தேசத்திற்கு வழிகாட்டும் பிகார் மக்கள்!

-சேக்கிழான்

பிகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் நாடு முழுவதும் மாபெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. பிரிவினைவாதச் சிந்தனையுடன் கூடிய கட்சிகளின் கூட்டணியான மகா கட்பந்தனுக்கு படுதோல்வியைப் பரிசளித்த பிகார் மக்கள், நல்லாட்சி நாயகன் நிதிஷ்குமார் மீண்டும் ஆட்சியில் அமர்வதற்கு நான்கில் மூன்று பங்கு பெரும்பான்மையை வழங்கி, தங்கள் அறிவுத் திறனை நிரூபித்துள்ளனர்.

இத்தேர்தலை ஆரம்பத்தில் இருந்தே காங்கிரஸ் – ஆர்.ஜே.டி. கட்சிகள் ஆக்கப்பூர்வமாக அணுகவில்லை. தேர்தல் ஆணையம் மேற்கொண்ட சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை (எஸ்.ஐ.ஆர்.) அக்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன; உச்சநீதிமன்றம் வரை சென்று போராடின. ஆனால், நீதிமன்றம்  ‘எஸ்.ஐ.ஆர். மேற்கொள்ளத் தடையில்லை’ என்று தீர்ப்பளித்தது. அதையடுத்து, தேர்தல் ஆணையம் மத்திய பாஜக அரசின் கையாளாகி விட்டது என்று, அக்கட்சிகள் பிரசாரம் செய்தன. காங்கிரஸ் இளவரசர் ராகுல் காந்தியோ, வாக்குத் திருட்டை எதிர்த்துப் போராடுவதாகக் கூறி பிகாரில் பேரணிகளை நடத்தினார். ஆனால், உண்மை நிலையை உணர்ந்திருந்த மக்கள் அவரது பொய்ப் பிரசாரத்தை நம்பவில்லை.

வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்த காலமானோர், புலம் பெயர்ந்தோர், பல இடங்களில் இடம்பெற்றோரின் பெயர்கள் மட்டுமே நீக்கப்பட்டன. அவ்வாறு நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 லட்சம். வாக்காளர் பட்டியலில் இருந்து நியாயமற்ற முறையில் ஒருவர் நீக்கப்பட்டதாகத் தெரியவந்தாலும், எஸ்.ஐ.ஆரைத் தடை செய்வோம் என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்திருந்தது. ஆனால், தேர்தல் நடைமுறைக் காலத்தில் இந்த 60 லட்சத்தில் ஒருவர் கூட எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்பதில் இருந்தே, வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்டதன் அவசியம் மக்களுக்குப் புரிந்துவிட்டது.

எனவே, ‘வோட் சோரி’ (வாக்குத் திருட்டு) என்று முழங்கிய மகா கட்பந்தனின் தேர்தல் திட்டத்தை மக்கள் முற்றிலும் நிராகரித்துவிட்டனர். இதனை உணராமல், தமிழகத்திலும் மேற்கு வங்கத்திலும் உள்ள இண்டி கூட்டணி கட்சிகள் இதனையே ஒப்பித்துக் கொண்டிருக்கின்றன. இதன் பலனை அக்கட்சிகள் விரைவில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் அறுவடை செய்யும்.

பிகார் தேர்தல் முடிவுகள்:

பிகார் சட்டசபையின் மொத்த பலம்: 243. இதில் ஆட்சி அமைக்க 122 எம்.எல்.ஏ.க்கள் தேவை. சட்டசபைத் தேர்தல் இரு கட்டங்களாக (நவ. 6, 11) நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் நவ.14இல் வெளியாகின. முன்கணிப்புகளைப் போலவே தேசிய ஜனநாயக கூட்டணி வாகை சூடியிருக்கிறது. இதில் ஒரு சிறப்பு என்னவென்றால், முன்கணிப்பாளர்கள் கூட எதிர்பார்க்காத அளவில், 202 இடங்களில் வென்று, தே.ஜ.கூட்டணி மாபெரும் சாதனை படைத்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியையும் பிகார் முதல்வர் நிதிஷ்குமாரையும் வாய்க்கு வந்தபடி அவதூறு பேசிய தேஜஸ்வி- ராகுல் கூட்டணிக்கு அம்மாநில மக்கள் சரியான பாடம் கற்பித்திருக்கின்றனர்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி நிலவரம்: பாஜக- 89, ஐக்கிய ஜனதாதளம்- 85, லோகஜனசக்தி (எல்.ஜே.பி.) – 19, ஹிந்துஸ்தான் அவாமி மோர்ச்சா (ஹெச்.ஏ.எம்.) – 5, ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சா (ஆர்.எல்.எம்.) – 4; மொத்தம்- 202

