பொங்கலை மடை மாற்றாதீர்கள் துரோகிகளே!

 -பி.ஆர்.மகாதேவன்

பொங்கல் தமிழர் திருநாளா? அனைத்துத் தமிழரும் கொண்டாடும் திருநாளா?

அறுவடையைக் கொண்டாடும் திருநாள் என்றால் குறிஞ்சி மலைவாசிகள், முல்லை வனவாசிகள் எல்லாம் இதே நாளிலா அறுவடை செய்தார்கள்? நெய்தல் நிலத்தவருக்கு ஏது தானிய அறுவடை? திரிந்த பாலை நிலத்தினருக்கு ஏது வயல்?

மருத நிலவாசிகள் எல்லாரும் கொண்டாடியது என்று சொன்னால் ஓரளவு ஏற்க

முடியும். அதிலுமே கூட நில உடமை இல்லாதவர்களுக்கு ஏது அறுவடைத் திருநாள்? சேவைக் குலத்தினர், கைவினைக் கலைஞர்கள், பிற தொழில் குலத்தினர், வணிகர்கள் என விவசாயம் சாரா தொழில் குலங்களுக்கு இது எப்படித் திருநாளாக இருந்திருக்கும்?

இன்னொரு கோணத்தில் பார்த்தால், மொழிக்கு தனியாக திருநாள் கிடையாது. மொழியின் வெற்றியைக் கொண்டாடுவதென்றால் கம்ப ராமாயணம் அரங்கேற்றப்பட்ட நாளை, குறள் எழுதப்பட்ட நாளை, பாரதம் பாடப்பட்ட நாளைத்தான் மொழியின் திருநாளாகக் கொண்டாடவேண்டும். அங்குமே கடவுள் வாழ்த்துடன் தான் அவை தொடங்கியிருக்கும். கடவுளையும் தர்மத்தையும் பற்றித்தான் மொழியுமே பேசியிருக்கும் என்பதால், அது மதத்துக்கும் கடவுளுக்கும் மொழி வழியிலான காணிக்கை என்ற வகையில், அதுவுமே மதப் பண்டிகையாகத்தான் இருக்கும்.

கம்பர் ராமாயண நூலையா வைத்துக் கொண்டாடச் சொல்லியிருப்பார்? ஸ்ரீராமசந்திர மூர்த்தியைத்தானே வணங்கியிருப்பார். எனவே மொழிக்கு என்று தனியான இருப்போ விழாவோ கிடையாது.

அனா ஆவன்னாவுக்கு மரியாதை கிடையாது. அது அகர முதல்வனைப் போற்றினால்தான் மரியாதை.

‘தமிழைக் கொண்டாடுவேன்; தமிழ் மொழி போற்றும் இந்து தெய்வங்களைக் கும்பிடமாட்டேன்’ என்பது  ‘நெஞ்சுக்கு நீதியை மதிப்பேன்; கருணாநிதியை மிதிப்பேன்’ என்பதற்கு சமம்.

மொழியைத்தான் கொண்டாடுவேன் என்றால் புத்தகக் கண்காட்சியை மொழிக்கான விழாவாகச் சொல்லலாம். ஆனால், சூரியனைக் கும்பிடச் சொல்லும் விழாவை, நல் அறுவடை தந்த தெய்வத்துக்கு நன்றி சொல்லும் நாளை மொழியின் விழாவாகச் சொல்லவே முடியாது. அது தெய்வத்துக்கான விழாவே.

எனவே பொங்கல் என்பது இந்து தர்மத் திருநாள் மட்டுமே.

இந்து தர்மம் தான் ஒவ்வொரு குலத்துக்கும் ஒவ்வொரு பிராந்தியத்துக்கும் ஒவ்வொரு விழாவை, குல தெய்வத்தை, சடங்கு சம்பிரதாயங்களை, ஆன்மிகப் பாதைகளை, முன்னோர் மரபுகளை உருவாக்கித் தந்திருக்கிறது.

மருத நிலமே மன்னராட்சி, நிலவுடமை சமுதாயம் என ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கிறது. மலைவாசிகளோ, கானகவாசிகளோ, நெய்தல் வாசிகளோ, பாலை வாசிகளோ இத்தனை வலுவான அதிகார மையமாக ஆனதில்லை. எனவே நாம் கொண்டாடும் பெரும்பாலான விழாக்கள் மருத நில விழாக்களே. ஒட்டுமொத்த தமிழ் நிலத்தினரின் விழா அல்ல. மருத நிலத்தினரும் தமிழ் விழாவாக இதைக் கொண்டாடவில்லை. இந்து தெய்வ விழாவாகவே கொண்டாடியிருக்கிறார்கள். எனவே இது தமிழர் திருநாள் அல்ல; தமிழரில் மருத நிலத்தினர் கொண்டாடிய இந்து திருநாளே.

