சமஸ்டோரி – 4

-வ.மு.முரளி

கரூர் துயரம் தொடர்பாக, முந்தைய திமுக ஆதரவாளரான சமஸை இப்போது திமுக ஜோம்பிகள் கூடி கும்மி அடித்து குதறி வருகின்றனர். நடிகர் விஜயின் ஆதரவாளராக அவர் முத்திரை குத்தப்படுகிறார். அதற்கு சமஸ் எதிர்வினை ஆற்றுகிறார். இந்த விவகாரத்தை இதுவரை கவனித்த வரை, 'பத்திரிகையாளர்களுக்கு நடுநிலை தேவை' என்பதை சமஸோ, அவரை எதிர்ப்பவர்களோ உணர்ந்திருப்பதாகத் தெரியவில்லை. இந்த விஷயத்தில் தேசியவாதிகள் என்ன செய்ய வேண்டும்? நமது இணையதள ஆசிரியரும் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான திரு. வ.மு.முரளியின் குறுந்தொடர் (பகுதி- 4) இது….

“நீங்கள் சொல்வதை நான் ஏற்கவில்லை, ஆனால் அதைச் சொல்வதற்கான உங்கள் உரிமையை நான் உயிருக்கு உயிராகப் பாதுகாப்பேன்.”

         -சிந்தனையாளர் வால்டேர்

சமஸ்டோரியின் இறுதிப் பகுதிக்குச் செல்லும் முன்னர் ஒரு முக்கியமான விஷயம் குறித்து தெளிவுபடுத்திக் கொள்வது அவசியமாகிறது. அது, ஹிந்துத்துவ இயக்கங்கள் தமிழகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்ற மாயையான கருத்துருவாக்கம் குறித்தது.

தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகாலமாக, ஓர் உத்தி கம்யூனிஸ்ட் சார்பு எழுத்தாளர்களால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, ராமர் கோயில் இயக்கத்தை அடுத்து, 1990களில் இருந்து இந்த உத்தி அவர்களால் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதையே 2000க்குப் பிறகு, திராவிட இயக்கமும் சுவீகரித்துக் கொண்டிருக்கிறது. அது என்ன உத்தி?

கம்யூனிஸ்டுகளின் சித்தாந்தத்திற்கு நேரிடையான எதிரியாக ஒரு காலத்தில் காங்கிரஸ் இருந்தது. அக்கட்சி உண்மையிலேயே தேசிய சிந்தனை கொண்ட காங்கிரஸ்காரர்களால் நிறைந்திருந்த காலம் ராஜீவ் காந்தியுடன் மலையேறிவிட்டது. காங்கிரஸின் வீழ்ச்சியில் தான் பாஜக தேசிய அரசியலின் மைய இடத்திற்கு வந்தது. இதனை மிகவும் முன்னதாக முற்றுணர்ந்தவர்கள் கம்யூனிஸ்டுகள்.

கம்யூனிஸ்டுகள் ஆரம்பக் காலந்தொட்டே, ஹிந்துத்துவ இயக்கங்களை – குறிப்பாக ஆர்.எஸ்.எஸ்.ஸை வன்மையாக எதிர்த்து வந்துள்ளனர். அவர்கள் ஹிந்துத்துவ இயக்கங்களை  ‘வலதுசாரி’ என்று வர்ணிப்பது வழக்கம். வலதுசாரிகள் என்பவர்கள் தங்கள்  நாகரிகம், இனம், மதம், மொழி ஆகியவற்றுக்கு நவீன மயத்தால் எந்த சேதமும் ஏற்பட்டு விடக்கூடாது என்று உறுதியாய் இருக்கும் பிற்போக்காளர்கள் என்பது பொதுவான உலக வழக்கு. இதற்கு எதிரானவர்கள் இடதுசாரிகள், அதாவது முற்போக்காளர்கள்.  

