-பி.ஆர்.மகாதேவன்
இலங்கையில் தமிழர்களுக்கு அரசு வேலையில் அதிக பிரதிநிதித்துவம் முன்பு இருந்தது சரி என்று சொல்லும் அதே நபர்கள் தான், இங்கு (பிரிட்டிஷ் ஆட்சியில்) பிராமணர்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் இருந்தது அநீதி என்றார்கள்… தமிழகத்தின் பிரத்யேகமான வியாதிக்கு சரியான மருத்து எதுவென்று சொல்கிறார் எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன்…

நீதிக் கட்சி பிராமணரல்லாத உயர் ஜாதியினரின் நலனுக்காக உருவாக்கப்பட்டது. 3 % மட்டுமே இருக்கும் பிராமணர்கள் 60 – 70 % அரசு அலுவலகங்களில் இடம்பெற்றிருக்கிறார்கள் என்பது முக்கியமான குற்றச்சாட்டு; அதிருப்தி.
மேலோட்டமாகப் பார்த்தால் நியாயமான காரணத்துக்காக எழுந்த இயக்கம் போலத்தான் தோன்றும். ஆனால் எப்போதும்போல பல உண்மைகளை மறைத்து, ஒரு உண்மையை மட்டுமே பேசிச் செய்யப்படும் அநீதியே இந்தக் கட்சியின் தொடக்கத்திலும் இருக்கிறது. முதல் கோணல் முற்றும் கோணலாகத்தானே ஆகும்? அப்படியே ஆகியும் விட்டிருக்கிறது.
தமிழகத்தில் நடந்தேறியிருக்கும் வளர்ச்சி எல்லாம் நவீனக் காலத்தில் இயல்பாக நடந்தவையே. பிற மாநிலங்களில் இல்லாத வளர்ச்சிக்கு, பிற மாநிலங்களுக்கு இல்லாத கடந்த கால நிகழ்வுகளே காரணம். தமிழக வளர்ச்சிக்கு திராவிட இயக்கம் காரணம் அல்ல. அது ஆதி முதல் அந்தம் வரை பிறருடைய சாதனைகளைத் தன்னுடையாத ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ளும் கம்பெனி மட்டுமே.
முதலில் மண்ணின் மைந்தர்களான 3 % பிராமணர்களுக்கு 60 – 70 % பதவிகளைத் தந்தவர்கள் பிரிட்டிஷார் – கிறிஸ்தவர்கள்.
அதுவும் பிரிட்டிஷ் அரசுப் பணிகளில் ஒட்டுமொத்த வேலைகளில் 60 – 70 % ஐத் தந்துவிடவில்லை. உயர் பதவிகள், முடிவெடுக்கும் அதிகாரம் எல்லாம் பிரிட்டிஷ் உயர் அதிகாரிகளிடமும் கவர்னரிடமும் லண்டனிடமும்தான் இருந்தன. குமஸ்தா, ப்யூன் வேலைகள் மட்டுமே இந்தியர்களுக்குத் தரப்பட்டது.
இந்தியர்கள் நீதிபதி என்ற அளவுக்கு உயர்ந்தாலும், பிரிட்டிஷாரை விசாரிக்கும் அதிகாரமெல்லாம் கிடையாது என்றுதான் மட்டம் தட்டி வைத்திருந்தார்கள்.
எனவே இந்துக்களுக்குத் தரப்பட்ட அதிகாரம் இல்லாத ஏவல் பணிகளில் 60 – 70 % தான் பிராமணர்களுக்குத் தரப்பட்டதென்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்தப் பதவிகளை பிறப்பின் அடிப்படையில் இட ஒதுக்கீடு போலெல்லாம் பிரிட்டிஷார் தரவில்லை. கல்வி, தேர்வு, நேர்முகத் தேர்வு என எல்லாம் முறையாக வைத்து மெரிட்படியே இந்தப் பதவிகளைத் தந்தார்கள்; கோட்டா சிஸ்டம் அல்ல.
கல்வியை அனைத்து ஜாதிகளுக்கும் தரவும் செய்தார்கள். ஆக, யார் அந்தக் கல்வித் தேர்வுகளில் முறையாக வெற்றி பெற்றார்களோ அவர்களுக்கே அந்தப் பதவிகள் தரப்பட்டன. பிராமணர்கள் உழைத்து அதைப் பெற்றனர்.
இலங்கையிலும் இதே விஷயம் தான் நடந்தது. இலங்கையில் தமிழர்கள் எத்தனை சதவிகிதம் இருந்தார்களோ அதைவிட அதிக அரசுப் பதவிகளில் அவர்களுக்குப் பிரதிநிதித்துவம் இருந்தது. இதை எதிர்த்துத்தான் சிங்களர்கள் போராடினார்கள். ஆனால் இங்கு பிராமணர்கள் எப்படிக் கல்வியில் சிறந்து விளங்கி அரசுப் பதவிகளைப் பெற்றார்களோ அதுபோலவேதான் அங்கும் தமிழர்கள் உழைத்து அந்தப் பதவிகளைப் பெற்றிருந்தார்கள். அதை தமிழர்கள் தமது பெருமையாகவும் உரிமையாகவுமே நினைத்தனர்.
