சவுக்கு சங்கர் கைது- அராஜகத்தின் உச்சம்!

-வ.மு.முரளி

யூ-டியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதில் வழக்கம்போல திராவிட மாடல் அரசு, எந்த சட்ட விதிமுறைகளையும் கடைபிடிக்கவில்லை.

சவுக்கு சங்கர் என்ன செய்தார், அவர் கைது செய்யப்பட வேண்டியவரா, அவர் மீதான வழக்கு என்ன – என்பதெல்லாம் வேறு பிரச்சினை. அவர் கைது செய்யப்பட்ட முறையும் அப்போது காவல்துறை நடந்துகொண்ட விதமும் கண்டிப்பாக ஏற்கத் தக்கதல்ல.

ஒருவரை கைது செய்யும் முன் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை குற்றவியல் சட்டம் தெளிவாக வரையறுத்துள்ளது. தவிர சட்டமீறல்களைத் தடுக்கும் வகையில் உச்ச நீதிமன்றமும் பல நெறிமுறைகளை வகுத்திருக்கிறது. ஆனால்….

தமிழகத்தில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இதுபோன்ற கைது நடவடிக்கைகள் அராஜகமாகவே எடுக்கப்படுகின்றன. திராவிட மாடல் அரசு இதில் உச்சம் தொடுகிறது.

# கோர்ட் விடுமுறை நாளுக்கு முந்தைய இரவில் கைது செய்வது (ஜாமீனுக்கு முயற்சி செய்வதைத் தடுப்பது)

# சாதாரண குற்றத்திற்கும் கூட கடுமையான சட்டப்பிரிவுகளைப் பயன்படுத்தி நள்ளிரவில் கைது செய்வது (குடும்பத்தாருக்கு அச்சுறுத்தலை உருவாக்குவது).

# வேண்டுமென்றே பல வழக்குகளை பல இடங்களில் பதிந்து கைது செய்து அலைக்கழிப்பது (அரசியல் எதிரிகளை மிரட்ட காவல்துறையைப் பயன்படுத்துவது).

# கைது செய்யப்பட்டவுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் போலீஸ் வாகனத்திலேயே வைத்துக்கொண்டு சுற்றி, குற்றம் சாட்டப்பட்டவருக்கு உடல் பாதிப்பையும் மன உளைச்சலையும் ஏற்படுத்துவது (அரசின் எதிரிகளை அச்சுறுத்துவது).

# நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டவரை சிறைக்குள் தாக்குவது (குற்றம் சாட்டப்பட்டவருக்கு சட்டவிரோதமாக பாடம் கற்பிப்பது).

# குற்றம் சாட்டப்பட்டவருக்கு வழக்கறிஞர் உதவி உள்ளிட்ட சட்ட உரிமைகளை மறுப்பது (குற்றம் சாட்டப்பட்டவரை கொடிய குற்றவாளியாக அடையாளப்படுத்துவது).

# கிரிமினல் குற்றம் சாட்டப்படாதவர்களையும் கொலைக் குற்றவாளிகள் போல நடத்துவது, காவல்நிலையத்தில் தாக்குவது, போலீஸ் வாகனத்தில் தாக்குவது (போலீஸ் ஆணவத்தை வெளிப்படுத்துவது)

-என திராவிட மாடல் அரசு, புதிய காவல் விசாரணை மாடலையே உருவாக்கிக் கொண்டிருக்கிறது. ஆட்சி மாறும் போது இது அவர்களுக்கே எதிரானதாக மாறும் என்று எச்சரிப்பது நமது கடமை.

தமிழக ஊடகங்களும், மதிப்புக்குரிய பெரியவர்களும் அரசின் அராஜகத்தை – கண், காது, வாய்களை இறுக மூடிக்கொண்டு – கண்டு கொள்ளாமல் இருப்பதால், சமூக ஊடகங்களில் தான் அரசின் அராஜகத்தை சுட்டிக்காட்ட வேண்டி இருக்கிறது.

இதையும் அவதூறு வழக்கு தொடுத்து மிரட்ட திராவிட மாடல் அரசு முயற்சிப்பதற்கு பல முன்னுதாரணங்கள் உள்ளன. பத்ரி சேஷாத்ரி, மாரிதாஸ், கல்யாணராமன், கிஷோர் கே சாமி, சீமான், எஸ்.ஜி.சூர்யா,…. என பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல் நீள்கிறது.

சவுக்கு சங்கரின் செயல்பாடுகள் அனைத்தையும் நான் ஆதரிக்கவில்லை. அவரது கொள்கை வேறு. ஆனால், அவரது கருத்து சுதந்திரத்தை நான் ஆதரிக்கிறேன். ஒட்டுமொத்த ஊடகங்களும் மாநில அரசுக்கு ஜால்ராவாக மாறியுள்ள சூழலில், துணிவுடன் பல கருத்துக்களைக் கூறி வருகிறார் அவர்.

சவுக்கு சங்கரின் கருத்துக்களில் பல முட்டாள்தனமானவை; பல அபாயகரமாவை. சில சமயம் நாகரிக எல்லையையும் அவர் தாண்டுகிறார். அதற்காக அவரை அரசே கொடுமைப்படுத்த சட்டத்தில் இடமில்லை. மூட்டைப்பூச்சியை அழிக்க வீட்டைக் கொளுத்தக் கூடாது.

திராவிட மாடல் அரசின் இந்த அத்துமீறல்களை நீதிமன்றமும் பலமுறை கண்டித்து விட்டது. ஆனால், காவல்துறை ஏவல்துறையாகவே தொடர்கிறது.

சட்ட நெறிமுறைகளின்படி தான் கைது, விசாரணை, வழக்கு, தண்டனை போன்ற தொடர் செயல்முறைகள் இருக்க வேண்டும். இதைச் சொல்ல வேண்டிய ஊடகங்கள் தங்கள் கடமையைச் செய்யாததால், இதனை உரத்துச் சொல்ல வேண்டியிருக்கிறது.

சவுக்கு சங்கரின் கைது படலத்தில், வீட்டின் கதவை உடைத்து கைது செய்வது, தேடுதல் என்ற பெயரில் ஹீரோக்களை உடைப்பது, வீட்டில் இருப்பவர்களை மிரட்டுவது, வழக்கறிஞர் உதவி மறுக்கப்பட்டது… என தமிழக அரசின் அத்துமீறல்கள் அணிவகுத்திருக்கின்றன.

ஜனநாயகம் என்பது ஆளும் கட்சி அராஜகம் செய்வதற்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பு அல்ல. திமுகவை இன்று ஆதரிப்போரும் நாளை இதே சட்டவிரோதச் செயல்முறையால் பாதிக்கப்படலாம். இதனைக் கண்டிப்பது கருத்துரிமை பற்றிப் பேசும் ஒவ்வொருவரின் கடமை.

$$$

Leave a comment