-ஆசிரியர் குழு

”பாரதம் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு உடையது. நாடு முழுதும், கலியுக தேதியிட்ட 905 கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன” என, தமிழக ஆளுநர் திரு. ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
வரலாற்று ஆசிரியரும், கல்வெட்டு நிபுணருமான டாக்டர் எம்.எல்.ராஜா எழுதிய, ‘கலியுக தேதியிட்ட கல்வெட்டுகள்’ என்ற ஆங்கில நூலின் வெளியீட்டு விழா, சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நவ. 25 ஆம் தேதி நடந்தது.
ஆளுநர் ஆர்.என்.ரவி நூலை வெளியிட்டார். பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியன், தொல்லியல் நிபுணர் ஸ்ரீதரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இவ்விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:
நான் பள்ளியில் படிக்கும் போது, ஆங்கிலேயர் ஆட்சியில் நிகழ்ந்த கொடுமைகளை, பாதிக்கப்பட்டோரிடம் இருந்து நேரடியாகக் கேட்டுள்ளேன். ஆனால், தற்போதைய பாடப் புத்தகங்களில் ஆங்கிலேயர் நல்லாட்சி வழங்கியதாக எழுதப்பட்டிருக்கிறது. அவர்கள் ஆட்சியில், நமது பாரம்பரியம், கலாசாரம் அழிக்கப்பட்டதுடன், வரலாறுகள் மறைத்தும், திருத்தியும் எழுதப்பட்டன.
சுதந்திரத்திற்குப் பின்னரும், அவர்களைப் பின்பற்றுவோர், நம் நாகரிகம் மற்றும் கலாசார வரலாற்றை அழித்து வருகின்றனர். ஆனால், தற்போது இந்தியா விழித்துக் கொண்டுள்ளது.
இளம் தலைமுறையினர், தங்களுக்கான இலக்கை நோக்கி பயணிக்கின்றனர். பாரதம், 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு உடையது. தற்போதும், கிராமப்புறங்களில் உள்ளோர் கலியுகத்தை நம்புகின்றனர். ஆனால், கல்லுாரிகளில் மாணவர்கள் படிக்கும் புத்தகங்களில், கலியுகம் என்பது ஒரு கட்டுக்கதை என்று கூறப்படுகிறது.
இச்சூழலில், கலியுகத்தை உறுதி செய்யும் வகையில், கலியுக தேதியிட்ட, 905 கல்வெட்டுகள், இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
இந்தப் புத்தகம் நம் வரலாற்றை மேலும் ஆராய்ச்சி செய்ய, ஒரு மைல்கல்லாக உள்ளது. இதேபோல, நாமும் நமது வரலாற்றைத் தேடி, ஆய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு ஆளுநர் பேசினார்.
நூலாசிரியர் டாக்டர் எம்.எல்.ராஜா பேசியதாவது:
‘கலியுகம் என்பது ஒரு கட்டுக்கதை’ என சிலரால் கூறப்படுகிறது. பாரத தேசத்திற்கான காலக்கணக்கு இல்லை என ஐரோப்பியர்கள் கூறுகின்றனர்.
ஆனால், நாடு முழுதும், கலியுக தேதியிட்ட 905 கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இவற்றில் சில 5,000 ஆண்டுகளுக்கு முந்தையவை. அவற்றில் குறிக்கப்பட்டுள்ள காலத்தைக் கணக்கிடுகையில், பாரதம் 5,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்பது நிரூபணமாகிறது.
ஜம்மு – காஷ்மீர் முதல் தமிழகம் வரை, பல பகுதிகளிலும், வெளிநாடுகளிலும், அதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. அவற்றுள், திருப்பூர் மாவட்டத்தில் மட்டுமே 60க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன.
நம் பல்கலைக்கழகங்களில், தவறான வரலாறுகளை சொல்லித் தருகிறோம். அவற்றை சரியாக எழுத வேண்டும். அதற்கு இன்னும் பல ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
- நன்றி: தினமலர்
$$$