திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம்: செய்தித் தொகுப்பு- 3

-ஆசிரியர் குழு

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீப விழாவில் நிகழ்ந்த போராட்டம் குறித்த செய்திகள் இங்கு ஆவணமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. (பகுதி -3)

நீதிமன்ற அவமதிப்பு  வழக்கு டிச. 9க்கு ஒத்திவைப்பு

(தினமலர் செய்தி)

மதுரை, டிச. 5: திருப்பரங்குன்றம் தீபத்தூணில்  உயர்நீதிமன்ற உத்தரவுப்படி டிச. 4ஆம் தேதியும் தீபம் ஏற்றப்படவில்லை. தீபம் ஏற்றாமல் நீதிமன்ற உத்தரவை அவமதித்த வழக்கை, டிச. 9க்கு ஒத்தி வைத்து உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், டிச. 3ஆம் தேதி கார்த்திகை தீபம் ஏற்றவில்லை. நீதிமன்றம் உத்தரவிட்டும், அமல்படுத்தாமல் தி.மு.க. அரசு பிடிவாதம் காட்டியது. இதனால் ஹிந்து தமிழர் கட்சி நிறுவனர் ராம. ரவி.குமார் மதுரை ஆட்சியர், காவல் ஆணையர், கோயில் செயல் அலுவலர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணை இன்று (டிச. 05) காலை 10.45 மணிக்கு மீண்டும் ஐகோர்ட் மதுரைக்கிளையில் நீதிபதி சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதால், விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி சுவாமிநாதன் வழக்கு விசாரணையை டிசம்பர் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இன்னொரு வழக்கும் ஒத்திவைப்பு

இந்நிலையில், தனி நீதிபதி தீர்ப்புக்கு எதிராக மாவட்ட ஆட்சியர் தொடர்ந்த மேல் முறையீட்டு மனு நீதிபதிகள் ஜெயசந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வு முன்னிலையில் இன்று (டிச. 5) விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி ஆஜரானார். தனக்கு வாதிட 5 நிமிடம் அவகாசம் வேண்டும் என்று கோரினார். ஆனால், நீதிபதிகள், ‘இப்போது யார் தரப்பு வாதத்தையும் கேட்க முடியாது. அனைத்து மேல் முறையீடுகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்கிறோம்’  என்றனர்.

காவல் ஆணையர் தரப்பில் ஆஜரான வக்கீல் விகாஸ் சிங், தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரினார். ஆனால், அனைத்துத் தரப்பினரையும் கேட்காமல் தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அரசுத் தரப்பில் அட்வகேட் ஜெனரல் ராமன், அறநிலையத் துறை சார்பில் மூத்த வக்கீல் சண்முகசுந்தரம் ஆகியோரும் ஆஜராகி இருந்தனர்.

அரசுத் தரப்பில் வழக்கை டிச. 12க்கு ஒத்தி வைக்க கோரிக்கை வைத்தனர். இதை ஏற்ற நீதிபதிகள், வழக்கை டிச. 12க்கு ஒத்தி வைத்தனர். அனைத்து வழக்குகளையும் விசாரித்து ஒரே தீர்ப்பாக வழங்குவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

கடும் எச்சரிக்கை

நீதிபதிகளையும் உயர்நீதிமன்றத் தீர்ப்புகளையும் சிலர் விமர்சனம் செய்வதாக வக்கீல்கள் முறையிட்டனர். நீதிமன்றத்திற்கு வெளியே விடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிடுவதாகவும் வக்கீல்கள் தெரிவித்தனர். இதற்கு நீதிபதிகள் கூறியதாவது:

நீதிமன்றத்தின் பொறுமையை சோதிக்க வேண்டாம். சமூக ஊடகங்களில் தேவையின்றி விமர்சனங்கள் செய்வதை, ஏற்றுக்கொள்ள முடியாது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான உத்தரவை விமர்சிக்கக் கூடாது.

மனுதாரர்கள் , எதிர்மனுதாரர்கள் அனைவரும் உயர்நீதிமன்ற மாண்பைக் கடைபிடிக்கும் வகையில் பேச வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு நீதிபதிகள் ஜெயசந்திரன், ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை விடுத்தனர்.

$$$

அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுதில்லி, டிச. 5: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருக்கும் தீபத்தூணில் தீபம் ஏற்றாத விவகாரத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு, இப்போது வரை  உச்ச நீதிமன்றத்தில் பட்டியலிடப்படவில்லை. இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று வாய்மொழியாக தமிழக அரசு தரப்பில் குறிப்பிட்டதை, தலைமை நீதிபதி சூர்யகாந்த் ஏற்க மறுத்து விட்டார். ‘வழக்கு பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு வரட்டும்’ என்று தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.

திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அதை தமிழக அரசு நிறைவேற்றவில்லை. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த நிலையிலும், தமிழக அரசு தீபம் ஏற்றவில்லை. தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், ”கடந்த, 100 ஆண்டுகளாக தீபம் ஏற்றப்படும் இடத்தை மாற்றிவிட்டு, வேறு இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என கேட்பதுதான் பிரச்சினை. கார்த்திகை தீபம் ஏற்ற எந்த தடையும் அரசு விதிக்கவில்லை. ‘குறிப்பிட்ட இடத்தில் தான் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும்’ என, 2014இல் நீதிமன்றம் தெளிவாகத் தெரிவித்துள்ளது. அதைத் தான் அரசுத் தரப்பில் பின்பற்றி உள்ளோம். புதிதாக தீபம் ஏற்ற மனுதாரர் ராம. ரவிகுமார் கேட்கும் இடம் தர்கா அமைந்துள்ள இடத்திலிருந்து வெறும் 15 மீட்டர் தொலைவில் உள்ளது. தேவையில்லாத சச்சரவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே, அங்கு தீபம் ஏற்ற அரசு தரப்பில் அனுமதி வழங்கப்படவில்லை. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் காரணமாக, தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது” என தமிழக அரசு கூறியிருந்தது.

இந்த வழக்கை இன்று (டிச. 05) விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி முன்னிலையில் தமிழக அரசுத் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அப்போது மனுதாரர் ராம. ரவிகுமார் தரப்பு வக்கீல் கூறுகையில், ”மாநில அரசு நாடகம் நடத்துகிறது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று உயர்நீதிமன்றத்தில் கூறுவதற்காகவே இங்கு வந்துள்ளனர்” என்றார். தமிழக அரசுத் தரப்பு வக்கீல், ”எங்கள் வழக்கை பட்டியலிட வேண்டும்” என்று கோரினார்.

தலைமை நீதிபதி சூர்யகாந்த், ”இப்படி வாய்மொழியாக வழக்கை விசாரிக்கும்படி கேட்கக் கூடாது” என்றார். கடந்த வாரத்தில் தான், வாய்மொழியாக வழக்கை விசாரிக்க கேட்கக் கூடாது என்று அனைவருக்கும் தலைமை நீதிபதி சுற்றறிக்கை அனுப்பி இருந்தார்.

மிகவும் அவசரமான சூழல் இருந்தால் தவிர, வாய்மொழியாக வழக்கை பட்டியலிட கேட்க க்கூடாது என்று தலைமை நீதிபதி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. வழக்கு பட்டியலிடப்பட்டால் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.

இதனிடையே,  ‘இந்த விவகாரம் தொடர்பாக யாரேனும் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தால், தங்கள் தரப்பைக் கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது’ என மனுதாரர் ராம. ரவிகுமார் சார்பில், உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • நன்றி: தினமலர் (06.12.2025)

$$$

One thought on “திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம்: செய்தித் தொகுப்பு- 3

Leave a comment