-கா.குற்றாலநாதன்
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் டிச.3-இல் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கி, உயர்நீதிமன்ற மதுரை கிளை டிச. 1ஆம் தேதி தீர்ப்பளித்துள்ளது. இதற்காக பல்லாண்டுகளாக மக்களைத் திரட்டிப் போராடிவரும் இந்து முன்னணியின் தொடர் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி இது. எனவே, திருப்பரங்குன்றம் திருக்கோயில் உரிமை மீட்புப் போராட்டம் குறித்து இந்து முன்னணியின் மாநிலச் செயலாளரும் வழக்கறிஞருமான திரு. கா.குற்றாலநாதன் எழுதியுள்ள நூலை இங்கே குறுந்தொடராக வெளியிடுகிறோம். இது பகுதி-2…

காண்க: முதல் பகுதி
4. அந்நிய ஆக்கிரமிப்பு
பொ.ஆ. 1310இல் தான் அலாவுதீன் கில்ஜி எனும் ஆக்கிரமிப்பாளனின் கையாளாக மாலிக்காப்பூர் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வந்து இஸ்லாமிய ஆட்சியை உருவாக்கியதாக வரலாறு கூறுகிறது.
இவற்றை எல்லாம் மறைத்து எந்த வரலாற்று ஆதாரமும் இல்லாமல், திருப்பரங்குன்றம் மலையை இஸ்லாமியர்கள் `சிக்கந்தர் மலை’ என வேண்டுமென்றே மாற்ற, சில இஸ்லாமிய பிரிவினைவாத அமைப்புகள் பல காலமாக சதி செய்து வருகின்றன.
யார் அந்த சிக்கந்தர்?
12ம் நூற்றாண்டில் ஜித்தா என்ற நகரின் ஆளுநராக சிக்கந்தர் பாதுஷா என்பவர் இருந்ததாவும், அவர் அசரத்து செய்யது இப்ராஹிம் பாதூஷாவுடன் பாண்டிய நாட்டின் ஏர்வாடி பகுதிக்கு வந்ததாவும் அவர்கள் இருவரும் திருப்பாண்டியன் மன்னனுடன் போரிட்டு மதுரையை வென்று மதுரையைக் கைப்பற்றியதாகவும், பின் மீண்டும் திருப்பாண்டியன் போர் தொடுத்து திருப்பரங்குன்றம் மலையில் வைத்து சிக்கந்தரைக் கொன்றதாகவும் கதை சொல்லப்படுகிறது.
கோரிப்பாளையம் சிக்கந்தர் தர்கா:
திருப்பரங்குன்றம் மலை மீது சிக்கந்தர் பாதுஷா கொல்லப்பட்டு புதைக்கப்பட்டு அவர் தர்கா உள்ளதாக சில இஸ்லாமியர்கள் கதை சொல்லி வரும் நிலையில், தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சுற்றுலாத் துறையின் குறிப்பில், மதுரை – கோரிப்பாளையத்தில் ‘சுல்தான் சிக்கந்தர் பாதுஷா சமாதி’ உள்ளது என குறிப்பிடப்பிடுவது தெரியவருகிறது.
அப்படி என்றால் ஒரு மனிதனின் உடல் எப்படி இரண்டு இடத்தில் புதைக்கப்பட்டிருக்க முடியும்? அதுவும் தமிழக நிலத்தை ஆக்கிரமிக்க வந்தவன் எப்படி புனிதனாக இருக்க முடியும்?
தர்கா வழிபாடு இஸ்லாத்திற்கு எதிரானதா?
இஸ்லாத்தின்படி, தர்கா வழிபாடு தவறானது என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் தர்கா வழிபாடு, இஸ்லாத்தில் உள்ள ‘இறைவனை மட்டுமே வணங்க வேண்டும்’ என்ற அடிப்படைக் கோட்பாட்டுக்கு எதிரானது.
தர்காக்களில் உள்ளவர்களை வணங்குவது அல்லது அவர்களிடம் உதவி கேட்பது (பாத்தியா ஓதுவது) அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் வணங்குவதாகும். இது இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கைகளுக்கு எதிரானது.