மகா கட்பந்தன் நிலவரம்: ராஷ்ட்ரீய ஜனதாதளம் (ஆர்.ஜே.டி.) – 25, காங்கிரஸ் – 6, சி.பி.எம். – 1, ஐ.ஐ.பி. -1, சி.பி.ஐ-எம்.எல்- 2; மொத்தம்: 35.

சென்ற தேர்தலில் 75 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக வென்றிருந்த ஆர்.ஜே.டி. இம்முறை 25 இடங்களில் சுருண்டது. எல்லாப் புகழும் திருவாளர்கள் ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கே. பிகாரில் இளம் தலைவராக வளர்ந்துவந்த தேஜஸ்வி யாதவ், தகாத சகவாசத்தால், உள்ளதும் போச்சு என்று புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இத்தேர்தல் முடிவுகளில் தாக்கம் செலுத்திய சில காரணிகளைப் பார்ப்போம்:

1. கட்பந்தனின் கூட்டணி குளறுபடிகள்:

மகா கட்பந்தன் கூட்டணியின் ஆரம்பமே கோணல். செயலற்ற ராகுல் காந்தியை ‘செயல்’தலைவராகக் கொண்ட காங்கிரஸ் கட்சி ஆரம்பத்தில் இருந்தே ஆர்.ஜே.டி.யுடன் முரண்டு பிடித்தது. 70க்கு மேற்பட்ட தொகுதிகள் கேட்டது, முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வியை ஒப்புக்கொள்ள மறுத்தது, தேர்தல் பிரசாரத்தில் ஒத்துழையாமை என்று ராகுல் காந்தி படுத்திய அத்தனை சிரமங்களையும் தாங்கிக் கொண்டு அமைதி காத்தார் தேஜஸ்வி. ஒருவழியாக, ஆர்.ஜே.டி- காங்கிரஸ்- கம்யூனிஸ்டு கட்சிகளின் கூட்டணி அமைந்தது.

ஆயினும், பல இடங்களில் கூட்டணி நலனை மீறி கூட்டணிக் கட்சிகள் ஒன்றுக்கொன்று எதிராகப் போட்டியிட்டன. முதல்கட்டத் தேர்தல் வரை மகாகட்பந்தனில் தொகுதிப் பங்கீடே உறுதியாகவில்லை; தேர்தல் அறிக்கையும் வெளியாகவில்லை. இவை மகாகட் பந்தனின் நம்பகத் தன்மையைக் குறைத்துவிட்டன.

அதிலும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு தொகுதி ஒதுக்கப்படாததால் அக்கட்சி தனித்து களம் கண்டது. சீமாஞ்சல் பகுதியில் செல்வாக்குடன் இருக்கும் அசாதுதீன் ஓவைஸியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி எப்படியாவது மகா கட்பந்தனில் சேரத் துடித்தது. அக்கட்சியை கட்பந்தன் தலைவர்கள் கண்டுகொள்ளாததால் அக்கட்சி தனித்துப் போட்டியிட்டு, சுமார் 20 தொகுதிகளில் சேதம் ஏற்படுத்தியது.

இந்நிலையில், புதிய கட்சியாக களமிறங்கிய பிரசாந்த் கிஷோரின் ஜன சுராஜ் கட்சி வெற்றி பெறாவிட்டாலும், குறிப்பிடத்தக்க இளம் தலைமுறை வாக்காளர்களின் வாக்குகளைப் பிரித்தது. அக்கட்சியை மாறுதலுக்கான கட்சியாக பிகார் மக்கள் கருதவில்லை.

மாறாக, ஆளும் கூட்டணியில் தொகுதிப் பங்கீடுகள் சுமுகமாக நடைபெற்றன. உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் நேரடி முயற்சியால், கூட்டணி வலுவானது. சென்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட லோக் ஜனசக்தியும் இம்முறை கூட்டணியில் இடம்பெற்றது. இத்தேர்தலில் இளம் தலைவராக உருவாகி இருப்பவர் லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பஸ்வான் தான். முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சியின் ஹெச்.ஏ.எம், ராஜ்யசபா எம்.பி. உபேந்திர குஷ்வாஹாவின் ஆர்.எல்.எம். கட்சிகளும் சமூக ஒருங்கிணைப்பில் பெரும் பங்கு வகித்தன. அதன் விளைவு தேர்தலில் வெளிப்பட்டது.