இந்த இலக்கணத்தின்படி பார்த்தோமானால், திராவிட இயக்கங்கள் அனைத்துமே வலதுசாரிகள் தான். ஆனால், கம்யூனிஸ்டுகளுடன் கரம் கோர்த்துவிட்டதால் அவர்கள் இப்போது முற்போக்கு ஆகிவிடுகின்றனர். எனவே தமிழினம், தமிழ் மொழிக்காகப் பேசுவதாகக் கூறும் திராவிட இயக்கங்கள் இப்போது இடதுசாரி ஆகிவிட்டன. உலக அளவிலான இடதுசாரி என்ற சொல்லாடலுக்கான இலக்கணத்திற்கும், தமிழகத்தில் அதன் இலக்கணத்திற்கும் உள்ள வேறுபாட்டை முதலில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

உலக அளவில் மதவாத இயக்கங்களுக்கு எதிராக கம்யூனிஸ்டுகள் நிற்பது வழக்கம். அந்த அடிப்படையில்தான் அவர்கள் ஆர்.எஸ்.எஸ்.ஸை எதிர்ப்பதாக வர்க்க அடிப்படையில் விளக்கம் அளிப்பார்கள். உண்மையில் ஆர்.எஸ்.எஸ். மதவாத இயக்கமா, வலதுசாரியா, பிற்போக்கு இயக்கமா என்பது குறித்து தனியே ஒரு தொடர் எழுத வேண்டும். அதை பின்னர் பார்க்கலாம்.

இந்தியாவைப் பொருத்த வரை, மத அடிப்படையில் இந்த நாட்டைப் பிளந்த இஸ்லாமியர்களும், மதமாற்றம் மூலமாக ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் கிறிஸ்தவர்களும்தான் மத அடிப்படையில் வாக்களிக்கிறார்கள்; செயல்படுகிறார்கள். அவர்களே மதச்சார்பின்மை பேசும் கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளுடன் மேடையைப் பகிர்ந்து கொள்கிறார்கள். நமது அரசியல் சாசனம் அளித்துள்ள சிறுபான்மையினர் உரிமை என்ற வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, அவர்கள் பெரும்பான்மையினருக்கு தொந்தரவு கொடுக்கிறார்கள்.

நியாயமாக, இடதுசாரிகள் பெரும்பான்மையினரின் மதமோ, சிறுபான்மையினரின் மதமோ எதுவானாலும் நடுநிலையாக இருந்திருக்க வேண்டும் (உலக அளவில் கம்யூனிஸ்டுகள் இஸ்லாமிய, கிறிஸ்தவ மதவாதிகளுக்கு எதிராக இருக்கிறார்கள். இந்தியாவில் மட்டும், அவர்களுடன் கூடிக் குலாவுகிறார்கள்). வாக்குவங்கி அரசியலின் பிடிக்குள் அகப்பட்டுக்கொண்டு அவர்கள் பெரும்பான்மையான ஹிந்துக்களை மட்டம் தட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதனையே, காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி கட்சி, ராஷ்ட்ரீய ஜனதாதளம் போன்ற பாஜக அல்லாத அரசியல் கட்சிகளும் பின்பற்றத் தொடங்கின.

தவறான கருத்தாக்கங்களை உருவாக்குவதில் கம்யூனிஸ்டுகள் கைதேர்ந்தவர்கள். இதில் அவர்களுக்கு நூற்றாண்டு அனுபவம் உண்டு. கல்வி நிறுவனங்கள் மற்றும் ஊடக நிறுவனங்களை ஆக்கிரமித்து, தங்கள் கொள்கையைப் பதியமிட்டதில் அவர்களே முன்னோடிகள் என்பதால், அதன் செல்வாக்கு இன்றும் வெளிப்படுகிறது. விதிவசம் என்னவென்றால், அவர்களால் கருத்தாக்கங்களை மட்டுமே பரப்ப முடிந்தது; பொதுமக்களின் ஆதரவைப் பெற முடிந்ததில்லை. அதேசமயம், அவர்கள் பரப்பும் மாயையான கருத்தாக்கங்கள் தேசத்தின் வளர்ச்சிக்கும் ஒருமைப்பாட்டிற்கும் அபாயமாக இருந்து வருகின்றன.

