சமஸ்டோரி – 1

-வ.மு.முரளி

கரூர் துயரம் தொடர்பாக, முந்தைய திமுக ஆதரவாளரான சமஸை இப்போது திமுக ஜோம்பிகள் கூடி கும்மி அடித்து குதறி வருகின்றனர். நடிகர் விஜயின் ஆதரவாளராக அவர் முத்திரை குத்தப்படுகிறார். அதற்கு சமஸ் எதிர்வினை ஆற்றுகிறார். இந்த விவகாரத்தை இதுவரை கவனித்த வரை, 'பத்திரிகையாளர்களுக்கு நடுநிலை தேவை' என்பதை சமஸோ, அவரை எதிர்ப்பவர்களோ உணர்ந்திருப்பதாகத் தெரியவில்லை. இந்த விஷயத்தில் தேசியவாதிகள் என்ன செய்ய வேண்டும்? நமது இணையதள ஆசிரியரும் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான திரு. வ.மு.முரளியின் குறுந்தொடர் இது….
  •  (எச்சரிக்கை: நண்பர் சமஸும் அவரைப் புகழும் ஜெயமோகனும் மட்டும்தான் நீட்டி முழக்கி எழுதுவார்கள் என்று எண்ணாதீர்கள்… நம்மாலும் நீ….ட்ட்டி எழுத முடியும்…. இனி படிக்க வேண்டியது உங்கள் தலையெழுத்து…)

நண்பர் சமஸ் தற்போது திமுக அடிவருடிகளால் வசை பாடப்படுகிறார். ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ போன்ற திமுக உடன்பிறப்புகளே மிரளும் வகையில் நூலைத் தொகுத்து வழங்கிய சமஸைத் தான் தற்போது திமுக அடிமைகள் குதறிக் கொண்டிருக்கிறார்கள். அவருக்கு, மு.க.ஸ்டாலின் 2022இல் சிறந்த படைப்பாளிக்கான கலைஞர் பொற்கிழி விருது வழங்கியது மறந்து போய்விட்டது போல. (தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம்- பபாசி  வழங்கும் விருது இது. சென்னை புத்தகக் கண்காட்சி விழாவில் இவ்விருது வழங்கப்படுகிறது).

பத்திரிகையாளர் திரு. சமஸை சுமார் 15 ஆண்டுகாலமாக நான் அறிவேன். மக்கள் நலன் கருதுபவர்; கடினமான உழைப்பாளி; எழுத்தாற்றல் மிக்கவர்; பணியில் அதீத ஈடுபாடு; மிக வேகமாக எழுதும் திறன் பெற்றவர். தான் எழுதும் எதனையும் தர்க்கரீதியாக நியாயப்படுத்தக் கூடியவரும் கூட. தினமணி பத்திரிகையில் திருச்சி பதிப்பில் உதவி ஆசிரியராக இருந்த சமஸ், தொழிலில் பல கட்டங்களைக் கடந்து, தற்போது புதிய தலைமுறை செய்தி சேனலின் தலைமை ஆசிரியராகி இருக்கிறார்.

கடந்த 20 ஆண்டுகளில் அவர் அடைந்துள்ள உயரம் சாதாரணமானதல்ல. பத்திரிகையுலக சகா என்ற வகையில் அவரது வளர்ச்சியில் மகிழ்கிறேன். ஆனால்…

அது என்ன ‘ஆனால்’?

பத்திரிகை உலகில் வெல்ல தனது திறன்கள் மட்டுமே போதுமானவை என்பதையும் உணர்ந்த சாமர்த்தியசாலி அவர்; எனவேதான் இதழியல் உலகில் அவரால் முக்கியமானவராக முன்னேற முடிந்திருக்கிறது. தமிழ்ப் பத்திரிகை உலகின் போக்கு எப்படி இருக்கிறது என்பதை அறிந்து அந்தப் போக்கிலேயே நீந்திக் கொண்டிருந்ததால்தான் அவரால் அதிக தொலைவை நீந்த முடிந்திருக்கிறது. இப்போது திடீரெனெ எதிர்நீச்சல் போட முயன்றிருக்கிறார்; காட்டுக்கூச்சல் போடுகிறார்கள்.