இஸ்லாத்தின் முக்கியக் கொள்கை அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் என்பதாகும். மரணமடைந்த பின் அடக்கம் செய்யப்பட்டவர்களை வணங்குவதோ அல்லது அவர்களிடம் உதவி கேட்பதோ, இறைவனைத் தவிர வேறு எவரையும் வணங்குவதாகும். இது இஸ்லாத்தின் கொள்கைகளுக்கு எதிரானது. சூரத் அத்தவ்பா (9:31) வசனத்தின் படி அவர்கள் ஒரே இறைவனை வணங்க மட்டுமே அவர்கள் கட்டளையிடப்பட்டுள்ளனர்.
மேலும் இறந்த பிணத்தின் மீது கல்லறை கட்டுவதையும், மண்ணில் இல்லாமல் கிறிஸ்தவர்கள் மாதிரி பெட்டியில் வைத்து புதைப்பதையும், இஸ்லாம் ‘ஹராம்’ என்று கூறுகிறது. அப்படியிருக்க மலை மீது சமாதி கட்டுவதும், அதனை வைத்து கட்டிடம் எழுப்புவதும் இஸ்லாமிய மத நம்பிக்கைக்கு எதிரானது அல்லவா?
இத்தகைய செயல்பாட்டை ‘ஷிர்க் ஒழிப்பு மாநாடு’ என்று சில ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாமிய அமைப்புகள் நடத்தின. ஆனால் அதே அமைப்புகள், திருப்பரங்குன்றம் மலை மீதான தர்கா பற்றிய பிரச்சினையில் ஆக்கிரமிப்பு சதிக்கு உடந்தையாக நிற்கின்றன என்பது எத்தகைய இரட்டை வேடம்!
சிக்கந்தர் சமாதி திருப்பரங்குன்றம் மலையில் தான் உள்ளது என கதை சொல்லி, முதலாம் படைவீட்டிற்கு முக்காடு போடும் முயற்சியைத் தொடங்கியது எத்தகை சதி வேலை என்பதை தமிழக இந்துக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
$$$
5. சர்ச்சையின் தொடக்கம்
19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், மலையின் உரிமை தொடர்பான மோதல்கள் தொடங்கின. முஸ்லிம்கள் சிலர் மலை மீது தர்கா வழிபாடு என பிரச்சினையைத் தொடங்கினர். கோயில் தரப்பு மலையை தங்கள் சொத்தாகக் கோரியது.
ஆனால், பிரிட்டிஷ் கிறிஸ்தவ ஆட்சியாளர்கள் உருவாக்கிய வருவாய்த் துறை ஆவணங்களில் இது ‘ஸ்கந்தர் மலை’ அல்லது சிக்கந்தர் மலை என குறிப்பிடப்பட்டது. இது எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றியது. பிரிட்டிஷார் இந்த பிரச்சினையை வைத்து இந்து – முஸ்லிம் மோதலுக்கு தூபம் போட்டனர்.
ஆங்கிலேய ஆட்சியில் அபகரிக்க முயற்சி:
பிரிட்டிஷ் படை நமது நாட்டை அடிமைப்படுத்தி ஆண்ட காலத்திலேயே இங்கிருந்த இஸ்லாமியர்கள் சிலர், திருப்பரங்குன்றம் மலை முஸ்லிம்களுக்கு சொந்தமானது என உரிமை கோர முயன்றனர்.
1916ம் பிரிட்டிஷ் ஆட்சியில் மதுரை ஜில்லா கலெக்டரிடம் 145 பிரிவின் கீழ் திருப்பரங்குன்றம் மலையில் உரிமை கோரி தர்கா நிர்வாகம் பெயரில் வழக்கு தொடர்ந்தனர். பின்னர் சமாதானம் செய்து முடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 1923இல் மதுரை கீழமை நீதிமன்றம் 21 சாட்சிகளை விசாரித்து, 300 ஆவணங்களை பரிசீலித்து, சட்டப்படி ஆக்கிரமிப்பாகக் கருதினாலும், தர்காவை அகற்றாமல் கருணை சமரச அடிப்படையில் தர்கா மற்றும் கோயில் எல்லைகளை வரையறுத்தது. மதுரை கீழமை நீதிமன்றம் 1923இல் கோயில் தரப்பு வாதத்தை ஏற்று தீர்ப்பு அளித்தது. ‘திருப்பரங்குன்றம் மலையானது கோயிலுக்கு சொந்தம்’ என்று கூறியது.
