திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம்: செய்தித் தொகுப்பு- 6

-ஆசிரியர் குழு

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீப விழாவில் நிகழ்ந்த போராட்டம் குறித்த செய்திகள் இங்கு ஆவணமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. (பகுதி -6)

தீபம் ஏற்ற வலியுறுத்தி  டிச. 13இல் உண்ணாவிரதப் போராட்டம்

உயர்நீதிமன்ற அமர்வு அனுமதி

சென்னை: திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி, அந்த ஊர் கிராம மக்கள் சார்பில் டிசம்பர் 13இல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த, உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக எழுந்த பிரச்சினையில், உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அரசுத் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணையில் உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக, சுஉச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்தச் சூழலில், திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி, அந்த ஊர் மக்கள் சார்பில், டிசம்பர் 13ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டது. அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதனால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கோரி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு டிச. 11-இல்  விசாரணைக்கு வந்தது.

அப்போது, ”50 பேர் மட்டுமே போராட்டத்தில் பங்கேற்க வேண்டும். அரசியல் பேசக் கூடாது என நிபந்தனை விதித்து, அனுமதி அளித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

  • (தினமலர் -11.12.2025)

$$$

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; தலைமைச்செயலர், ஏ.டி.ஜி.பி. ஆஜராக  உத்தரவு

மதுரை: ‘திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணிலும் தீபம் ஏற்ற வேண்டும்’ என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாததால் தாக்கலான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ‘தலைமை செயலர், சட்டம் – ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. ஆகியோர் வரும், 17ஆம் தேதி மதியம், 3:00 மணிக்கு காணொளியில் ஆஜராக வேண்டும்’ என, உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கை டிச. 9-இல் மீண்டும் விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரர் தரப்பை, தீபத்தூணில் தீபம் ஏற்ற இந்த நீதிமன்றம் மீண்டும் அனுமதித்தது. அந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை. காவல் ஆணையர் லோகநாதனுக்குப் பதிலாக மதுரை தெற்கு காவல் துணை ஆணையர் இனிகோ திவ்யன் திருப்பரங்குன்றத்தில் இருந்துள்ளார்.

மனுதாரர் தரப்பை மலையேற அவர் அனுமதிக்கவில்லை. அவரும் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை என்பதால், அவருக்கு எதிராக நடவடிக்கை கோரி கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இனிகோ திவ்யன் ஆஜராக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது.

இரு நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, எப்போது விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று கேள்வி எழுப்பினேன்.

அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், ‘ஒரே பிரச்சினையை வெவ்வேறு நீதிமன்றங்களில் எழுப்ப விரும்பவில்லை. உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெறக்கூடும்’ என்று தானாக முன்வந்து தெரிவித்தார். இப்பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் தலையிடவில்லை என்றே நான் முடிவு செய்கிறேன்.

பிரதான ரிட் மேல்முறையீட்டு மனு மீது, உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கவில்லை. எனவே, இந்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு செல்லுபடியாகும்.

தமிழக அரசின் தலைமை செயலர், சட்டம் – ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. ஆகியோர்வரும், 17ஆம் தேதி மதியம், 3:00 மணிக்கு காணொளி மூலம் இந்நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.

மத்திய உள்துறை செயலரை எதிர்மனுதாரராகச் சேர்க்க மனுதாரர் தரப்பு கோரியது. அதனடிப்படையில் சேர்க்கப்பட்டு மத்திய உள்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

  • (தினமலர் – 10.12.2025)

$$$

திருப்பரங்குன்றம் தீப வழக்கு 15ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

மதுரை:திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்த, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை வரும் 15ஆம் தேதிக்கு (திங்கட்கிழமை) உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இரு நீதிபதிகள் அமர்வு ஒத்திவைத்தது.