எதிர்நீச்சல் போடுபவர்களை இந்த சுயநலம் மிகுந்த ஊடக நதியின் பெரும் பாய்ச்சல் புறந்தள்ளி விடுகிறது. குறிப்பாக, தமிழ் ஊடக (பத்திரிகை + தொலைக்காட்சி) சூழல், ஒரு சிறு கும்பலின் பிடியில் கட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கிறது. மாநில சுயாட்சி என்ற பெயரில் இந்திய வெறுப்பு, சமூகநீதி என்ற பெயரில் பிராமண வெறுப்பு, மதச்சார்பின்மை என்ற பெயரில் ஹிந்து வெறுப்பு, மொழிப்பற்று என்ற பெயரில் ஹிந்தி வெறுப்பு ஆகியவை இந்த சிறு கும்பலின் அடிநாதமாக இருந்து வருகின்றன. இந்த நிலை 1980களில் தொடங்கி, 1990களில் உறுதிப்படுத்தப்பட்ட வலைப்பின்னலாக உருவானது. இதனை உருவாக்கியதில் ஆனந்தவிகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்திற்கும், சென்னை- லயோலா கல்லூரிக்கும் பெரும் பங்குண்டு.

பத்திரிகைத் துறை அச்சு ஊடகமாக இருந்த வரை, அதன் மீதான அரசியல் ஆதிக்கம் இலைமறை காயாக இருந்தது. அரசு விளம்பரங்கள், அச்சுக் காகித ஒதுக்கீடுகள் ஆகியவற்றைக் கொண்டு அச்சு ஊடகங்களை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்துவது வழக்கம். அவற்றை மீறி இயங்கிய தினமணி, இண்டியன் எக்ஸ்பிரஸ், துக்ளக், தினமலர் போன்ற பத்திரிகைகளை நாம் அறிவோம்.

அந்தக் காலத்திலும் அரசைத் துதி பாடி வளர்ந்த பத்திரிகைகள் பல உண்டு; இன்றும் உண்டு. வழிக்கு வராத பத்திரிகைகளை எப்படி வளைக்க வேண்டும் என்பதை திராவிட அரசியல்வாதிகள் நன்கு அறிந்திருந்தனர். பத்திரிகை நிறுவனங்களுக்கு அரசு / கட்சி விளம்பரம், பத்திரிகையாளர்களுக்கு வீட்டுமனை, தனி கவர், பத்திரிகை நிறுவன முதலாளிகளுக்கு பினாமி முதலீடுகள் என, ஊடகம் தடம் புரளத் தொடங்கியது 1980களுக்குப் பிறகுதான்.

அதிலும், 1990களில் தொலைக்காட்சி யுகம் தொடங்கியபோது, தமிழகத்தின் சன் டி.வி. மூலமாக திமுக அதில் மிகுந்த ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் தனிக்காட்டு ராஜாவாக சன் டி.வி.யே கோலோச்சியது. அதன் விளைவாக தொலைக்காட்சி ஊடகத்திலும் ஒட்டுமொத்த ஊடகத்திலும் திமுக ஆதரவாளர்கள் பெருகினர். பத்திரிகையாளர் சங்கங்கள் அனைத்தும் கம்யூனிஸ்டுகள், திமுக ஆதரவாளர்களின் கைப்பாவை ஆகின.

இந்த ஊடகச் சூழ்நிலையைப் புரிந்துகொள்ளாமல், கொள்கை, லட்சியம், நாட்டுநலம் என்று பேசிக் கொண்டிருப்பவர்களால் இந்தத் துறையில் நுழையவோ, தொடரவோ, சாதிக்கவோ முடியாது. இதுவே 1990களுக்குப் பிந்தைய நிலவரம். இதை நன்கு உணர்ந்தவர் சமஸ்.

சூழலை தனக்கு சாதகமாக மாற்றுபவரே வெற்றியாளர் ஆகிறார். அந்த வகையில் சமஸ் புத்திசாலி, சாமர்த்தியசாலி. அத்துடன் அவரது திறமையும் உடன் இணைந்ததால் அவரால் சிகரங்களை நோக்கிப் பயணிக்க முடிந்தது. இன்று சமஸை வசை பாடிக் கொண்டிருக்கும் ‘அறிவுசீவி’களில் பலர் சென்ற மாதம் வரை அவரைப் பாராட்டி, கொம்பு சீவி விட்டவர்கள் தான்.

