பாரதிய ஜனதா கட்சியின் வரலாறு

-கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

பாரதிய ஜனதா கட்சியின் முந்தைய வடிவமான பாரதிய ஜனசங்கம் நிறுவப்பட்ட நாள்: 1951 அக்டோபர் 21. அதையொட்டி, தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரும், பாஜகவில் அண்மையில் இணைந்துள்ளவருமான திரு. கே.எஸ்.ராதாகிருஷ்ணன் எழுதியுள்ள முகநூல் பதிவு இங்கே மீள்பதிவாகிறது.

1951 முதல் 1977 வரை செயல்பட்ட பாரதிய ஜன சங்கம் (Bhartiya Jan Sangh) பின்னர் பாரதிய ஜனதா கட்சி ஆனது. அதன் வரலாரு இது.  21 அக்டோபர் 1951 அன்று தில்லியில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்துடன் (ஆர்.எஸ்.எஸ்.)  கலந்தாலோசித்து யாக்டர் சியாம பிரசாத் முகர்ஜியால் பாரதிய ஜன சங்கம் நிறுவப்பட்டது. இக்கட்சியின் சின்னமாக தீபம் (விளக்கு) இருந்தது. ஜனசங்கம் 1952ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மூன்று இடங்களில் வென்றது. 1967ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் கூடுதலான இடங்களை வென்றது. சியாம பிரசாத் முகர்ஜிக்குப் பின்னர் தீனதயாள் உபாத்தியாய தலைவரானர்.

சியாமா பிரசாத் முகர்ஜி (Syama Prasad Mukherjee: 1901 – 1953), இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தைச்சார்ந்த கல்கத்தா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக இருந்தவர், வழக்கறிஞர் ஆவர். சுதந்திர இந்தியாவின் முதல் மத்திய அரசில் வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சராக, ஜவஹர்லால் நேருவின்  அமைச்சரவையில் 15 ஆகஸ்ட் 1947 முதல் 6 ஏப்ரல் 1950 வரை இருந்தவர். நேருவுடன்  காஷ்மீர் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பான கருத்து வேற்றுமையால், அரசிலிருந்து வெளியேறி, 1951ஆம் ஆண்டில் பாரதிய ஜனசங்கம் கட்சியை நிறுவினார்.

ஜனசங்கத்தின் திசைகாட்டிகள்:
சியாம பிரசாத் முகர்ஜி, தீனதயாள் உபாத்யாய

ஜனசங்கத்தின் தேசியத் தலைவர்கள்:

1. சியாம பிரசாத் முகர்ஜி  (1951–52)
2. மௌலி சந்திர சர்மா (1954)
3. பிரேம் நாத் டோக்ரா (1955)
4. தேபபிரசாத் கோஷ் (1956–59)
5. பீதாம்பர் தாஸ் (1960)
6. அவசரல ராமராவ் (1961)
4. தேபபிரசாத் கோஷ் (1962)
7. ரகு வீரா (1963)
4. தேபபிரசாத் கோஷ் (1964)
8. பச்சராஜ் வியாஸ் (1965)
9. பால்ராஜ் மதோக் (1966)
10. தீனதயாள் உபாத்யாய (1967–68)
11. அடல் பிஹாரி வாஜ்பாய் (1968–72)
12. லால் கிருஷ்ண அத்வானி (1973–77)

1975 ஜூன் 25 இல் தனது பிரதமர் பதவியை தற்காத்துக்கொள்ள,  இந்திரா காந்தி  இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 352-ஐ பயன்படுத்தி,  அவசரநிலையை  அமல்படுத்தப்படாமல் இருந்திருந்தால்,  இன்றைய தினமும் கட்சியின் சின்னமாக அகல் விளக்காகவுமே இருந்திருக்கும்.

இந்திரா காந்தியின் சர்வாதிகாரப் போக்கை முறியடித்திட, ஜனநாயகம் காக்க வேண்ட்யும் என்ற முடிவினை எடுத்த போது பாரதிய ஜனசங்கமானது, இந்திரா காங்கிரஸ் மற்றும் ஸ்தாபன காங்கிரஸை அடுத்து, 22 நாடாளுமன்ற உறுப்பினர்களோடு நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்தது.

எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து தேர்தலில் ஒரே சின்னத்தில் போட்டியிட்டால் மட்டுமே இந்திராவின் சர்வாதிகாரத்தை முறியடிக்க முடியும் என்ற நிலையில், பாரதிய ஜனசங்கம், ஜனதா கட்சியோடு  இணைக்கப்பட்டது!

1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஜனதா கட்சி பெரும்பான்மையான இடங்களில் வென்று, மொரார்ஜி தேசாயை பிரதமராகக் கொண்டு அரசமைத்தது. ஜன சங்கத்தின் முன்னாள் தலைவரான அடல் பிகாரி வாஜ்பாய், புதிய அரசாங்கத்தின் வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஆனால் அந்த அரசு அதிக நாள் நீடிக்கவில்லை.