‘திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமான இடங்களைத் தவிர, தீபத்துாணிலும் டிச. 3இல் கார்த்திகை தீபத்தை சுப்பிரமணியசுவாமி கோவில் நிர்வாகம் ஏற்ற வேண்டும். இந்த ஆண்டு முதல் தீபத்தூணிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதை உறுதி செய்வது போலீசாரின் கடமை’ என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.

அந்த உத்தரவை நிறைவேற்றாததால், ‘ஆட்சியர் பிரவீண்குமார், காவல் ஆணையர் லோகநாதன், கோயில் செயல் அலுவலர் யக்ஞநாராயணன் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என, ராம. ரவிகுமார் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை. பிற மனுதாரர்கள் உட்பட, 10 பேரை மனுதாரர் அழைத்துச் செல்லலாம். அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க சி.ஐ.எஸ்.எஃப். வீரர்களை அனுப்ப உத்தரவிடுகிறேன்’ என்றார்.

நீதிபதி சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்து, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில், இன்று (டிச. 12) நீதிபதிகள் ஜி.ஜெயசந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணையைத் தொடங்கியது. காவல் ஆணையர் தரப்பில் மூத்த வக்கீல் விகாஸ் சிங் ஆஜரானார். தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் ராமன், வாதங்களை முன்வைத்தார்.

ராமன் வாதத்தில், ”இது ஒன்றும் பொதுநல வழக்கு அல்ல. இந்த வழக்கு, அந்த இடத்தில் தீபத்தூண் இருந்ததா என்ற அடிப்படைக் கேள்வியை எழுப்புகிறது. முதலில் அந்த இடத்தில் தீபத்தூண் இருந்ததா என்பதையும், இரண்டாவதாக, அதில் தீபம் ஏற்றும் சம்பிரதாய நடைமுறையின் அவசியம் குறித்தும் மனுதாரர் உறுதிப்படுத்த வேண்டும்” என்றார். பிரிவி கவுன்சில் தீர்ப்பு உட்பட இது தொடர்பான வெவ்வேறு வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளை சுட்டிக்காட்டி அட்வகேட் ஜெனரல் வாதங்களை முன் வைத்தார்.

கோயில் தரப்பு வக்கீல்: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் அல்ல, அது கிரைனைட் தூண்.

நீதிபதிகள்: மலை உச்சியில் இருப்பது கிரைனைட் தூண் என்பதை யார் உறுதி செய்தது?

கோயில் தரப்பு வக்கீல்: பல புகைப்படம் பார்த்து பேசுகிறேன். அரசு அதிகாரிகள் அதை சர்வே கல் என்கின்றனர்.

உடனே நீதிபதிகள்,  “இது சர்வே கல்லா, தீபத்தூணா, விளக்குத்தூணா? என்பதை வல்லுநர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். நீங்கள் அதைக் கூற முடியாது” எனத் தெரிவித்தனர்.

நீதிபதிகள்: திருப்பரங்குன்றம் மலை மீது இருப்பது தீபத்தூண் இல்லை என்று எப்படி கூறுகிறீர்கள்?

கோயில் செயல் அலுவலர் தரப்பு வக்கீல்: மலை மீது 8 அடி உயரம், 1 அடி அகலம் கொண்ட கிரானைட்டால் ஆன தூண்தான் உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் மலைகளை அளப்பதற்கான சர்வே தூண்தான் மலைமீது உள்ளது. தீபத்தூண் என்று கூறுவதற்கு ஆவணங்கள் இல்லை. திருப்பரங்குன்றம் மலையில் இரு உச்சிகள் உள்ளன. ஒன்றில் தர்காவும், மற்றொன்றில் உச்சிப்பிள்ளையார் கோவிலும் அமைந்துள்ளன. தீபத்தூண்  மலை உச்சியில் இருப்பதாக தனி நீதிபதி குறிப்பிட்டுள்ளது சரியான தகவல் இல்லை.

மேலும் வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், வழக்கு விசாரணையை வரும் 15ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

  • (தினமலர்- 12.12.2025)

$$$

One thought on “திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம்: செய்தித் தொகுப்பு- 6

Leave a comment