2. நிதிஷுக்கு மகளிரின் பேராதரவு:

இத்தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 67.13 % வாக்குகள் பதிவாகின. குறிப்பாக மகளிரின் தேர்தல் பங்களிப்பு (71.6 %) பிரமிக்கத்தக்கதக இருந்தது. இதற்கு அடிப்படைக் காரணம், பிகாரில் நிதிஷ்குமார் அரசு அமல்படுத்தியுள்ள மதுவிலக்குக் கொள்கை தான். இதன் சிறப்பை அறிந்த மகளிர் நிதிஷ்குமாரை ஒரு குடும்பப் பெரியவராகவே கருதுகிறார்கள்.

மாறாக, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் கள்ளுக்கடைகள் திறக்கப்படும் என்று அறிவித்த தேஜஸ்வியையும், மதுபானக் கடைகளைத் திறப்போம் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவித்த ஜன சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோரையும் பிகார் பெண்கள் விரும்பவில்லை. அதுவும் தே.ஜ. கூட்டணியின் பிரமாண்ட வெற்றிக்கு அடித்தளமானது. விரைவில் தேர்தலைச் சந்திக்கப்போகும் தமிழகம் கற்க வேண்டிய பாடம் இதில் உள்ளது.

உள்ளாட்சிகளில் பெண்களுக்கு 50 % ஒதுக்கீடு கொண்டுவந்ததும், முதல்வர் நிதிஷ்குமாரின் மதிப்பை மக்களிடையே உயர்த்தின.

3. காட்டாட்சியும் நல்லாட்சியும்:

அது மட்டுமல்ல, முந்தைய ஆர்.ஜே.டி. ஆட்சியில் மக்கள் பட்ட அல்லல்களையும், சமூகவிரோதிகளின் காட்டாட்சியையும் பிகார் மக்கள் இன்னமும் மறக்கவில்லை. யாதவர்கள், முஸ்லிம்களின் வாக்குகளைக் கொண்டு காட்டு தர்பார் நடத்திய லாலுவை நினைத்தாலே, பிற சமூகத்தினர் குலை நடுங்கினர். இதனை பாஜக கவனமாகப் பயன்படுத்திக் கொண்டது. பிரதமர் மோடி தனது பிரசாரக் கூட்டத்தில் “லாலுவின் காட்டாட்சியா, நிதிஷின் நல்லாட்சியா, எது தேவை?” என்று கேட்டது மக்களிடையே தெளிவாகச் சென்று சேர்ந்தது.

ஆர்.ஜே.டி. ஆட்சியில் மகளிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருந்தது. நிதிஷ்குமார் ஆட்சியில் சமூகவிரோதிகள் வெளியே வரவே அஞ்சும் சூழல் இருந்தது. இதனை பிகார் பெண்கள் மறக்கவில்லை.

அதுபோலவே, ஆர்.ஜே.டி. ஆட்சியில் ஊழல் கரைபுரண்டது. சோஷலிஸ்டு தலைவரான நிதிஷ்குமாரின் ஆட்சியில் ஊழல் குறைந்தது. பக்கபலமாக மோடி தலைமையிலான மத்திய அரசும் இருந்தது. தவிர தேஜஸ்வி- ராகுல் இணையின் வாரிசு அரசியலை அம்மாநில மக்கள் விரும்பவில்லை. எனவே இரட்டை எஞ்சின் ஆட்சிக்கு பிகார் மக்கள் கொடி பிடித்தனர்.

4. நலத் திட்டங்கள் அளித்த நன்மதிப்பு:

ஏற்கனவே, விவசாயி சம்மான் போன்ற மத்திய அரசின் பல்வேறு நலத் திட்டங்களால் பிகார் மக்கள் பயனடைந்து வந்த நிலையில், நிதிஷ்குமார் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் மக்களின் வரவேற்பைப் பெற்றன. முதியோர் ஓய்வூதியம் ரூ. 400லிருந்து ரூ. 1,100ஆக உயர்த்தப்பட்டது, 125 யூனிட் பயன்பாடு வரை இலவச மின்சாரம், மாணவிகளுக்கு பாலிகா சைக்கிள் யோஜனா, மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு ஜீவிகா சுழல் நிதி ஆகிய திட்டங்களை அவர் நடைமுறைப்படுத்திவந்தார். இவை அனைத்திற்கும் மேலாக தேர்தல் அறிவிப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னர் அவர் அறிவித்த ‘முதலமைச்சரின் மஹிளா ரோஜ்கர் யோஜனா’ திட்டம் (ரூ. 2 லட்சம் நிதி வழங்கும் திட்டம்), தேஜஸ்வியின் முதல்வர் பதவிக் கனவுக்கு வேட்டு வைத்தது.