லண்டன் ப்ரிவி கவுன்சில் தீர்ப்பு:
மதுரை கீழமை நீதிமன்றம் ‘திருப்பரங்குன்றம் மலை கோயிலுக்கு சொந்தம்’ என தீர்ப்பு வழங்கியதை எதிர்த்து 1931இல் லண்டன் பிரிவி கவுன்சிலில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
லண்டன் ப்ரிவி கவுன்சிலும் ஆவணங்களைப் பரிசீலித்து, ‘திருப்பரங்குன்றம் மலை முருகன் கோயிலுக்கே சொந்தம்’ என தீர்ப்பு வழங்கியது; “மலை முழுவதும் சுப்பிரமணியர் கோயிலுக்குச் சொந்தமானது. அரசு அல்லது தர்கா தரப்புக்கு உரிமை இல்லை. மதுரை கீழமை நீதிமன்றத்தின் 1923 தீர்ப்பு சரியானது” என உறுதிப்படுத்தி தீர்ப்பு வழங்கியது.
இக்கோயில், பாண்டிய மன்னர் காலத்தில் (பொ.ஆ. 8ஆம் நூற்றாண்டு) கட்டப்பட்டது. மலை சிவலிங்க வடிவில் இருப்பதாகவும், இது இந்து சமயத்தின் புனித இடமாகவும் அங்கீகரிக்கப்பட்டது.
சிக்கந்தர் பாதுஷா தர்கா மலையின் ஒரு சிறு பகுதியில் உள்ளது. இது கோயில் நிலத்தில் அமைந்துள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால், மலை முழுவதும் கோயிலுக்கு சொந்தம் என பிரிட்டிஷ் ஆட்சியின் உச்சபட்ச நீதிமன்றமான லண்டன் ப்ரிவி கவுன்சில் தீர்ப்பளித்தது.
மலை உச்சியில் தீபம்:
பல நூற்றாண்டுகளாக திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இந்துக்கள் காத்திகை தீபம் ஏற்றி வழிபாடு செய்து வந்தனர். இதற்காக தீபத் தூண் அங்கு அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் தீபம் ஏற்றுவதைத் தான் மலை தீபமாகக் கொண்டாடி வந்தனர்.
இரண்டாம் உலகப்போர் காலம் (1939-1945), பாதுகாப்புக் காரணத்தைக் காட்டி பிரிட்டிஷ் அரசாங்கம் மலைத்தீபம் ஏற்றுவதை தடுத்ததாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக 1940களின் தொடக்கத்தில், பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ், திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது தீபமேற்றும் பழங்கால வழிபாடு தடை செய்யப்பட்டது. அதற்குப் பதிலாக கோயிலின் முகப்பில் மோட்ச தீபம் ஏற்ற வைக்கப்பட்ட தூணில் கார்த்திகை தீபம் ஏற்றினர். அந்த வழக்கம், தேசம் சுதந்திரம் அடைந்த பிறகும் தொடர்ந்தது.
இந்த மலையின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமிய சமூகத்தினர் (மதுரை சுல்தான் ஆட்சிக் காலத்திலிருந்தே) பட்ஜம் கட்டி, தர்காவை விரிவாக்கி வந்தனர். அவர்கள் மலையை சிக்கந்தர் மலை (Sikkandar Hill) என்று அழைத்து, உச்சியில் இஸ்லாமிய பச்சை பிறைக் கொடிகளை ஏற்றினர். அதனை இந்துக்கள் தொடர்ந்து முறியடித்தும் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பரங்குன்றம் காக்க உயிரை மாய்த்த குட்டி பட்டர்:
1792ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் ராணுவம் மதுரையை முற்றுகையிட்டது. இது திருப்பரங்குன்றம் மலை மற்றும் அதன் கோயில்களை அழிக்கும் நோக்கத்துடன் நடந்தது. அப்போது குட்டி பட்டர் என்ற வைரவி குட்டி, திருப்பரங்குன்றம் கோயிலின் காவல் பிரிவு உறுப்பினராக இருந்தார். அவர் கோயிலின் அன்றாட நிர்வாகத்தைப் பார்ப்பவர்; வைரவர் (கோயில் காவல் தெய்வம்) தொடர்புடைய பணியில் ஈடுபட்டவர். இவரது பணி, கோயிலின் தூய்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதாகும்.
