முதலில் இந்து. மற்றதெல்லாம் பிறகு…

-லக்ஷ்மி மணிவண்ணன்

இந்து மதம் ஏராளமான கோத்திரங்களால் ஆனது. ஒவ்வொரு கோத்திரமும் தன்னை முழுமையாக நம்பி ஏற்று வழி நடத்துகின்றன. ஒரு கோத்திரத்தைக் கடைபிடிப்பவர் அவரை வழி நடத்தும் கோத்திரமே சிறப்பானது என்றுதான் நம்புவார். அவர் பெறுகின்ற மகத்தான அனுபவங்கள் அதன் நிமித்தம் உண்டானவை ஆதலால், நம்பிக்கை, பக்தி ஆகியவற்றின் அடிப்படையில் அவ்வாறே ஒருவர் கருத இயலும். அதைக் குலைக்க முயலும் செயலும் சொல்லும் செய்யத் தக்கன அன்று. ஆனால் நம்பிக்கைக்கும், பக்தி இரு நிலைகளுடன் மேலும் தங்களை விரித்து கொண்டோர் ஒரு படி மேலானவர்கள். கோத்திரங்களை ஒட்டுமொத்த நிலையில் அணுக வேண்டுமே அல்லது பிரித்து பிரித்து அணுகுதல் கூடாது. அப்படிச் செய்வது கோத்திர சண்டைகளுக்கு வழி வகுக்குமே அல்லாது தார்மிகத்துக்கு ஆகாது.

ஒரு எளிய உதாரணத்திற்கு இதனைச் சொல்கிறேன். இந்து மதம் இதனினும் இதனினும் பல உள் மடிப்புகள் கொண்டது; குல வகைமைகள் கொண்டது. ஒவ்வொன்றும் தன்னிச்சையானதும், கூட்டுறவு கொண்டதும் ஆகும். இவை வேறுபாடுகள் அல்ல. உள் மடிப்புகள். சிருங்காரம் ஆனவை; ஆழமானவை; அழகானவை. இதனை வேறுபாடுகள் எனக் கருதியவர்கள் இவற்றை பகை செய்ய முயன்றனர். அந்த முயற்சியைப் பின்பற்றுவோர் இன்னும் அவற்றை வேறுபாடுகள் எனக் கருதி, பிரித்தாளும் வேலைகள் செய்கிறார்கள்.

இந்து மதம் அளவுக்கு அலங்காரமான, பற்பல வண்ணங்கள் கொண்ட, பன்மைத் தன்மை உடைய, நீடித்த காலத்துடன் நெருக்கமான மாற்ற இயலா உறவு கொண்ட, தத்துவ ஆழம் கொண்ட, எந்தப் போக்கையும் நிராகரிக்காத, வேருக்கும் மலருக்கும் தொடர்புடைய, சம கால விழிப்புணர்வு குன்றாத, ஏற்புணர்ச்சி அதிகம் கொண்ட மதம் வேறு கிடையாது.

ஆனால் ஒரு சித்தரால் ஒரு சாஸ்திரியை ஏற்க இயலாமல் போகலாம். ஒரு ஆச்சாரியனுக்கு ஒரு கிராமக் கோயில் பூசாரி அறிவிலி என்று தோற்றமளிக்கலாம். வெட்டவெளியை தெய்வம் என்று நோக்கும் ஒருவனால் ஒரு பண்டிதன் தோற்கடிக்கப்படலாம். வாய்ப்புண்டு.

எது வண்ணங்களால், வகைகளால் உயர்ந்ததோ அதற்கு உள் முரண்கள் உண்டு. பலவித சிந்தனைப் போக்குகள் நிலவும் இடத்தே சிராய்ப்பும் உரசலும் வரும். அத்தனையையும் ஏற்றுக் கொண்டு நிற்பது இந்து மதம். மகா பிரம்மம்.

எப்படி யார் வாதிட்டாலும், இதுதான் சிறந்தது பிறிதெல்லாம் மட்டம் என்றாலும் அதனால் ஒரு பங்கமும் வராது.

ஆனால் இவற்றை வேறுபாடு காணும் கருத்தியல் வெள்ளைப் பார்வைகளுக்கு செல்லக் கூடாது. அவை இந்து மதத்துக்கு எதிரானவை ஆகும். நம்மை இந்து என்னும் அடையாளத்துக்குள் இருந்து குழு அடையாளத்துக்குள் தள்ளிவிட்டு, ‘போதும் இனி என்னுடைய அடையாளத்தை சூடிக்கொள்’ எனக் கேட்கும்.

ஒரு முஸ்லிமுக்கு  ‘முஸ்லிம்’ என்னும் அடையாளம் மிகவும் தெளிவானது. பிரிவுகள் உண்டா? உண்டு. ஒரு கிறிஸ்தவனுக்கும்  ‘கிறிஸ்தவன்’ என்னும் அடையாளம் பிரதானமானது. பிரிவுகள் உண்டா, ஒருவரை ஒருவர் ஏற்காத சண்டைகள் உண்டா? உண்டு. ஆனால் பொது அடையாளம் மதமே.

இந்துக்களிடம் மாத்திரமே, அதன் மத அடையாளம் குன்றி, பிரிவின், குலங்களின், சாதிகளின் அடையாளம் முதன்மைப் படுத்தப்படுகிறது. வெள்ளையர்களே, கிறிஸ்தவமே நம்மிடம் இந்த பிளவைச் சாதித்தது. இதனை அவ்வாறே தொடர்பவர்கள் அவர்களின் நீட்சி தான்.

இந்துக்களுக்கு அவன் முதலில் இந்து என்கிற அடையாளமே முதன்மைப் படவேண்டும். பிறிது உள்ளவை இரண்டாவதாகவோ, மூன்றாவதாகவோ ஆகலாம். பிறிது உள்ளவற்றைப் பொருட்படுத்த வேண்டாம் என்றால் வேண்டாம். ஆனால் இந்து என்பதே முதன்மை பெற வேண்டும்.

வெளிப்படையாகச் சொல்கிறேன். முதலில் நான் ஒரு இந்து. அதன் பிறகுதான் இந்து நாடார், இந்து தேவர், இந்து பறையர், இந்து வேளாளர் இதெல்லாம். முதலில் இந்து.

எல்லாவற்றுக்கும் பிற்பாடே கோத்திரங்கள் – நான் ஒரு அய்யாவழி என்பதோ, திருநெல்வேலி பிள்ளைமார் என்பதோ , ஸ்ரீரங்கம் ஐயங்கார், சிவகிரி இந்து பறையர் என்பதோ.

இந்த வரிசையை நம்மிடம் எதிரிகள் மாற்றி அமைத்து வைத்திருக்கிறார்கள். நாம் அதனை ஏற்கவே கூடாது. முதலில் இந்து. மற்றதெல்லாம் பிறகு.

$$$

Leave a comment