பெண்ணெனும் பேரறம்

-கருவாபுரிச் சிறுவன்

நம்முடைய அருளாளர்களைப் போலவே, இக்காலத்திலும் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், பேட்டை ஆ.ஈஸ்வரமூர்த்தி பிள்ளையவர்களின் அடியொற்றி  தென்காசி பகுதியில் அன்பர் ஒருவர் வாழ்ந்து வருகிறார். அருளாளர்களின் அருள்மொழிகளுக்கு ஏற்ப இந்த 21ஆம் நூற்றாண்டில்  வாழ்ந்து காட்டுபவர் ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த ட்ரெளடே இங்ளெர்ட் (எ) செண்பகவல்லி ஆவார்.

உலக உயிர்கள் யாவும் உய்யும் பொருட்டு, படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களை முறையே, புரியும் தெய்வங்களாகிய  பிரம்மா தன் சக்தியாகிய சரஸ்வதியை நாவிலும்,  மகாவிஷ்ணு தன் சக்தியாகிய மகாலட்சுமியை இதயத்திலும், சிவபெருமான் தன் சக்தியாகிய உமையவளை தன்னுள் சரிபாதியுமாக பகிர்ந்தளித்தார்கள் என்கிறது  ஹிந்து மத புராணங்கள்.

பெண்மையின்  சிறப்பினை இக்கலியுக மக்களுக்கு உணர்ந்து கொள்ளும் பொருட்டு பரம்பொருள் நிகழ்த்திய திருவிளையாடல்களில்  இதுவும் ஒன்று என்பார், திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்.

ஒருசமயம் இந்திராதி  தேவர்கள் அனைவரும்  விந்திய மலையின் செருக்கினை அடக்கியருள வேண்டும் என்று அகத்திய மாமுனிவரிடம் சென்று  பணிந்தார்கள். தயங்கினார் குறு முனி. அதைக் கண்ட தேவாதி தேவர்கள். “அருந்தவத்துடைய உலோபமுத்திரையாள் அருகில் இருக்கும் போது தங்களால் முடியாதது எதுவும் அரிதோ…?”  என்றார்களாம்.  இச்செய்தியை சொல்லும் பழம் பாடல் இதோ…

செயரில் கற்பின் திகழ்மணிக் குன்றன
மயில னாள் நின் மனைக்குரி யாளெனில்
உயர் அருந்தவ உன்றனை உளத்திடை
முயலில் ஏது முடித்தற்கு அரியதே.

முதலமைச்சர் திருவாக்கில்  முதல்விகள்:

பெரியபுராண நாயன்மார்கள் வரலாற்றில் இருந்து பெண்மைக்குரிய நற்குணநலன்களை அறிந்து கொள்ளலாம்.

  • காரைக்கால் அம்மையார் – உண்மையாக வாழுதல்
  • குங்கலிய நாயனாரின் மனைவி – பொறுமையின் இருப்பிடமாக இருத்தல்
  • அரிவட்டாயர், இளையான்குடிமாற நாயனார் ஆகியோரின் மனைவியர் – கணவரின் கருத்தறிந்து நடத்தல்
  • இயற்பகை நாயனாரின் மனைவி – எதிர் வார்த்தை பேசாது இருத்தல்
  • மங்கையர்கரசியார் – கணவனை நல்வழிப்படுத்துதல்
  • கோச்செங்கட்சோழனின் தாயார் – தியாகத்தின் திருவடிவமாக விளங்குதல்
  • இசைஞானியார் – மனம் ஒத்த தம்பதிகளாக வாழுதல்

-போன்றவையெல்லாம் பெண்களுக்குரிய நற்குணங்கள் என, தெய்வச்சேக்கிழார் சுவாமிகளின் திருவாக்கின் வழியே உணரலாம்.

சுந்தரமூர்த்தி சுவாமிகளின்  திருமனையாள் பெண்களுக்குரிய நற்குணங்கள் அனைத்தையும் பெற்ற பரவை நாச்சியார், தன் வீட்டில் கூன், குருடு செவிடர்களை வைத்து பராமரித்தார்.

திருமங்கையாழ்வாரின் திருமனையாள் குமுதவல்லி நாச்சியார், தன்னை நாடிவந்த ஆயிரம் பேருக்கு தினந்தோறும் அன்னதானம் செய்தார்கள்  என்ற நுட்பமான செய்திகளால் சமூகத்தொண்டின் மூலாதாரம், ஆணிவேர்  ஹிந்து தர்மத்தில் இருந்துள்ளதை அறியலாம்.

நமக்கு  முன்னோடி:

நம் மன்னர் பிரான் வரதுங்கராம  பாண்டியரின் அருள் வரலாற்றை செய்யுள் வடிவில் முதன்முதலில் இயற்றி வெளியிட்டு கரிவலம் வந்த நல்லூர் மக்கள் மனதில் நீங்காது இடம் பிடித்தவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்.

