சநாதனம் குறித்து உதயநிதி பேசியதுதான் ‘வெறுப்புப் பேச்சு’!

சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

‘சநாதன தர்மம் குறித்து தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் 2023-ஆம் ஆண்டு பேசிய பேச்சு ‘வெறுப்புப் பேச்சு’ என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கடந்த 2026 ஜனவரி 21ஆம் தேதி  தீர்ப்பளித்துள்ளது. மேலும், உதயநிதியின் பேச்சு  வெறுப்புப் பேச்சு; இந்து மதத்தின் மீதான ஒரு தெளிவான தாக்குதல்; இதைப் பேசிய உதயநீதிமீது வழக்கு பதியாத காவல்துறை, இந்த விஷயத்தில்,  எதிர்வினையாற்றிய பா.ஜ.க. நிர்வாகி அமித் மாளவியா மீது வழக்கு தொடர்ந்திருப்பது முறையல்ல என்று தமிழக காவல்துறையை  கடுமையாக விமர்சித்த நீதிமன்றம், அந்த எஃப்.ஐ.ஆரை ரத்து செய்து உத்தரவிட்டது.

நடந்தது என்ன?

முன்னதாக,  கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி  சென்னையில் நடைபெற்ற த.மு.எ.க.ச. மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது, நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியது.

அந்த மாநாட்டில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ‘இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. ‘சநாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல் ‘சநாதன ஒழிப்பு மாநாடு’ என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியதே முதல் காரணம்’ என்று பேசினார்.

உதயநிதி இவ்வாறு பேசியதற்கு நாடு முழுதும் எதிர்ப்பு எழுந்தது. இந்த விவகாரத்தில் பல்வேறு மாநில நீதிமன்றங்களில் உதயநிதிக்கு எதிராக வழக்குகள் தொடுக்கப்பட்டன.

அந்த வகையில் உதயநிதி மீதும். அதே மாநாட்டில் கலந்துகொண்ட இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மீதும், வேறு மேடைகளில் சநாதனம் பற்றி பேசிய எம்.பி. ஆ.ராசா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்து முன்னணி சார்பில், கோ வாரன்ட்டோ ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.‘ கோ வாரன்ட்டோ என்றால், ‘எந்த அடிப்படையில் இவர்கள் சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்களில் இன்னும் நீடிக்கிறார்கள்?’ என்று கேட்பதாகும்.

அதாவது சநாதனத்தை இழிவுபடுத்திய உதயநிதி, சேகர்பாபு ஆகியோர் எவ்வாறு அமைச்சர்களாக சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்க முடியும்? ஆ.ராசா எவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க முடியும் என்று கேட்டுத்தான் இந்து முன்னணித் தலைவர்களால் அந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

உதயநிதிக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தில்லி பா.ஜ.க தகவல் தொழில்நுட்பப் பிரிவு பொறுப்பாளர் அமித் மாளவியா தனது ‘எக்ஸ்’ தளத்தில், “உதயநிதி ஸ்டாலின் சநாதனத்தை இனப்படுகொலை செய்ய அழைப்பு விடுக்கிறார்” எனப் பதிவிட்டிருந்தார். 

இந்த விவகாரத்தில் ஒரு மதத்தை இழிவுபடுத்திய உதயநிதிமீது புகார் கொடுத்தும் வழக்குப் பதிவு செய்யாத திமுக அரசின் காவல்துறை, அதற்கு எதிராக  பதிவிட்ட பாஜக நிர்வாகி மீது வழக்குப் பதிவு செய்தது. அதாவது, திமுக அடிவருடிகளான  திருச்சி மாவட்ட தி.மு.க வழக்கறிஞர் அணி அமைப்பாளர் தினகரன் அளித்த புகாரின் பேரில், திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் 153, 153A ஆகிய பிரிவுகளின் கீழ் அமித் மாளவியா மீது வழக்குப் பதிவு செய்தனர்.  இரு பிரிவினரிடையே மோதலைத் தூண்டும் வகையில் அமித் மாளவியா பதிவிட்டதாகக் கூறி, வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அமித் மாளவியா மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரனையில் இருந்து வந்தது. முடிவில்,  நீதிபதி ஸ்ரீமதி,  அதிரடி தீர்ப்பை வழங்கினார். இதுவழக்கின் தீர்ப்பு   21.01.2026, புதன்கிழமை அன்று வழங்கப்பட்டது.