கம்யூனிஸ்டுகளின் கருத்துருவாக்கத்தில் எதிர்த்தரப்பினரை கடுமையாக வசை பாடுவது முக்கியமான தந்திரம். இது சோவியத் ரஷ்யா காலத்திலிருந்தே அவர்கள் கடைப்பிடிப்பது. தங்களுக்கு எதிரானவர்களை  ‘எதிர்ப்புரட்சியாளர்கள்’ என்று முத்திரை குத்தி ஒழிப்பது அவர்களுக்கு கைவந்த கலை. சைபீரிய பனிப்பாலையில் புதைக்கப்பட்ட ஸ்டாலின் எதிர்ப்பாளர்களின் கண்ணீர்க் கதைகள் இன்று உலகம் அறிந்தவை. ஜனநாயகம், கருத்து சுதந்திரம் போன்ற வார்த்தைகள் அவர்களுக்கு உதட்டளவில் மட்டுமே.

கம்யூனிஸ்டுகள் பத்தாண்டுகளுக்கு முன்னர் வரை ஹிந்துத்துவ இயக்கங்களை  ‘சங்பரிவார்’ என்று கேலி பேசி வந்தனர். ஆனால், அதன் பொருள்  ‘சங்கக் குடும்பம்’ என்பதே என்பதை மிகவும் தாமதமாகப் புரிந்துகொண்ட அவர்கள் கண்டறிந்த அடுத்த வார்த்தை தான் ‘சங்கி’ இதுவும் காங்கிரஸால் 1950களில் தேசிய அளவில் பயன்படுத்தப்பட்ட ‘ஜனசங்கி’ என்ற சொல்லாடலின் மறு வடிவம்தான். ஆர்.எஸ்.எஸ். சார்பாளர்களையும் பாஜகவினரையும் ‘சங்கி’ என்று குறிப்பிடுவதை ஒரு வசையாக்கி கம்யூனிஸ்டுகள் மகிழ்ந்தார்கள். அதையே திராவிட இயக்கத்தினரும் பின்தொடர்கிறார்கள்.  

தற்போது, சமஸை ‘சங்கி’ என்று முத்திரை குத்தும் அவரது எதிரிகளின் உள்நோக்கம் இப்போது புரிந்திருக்கும். உடனே, “நான் அவனல்ல” என்று வாக்குமூலம் கொடுக்க சமஸும் கடுமையாக உளைக்க வேண்டியிருக்கிறது. எழுத்தாளர் ஜெயமோகன் பல பத்தாண்டுகளாக இந்த அவஸ்தையை அனுபவித்து வருகிறார். பாவம் அவர் ஒரே நேரத்தில் – சங்கிகளின் எதிர்ப்பாளர்களால்  ‘சங்கி’ என்ற அவச்சொல்லையும், சங்கிகளால் ‘சுயநலவாதி’ என்ற வசையையும் எதிர்கொள்கிறார். நானும் ஒரு ‘சங்கி’யாக அவரை விமர்சித்திருக்கிறேன் என்பதை இவ்விடத்தில் சொல்லாவிடில் இந்தப் பத்தி முழுமையடையாது.