மொரார்ஜி தேசாய் பிரதமர் பதவியில் இருந்து விலகிய பிறகு, ஜனதா கட்சி கலைக்கப்பட்டது. அதன் பிறகு கூட்டணியைத் தக்கவைத்துக் கொள்ள ஜன சங்கம் பெரும் முயற்சி செய்தது.  அனால் பலன் கிடைக்கவில்லை. எனவே, பாஜக, 1980 இல் முறையாக பம்பாயில் ஓய்வு பெற்ற நீதிபதி முகமது கரீம்  சாக்ளா முன்னிலையில், வாஜ்பாய், அத்வானி ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது. 

பாஜகவின் மும்மூர்த்திகள்:
வாஜ்பாய், அத்வானி, ஜோஷி

பாஜக தேசிய தலைவர்கள்:

1. அடல் பிஹாரி வாஜ்பாய் (1980–1986): 1980 ஆம் ஆண்டு பாஜக உருவானபோது வாஜ்பாய் அதன் முதல் தலைவரானார். பின்னாளில் பிரதமரான கவிஞர்.

2. லால் கிருஷ்ண அத்வானி (1986–1991 ): ஹிந்துத்துவாவை நோக்கிய மாற்றத்துடன் தொடர்புடையது இஅவரது பதவிக்காலம். இது 1990 ஆம் ஆண்டு அத்வானி தலைமையிலான ராம ரதயாத்திரையால் எடுத்துக்காட்டப்பட்டது.  இவர் 1973 ஆம் ஆண்டு பாரதிய ஜன சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

3. முரளி மனோகர் ஜோஷி (1991–1993)  பாஜக சித்தாந்தவாதியான ஜோஷி, 1991 இல் பாஜக தலைவராவதற்கு கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே ஆர்எஸ்எஸ் உடன் இணைந்திருந்தார். அவருக்கு முன்னோடியாக இருந்த எல்.கே. அத்வானியைப் போலவே, ராம ஜென்மபூமி போராட்டத்தில் இவர் பெரும் பங்கு வகித்தார் . பின்னர் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான அரசாங்கங்களில் கேபினட் அமைச்சராகப் பணியாற்றினார். இவருடைய காலத்தில், பாஜக முதல்முறையாக பிரதான எதிர்க்கட்சியாக மாறியது.  

4. லால் கிருஷ்ண அத்வானி (1993–1998): அத்வானி இரண்டாவது முறையாகப் பதவியேற்றபோது, இவரது தீவிர பிரசாரம் 1996 தேர்தலுக்குப் பிறகு இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் பாஜக தனிப்பெரும் கட்சியாக மாற உதவியது. அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமரான போதிலும், அத்வானி கட்சிக்குள் ஒரு சக்தியாக விளங்கினார், பின்னர் துணைப் பிரதமராகவும் பணியாற்றினார்.

5. குஷாபாவ் தாக்கரே (1998–2000): 1942 முதல் தாக்கரே ஆர்எஸ்எஸ் இயக்கத்துடன் தொடர்புடையவர். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்ற சில மாதங்களுக்குப் பிறகு, 1998 இல் அவர் தலைவராகப் பொறுப்பேற்றார்.

6. பங்காரு லட்சுமணன் (2000–2001): நீண்டகால ஆர்.எஸ்.எஸ். உறுப்பினரான லட்சுமண், 2000 ஆம் ஆண்டு பாஜகவின் முதல் தலித் தலைவரானார். ஒரு வருடம் கழித்து தெஹல்கா பத்திரிகையின் ஒரு ஸ்டிங் ஆபரேஷன் அவர் லஞ்சம் வாங்கியதைக் காட்டியது, அதன் பிறகு லட்சுமண் உடனடியாக ராஜினாமா செய்தார்.  

7. ஜனா. கிருஷ்ணமூர்த்தி 2001–2002: லட்சுமணன் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, தமிழகத்தைச் சார்ந்த ஜனா.கிருஷ்ணமூர்த்தி தற்காலிகத் தலைவராகப் பொறுப்பேற்றார். சிறிது நேரத்திலேயே தேசிய நிர்வாகக் குழுவால் அவர் தலைவராக உறுதி செய்யப்பட்டார். ஒரு வருடம் கழித்து அமைச்சரவை மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக அடல் பிஹாரி வாஜ்பாயி தலைமையிலான மத்திய அரசில் சட்ட அமைச்சரானபோது இவர் ராஜினாமா செய்தார்.

8. வெங்கையா நாயுடு (2002–2004): ஜனா. கிருஷ்ணமூர்த்தி மத்திய அமைச்சரவையில் சேர்க்கப்பட்ட பிறகு வெங்கையா நாயுடு பாஜக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் . 2004 இந்திய பொதுத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தோல்வியடைந்ததை அடுத்து நாயுடு ராஜினாமா செய்தார்.