 நீதிமன்ற விவாதங்கள்:

முன்னதாக இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. விசாரணையின்போது,  “சநாதன தர்மத்தைப் பற்றிய உங்கள் புரிதல், அது வர்ணங்களை அல்லது சாதியின் அடிப்படையிலான உள்ளார்ந்த பிளவுகளைக் குறிக்கிறது என்று தோன்றுகிறது. நீங்கள் இப்படிப்பட்ட முடிவை, தீர்மானத்தை மேற்கொள்வதற்கான சான்றான இலக்கியம் என்ன? அப்படிப்பட்ட ஒரு அனுமானத்தை அடைய செய்த ஆராய்ச்சி என்ன?” நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு அமைச்சர் உதயநிதி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், “திராவிடக் கொள்கையாளர் தந்தை பெரியார் என்கிற ஈ.வெ.ரா.வின் பேச்சு மற்றும் எழுத்துக்களின் அடிப்படையில் அமைச்சர் அதைப் புரிந்து கொண்டார். மேலும் பனாரஸில் உள்ள மத்திய இந்துக் கல்லூரியின் அறங்காவலர் குழுவால் வெளியிடப்பட்ட சநாதன தர்மம் – இந்து மதம் மற்றும் நெறிமுறைகளின் மேம்பட்ட பதிப்பு 1902 இல் வெளியிடப்பட்டது. அதன்படி, சநாதன தர்மம் – மனுஸ்மிருதி உட்பட நான்கு ஸ்மிருதிகளை அடிப்படையாகக் கொண்டது என்று 1902 வெளியீடு தெளிவாகக் கூறுகிறது. இது வர்ணங்கள் அல்லது பிறப்பால் ஒதுக்கப்பட்ட சாதியின் அடிப்படையில் பிரிவினையைப் பரப்புகிறது. எனவே, அமைச்சரின் பேச்சு இந்த வெளியீடுகளை அடிப்படையாகக் கொண்டது” என்று வாதிட்டார்.

மேலும், “இது 1902 ஆம் ஆண்டின் வெளியீடு. இது பொதுத் தளத்தில் உள்ளது. சாதியின் அடிப்படையில் மனிதர்களை பிரிக்கும் நூலை நிராகரித்ததன் அடையாளமாக நமது அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்த அம்பேத்கர் மனுஸ்மிருதியை எரிக்கும் அளவிற்குச் சென்றுவிட்டார்” என்றும் வில்சன் கூறினார்.

வில்சன் தனது வாதங்களை முடித்த பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் மூத்த வழக்கறிஞர் ஆர்.விடுதலை தனது வாதங்களை முன்வைத்தார்.

இந்து முன்னணி சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் ராஜகோபால், “திமுக தலைவர்கள் தொடர்ந்து இந்து மதத்துக்கு எதிராகப் பேசி வருகிறார்கள். சநாதனம் என்றால் மக்களைப் பிளவுபடுத்துவது என்று எங்கும் ஆதாரங்கள் இல்லை” என்று வாதாடினார்.

அப்போது உதயநிதியின் வழக்கறிஞர் வில்சன், ராசாவின் வழக்கறிஞர் விடுதலை ஆகியோர் “திமுக தொண்டர்களில் பெரும்பாலானோர் இந்துக்கள்தான். ஆட்சியும் இந்துக்கள் வாக்களித்தே தேர்ந்தெடுக்கப்பட்டது. நோட்டாவை வெல்ல முடியாதவர்கள் இந்துக்களின் பிரதிநிதிகள் என்று கூறத் தேவையில்லை” என்று கூறினர்.

இதற்கு இந்து முன்னணி தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். “இத்தகைய வாதங்கள் அரசியல் போரை வெளிப்படுத்துவதாக இருக்கின்றன. கருத்தியல் ரீதியாக வாதங்கள் இருக்கும்போது அரசியலை அனுமதிக்க வேண்டாம்” என்று கூறினார்.

மேலும், “எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கான தகுதி நீக்கத்தைப் பரிந்துரைப்பது 19 (1) (a) பிரிவின் கீழ் நாடாளுமன்றத்தின் முழு உரிமை, இந்த அதிகாரப் பிரிவை நீதிமன்றங்கள் மதிக்க வேண்டும். அரசியல் சாசனத்தில் ஏதேனும் வெற்றிடம் ஏற்பட்டால் மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும். மேலும், மனுதாரர்கள் கேட்பது போல சட்டப் பேரவையின், நாடாளுமன்றத்தின் பிரத்யேக அதிகார எல்லைக்குள் நீதிமன்றம் நுழையக் கூடாது, கூடுதல் தகுதி நீக்கத்தைப் பரிந்துரைக்கக் கூடாது. இந்த மனுக்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்” என்றும் நீதிமன்றத்தில் திமுக தரப்பினர் கேட்டுக் கொண்டனர்.

விரிவான வாதங்களைக் கேட்ட நீதிபதி அனிதா சுமந்த், தேதி குறிப்பிடாமல் உத்தரவை ஒத்திவைத்திருந்தார். 

உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டல்:

இதற்கிடையில்,  சில நாட்களுக்கு முன் சநாதன விவகாரத்தில் தன் மீது இந்தியா முழுதும் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளை ஒரே நீதிமன்றத்தில் நடத்தக் கோரி உதயநிதி தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றம் முக்கிய கருத்துகளைத் தெரிவித்தது.

உதயநிதியின் மனுவை விசாரித்த நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, “அரசியலமைப்புச் சட்டத்தின் 19(1)(a) பிரிவின் கீழ் உங்கள் உரிமையை தவறாகப் பயன்படுத்துகிறீர்கள். நீங்கள் சட்டப்பிரிவு 25-ன் கீழ் உங்களின் உரிமையை துஷ்பிரயோகம் செய்துள்ளீர்கள். கருத்து சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தி விட்டு தற்போது பாதுகாப்புக் கோரி நீதிமன்றம் வந்துள்ளீர்கள். சநாதனம் தொடர்பாக நீங்கள் சொன்ன கருத்துக்களின் விளைவுகள் உங்களுக்குத் தெரியாதா? நீங்கள் ஒன்றும் சாமானியர் அல்ல, அமைச்சர். ஓர் அமைச்சராக இருந்து தனது சொற்களில் கவனமாக இருக்க வேண்டும். சொல்லும் கருத்துக்களின் விளைவுகளை அறிந்திருக்க வேண்டும்” என்று அதிருப்தி தெரிவித்தனர். மேலும் வழக்கை உயர்நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

பதவிநீக்கக் கோரிக்கை நிராகரிப்பு:

வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா, கடந்த 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம், வழக்கை தள்ளுபடி செய்தார். அதாவது, உதயநிதி, சேகர்பாபு.  ஆ.ராசா ஆகியோர் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தார். இது விவாதங்களை எழுப்பியது. உச்சநீதிமன்றக் கருத்துக்கு எதிரானதாகவே அவரது தீர்ப்பு அமைந்தது.

இந்த நிலையில், உதயநிதியின் வெறுப்பு பேச்சு மீதான வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி, அவரது பேச்சு வெறுப்புப் பேச்சு என அதிரடியாகத் தீர்ப்பளித்துள்ளார். அதாவது,  “2023-ஆம் ஆண்டு சநாதன தர்மம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துக்கள்  ‘வெறுப்புப் பேச்சு’ வரம்பிற்குள் வருகின்றன. இது இந்து மதத்தின் மீதான தெளிவான தாக்குதலாகும். அமித் மாளவியா மீதான இந்த வழக்கை மேலும் தொடர்ந்து நடத்துவது என்பது  ‘சட்ட நடைமுறையைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு’ சமமாகும். எனவே, அமித் மாளவியா மீது திருச்சி போலீசார் பதிவு செய்த எஃப்.ஐ.ஆர்-ஐ ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிடுகிறது” என்று தீர்ப்பளித்தார்.

மக்களின் மத உணர்வுகள் மீது வெறுப்பை உமிழ்ந்த உதயநிதிமீது தமிழ்நாடு காவல்துறை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சாடிய நீதிபதி,  அவரது வெறுப்பு பேச்சுக்கு எதிராக கேள்வி கேட்ட அமித் மாளவியா மீது மட்டும் தமிழ்நாடு அரசு வழக்கு பதிவு செய்தது வேதனையாக இருக்கிறது என அதிருப்தியை தெரிவித்தார்.

மேலும், உதயநிதி ஸ்டாலினின் பேச்சு மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருந்ததாகக் கூறிய  நீதிமன்றம், இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடர்பான இந்த வழக்கின் தீர்ப்பு தமிழக அரசியலில் மீண்டும் சநாதன விவாதத்தை முன்னெடுத்துள்ளது.

அமித் மாளவியா வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பு

சநாதன தர்மம் ஒழிப்பு எனில் சநாதன தர்மம் இருக்கக் கூடாது; சநாதன தர்மத்தைப் பின்பற்றும் மக்களும் இருக்கக் கூடாது என்றுதான் அர்த்தம். சநாதனத்தைப் பின்பற்றும் மக்கள் இருக்கக் கூடாது எனில், அது இனப்படுகொலையைக் (genocide) குறிக்கிறது. சநாதனம் ஒரு மதம் எனில் மதப் படுகொலையை (Religicide) தூண்டுவதாக அமைச்சரின் பேச்சு உள்லது.

சநாதன ஒழிப்பு என்பது இனப்படுகொலை- கலாசார படுகொலையைத்தான் குறிக்கிறது. இதனால் உதயநிதியின் பேச்சை மனுதாரர் அமித் மாளவியா கேள்விக்குள்ளாக்கி சமூக வலைதளத்தில் பதிவிட்டது அவதூறு இல்லை. உதயநிதி ஸ்டாலினின் வெறுப்பு பேச்சுக்கான எதிர்வினைதான் அமித் மாளவியாவின் சமூக வலைதளப் பதிவாகும்.