இத்திட்டத்தின்படி, பிகாரில் தொழில் தொடங்க சுயஉதவிக் குழு பெண்களுக்கு உதவும் வகையில், ரூ. 10,000 உடனடியாக 1.3 கோடி பெண்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. வரும் வாரங்களில் மீதமுள்ள தொகையும் தவணை முறையில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை தேஜஸ்வி எதிர்பார்க்கவில்லை.

வீட்டுக்கு ஒருவருக்கு வேலைவாய்ப்பு, பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 2,500 உதவித்தொகை, சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ 30,000 வழங்கப்படும் என்பது போன்ற நிறைவேற்ற இயலாத வாக்குறுதிகளை அளித்த ஆர்.ஜே.டி. கட்சிக்கு நிதிஷ்குமாரின் இந்த நலத் திட்ட அறிவிப்பு சம்மட்டி அடியாக இருந்தது. தேஜஸ்வியின் சாத்தியமற்ற வாக்குறுதிகளை விட, கண்முன் சாத்தியமாகிவிட்ட மகளிர் வேலைவாய்ப்புத் திட்ட நிதியளிப்பு பிகாரின் வாக்குப்பதிவை அதிகரித்தது.

தேர்தலை ஒட்டி நிதிஷ்குமார் இதனை அறிவித்தது தேர்தல் விதிமுறை மீறல் என்று புலம்பிய கட்பந்தனை தேர்தல் ஆணையமும், மக்களும் கண்டுகொள்ளவில்லை. தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே நிதிஷ்குமார் செய்த பெரும் சாணக்கியச் செயல் இது. பிகார் தேர்தல் முடிவில் பெரும் தாக்கம் செலுத்திய அரசு முடிவு இது. மத்திய, மாநில அரசு நலத் திட்டங்களின் பயனாளிகள் தேர்தலில் பெரும் மாற்றம் ஏற்படுத்தினர்.

5. தேஜஸ்வியை அழித்த தவறான நட்பு:

இத்தேர்தல் நடைபெறுவதற்கு ஆறு மாதங்கள் முன்பு வரை நிதிஷ்குமார் அரசு மீது பரவலான அதிருப்தி இருப்பதாக தகவல்கள் வந்தன. தேஜஸ்வி யாதவ் மீது அனைவரின் பார்வையும் குவிந்து வந்தது. ஆனால், தனது கூட்டணியில்  ‘சிறுபிள்ளைத்தனமான’ ராகுலைச் சேர்த்துக் கொண்டதும், தனது தேர்தல் பிரசாரத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அழைத்ததும் அவருக்கு வேண்டாத வினையாகிப் போயின. குறிப்பாக, தமிழகத்தில் பிகாரி தொழிலாளர்களை “பீடா வாயன்கள், பேல்பூரியன்கள், கக்கூஸ் கழுவ பிகாரிலிருந்து வந்தவர்கள், வடக்கன்கள்” என்றெல்லாம் பேசிய திமுக அமைச்சர்கள், மேடைப் பேச்சாளர்களின் பேச்சுகளை பிகாரிகள் மறக்கவில்லை. அதனை பிரதமர் மோடி தனது தேர்தல் பிரசாரத்தில் சுட்டிக் காட்டவும் மறக்கவில்லை. எனவே, பெருவாரியான பிகாரி தொழிலாளர்களின் ஆதரவை மகா கட்பந்தன் இழந்தது.