9. எல்.கே. அத்வானி  (2004–2005): 2004 பொதுத் தேர்தலை அடுத்து வெங்கையா நாயுடு ராஜினாமா செய்த பிறகு, மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றிய அத்வானி மூன்றாவது முறையாக பாஜக தலைவரானார் . அத்வானி தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்தார். பாகிஸ்தான் சென்றபோது முகமது அலி ஜின்னாவை மதச்சார்பற்ற தலைவர் என்று வர்ணித்தது சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, 2005 இல் அத்வானி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

10. ராஜ்நாத் சிங் (2005–2009):மீதமுள்ள பதவிக் காலத்திற்கு டிசம்பர் 2005 இல் ராஜ்நாத் சிங் பாஜக தலைவராகப் பதவியேற்றார். 2006 இல் இவர் மீண்டும் நியமிக்கப்பட்டார். உத்தரப்பிரதேச முதலமைச்சராகவும், பாஜகவின் இளைஞர் பிரிவின் தலைவராகவும் இவர் பணியாற்றியுள்ளார். 2009 பொதுத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து சிங் ராஜினாமா செய்தார்.

ஜே.பி. நட்டா: தற்போதைய தலைவர்

11. நிதின் கட்கரி (2009–2013): 2009 ஆம் ஆண்டு பாஜகவின் இளைய தலைவரானார் மஹாராஷ்டிரத்தைச் சார்ந்த நிதின் கட்கரி.  நீண்டகால ஆர்எஸ்எஸ் உறுப்பினரான இவர், மகாராஷ்டிராவில்  கூட்டணி அரசாங்கத்தில் அமைச்சராகவும், பாஜக இளைஞர் பிரிவின் தலைவராகவும் பணியாற்றியவர். அமைச்சராக இருந்த காலத்தில் ஏற்பட்டகுற்றச்சாட்டுகளுக்குப் பிறகு கட்கரி 2013 இல் ராஜினாமா செய்தார்.

12.ராஜ்நாத் சிங் (2013–2014): 2013 ஆம் ஆண்டு கட்காரி பதவி விலகிய பிறகு, சிங் இரண்டாவது முறையாக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014 பொதுத் தேர்தலுக்கான பாஜகவின் பிரசாரத்தில் சிங் பெரும் பங்கு வகித்தார். பாஜகவிற்குள் இருந்துவந்த எதிர்ப்பையும் மீறி நரேந்திர மோடியை கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவித்தார். கட்சியின் மகத்தான வெற்றிக்குப் பிறகு, உள்துறை அமைச்சர் பதவியை ஏற்பதற்காக, சிங் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

13. அமித் ஷா (2014–2020):  பிரதமர் நரேந்திர மோடியின் நம்பிக்கைக்குரியவரான அமித் ஷா, ராஜ்நாத் சிங் மோடி அமைச்சரவையில் இணைந்த பிறகு, மீதமுள்ள பதவிக் காலத்திற்கு பாஜக தலைவரானார் . 2016 இல் அமித்ஷா முழு மூன்று ஆண்டு காலத்திற்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னாளில் (தற்போது வரை) மத்திய உள்துறை அமைச்சர் ஆனார்.

14. ஜே.பி. நட்டா (2020–பதவியில் இருப்பவர்): மத்திய நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருக்கும் ஜெய பிரகாஷ் நட்டா  2020 முதல் தற்போது வரை அகில இந்தியத் தலைவராக இருந்து வருகிறார்.

இன்றைய பாஜகவின் முகங்கள்:
பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும்

பாரதிய ஜனதா கட்சி, தீனதயாள் உபாத்தியாயவால் எழுதப்பட்ட  ‘ஏகாத்ம மானவ வாதம்’ புத்தகத்தின் அடிப்படையில், ஒருங்கிணைந்த மனிதநேயம் என்ற தத்துவத்தை தனது அதிகாரப்பூர்வ கொள்கையாகக் கொண்டுள்ளது.  ‘தேசியவாதக் கட்சி’ என்று கூறப்படும் இக்கட்சி, சுதேசி இயக்கத்தால் சுட்டிக்காட்டப்பட்ட சுயசார்புக் கொள்கையும், தேசியவாதத்தை அடிப்படையாகக் கொண்ட வெளியுறவுக் கொள்கையையும் கொண்டது. இந்திய அரசியலில் வலதுசாரிக் கொள்கையுடைய கட்சி.

2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பிறகு, பா.ஜ.க. நாடாளுமன்றத்தில் முக்கிய எதிர்க்கட்சியாக விளங்கியது. 2014 மக்களவைத் தேர்தலில் 282 இடங்களில் வெற்றி பெற்று நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைத்துள்ளது. 2019 மக்களவைத் தேர்தலிலும் பெரும்பான்மையைப் பெற்று தொடர்ந்து இரண்டாம் முறையாக ஆட்சி அமைத்தது. 2024 இலும் மூன்றாம் முறையாக ஆட்சி அமைத்த காங்கிரஸ் அல்லாத முதல் கட்சி ஆனது.

$$$

Leave a comment