-கி.ஆ.பெ.விசுவநாதம்
பெரியார் என்ற பெயரில் தமிழ் மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கும் ஒரு கூட்டம் குறித்து, 1949லேயே எச்சரித்திருக்கிறார் திரு. கி.ஆ.பெ.விசுவநாதம். இதோ அவரது கட்டுரை....

நடிப்பு உலகிலே பல இராமசாமிகள் தோன்றியிருக்கிறார்கள் என்றாலும், மூன்று இராமசாமிகள்தான் பட்டம் பெற்றார்கள். இப்பட்டங்கள் அவர்களின் பேச்சினால் ஏற்பட்டவை.
முதல் இராமசாமிக்கு ‘புளிமூட்டை இராமசாமி’ என்று பெயர். இவர் பல சினிமா கம்பெனிகளில் நடித்தும் பேசியும் ‘புளிமூட்டை’ என்ற பெயர் பெற்றுத் திகழ்பவர்.
இரண்டாவது இராமசாமி ‘சந்தேகமில்லை இராமசாமி’. இவர் டி.கே.எஸ். சகோதரர்கள் கம்பெனியில் நடித்து அடிக்கடி ‘சந்தேகமில்லை’ என்று கூறி சந்தேகமில்லை என்ற பட்டப் பெயர் பெற்றுத் திகழ்பவர்.
மூன்றாவது இராமசாமி ‘சொந்த விஷய இராமசாமி’. இவர் அரசியல் மேடைகளில் நடித்து, அடிக்கடி ‘சொந்த விஷயம்’ எனக்கூறி ‘சொந்த விஷய இராமசாமி’ என்ற பட்டப்பெயர் பெற்றுத் திகழ்பவர்.
இந்த இராமசாமிகளைப் பார்த்து ஆற்காட்டு இராமசாமி, வி.வி.இராமசாமி, ஓமந்தூரர் இராமசாமி, சி.பி.இராமசாமி முதலிய எத்தனையோ இராமசாமிகள் பொறாமைப்படுகிறார்களாம். என்ன பயன்?’
நடிப்பு உலகத்தில் ‘சொந்த விஷய இராமசாமி கிளம்பியதும். புளிமூட்டை இராமசாமி, சந்தேகமில்லை பல இராமசாமிகளுடைய புகழ்கள் மங்கத் தொடங்கிவிட்டன என்று நடிப்பை இரசிப்பவர்களால் கூறப்பட்டு வந்தது.
முதலில் நடந்தது:
முத்து: ” நீங்கள் பணக்காரர்களைக் குறை கூறிக்கொண்டே பணத்தைச் சேர்த்து ஒரு பணக்காரராய் விட்டீர்களே, இதுதானா நியாயம்?”
சொ.இரா: ” அது என் சொந்த விஷயம்”
செல்லாண்டி: “மதக்குருக்களைக் குறை கூறிக்கொண்டே மதக்குருக்களைப் போலவே தாடி வைத்துக் கொண்டிருக்கிறீர்களே! இதுதானா ஒழுங்கு முறை?”
சொ.இரா: “இது என் சொந்த விஷயம்”
காத்தாயி: “நகை அணிய உரிமை பெற்ற பெண்கள் கூட நகை அணிவது முட்டாள்தனம் என்று பச்சைக்கல் மோதிரத்தைத் திருகி விட்டுக்கொண்டே பேசுகிறீர்களே! இது நன்றாக இருக்கிறதா?
சொ.இரா: “அது என் சொந்த விஷயம்”
தி.க.தோ.: “ஆரியம் ஒழிக” என்று எங்களைச் சொல்லும்படி செய்துவிட்டு தாங்கள் ஆச்சாரியாரின் தெரிசனத்திற்குப் போய் அவரோடு குலாவிப் பேசி வரலாமா?”
சொ.இரா: “அது என் சொந்த விஷயம்”
அரு.த.பழ: “பகுத்தறிவுத் தந்தை, சீர்திருத்தவாதி என்று கூறிக் கொண்டே 72 வயது முடிந்தும் கூட 29 வயதுப் பெண்ணை திருமணம் செய்யலாமா? இதுதானா உமது கொள்கை?”
சொ.இரா: “அது என் சொந்த விஷயம்”
பின்னால் நடந்தது:
சொ.ரா: “முத்து நீ கூட இப்போது மேடையில் ஏறிப் பேசுகிறாயாமே, அப்படியே தலைவனாகிவிடப் பார்க்கிறாயா! என்ன!
முத்து: “அது என் சொந்த விஷயம்”
சொ.இரா: “செல்லாண்டி! என்னப்பா நீ கூடவா தீபாவளி கும்பிடறது? இது முட்டாள்தனமாச்சே, இப்படிச் செய்யலாமா?”
செல்லாண்டி: “அது என் சொந்த விஷயம்”
சொ.இரா: “காத்தாயி என்ன? மஞ்சள் சேலையை சுற்றிக்கொண்டு அரச மரத்தையும், வேப்ப மரத்தையும் சுத்துகிறே! இது மூடத்தனம் அல்லவா?”
காத்தாயி: ” அது என் சொந்த விஷயம்”
சொ.இரா: “என்ன அரு.த.பழ.! நான் வந்தாலும் பணம் வந்தாலும் பணம் கொடுக்கிறீர்கள். பார்ப்பனர் வந்தாலும் பணம் கொடுக்கிறீர்கள்! உங்களுக்கு கொள்கையே இல்லையோ?”
அரு.த.பழ: “அது என் சொந்த விஷயம்”
சொ.இரா: “புலவரே! நீங்கள் பகுத்தறிவுப் பிரசாரம் பண்ணக் கூடாதா? எப்பொழுது பார்த்தாலும் கம்ப ராமாயணத்தைத் தானா சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்?”
புலவர்: “அது என் சொந்த விஷயம்”
சொ.இரா: “பொது ஜனங்களே! எல்லாவற்றையும் இப்படி என் சொந்த விஷயம், சொந்த விஷயம் என்று சொல்லிக் கொண்டிருந்தால் பொது விஷயம் என்னவாகிறது?”
பொதுஜனங்கள்: “உங்களுக்குத்தான் பெண்ணும் இருக்கிறது; பொருளுமிருக்கிறது; தாத்தாங்கபட்டியில் ஒரு இடமும் இருக்கிறது, அங்கு போய்த் தொலையறதுதானே! எங்களை ஏன் வந்து உயிரை வாங்குகிறார்களே!”
சொ.இரா: “ஆம்! அதுதான் சரி”
“சொந்த விஷயம் வாழ்க”
(ஆதாரம்: ‘எவனெழுதினாலென்ன?” என்ற புனைப் பெயரில் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் தமது ‘தமிழர்நாடு’ ஏட்டில் எழுதியது, 16.11.1949)
$$$