர்களும் அரசியல் தலைவர்களும் செல்வந்தர்கள் ஆகியுள்ள நிலையில், சாதாரண மக்கள் வன்முறை, குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டனர்.
இப்போது, (இடதுசாரி சர்வாதிகாரத்திற்கு எதிரான) மிதவாத / பழமைவாத அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும் எழுச்சி பெற்று வருகிறார்கள். கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்த டிரம்ப் இந்தப் பகுதியில் தன் கவனத்தைச் செலுத்தி வருகிறார். போதைப் பொருள் மாஃபியா மற்றும் சட்டவிரோதக் குடியேறிகளுக்கு எதிரான போரை அவர் தொடங்கியுள்ளார். அர்ஜென்டினாவில் மிதவாதத் தலைவரான ஜேவியர் மிலே தலைமையிலான ஆட்சிக்கு 20மில்லியன் டாலர் உதவி வழங்கியுள்ளார். இது அந்தப் பகுதியில் பெருத்த ரீங்காரத்தை எழுப்பி உள்ளது.
ஈக்வடார் மிதவாதத் தலைவரை மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்துள்ளது. பொலிவியாவில் கடந்த இரண்டு தசாப்தங்களாக இருந்த கம்யூனிஸ்ட் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. பிரேசில் , கொலம்பியா, கோஸ்டா ரிகா, பெரு நாடுகளிலும் மிதவாதத் தலைவர்கள், கட்சிகள் எழுச்சி பெற்று வருகின்றனர்.
‘லத்தீனோ பாரோமெட்ரோ’ என்ற சிசிலியன் அமைப்பு நடத்திய ஆய்வு, கடந்த இரண்டு தசாப்தங்களில் 18 நாடுகளில் வலதுசாரிகளின் ஆதரவு இதுவரை எட்டாத உச்ச நிலைக்கு வளர்ந்துள்ளதாகக் கூறுகிறது. அந்த ஆய்வின்படி, லத்தீன் அமெரிக்கப் பகுதியில் பொதுமக்கள் மதிப்பில் எல்-சால்வடாரின் வலதுசாரி ஜனாதிபதியான நயீப் புக்கெலே முதலிடத்திலும், வெனிசுலா அதிபர் மதுரோ கடைசி இடத்திலும் இருந்தார்கள்.
சர்வதேசச் சட்டங்களின் பார்வையில் டிரம்ப் தவறிழைத்தவராக இருக்கலாம். ஆனால் கருத்தியல் மற்றும் புவியரசியலில் அவரது கை ஓங்கி இருப்பதாகவே தெரிகிறது.
- நன்றி: தி இந்தியன் எக்ஸ்பிரஸ் (10.01.2026) Trump may be wrong in law but he has upper hand in power game.
- தமிழில்: திருநின்றவூர் ரவிகுமார்
$$$