தமிழகத்தில் ​இந்து மதத்தினர் மற்றும் மேல்ஜாதி இந்துக்கள் மீது தாக்குதல்கள் நடந்துள்ளன. ​​குடுமியை வெட்டுவது, பூணூலை அறுப்பது, பன்றிகளுக்குப் பூணூல் அணிவிப்பது ஆகியவை இந்து மதத்துக்கும், மேல்ஜாதி இந்துக்களுக்கும் எதிரான தாக்குதல் சம்பவங்கள். இவை தமிழ்நாட்டில் நடந்துள்ளன.

ராமர், விநாயகர் சிலைகளுக்கு பெரியார் செருப்பு மாலை அணிவித்தார்; விநாயகர் சிலைகளை உடைத்தார்; இந்தப் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 100 ஆண்டுகளாக, திராவிடர் கழகம், உதயநிதி ஸ்டாலினின் திமுகவினர் இந்து மதத்தின் மீது ஒரு தெளிவான தாக்குதல் நடத்துகின்றனர். உதயநிதி ஸ்டாலினின் பேச்சு 80 % இந்துக்களுக்கு எதிரானது; வெறுப்புப் பேச்சு.

சநாதனியான மனுதாரர், வெறுப்புப் பேச்சால் பாதிக்கப்பட்டவர்; சநாதன தர்மத்தைப் பாதுகாத்தவர். உதயநிதியின் பேச்சுக்கு பதிலளித்த மனுதாரர் மீது சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய முடியாது. மனுதாரர் அமித் மாளவியா மீதான வழக்கு பிரிவுகள் அனைத்துமே உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்குத்தான் பொருந்தும்.

வெறுப்புப் பேச்சைப் பேசுபவர்கள் தண்டனை இல்லாமல் விடுவிக்கப்படுகின்றனர்; அதற்கு எதிராகச் செயல்பட்டால் சட்டத்தின் கோபத்துக்குள்ளாகும் நிலை வேதனை தருகிறது.

வெறுப்புப் பேச்சுக்காக உதயநிதி ஸ்டாலின் மீது எந்த வழக்கும் இங்கே பதிவு செய்யவில்லை; பிற மாநிலங்களில்தான் வழக்குகள் பதிவாகி உள்ளன.

அரசுத் தரப்பு தெரிவிப்பது போல மகாத்மா காந்தி, சநாதன தர்மத்துக்கு எதிராக பேசியவர் இல்லை. அவர் தன்னை ஒரு சநாதன இந்து என்று அறிவித்துக் கொண்டவர். காமராஜரும் சநாதனத்துக்கு எதிரானவர் இல்லை; அவர் தீவிர இந்து பக்தர்; முருகன் பக்திப் பாடல்களைப் பாடியவர்.

புத்தர் இந்து குடும்பத்தில் பிறந்தவர்; வேதகால நடைமுறைகளை மட்டுமே எதிர்த்தார்; அவர் ஆன்மிகப் பாதையின் மிக உயர்ந்த வடிவத்தை போதித்தார்; மதம் சார்ந்த தியான முறையை முன்வைத்தவர்; புத்தரும் சநாதன தர்மத்துக்கு எதிரானவர் அல்ல.

ராமானுஜர், விசிஷ்டாத்வைத தத்துவத்தின் ஆதரவாளர்.  ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற இந்து மந்திரத்தை உச்சரித்து சநாதன தர்மத்தின் தூணாக இருந்தவர்.

சைவ சமயத்தைச் சேர்ந்த வள்ளலார், விலங்கு வதையை எதிர்த்தார்; கருணைக்கு முதன்மை கொடுத்தார்; அவர் சநாதன எதிர்ப்பாளர் இல்லை; முக்தி அடைய சநாதன தர்மத்தைப் பின்பற்ற சொன்னவர் வள்ளலார். பெரியார் மட்டுமே சநாதன தர்மத்தை எதிர்த்தவர்.

பாஜக சநாதனம் பற்றிப் பேசுவதால் உதயநிதியும் பேசினார் என காவல்துறை மனுத் தாக்கல் செய்திருப்பது காவல் துறையின் அரசியல் சார்பையே வெளிப்படுத்துகிறது. விசாரணை அதிகாரி இப்படிப்பட்ட மனுவை தாக்கல் செய்திருக்கக் கூடாது. இதனால் அமித் மாளவியா மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது.

-இவ்வாறு நீதிபதி ஸ்ரீமதி அவர்கள் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

$$$

Leave a comment