கம்யூனிஸ்டுகள் அதிமுக கூட்டணியில் இருக்கும்போது கலைஞர் மு.கருணாதிதியும் கூட ‘சங்கி’ என்ற அர்ச்சனையைப் பெற்றிருக்கிறார் என்பதை திமுகவினர் மறந்திருக்கலாம். நிக்கோலாய் புகாரினைக் கொல்ல ஜோசப் ஸ்டாலின் பயன்படுத்திய அதே துருப்பிடித்த ஆயுதம் தான் இந்த வசைபாடல். இந்தியா ஜனநாயக நாடு என்பதால் வசை பாடுவதுடன் கம்யூனிஸ்டுகள் நிறுத்திக் கொள்கிறார்கள் வாய்ப்புக் கிடைத்தால் அதையும் அவர்கள் செய்வார்கள் என்பதற்கு கண்ணூர் படுகொலைகள் சாட்சி. ரஷ்ய சர்வாதிகாரி ஸ்டாலினின் பெயரைக் கொண்ட தமிழக ‘சர்வாதிகாரி’க்கு இந்த வரலாறெல்லாம் தெரிந்திருக்குமா என்று தெரியவில்லை.

*** 

‘போக்கிரி’ நடிகர் விஜய் புதிதாக கட்சி ஆரம்பித்தபோது, திராவிட மாடல் கட்சியோ, அதன் கூட்டணியினரோ பெரிய அளவில் அலட்டிக் கொள்ளவில்லை. ஆரம்பத்தில் அவரது செல்வாக்கைக் குறைத்து மதிப்பிட்டவர்கள் அவருக்கு கூடும் கூட்டம் கண்டு பதைக்கத் தொடங்கினார்கள். அதிலும், மாணவர்கள், இளைஞர்களின் முட்டாள்தனமான நடவடிக்கைகள் பலரையும் அதிரச் செய்தன. எந்தக் கட்டுப்பாடும் அற்ற கும்பலாக அவர்கள் விஜயின் பின்னால் திரண்டது திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுக்கும் அதிர்ச்சி அளித்தது உண்மை. அதேசமயம் திமுக இதனை வேறுவிதமாகக் கையாளத் தொடங்கியது.

நடிகர் விஜயை பாஜகவும் அமித் ஷாவும் பின்னணியில் இருந்து இயக்குவதாக ஒரு பிரசாரம் திராவிட மாடல் ஆதரவாளர்களால் முன்னெடுக்கப்பட்டது. இந்த விஷயத்தில் கம்யூனிஸ்டுகளின் பாலபாடத்தை நன்கு பயன்படுத்தினார்கள் அவர்கள். இதனை உணர்ந்த விஜய், தனது பிரசாரக் கூட்டங்களில் பாஜகவையும் அதிமுகவையும் விமர்சிக்கத் தொடங்கினார். ஒரே நேரத்தில் மத்திய, மாநில அரசுகளையும் பிற கட்சிகளையும் விமர்சித்ததால் மக்களிடையே மேலும் ஆதரவை விஜய் பெற முடிந்தது. இதே நிலை தொடர்ந்தால் திமுக அரசு தேர்தலில் தேறுவது சிரமம் என்பது தெரியத் தொடங்கியது.

அதேநேரத்தில், நடிகருக்குக் கூடும் கூட்டத்தை டி.ஆர்.பி. ரேட்டிங் ஏற்றப் பயன்படுத்த முடியும் என்பதை உணர்ந்த செய்தி சேனல்கள் அதை ஒரு வாய்ப்பாகக் கருதி, விஜயின் பிரசாரப் பயணத்தை நிகழ்நேர ஒளிபரப்பாக்கி மகிழ்ந்தனர். புதிய தலைமுறை சேனல் செய்தது இதுவே. இது திமுகவுக்கு கடுகடுப்பை ஏற்படுத்தியதில் வியப்பில்லை. தொண்டர் ஒவ்வொருவருக்கும் ஆயிரக் கணக்கில் செலவு செய்து அழைத்து வந்து கூட்டம் நடத்தினாலும் முழு மைதானத்தை நிறைக்க முடியாமல் திணறும் அவர்களுக்கு, எந்தச் செலவும் செய்யாமல் தவெக நடத்தும் கூட்டங்களுக்குக் குவியும் கூட்டம் புளியைக் கரைத்ததில் வியக்க ஒன்றுமில்லை.