இன்று இந்து மதத்தை விட்டு வெளியேற்றப்பட்டவர்கள், நாத்திகர்கள் போன்றவர்கள், தமிழ் கலாசாரப் பண்டிகைகளாக ஜல்லிக்கட்டு, பொங்கல் இவற்றையெல்லாம் நாங்களும் கொண்டாடுவோம் என்பது பெரிய கேலிக்கூத்து.

மாயோன், சேயோன், இந்திரன், வருணன், கொற்றவை, இந்த தெய்வங்களை வணங்குவதைக் கைவிட்டவர் எப்படித் தமிழராக இருக்க முடியும்?

தமிழராகவே இல்லாதவர் தமிழ் தெய்வம் அதாவது இந்து தெய்வத்தை வழிபடும் பண்டிகையை எப்படிக் கொண்டாடமுடியும்?

உண்மையில் பெரும்பாலானவர்கள் கொண்டாடும் போது நாம் தனித்துவிடப்படும் வெறுமையை சோகத்தைப் போக்கிக் கொள்ள இந்து விரோத அரசியல் சக்திகள் உருவாக்கியிருக்கும் விபரீத விழாக்கள் தான்  ‘திராவிட’ பொங்கல், சமத்துவ’ பொங்கல், ஜல்லிக்கட்டு கேளிக்கை’ போன்றவையெல்லாம்.

கலாசாரக் காப்புரிமை சார்ந்து பார்த்தால் இந்து அல்லாதவர்கள் தமிழர் அல்லாதவர்கள் இவற்றைக் கொண்டாடுவதைத் தடை செய்யவேண்டும். தன் விருப்பம் போல மாற்றிப் பயன்படுத்துவதைத் தடைசெய்ய வேண்டும்.

ஆங்கிலப் புத்தாண்டுக்கு நள்ளிரவில் ஆலயங்களைத் திறப்பது எவ்வளவு தவறோ, அதைவிட, இந்து தெய்வங்களை – இந்து விழாக்களைத் திருடி மற்றவர்கள் சிதைப்பது மா பெரும் தவறு.

தமிழ் மண்ணில் தமிழராக இருந்துகொண்டு இயேசு, அல்லாவைக் கும்பிடுவதைப் போலவே மாபெரும் தவறு.

ஈ.வெ.ரா.வை ராமசாமி நாயக்கர் என்று எழுதினாலே கோபம் கொள்பவர்கள், இந்து மரபுகளை, தமிழ் மரபுகளை முழுக்கக் களவாடுவதென்பது மிக மிக கேவலம். மோசம்.

அல்லாவுக்கு உருவம் கொடுப்பது எப்படித் தவறோ, அதைவிட முருகனை முப்பாட்டன் என்று திரிப்பது தவறு.

ஜாதிக் கொடுமையினால் மதம் மாறினேன் என்ற முட்டாள்தனமான, வரலாற்று ஆதாரங்கள் இல்லாத வாதங்களை இனியும் சொல்லித் திரிய வேண்டாம்.

இஸ்லாமிய அடக்குமுறைக் காலத்தில் வன்முறையாலும், கிறிஸ்தவ அடக்குமுறைக் காலத்தில் ஆசை காட்டப்பட்டும், மாற்றப்பட்டவர்களின் எண்ணிக்கையே தானாக மாறியவர்களைவிட பல மடங்கு அதிகம் இருக்கும்.

ஜாதிக் கொடுமையே இருந்திராத மீனவர்கள், மலைவாசிகள், வனவாசிகள், பாலைவன வாசிகள் தான் அதிகமும் மதம் மாற்றப்பட்டிருக்கிறார்கள். மருத நில இந்து தர்மங்களும் நில உடமைத்துவமும் மன்னராட்சியும் ஜாதி வாழ்க்கையும் நால் வர்ணத்தினரும் அவர்களுள் ஓர் அங்கமான அவர்ணர்களும் எல்லாருமேதான் மத மாற்றத்தைத் தடுக்கும் பெரும் அரணாக இருந்திருக்கிறார்கள்.

ஒருவேளை ஜாதிக் கொடுமையினால் மதம் மாறினேன் என்பதை வாதத்துக்காக ஏற்றுக்கொண்டால், ஜாதிக் கொடுமையை அனுமதித்த தமிழ் மொழியையும் விட்டு வெளியேற வேண்டும்.

பிராமணர் ஒடுக்கினார்; எனவே அவருடைய மொழியான (?) சமஸ்கிருதத்தை எதிர்க்கிறேன் என்று சிலர் சொல்வார்கள். அப்படியே அது பிராமணரின் மொழி என்றே (தவறாக) வைத்துக்கொண்டாலும், பிராமணரல்லாத மேல் ஜாதியினர் பேசிய தமிழ் மொழியையும் தான் தலித்கள் எதிர்க்க வேண்டும். அவர்களும்தானே ஒடுக்கியிருக்கிறார்கள்?