சுவாமிகளை  ‘குகபரத்துவத்தின் குலதெய்வம்,  அருணகிரிநாதரின் மறுபிறப்பு’ என போற்றிப் புகழுவர் அன்பர் பெருமக்கள். கொங்கு மண்டலமும் தொண்டை மண்டலமும் இன்றும் தெய்வீகத்தன்மையோடு திகழ்வதற்கு சுவாமிகளின் திருவடியும் ஒரு காரணம் என்றால் அது மிகையல்ல…

அப்பிரபுவினால் தான்  சண்மதமும் தழைத்து இனிது ஓங்குகிறது. இப்பெருமானின் துணைவியார் சுந்தரத்தம்மையார் எழுதிய  ‘பெண்மாட்சி’ என்னும்  பிரசுரம் பெண்கள் மத்தியில் வசிக்க வேண்டிய திருநூலாகும்.

பாரதமே திருநாடு பரசிவமே பரமபதி
ஆரணமே ஆகமமே யருடநுால் அதிற்சுரக்கும்
சாரமதே சைவமெனும் சற்சமயம் எனநாயேன்
தேரவருள் செய்தனையே சீராசைக் கோமதியே.

பண்டித பூஷணம் பேட்டை ஆ. ஈஸ்வர மூர்த்திப்பிள்ளையவர்கள்  “பாரத தேசமே புண்ணியபூமி. சிவபெருமானே மேலான பரம்பொருள். அவன் தந்தருளிய வேதாகமங்களுமே அருள் நூல்கள். அந்நூல்களின்  அடிப்படையில் உள்ள சைவமே  முடிந்த முடிபான சமயம். இதை  நாயேனுக்கு  உணர்த்திய  கோமதியம்பிகைக்கு  வணக்கம்” என எடுத்த எடுப்பிலே பாடிப் பரவுவார்.

அன்னார் நடத்திய  தனிச்சமய இதழில், இப்பெருமகனாரின் துணைவியார் மீனாட்சி அவர்கள் இத்தேசத்தில் வாழ்ந்த  தலை சிறந்த பெண்மணிகளைப் பற்றி  கட்டுரைகள் வழங்கி இருப்பார்கள்.

அதை பின்னாளில் ஆத்மார்த்த அன்பர்  நூலாக்கம் செய்து  வெளிப்படுத்திய பாங்கு மகிழத்தக்கது.

வண்ணச்சரபரின் பூர்வீகம், தென்காசி அருகே உள்ள சுரண்டை; பிள்ளையவர்களின் அந்திமக்காலம் தென்காசிப் பதியில்  தான் கழிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  

நவீனயுக பரவை நாச்சியார்:

நம்முடைய அருளாளர்களைப் போலவே, இக்காலத்திலும் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், பேட்டை ஆ.ஈஸ்வரமூர்த்தி பிள்ளையவர்களின் அடியொற்றி  தென்காசி பகுதியில் அன்பர் ஒருவர் வாழ்ந்து வருகிறார். அருளாளர்களின் அருள்மொழிகளுக்கு ஏற்ப இந்த 21ஆம் நூற்றாண்டில்  வாழ்ந்து காட்டுபவர் ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த ட்ரெளடே இங்ளெர்ட் (எ) செண்பகவல்லி ஆவார்.

தென்காசி, மேலகரம், வே. விஸ்வநாத ஐயரை திருமணம் செய்துகொண்ட இவர் ஹிந்து மதக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். அழியாத சநாதன தர்மத்தின் ஆனந்த நிலையை அனைவரும் அடைய வேண்டும் என நினைத்தனர்  இந்த ஆதர்ஷ தம்பதிகள். அதனால் அமைந்தது, தென்காசி அருகே உள்ள  ‘ஓம் பிரணவ்’ ஆசிரமம்.

ஹிந்துக்களின் பரம்பரியமான தியானம், யோகா, தெய்வீக வழிபாடு, நாயன்மார்கள், ஆழ்வார்கள், அருளாளர்களான காஞ்சி மகாபெரியவர், திருவண்ணாமலை ரமணர், தேசியகவி பாரதியார், மதுரை குழந்தையானந்தா, சாய்பாபா, ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் போன்றோரின் அருள் உபதேசங்களை குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் போதிப்பது இவ்வாசிரமத்தின் முக்கிய பணிகளில் ஒன்றாகும். மேலும்,

  • ஏழைக் குழந்தைகளுக்கு சுயஒழுக்கத்துடன்அவர்கள் விரும்பும் கல்வியை வழங்குதல் 
  • அவர்களை பேணிப் பாதுகாத்தல்
  • சமுதாயத்தில் நல்லொழுக்கமுள்ளவராக திகழச் செய்தல்
  • ஹிந்து சமயத்தின் அடிப்படை ஞானங்களை போதித்தல்
  • மேலும், வாழ்வாதாரம் அற்ற பெரியவர்களைப் பேணுதல்
  • ஞான நூல்களை வெளியிடுதல்

போன்ற பணிகளை திறம்பட குருவருள் திருவருள் துணையுடன் செய்து வருகிறார்கள்.