இவரும் அவர்களுக்காக பல புதிய அரசியல் கலைச்சொற்களை உருவாக்கினார். அதில் ஒன்று ‘ஒன்றிய அரசு’ என்ற சொல். மத்திய அரசு என்ற சொல்லுக்கு மாற்றான தூய தமிழ்ச் சொல்லாக இச்சொல் பல ஆண்டுகளுக்கு முன்னமே புழக்கத்தில் இருந்தாலும், சமஸ் இதனை ‘மாநில சுயஆட்சி’ என்ற கோட்பாட்டின் அடிப்படையில், இந்திய அரசியல் சாசனத்தில் மத்திய அரசின் தன்மையைக் குறைத்து மதிப்பிடுவதாக மாற்றினார். இந்திய ஒருமைப்பாட்டில் எக்காலத்திலும் நம்பிக்கை இல்லாத திமுக 2021இல் ஆட்சியைப் பிடித்தவுடன், தலைகால் புரியாமல் ஆடிக் கொண்டிருந்த நிலையில், ‘ஒன்றிய அரசு’ என்ற சொல்லால் சமஸ் அவர்களை ஈர்த்தார்.

‘மவுன்ட் ரோடு மஹாவிஷ்ணு’ என்று ஒருகாலத்தில் திரு. மு.கருணாநிதியால் தூற்றப்பட்ட, பிறகு ஹிண்டு ராமினால் சீன ஆதரவு நாளேடாக மாறிப்போன ‘தி ஹிண்டு’வின் தமிழ்ப் பதிப்பில் அவருக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பு, திமுகவினருக்கு தினசரி கொம்பு சீவிவிடும் தளமாக அமைந்தது. அதன் உரிமையாளர் ஹிண்டு ராமும், ஆசிரியர் திரு. அசோகனும் சமஸின் எழுத்துச் சமரை ரசித்துக் கொண்டிருந்தனர். அவர் அங்கே எழுதிக் குவித்தார். அங்கிருந்துதான், ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ 2017-இல் வெளியானது.

அப்போதெல்லாம், மு.க.ஸ்டாலினுக்கு ஆலோசனை சொல்லும் அளவுக்கு நெருக்கமாக இருந்தார் சமஸ். அதனால் அவர் தனிப்பட்ட பலன் பெறவில்லை என்று மறுக்கலாம். ஆனால், ஊடக வெளிச்சம், அரசியல் மரியாதை, சமூக கௌரவம், கலைஞர் பொற்கிழி போன்றவை அதனால்தான் கிடைத்தன என்பதை அவர் மறக்கக் கூடாது; மறுக்க முடியாது.

அப்படிப்பட்ட சமஸ், 2025இல் திடீரென நடிகர் விஜய் ஆதரவாளர் ஆகிவிட்டாரே என்பதுதான் திமுக ஜோம்பிகளின் ஆத்திரம். அவர்களின் கோபம் நியாயமானது. ஆனால், அதற்கு பாஜக தான் காரணம் என்று சதிக் கோட்பாட்டை எழுதுவதும், உ.பி. ஊடகப் பெரும்படையே வரிசை கட்டிக் கொண்டு சமூக ஊடகங்களில் ட்ரோல் செய்து சமஸை முடக்க முயற்சிப்பதும், ஊடக நிறுவனத்தை மறைமுகமாக மிரட்டுவதும் தான் கேலிக்குரியதாக இருக்கிறது.

சமஸின் நிலைமாற்றத்திற்கு காரணம் என்ன? அவர் பாஜகவால் ஆட்டுவிக்கப்படுகிறாரா? அவர் சங்கியா? அவர் உண்மையிலேயே நடிகர் விஜய் தரப்பை ஆதரிக்கிறாரா? அல்லது, நியாயத்தை இங்கு ஒருவர் கூட சொல்லிவிடக் கூடாது என்று திமுக ஜோம்பிகள் துடிக்கிறார்களா? உண்மையில் சமஸ், அவர்கள் நினைப்பது போல மாறிவிட்டாரா?

அவர் எப்போதும் போலத்தான் இருக்கிறார். சமஸின் குணத்தை அறிந்தவர்கள் அவர் மாறவில்லை என்பதை உணர்வார்கள்.

(தொடர்கிறது)…

$$$

3 thoughts on “சமஸ்டோரி – 1

Leave a comment