பிகாரிகள் குறித்த திமுக தலைவர்களின் அநாகரிகப் பேச்சுகளை பாஜக ஹிந்தி மொழியாக்கத்துடன் மக்களிடம் கொண்டுசேர்க்கத் தவறவில்லை.  அதனை ஆங்கில ஊடகங்கள் சிக்கெனப் பிடித்துக் கொண்டு விவாதித்து, திமுகவை கழுவில் ஏற்றின. தவிர சநாதனத்தை ஒழிப்போம் என்று பேசிய உதயதிதி, ஆ.ராசா போன்றோரின் ஒளிப்படக் காட்சிகள் பிகார் பாஜகவினரால் தகுந்த நேரத்தில் மக்கள் பார்வைக்கு முன்வைக்கப்பட்டன. இவையும் பிகார் தேர்தலில் பெரும் தாக்கம் செலுத்தின. இனிவரும் நாட்களில் எந்த ஒரு மாநில மக்களையும், எந்த ஒரு மதத்தையும் கேவலப்படுத்தக் கூடாது என்ற பாடத்தை திமுக பெற்றிருக்கிறது. ஸ்டாலினுடன் எக்காலத்திலும் சேரக் கூடாது என்ற பாடத்தை தேஜஸ்வி பெற்றிருக்கிறார்.

6. மேலும் சில அம்சங்கள்:

அ. ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம்சேவகர்கள் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி பிகாரின் ஒருமாத காலம் நடத்திய பிரசாரம் வாக்குப் பதிவை அதிகரித்துள்ளது.

ஆ. தொடர்ந்து ஆட்சியில் இருப்பதால் மக்களிடையே ஏற்படும் சலிப்பைப் போக்க புதிய வேட்பாளர்களை பாஜக பல இடங்களில் களம் இறக்கியது. இதற்கு சிறந்த உதாரணம், 25 வயதே ஆன கிராமியப் பாடகி மைதிலியை களம் இறக்கியது. அவர் ஆர்.ஜே.டி. கட்சி வசம் பல ஆண்டுகளாக இருந்த அலிநகர் தொகுதியில் வென்று சாதனை படைத்தார்.

இ. வாக்குச்சாவடி அளவிலான ஒருங்கிணைந்த பணியே இத்தேர்தலில் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம். பாஜகவும் ஐக்கிய ஜனதாதளமும் பூத் நிர்வாகத்தில் சிறப்பாகச் செயல்பட்டன. ஆர்.ஜே.டி கட்சி இதில் சிறப்பாக செயல்பட்டபோதும், காங்கிரஸ் கட்சியின் சுமையால் பல தொகுதிகளில் கவனம் கொடுக்க முடியவில்லை.

ஈ. மத்தியில் திறமையான பிரதமர் நரேந்திர மோடி, மாநிலத்தில் அப்பழுக்கற்ற முதல்வர் நிதிஷ்குமார் என்ற கூடுதல் சிறப்பு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இருந்தது. எதிர்த்தரப்பிலோ, மாட்டுத்தீவன ஊழல் புகழ் லாலுவின் மகன் தேஜஸ்வியும், ஊழலுக்கென்றே கட்சி நடத்தும் காங்கிரஸ் கட்சியின் ராகுலும் இருந்தனர். புதிய கட்சியுடன் களம் இறங்கிய பிரசாந்த் கிஷோர் இந்த இரு அணியிடையே நசுங்கி காணாமல் போனார். மக்கள் தெளிவான பார்வையுடன், வளர்ச்சிக்கான அரசு என்று பேசிய பாஜக – ஐக்கிய ஜனதாதளம் கட்சிகள் அமைத்த தேசிய ஜனநாயகக் கூட்டணியை பெருவாரியாக ஆதரித்து வெற்றி பெறச் செய்துள்ளனர்.

உ. ஜாதி, மதப் பிரிவினைகளைக் கொண்டு வெல்லலாம் என்று கனவு காணும் அரசியல்வாதிகளுக்கு பிகார் தேர்தல் அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கிறது. முஸ்லிம் வாக்குவங்கியை வைத்துக் கொண்டு இனியும் மிரட்ட முடியாது என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. இஸ்லாமியர்கள் அதிகமுள்ள தொகுதிகளிலும் கூட தே.ஜ.கூட்டணி வென்றுள்ளது. மக்கள் நலத் திட்டங்கள் மதப் பிரிவினையை மீறி பாஜக கூட்டணிக்கு சாதகமாகி இருக்கின்றன.

மொத்தத்தில், மக்கள்நலக் கண்ணோட்டத்துடன், நேர்மையாகவும் ஊழலற்றும் ஆட்சி செய்தால் மக்கள் தொடர்ந்து ஆதரிப்பார்கள் என்ற படிப்பினையை பிகார் மக்கள் ஒட்டுமொத்த தேசத்திற்கும் அளித்திருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி!

$$$

Leave a comment