இலங்கையில் தமிழர்கள் தமது அரசு வேலையும் முக்கியத்துவமும் குறைக்கப்பட்டபோது கிறிஸ்தவத் தூண்டலின் பேரில் ஆயுதம் ஏந்தினார்கள். ஆனால், தமிழகத்தில் பிராமணர்கள் தமது அரசு வேலைகள் பறிக்கப்பட்டபோது மேற்கத்திய வளர்ச்சியால் ஈர்க்கப்பட்டு தனியார் வேலைகளுக்கும், அங்கிருந்து அயல்நாடுகளுக்கும் நகர்ந்தார்கள்.
போர்க்கால அகதிகளாக வெளியேறி உலகம் முழுவதும் இலங்கைத் தமிழர்களும் இருக்கிறார்கள். புதிய வாய்ப்புகளைத் தேடியும் உருவாக்கிக் கொண்டும் புறப்பட்ட பிராமணர்களும் உலகம் முழுவதும் இருக்கிறார்கள்.
இலங்கையில் தமிழர்களுக்கு அரசு வேலையில் அதிக பிரதிநிதித்துவம் முன்பு இருந்தது சரி என்று சொல்லும் அதே நபர்கள் தான், இங்கு (பிரிட்டிஷ் ஆட்சியில்) பிராமணர்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் இருந்தது அநீதி என்றார்கள்.
உண்மையில், பிரிட்டிஷ் கிறிஸ்தவர்களை எதிர்த்துத்தான் நீதிக் கட்சி போராடியிருக்க வேண்டும். ஆனால் அதிகாரம் யாரிடம் இருக்கிறதோ அவர்களை எதிர்க்கக் கூடாதென்பது நல் அடிமைகளின் முதலும் கடைசியுமான சிந்தனையாக இருக்கும். இதற்கு நிச்சயம் பகுத்தறிவு அவசியம். அது நீதிக் கட்சியினரிடம் இருந்தது.
எனவே வேலை கொடுத்த கிறிஸ்தவர்களை விட்டுவிட்டு, வேலை பார்த்த பிராமணர்களை எதிர்த்து கட்சி தொடங்கினார்கள். உண்மையில் ‘பிராமணரல்லாதார் இயக்கம்’ அல்ல; கிறிஸ்தவ பிரிட்டிஷ் எதிர்ப்பு இயக்கமே ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால், அதிகாரம் இருந்த கிறிஸ்தவரிடம் சென்று கூழைக் கும்பிடு போட்டனர். “நீ போய் பார்ப்பானை எதிர்த்துப் போராடு” என்று துண்டுச் சீட்டில் எழுதிக் கொடுத்து அனுப்பினார்கள்.
பிரிட்டிஷார் பெட்டி படுக்கைகள், நடமாடும் கக்கூஸ்கள் (இதை தலித்களைத்தான் பராமரிக்க வைத்தார்கள் கிறிஸ்தவ எஜமானர்கள்) ஆகியவற்றுடன் புறப்பட்டுப்போனது மட்டுமல்ல; பிராமணரல்லாதாரும் போலி நாத்திக, இந்து வெறுப்பாளர்களுமானவர்களின் கைகளில் ஆட்சி வந்துவிட்டது. அதன் பின்னரும் துண்டுச் சீட்டைக் கீழே வைக்கவில்லை. புதிதாக ஒரு வார்த்தைகூட அதனுடன் சேர்க்கவில்லை.
இப்போது அவர்கள்தான் ஆட்சியில் இருக்கிறார்கள். அப்படியானால் யாரை எதிர்க்கிறார்கள்?
அதற்குத்தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த மாய எதிரியை உருவகம் செய்துகொள்கிறார்கள். அரசியல் சாசனம் தான் ஆட்சியில் இருக்கிறது. ஆனால் மனு நீதி இருப்பதாக மாயையை உருவாக்குகிறார்கள். மனு நீதியின் மிகை முக்கியத்துவம், மிகை அவதூறு எல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், அது இன்று அமலில் இல்லை.