இந்த நேரத்தில்தான் கரூர் துயரம் அரங்கேறியது. அங்கு செப்டம்பர் 27ஆம் தேதி நடந்த கூட்ட நெரிசலில் 41 பேர் பலியானவுடன், அதைப் பயன்படுத்தி விஜய் மீது அவதூறுகள் அள்ளி  வீசப்பட்டன. அவரும் அதற்குத் தோதாக கரூரிலிருந்து சென்னைக்கு ஓடி ஒளிந்தார். அதன்பிறகு பல சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்துவிட்டன. மாநில அரசின் அதிவேகச் செயல்பாடுகள், அரசியல் கட்சித் தலைவர்களின் வருகைகள், காவல் துறை விசாரணைகள், கைதுகள், நீதிமன்ற வழக்குகள் என பல நிலைகளைத் தாண்டி,  இப்போது கரூர் நிகழ்வு மத்தியப் புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. உச்ச நீதிமன்றம் அக்டோபர் 13இல் வெளியிட்ட உத்தரவு, திராவிட மாடல் அரசையும் அதன் ஆதரவாளர்களையும் நிலைகுலையச் செய்துவிட்டது.

அப்போது மக்களின் கவனத்தை திசைதிருப்பும் வகையில், திமுக ஆதரவு பத்திரிகையாளர்கள் சிலரால் சமஸுக்கு எதிரான பிரசாரம் (அக். 14 முதல் 19 வரை) சமூக ஊடகங்களில் முன்னெடுக்கப்பட்டது. இத்தனைக்கும் சமஸும் திராவிட மாடல் கூடாரத்தில் ஒன்றி இருந்தவர்தான். நடிகர் விஜயின் பிரசாரத்துக்கு புதிய தலைமுறை அதிக முக்கியத்துவம் அளித்ததற்கு சமஸின் ‘சங்கி’ புத்தியே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது. அதற்கு அவர் பதிலடி கொடுத்ததும், விஷயம் விபரீதமானது. இந்த குத்துவெட்டு சுமார் ஐந்து நாட்களுக்கு நீடித்தது. ஒருவழியாக, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் கடுமை மறக்கடிக்கப்பட்ட பின், திமுக கோஷ்டிகள் பழையபடி உடன்படிக்கை கண்டுவிட்டன.

இப்போது விஷயத்திற்கு வருவோம்.

சமசங்கரும் விஜய்ஸும் இப்போது அமைதி காக்கிறார்கள். பழைய தலைமுறையில் வழக்கம் போல 4:1 என்ற விகிதாசாரத்துடன் விவாதங்கள் களை கட்டிவிட்டன. நடிகர் விஜய் மீண்டும் கரூர் வரும்போது (வருவாரா?) இந்த சேனல் என்ன செய்யப் போகிறது என்பதைக் கவனித்தால் அடுத்தகட்ட நகர்வு தெரியவரும்.

மிக விரைவில் பாஜகவின் ஏதாவது ஓர் அத்துமீறலை பு.த. ஆசிரியர் கிழித்து தோரணம் கட்டுவார். அத்துடன் அவர் மீதான களங்கம் துடைக்கப்பட்டுவிடும். கொன்றால் பாவம் தின்றால் போகும். 

இந்த விவகாரம் சில உண்மைகளை அம்பலப்படுத்தி இருக்கிறது. அதற்காக, இந்த நாடகத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி.

1. தமிழக ஊடகங்களை திமுக, கம்யூனிஸ்ட் ஆதரவாளர்கள் கைப்பற்றி வைத்திருக்கின்றனர். இதில் அவர்களிடையே தொழில் போட்டி நிலவுகிறது.