பிரிட்டிஷ் படை அஸ்தான மண்டபம் (கோயில் மண்டபம்) மற்றும் கல்யாண மண்டபத்தை ஆக்கிரமிக்க முயன்றபோது, கோயில் அதிகாரிகள் சுந்தர பட்டர், தெய்வேந்திர பட்டர், குட்டி பட்டர், சிதம்பரம் பிள்ளை, விழுப்பத்த ராயர், நல்லமணி முத்துக்கருப்ப பிள்ளை தலைமையில் போராட்டம் தொடங்கியது.
பிரிட்டிஷ் படையின் நுழைவைத் தடுக்க கோபுரத்தின் உச்சியில் இருந்து விழுந்து தற்கொலை செய்தார். அதன்பின் அங்கிருந்த பிரிட்டிஷாருக்கு பல இன்னல்கள் ஏற்படத் தொடங்கியது. குட்டி பட்டர் தான் பேயாக வந்து பழிவாங்குவதாக பிரிட்டிஷார் நம்பினர். இதனால் கோயில் உள்ளே நுழையும் முயற்சியை அவர்கள் கைவிட்டனர்.
சின்ன கருப்பத் தேவர் போராட்டம்:
திருப்பரங்குன்றம் பிரச்சினையை முதலில் கையில் எடுத்தது காங்கிரஸ் கட்சியின் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
லண்டன் ப்ரிவி கவுன்சில் தீர்ப்புக்குப் பிறகு ஆண்டுக்கு ஒரு முறை என்று சிறிது சிறிதாக உருவெடுத்த சிக்கந்தர் தர்ஹா பிரச்சினை, நெல்லித் தோப்பு, அன்னச்சத்திரம் ஆக்கிரமிப்பு என்று தொடர்ந்த நிலையில், 1947இல் மலை உச்சியில் சிக்கந்தர் தர்ஹா செல்லும் இஸ்லாமியர்கள் பச்சை நிறக் கொடியைப் பறக்க விட்டனர் . நெல்லி மரம் தான் கோயிலின் ஸ்தல மரமாகும். அதன் மீதே முஸ்லிம் கொடியைக் கட்டினர்.
அந்தக் கொடி பாகிஸ்தான் கொடியின் சாயலில் இருந்ததைக் கண்டு, முதன்முதலில் அதைத் தடுக்கும் பொருட்டு, அறவழிப் போராட்டத்தை கையில் எடுத்து களத்தில் இறங்கி ஒட்டுமொத்த தமிழகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்த தன்மானம் மிக்க இந்துவாக இருந்த நபர் தான் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஐயா சின்ன கருப்பத் தேவர் அவர்கள்.
அன்றைய நாட்களில் கிட்டத்தட்ட 700க்கும் அதிகமான பொது மக்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் பறக்கவிட்ட அந்த பச்சை நிறக் கொடிகளை எல்லாம் அப்புறப்படுத்தி, அதற்கு பதிலாக, மூவர்ணக் கொடியை ஏற்றினர்.
அப்போதைய தமிழக முதலமைச்சராக இருந்த திரு. பிரகாசா அவர்கள், இஸ்லாமிய ஆக்கிரமிப்பை அகற்றியதை உறுதி செய்து, சின்ன கருப்புத்தேவரின் போராட்டத்தை முடிவிற்குக் கொண்டு வந்தார்.
மீண்டும் மலை தீபம்:
சின்ன கருப்புத்தேவர் போராட்டத்திற்குப் பின் சில காலம் மலை உச்சி தீபத்தூணில் தீபமேற்றப்பட்டது. நாளடைவில் இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்தில் திருப்பரங்குன்றம் திருக்கோயில் உட்படுத்தப்பட்டது. அதன் பின் படிப்படியாக தீபத்தூணில் தீபமேற்றுவது நிறுத்தப்பட்டது.