ஜாதி உணர்வு இருக்கும்வரை மனு நீதியே இருப்பதாக அர்த்தம்; திமுகவினர் செய்யும் அராஜகங்கள் அனைத்துக்கும் மனுவே காரணம்; ஜாதி உணர்வுடன் யார் எது செய்தாலும் மனுவே காரணம் என்பதெல்லாம், எஜமான் காலடி மண்ணெடுத்து நெற்றியில் பூசிக் கொள்வது போன்ற சுய மரியாதை பக்தியே. அதிலும் அவர்கள் நடந்து போய் 75 ஆண்டுகளுக்கும் மேல் கழிந்துவிட்டன. இருந்தும் அவர்களுடைய ஷூ காலடி பதிந்து புழுதியான மண்… அவர்களுடைய ஆசன வாய் அழுத்திய சிம்மாசனம் என்று விழுந்து புரண்டு கும்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இதில் இன்னொரு வேதனையான வேடிக்கை என்னவென்றால், சொற்ப சம்பளம் தரும் பிரிட்டிஷ் அரசுப் பணிகள் மட்டுமே பிராமணர்களிடம் இருந்தன. மீதி பெருநில உடமை, வணிகம், நவீனத் தொழில்கள் என எல்லாமும் பிராமணரல்லாதாரிடமே இருந்தன. ஆனால் பிராமணரர்கள் முறையாகப் பெற்ற அந்த அரசு வேலையும் நீதிக் கட்சியினரின் கண்ணை உறுத்தின. இது பால்வாடி ஆயாவின் சம்பளத்தைப் பார்த்து கிருத்திகா உதயநிதி பொறாமைப்படுவதைப் போன்றது.
இந்தப் பொறாமையை நியாயப்படுத்திக்கொள்ள, “பிராமணர்கள் எங்களை சூத்திரர்கள் என்று சொல்லிவிட்டார்கள்” என்று ஒரு புதிய முழக்கத்தை உருவாக்கிக் கொண்டார்கள். தம்மைத்தாமே இழிவுபடுத்திக் கொண்டார்கள். இது கூட அற்ப பிழைப்பு வாதம், கிறிஸ்தவ விசுவாசம் என்று சொல்லி விட்டுவிடலாம்.
ஆனால், 2000 ஆண்டுகளாக மன்னர்களாக, பெருநில உடையார்களாக, மா நாயக்கர்களாக, கல்வி, செல்வச் செழிப்பு, அதிகாரம், கலை, தொழில் என அனைத்திலும் பிராமணர்களுக்கு இணையாக உன்னத நிலையில் இருந்த தம் முன்னோர்கள் அனைவரையும் தம்மைப் போலவே இழி சனங்களாகச் சொல்லி, சேற்றை வாரி வீச ஆரம்பித்தனர். இன்றும் அந்த சேற்றைத்தான் சந்தனமாகப் பூசிக் கொண்டு திரிகிறார்கள்.
பிரிட்டிஷார்தான் போய்விட்டார்களே… அந்தத் துண்டுச் சீட்டை இனியாவது கீழே போடக் கூடாதா..?
உண்மையில் பிராமணரல்லாதவர்கள் எல்லாருமே இப்படியான மலினத்தில் வீழ்ந்துவிடவில்லை. நீதிக்கட்சி – திக – திமுக என உருமாறியவைதான் பெருந்தொற்றாக, பேரிடராக 100 ஆண்டுகளுக்கு மேல் நம்மை முடக்கிவருகின்றன.
உண்மைதான். மூல வைரஸ்களைவிட உருமாறிய வைரஸ்கள் ‘மோர் டேஞ்சரஸ்’ தான்.
சீன வைரஸுக்கு இந்தியா மருந்து கண்டுபிடித்து ஒழித்துவிட்டது; உலகையும் காப்பாற்றிவிட்டது.
இந்துக்கள் போலி திராவிட வைரஸை அனுசரித்து வாழப் பழகிவிட்டார்கள்.
‘இந்தியா ஃபர்ஸ்ட்’ என்று சொல்லும் நபர்கள் ‘இந்து ஃப்ர்ஸ்ட்’ என்று சொல்லும் நாள் வர வேண்டும். அப்போதுதான் இதற்கான தடுப்பு மருந்து உருவாக்கி, ஊரையும் உலகையும் காக்க முடியும்.
எந்த நோயும் சிறிதாக இருக்கும்போதே குணப்படுத்துவதுதான் எளிது. கால தாமதம் ஆகிவிட்டது. இப்போதும் நோய் முற்றிவிடவில்லை. ஆனால் இப்போதும் எதுவும் செய்யாவிட்டால், மேலும் முற்றும்.
போலி திராவிட விஷத்துக்கு இந்து உடல்கள் பழகிக் கொள்வதென்பது பாரதத்தையும் நாளை பாதிக்கும்.
சுருக்கமாக, அழுத்தமாகச் சொல்வதென்றால் ‘இந்து ஃப்ர்ஸ்ட்’ என்று சிந்தித்தால்தான் ‘இந்தியா ஃப்ர்ஸ்ட்’ என்பதைச் சாதிக்க முடியும்.
$$$