சமஸ்கிருதம் மட்டுமேவா ஒடுக்கியது? தமிழும்தானே அதை ஆதரித்தது. ஈ.வெ.ரா. தமிழை வெறுப்பதன் காரணம் அதுவும் பிராமண – இந்து மொழி என்பதால் தானே?

ஒடுக்கிய அடையாளங்களை எல்லாம் எதிர்க்க வேண்டுமென்றால், பறையர்கள் ஒடுக்கினார்கள் என்று வண்ணார்களும் சக்கிலியர்களும் தோட்டிகளும்தான் தலித் என்ற அடையாளத்தை எதிர்க்க வேண்டும்.

“கிறிஸ்தவ, இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகள் இந்து தர்மத்தை எதிர்க்கச் சொல்லியிருக்கிறார்கள். அதனால் எதிர்க்கிறோம். மொழி என்று சொல்லி ஒருங்கிணைத்துவிட்டு இந்து மதத்தை அழிக்கப் பார்க்கிறோம்” என்பதை அவர்கள் ஒருபோதும் வெளிப்படையாகச் சொல்ல மாட்டார்கள். நாம்தான் புரிந்துகொள்ள வேண்டும்.

மதவாத அரசியலுக்கும் எங்களுக்கும் ரொம்ப தூர இடைவெளி இருக்கிறது. அவர்கள் மனிதனைக் கொன்று மதத்தைக் காப்பாற்றப் பார்க்கிறார்கள். நாங்கள் மதத்தை அழித்து மனிதத்தைக் காப்பாற்றப் போராடுகிறோம் என்று, நாம் கிறிஸ்தவர் இயக்கம் முழங்குகிறது.

இலங்கையில் மொழியைக் காக்கிறேன் என்ற போர்வையில் மனிதர்களைக் கொன்று குவித்த இயக்கம் இங்குவந்து மனிதர்களைக் காப்பாற்றப் போகிறதாம். அதுவும் பாஜக, இந்து மதம் இவை மட்டுமே அழிய வேண்டுமாம். அவை முதலில் மனிதத்தை அழித்து மதத்தைக் காக்கப் பார்க்கிறது என்ற கூற்றே மிக மிக அபாயமானது; அடிப்படை அற்றது.

மத வன்முறையைப் பற்றிப் பேசுவதென்றால் இஸ்லாமிய அடிப்படைவாதிகளே உலகின் முதல் கொடூரக் குற்றவாளிகள். கிறிஸ்தவ அடிப்படைவாதிகள் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்கள். இந்து அடிப்படைவாதிகள் அந்தப் பட்டியலில் கடைசியில் இருப்பார்கள். ஆனால் கிறிஸ்தவ, இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பக்கம் இருந்துகொண்டு, இந்து அடிப்படைவாதத்தை எதிர்ப்பேன் என்று சொல்லும், நாம் கிறிஸ்தவ இயக்கத்தைப் பாராட்டும் எவனும் இந்துவின் நண்பன் இல்லை. துரோகியே.

எதிரிக்கு எதிரி நமக்கு நண்பர் என்ற அரசியல் விளையாட்டு நமக்கு வெற்றியைத் தராது. அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்துகொண்டு நம்மை அழிப்பார்கள். இதுதான் இதுவரையான வரலாறு. இனியும் இது தொடரக் கூடாது.

பொங்கல் தமிழர் பண்டிகை அல்ல. இந்துப் பண்டிகையே.

வள்ளுவர் பொதுமறையைப் படைக்கவில்லை. இந்து மறைதான் படைத்திருக்கிறார்.

யோகாவுக்கு மதம் உண்டு. அது சநாதன தர்ம மதம்.

பரதக் கண்டத்தில் பக்தியுடன் இருந்தாலே தமிழகம்; இந்து தர்மம் ஆதிக்கத்தில் இருந்தாலே பரதக் கண்டம்.

சீராரும் வதனமென பரதக் கண்டம் திகழ்ந்தாலே நில மடந்தை எழில் ஒழுக நிலைக்க முடியும்.

அரவணைக்கும் கரங்கள் வலுவுடன் இருந்தாலே அழிக்கும் கரங்கள் அடக்கிவைக்கப்படும்.

உயிர் இருந்தாலே உடம்புக்கு மரியாதை.

இந்துத்தன்மை- ஹிந்துனெஸ் இருந்தாலே இவை எல்லாம் மதிக்கப்பட வேண்டியவை.

இந்துத்துவமுமே கூட இந்துத்தன்மை கொண்டிருந்தால் மட்டுமே போற்றப்படவேண்டும்.

ஏனென்றால், எதைக் காப்பாற்ற, எதை விட்டுக் கொடுக்கிறீர்கள் என்பதே எல்லாவற்றையும் தீர்மானிக்கும்.

சநாதன இந்துக்களுக்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு

ஜெய் ஹிந்த்!

$$$

Leave a comment