2. தொழில் போட்டியில் வெல்ல, தனது கட்சி ஆதரவாளரையே ‘சங்கி’ என்றும்  ‘அமித் ஷாவின் கையாள்’ என்றும் முத்திரை குத்த உ.பி.க்கள் தயங்குவதில்லை. இதன்மூலமாக, பிறருக்கு எச்சரிக்கைச் சேதி சொல்லப்படுகிறது.

3. ‘ஊடகத்தினர் கட்சி சார்பற்றுச் செயல்பட வேண்டும்’ என்ற நியதி காற்றில் பறப்பது குறித்து யாருக்கும் கவலை இல்லை. இதனை எந்த பிரதான ஊடகமும் கண்டிக்கவில்லை. நமக்கெதற்கு வம்பு என்பதாகவே முக்கியமான நாளிதழ்கள் இதனைக் கடந்து சென்றன. இந்த அக்கப்போர் நமக்கு எதற்கு என்பதாகவே நாகரிகமான ஊடகவியலாளர்கள் கடந்து சென்றனர்.

4. நடிகர் விஜய் மீண்டும் களத்திற்கு வரும்போது அது தொடர்பான செய்திகள் குறுக்கப்படும் என்பது மட்டும் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.

5. அதிகாரத்தின் வலிமையை ஊடகங்களிடம் எப்படி காட்ட வேண்டும் என்பதில் அனைத்திந்தியாவுக்கே திமுக பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறது. முன்னொரு காலத்தில் ஆளும் கட்சியாக இருந்தபோது அம்மையாரால் வழிநடத்தப்பட்ட அதிமுக, என்ன செய்வதென்று புலப்படாமல் வேடிக்கை பார்க்கிறது; பாஜக வழக்கம் போல சுணங்கி இருக்கிறது. 

6. இதில் காங்கிரஸ் நிலைமை தான் பரிதாபம். விஜயை எதிர்க்கவும் முடியவில்லை; ஆதரிக்கவும் முடியவில்லை. இரு நெருப்பிடை ஒரு மெழுகாக உருகுகிறார்கள். கட்சிக்குள் ஒலிக்கும் பலதரப்பட்ட குரல்கள் மூலமாக காங்கிரஸின் நிலைப்பாடு சந்தைக்கடை அமளியாக வெளிப்படுகிறது.

7. சி.பி.ஐ. விசாரணையின் போது மேலும் சில விஷயங்கள் தெளிவாகலாம். அதுவரை, நாமும் வேறு வேலையைப் பார்க்கலாம்.

தேசியவாதிகள் செய்ய வேண்டியது என்ன?

“கம்யூனிஸ்டு கட்சிகளோ, திமுகவோ ஊடகத்தில் கொடுக்கும் கவனத்தில் பத்து சதவிகிதம் கூட, மத்திய ஆளும்கட்சியான பாஜக கொடுப்பதில்லை. அது தேவையில்லை என்பதே என் நிலைப்பாடு” என்று முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அது தவறு என்று, ஒத்த சிந்தனையுள்ள பல ஊடக நண்பர்கள் கூறினர். எனது பார்வை  ‘ஊடகங்கள் எவரது கட்டுப்பாட்டிலும் இருக்கக் கூடாது’ என்ற லட்சிய நோக்கில் சொல்லப்பட்டவை. அதுவே நாம் கனவு காணும் உயரிய நிலை. ஆனால், அரசியல்மயமாகிவிட்ட தமிழக ஊடகங்களுக்குக் கடிவாளமிட சில எதிர் நடவடிக்கைகள் தேவையே என்று ஒப்புக் கொள்கிறேன்.

ஆயுதத்தைப் பிரயோகிக்கத் தெரியாதவனிடம் உள்ள ஆயுதம் எதிரிக்கே உபயோகமாகும் – என்பது ஊடகமொழி. இதை மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக எப்போது புரிந்துகொள்ளப் போகிறதோ தெரியவில்லை. ஊடகத்தின் முக்கியத்துவம் குறித்து தமிழக பாஜக எப்போது கவனம் கொடுக்கப் போகிறதோ அன்றுதான் அக்கட்சிக்கு விடிவுகாலம். 