அப்போது தொடங்கி தற்போது வரை கோயிலில் மோட்ச தீபம் ஏற்றும் இடத்திலேயே – அதாவது இறந்தவர்கள் ஆன்மா சாந்தியடைய திருக்கோயிலில் விளக்கேற்றி வழிபடும் இடத்தில் தான் – தற்போது திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. இது வேதனையான ஒன்றாகும்.
$$$
6. வழக்கறிஞர் ராஜகோபாலனின் உயிர்த்தியாகம்

இந்துமுன்னணியின் இரண்டாவது மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்றவர் மதுரையில் வாழ்ந்த பிரபல வழக்கறிஞர் அமரர் திரு. ராஜகோபால் அவர்கள். மிகவும் எளிமையானவர், கொள்கை உறுதி கொண்டவர். தமிழகத்தில், குறிப்பாக தென் பகுதியில், இந்துக்களின் உரிமைக்காக பல போராட்டங்களை தலைமையேற்று நடத்தியவர்.
இந்து சமய அறநிலையத் துறையின் திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம் மலை உச்சியில் திருக்கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று, மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு போராட்டங்களை ராஜகோபாலன் நடத்தினார்.
1993இல் மலை உச்சியில் தீபம் ஏற்ற வலியுறுத்தி, பழமுதிர்சோலையில் இருந்து திருப்பரங்குன்றம் நோக்கி பாதயாத்திரை மேற்கொண்டார். இது மதுரை இந்து மக்களிடையே மிகப்பெரும் எழுச்சியை உண்டாக்கியது. சாதாரண மக்களிடத்திலும் மலை உச்சியில் மீண்டும் தீபம் ஏற்ற வேண்டும் என்பது நியாயமான விஷயம் என்ற எண்ணம் உருவாக்கியது.
தடியடி கைது:
மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் பிரசார யாத்திரையை ராஜகோபாலன் மேற்கொண்டார். திருப்பரங்குன்றத்தில் தடையை மீறி தீபம் ஏற்ற ராஜகோபாலன் தலைமையில் சென்ற போது, சுமார் 50 பேர் மீது காவல்துறை தடியடி நடத்தி கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்கின்ற கோரிக்கையை வலுவாக மக்கள் மத்தியில் முதன்முறையாகக் கொண்டு சென்றவர் ராஜகோபாலன் அவர்கள். இதனால் ஆத்திரமடைந்த இஸ்லாமிய பயங்கரவாதிகள் 10.10.1994இல் மதுரையில் வழக்கறிஞர் ராஜகோபாலன் அவர்களை அவரது வீட்டின் முன்பே வெட்டி படுகொலை செய்தனர்.
நீதிமன்றத்தின் தீர்ப்பு:
இந்நிலையில் “இந்து சமய அறநிலையத் துறை திருக்கோயில் நிர்வாகம், இந்துக்களின் பாரம்பரிய வழக்கப்படி மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபமேற்ற உத்தரவிட வேண்டும்” என்று இந்துமுன்னணி வழக்கு தொடுத்தது. 1997இல் மதுரை மாவட்ட நீதிமன்றம் “கோயில் நிர்வாகம் மலை உச்சியில் தீபம் ஏற்றிட வேண்டும்” என்று தீர்ப்பு வழங்கியது.
ஆனால் இந்து சமய அறநிலையத் துறை கோயில் நிர்வாகம், தர்கா தரப்பு இஸ்லாமியர்களின் எதிர்ப்புக்கு பயந்து, சிறுபான்மையினர் ஓட்டு வங்கி அரசியலை மனதில் வைத்து, இன்று வரை தீபத்தூணில் தீபமேற்றவில்லை.
ஆயினும், மலை தீபம் ஏற்றிட இந்து முன்னணி தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் போராடி வருகிறது.
(தொடர்கிறது)
$$$
3 thoughts on “திருப்பரங்குன்றம்: திருமறைகள் முதல் தீர்ப்பு வரை… (பகுதி- ஆ)”