அடியார்கள் விரும்பும் நாட்களில் இங்குள்ள தியானக்கூடத்தில் திருவாசக முற்றோதல் நடக்கிறது.  

செண்பகவல்லியார், தியானத்தில் உயர்நிலையில் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். அதைக் கொண்டு,  அவரால்   பல லட்சங்களை சம்பாதிக்க முடியும். ஆனால் பொருளைத் தேடாமல் அருளைத் தேடுகிறார்.  அதனால்தான் தன்னை நாடி வந்தவர்களுக்கு தன்னைப்போல உயர்நிலையை அடைய எவ்வித எதிர்பார்ப்பு மின்றி தியான நிலையை  சொல்லித் தருகிறார்.

மேலும், நூற்றுக்கு மேற்பட்ட பசுக்களை வியாபார நோக்கமின்றி வைத்து பாராமரிக்கிறார். அவரே அதனை நீராட்டுகிறார், சாம்பிராணி இடுகிறார், தீவனம் வைக்கிறார்.  தினந்தோறும் தொழுவத்தினை சுத்தம் செய்கிறார். ஒவ்வொரு பசுவையும் தான் பெற்றெடுத்த குழந்தைகள் போலப் பேணி பாதுகாத்து வருகிறார்.

மேலும் பைரவரின் வாகனமாகிய பத்திற்கும் மேற்பட்ட நாய்களையும் பராமரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.   ‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வ வையகம்’ என்ற திருமூல தேவ நாயனாரின் திருவாக்கிற்கு  செண்பகவல்லியாரின் பேரறம் சிறந்ததொரு நற்சான்றாகும்.

உலகம் தொடங்கிய நாள் முதலாக வேரூன்றி இருக்கும் சநாதன தர்மத்தின்  உண்மையும், தர்மநெறியும் எந்தளவு சுடர் விட்டு பிரகாசிக்கிறது  என்பதற்கு மேற்கண்டவை சிறு உதாரணமாகும்.

இது போன்று கண்களுக்கு தெரியாமல் தொண்டு செய்யும் பெண்மணிகள் எத்தனையோ! யாம் அறியோம்.

பெண்ணுக்குரிய  புகழ்மொழிகள்:

  •  ‘பெண்ணினல்லாள்’  – திருஞானசம்பந்த சுவாமிகள்,
  •  ‛பெண்ணின் பெருந்தக்க யாவுள’ – திருவள்ளவ தேவ நாயனார்,
  • ‛பெண்ணெனும் பேரறம்’- தேசியகவி பாரதியார்
  • ‛பெண்கள் இருக்கும் வீடு மகாலட்சுமி வாழுமிடம்’- காஞ்சி மகாபெரியவர்,
  • ‛மங்கையராயகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும்மா’- கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை,
  • ‛கற்பெனும் நல்லாள்’- ஆ. ஈஸ்வரமூர்த்தி பிள்ளை

-போன்றோரின் புகழ் மொழிகள் யாவும் பெண்களின் மாண்புக்கு  மேலும் வலுச் சேர்க்கிறது.

நிறைவாக, உங்கள் உடலும் உள்ளமும் வலுப்பெற வேண்டுமானால், அன்பர் பெருமக்களே! இவ்வாசிரமத்தை  ஒரு தரம் பார்வையிடுங்கள்.

உகம் தோறும் அயன்மால் பூசை
  உகந்து வீற்றிருந்தாய் போற்றி!
முகம் தனில் இமையா முக்கண்
 உகந்த முச்சுடராய் போற்றி!
இகம் தனில் பரத்தில் இன்பம்
 இசைக்கும் நன்னகராய் போற்றி!
சகந்தனில் வினை வண்டாடச் 
 சண்பகா அடாவியாய் போற்றி!

சகல செல்வங்களையும் அனைவரும் மேன்மேலும் பெற  திருக்குற்றாலநாதரின் திருவடியை மனம், மொழி, மெய்களால்  போற்றிப் பணிவோமாக.

வாழ்த்து

ஆதி பிரான் வெண்ணீறும் அஞ்செழுத்தும் ஓங்குகநாற்
சாதிநெறி வேதநெறி சைவ நெறியும் தழைக்க
மாதரால் கற்பு நெறி வளர்க மாநிலம் அதன்மேல்
நீதி மனு வேந்தர் நெறி நீடுழி வாழுகவே!

    -திரிகூடராசப்ப கவிராயர்.
  • தொடர்புக்கு: 93446 28115

$$$

Leave a comment