பாஜகவுக்கு தலையையும் திமுகவுக்கு வாலையும் காட்டிக் கொண்டிருக்கும் ஊடகங்கள் எவை என்று நாம் சொல்லி பாஜகவினருக்குத் தெரிய வேண்டியதில்லை. குறைந்தபட்சம் ‘சங்கி’ என்ற வாழ்த்துக்காகவேனும், பாஜகவிலுள்ள சங்கிகள் செயல்பட வேண்டும்.

ஒருகாலத்தில் காங்கிரஸ் நாடு முழுவதும் கொடிகட்டிப் பறந்தபோது, ஊடகங்கள் காங்கிரஸ் சொல்லாமலே கைகட்டி சேவகம் செய்தன. இன்றும் அதன் மிச்ச சொச்சங்கள் உண்டு. ஆனால், காங்கிரஸ் கட்சி இழந்துவிட்ட அரசியல் மைய இடத்தைப் பெற்ற பாஜகவால், காங்கிரஸ் பெற்றிருந்த ஊடக செல்வாக்கைப் பெற முடியவில்லை. அது ஏன் என்று அக்கட்சி ஆராய வேண்டும்.

கம்யூனிஸ்டு, திராவிட சிந்தனை கொண்ட பத்திரிகையாளர்களிடையே எத்தனை அடிதடி நடந்தாலும், அவர்களுக்குள்ளே ஓர் இணக்கமான ‘எக்கோ சிஸ்டம்’ நிலவுகிறது. அவர்களை வழிநடத்தவும் வழிச்செலவுக்குக் கொடுக்கவும் பெருந்தலைகள் இருக்கிறார்கள். இதுகுறித்து தேசியவாதிகள் சிந்திக்க வேண்டும். முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்.

ஆபரேஷன் சிந்தூரின்போதும், கரூர் துயரத்தின்போதும், இடதுசாரி, திராவிட முகாம்களைச் சார்ந்த எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும் எத்துணை முனைப்புடன் இயங்கி, கூட்டறிக்கை வெளியிட்டனர் என்பதை நாம் கண்டிருக்கிறோம். உண்மைகளைத் திரிக்கவும், ஒருசார்பாகப் பேசவும் அவர்கள் தயங்கவில்லை.

அவர்களுக்குப் பதிலடியாக தேசிய சிந்தனையாளர்களை ஒருங்கிணைக்க நடந்த முயற்சியில் நானும் பங்கேற்றேன். அதில் ஓரளவு வெற்றியும் கிடைத்தது. முதல்முறையாக, தமிழகத்தின் இறுக்கமான ’பொலிடிக்கல் எக்கோ சிஸ்டத்தை’ மறுதலித்து, முன்னூறுக்கு மேற்பட்ட எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் ஒருங்கிணைந்தனர். அது உண்மையின் தார்மிக வெளிப்பாடு. ஆனால், இவர்களுக்கு ஊடக ஆதரவு இல்லை. இதனை மாற்றும் பொறுப்பு ஹிந்து இயக்கங்களுக்கும் பாஜகவுக்கும் உண்டு.

“உண்மை வீட்டை விட்டுக் கிளம்பும் முன் பொய்கள் ஊரையே சுற்றி வந்து விடுகின்றன”. இந்த அனுபவ மொழியைப் பொய்யாக்க வேண்டியது தேசியவாதிகளின் பணி. ஏனெனில், தமிழகத்தில் நிலவும் ஊடகப் போர், வெறும் தேர்தல் அரசியல் தொடர்பானது மட்டுமல்ல, இது நாட்டின் ஒருமைப்பாடு தொடர்பானதும் கூட.

(இப்போதைக்கு நிறைவு).

$$$  

Leave a comment