தெய்வீகம் தந்த தேசிய குருநாதர்கள் 

-கருவாபுரிச் சிறுவன்

கட்டிக்குளம் மாயாண்டி சுவாமிகள் அடையாளம் காட்டி அருளாசி நல்கிய தேசியப் பெரியவர்கள்  மூவர்.  சென்ற நூற்றாண்டில்  முடிசூடா  மிளிர்ந்த கட்டிக்குளம் மாயாண்டி சுவாமியாகிய குருநாதரின் வாக்கிற்கு அம்மூவரும் இலக்கணமாகத் திகழ்ந்தார்கள் என்பதைக்  கோடிடுவதே  இக்கட்டுரையின் உயிர்ப்பாகும்.
கட்டிக்குளம் மாயாண்டி சுவாமிகள்

ஹிந்துக்களின் இல்லங்களில் இருக்க வேண்டிய நூற்களில் முதன்மையானவை திருக்குறள், திருவாசகம், திருமந்திரம், திருத்தொண்டர்தொகை, திருவருட்பா, என்பனவாகும். இவ்வைந்தும் பஞ்ச பூதத்திற்கு நிகரானது என கற்றறிந்த சான்றோர்கள் அடங்கிச் சொல்லுவர்.

தன்மதக்கொள்கைகளை பரப்ப வந்த வெளிநாட்டினரில் ஒருவரான போப்பையரின் உள்ளத்தை  கொள்ளை கொண்ட நூற்களில் மேற்கண்ட ஐந்தும் உண்டு என்பார் தஞ்சை டி. என். ராமச்சந்திரன் என்னும் சைவப்பெரியார். அப்பெருமகனார் இன்று நம்மிடம் இல்லை என்பது நாம் செய்த தவத்தின் குறைவு. 

மூதுரை சொல்லும் முதுமொழி: 

நல்லாரைக் காண்பதுவும் நன்று, நலமிக்க 
நல்லார் சொல் கேட்பதுவும் நன்று - நல்லார் 
குணங்கள் உரைப்பதுவும் நன்று, அவரோடு 
இணங்கி இருப்பதுவும் நன்று.

     (மூதுரை - 9)

என்று தமிழ் மூதாட்டி சொல்லிய வாக்கினை கருவாகக் கொண்டு திருவாக விவரித்துக் கூறுவது  மேற்கண்ட  திருநூற்கள்.

ஒளவை பிராட்டியார் சொன்ன நல்லவரே பக்குவமடைந்தவரின்  ஆன்மிக வாழ்விற்கு  குருவாக வருவார் என்பது தெய்வீக நியதி. இவற்றில் நடுநாயகமாகத் திகழ்வது ’திருமந்திரம்’.

மூலன் உரைசெய்த மூவாயிரம் தமிழ் அது. பன்னிரு திருமுறைகளில் மந்திரம் என்னும் திருநாமத்தை தாங்கப் பெற்ற பெருமையினை உடையது. இது தன்பால்  ஒழுகியவரை மந்திரமாக்கும் தனித்தன்மை கொண்டது.

குரு என்பவர் ஆன்மாக்களின் அறியாமையை அகற்றி ஞான ஒளியைப் பாய்ச்சுபவர், இருளை அகற்றி தெய்வீக ஒளியைத் தருபவர் ஆவார்.

அக்குருவினுடைய திருவுருவத்தை நினைத்தாலே போதும் அது நினைப்பவரை சிவமாக்கும் மந்திரம். அம்மந்திரம்  தினசரி வழிபாட்டில் ஓதி உணரத்தக்கதாகும்.

குருநாதரின் சிறப்பு 

இத் திருமந்திரத்தில் குருவின் பெருமையை சொல்லும் பாடல்கள் பல, அவற்றுள்,

கருடன் உருவம் கருதும் அளவில்
பருவிடம் தீர்ந்து பயம் கெடுமா போல்
குருவின் உருவம் குறித்த அப்போதே
திரிமலம்  தீர்ந்து சிவனவன் ஆமே. 

-என்னும் திருமந்திரப் பாடல் ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது. 

வான்  உயரத்தில் பறக்கும் கருடனின் உருவம் பூமியில் படும் போது ஊர்ந்து செல்லும் விஷமுடைய பாம்பு பயந்து அஞ்சி ஓடும். 

உண்மையான தவசீலன் தன் குருநாதரின் திருவுருவத்தை நினைத்த மாத்திரத்திலே அவன் வினை நீங்கப்பெற்று சிவனாகவே ஆவான் , மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த திருமூல தேவ நாயனார். 

திருமூலர் சொல்லும் குருநாதர்கள் இக்கலிகாலத்திலும் வாழ்ந்து இருக்கிறார்களா… என்பதற்கு விடை காண முயலுவதே இச்சிந்தனையின் முதன்மை நோக்கமாகும். 

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே. 

குருநாதர்கள், ஞானிகள், முனிவர்கள், பெரியவர்கள், சான்றோர்கள், ஆன்றோர்கள், அறிஞர் பெருமக்கள் தமிழகத்தில் அதிகம். அவர்களால் தான் இப்பாரத தேசத்தின் பண்பாடு, பழக்க வழக்கங்களில்  இன்றும் உயிர்ப்போடு நிலைத்து நிற்கிறது. 

ஒழுக்கத்தின் உறைவிடமாக இருக்கும் இத்தமிழகத்தில் தோன்றிய ஞானிகளும், அவர்களால் அடையாளம் காட்டப்பட்டவர்களும் ஒழுக்க சீலர்களாகவும், தவவலிமை பொருந்தியவர்களாகவும் வாழ்ந்து காட்டினார்கள். 

மறந்தும் கூட நல்லன அற்ற சொற்கள் அவர்களுடைய திருவாயில் உதிப்பதில்லை.   அதனால் அவர்களுடைய வாக்கு சத்தியமானது. அவர்கள் சத்தியமாக  மிளிர்ந்தார்கள். 

அவர்கள் ஒரு வார்த்தை சொன்னாலும் அது திருவார்த்தையாக மலர்ந்தது.  சத்தியத்தின் வடிவமாகவே இப்பூவுலகில் வலம் வந்த அவர்கள் சொன்னது பலித்தது. எண்ணியது நடத்தது. நிகழ்த்தியது சிறந்தது. 

இத்தகைய ஞானிகள்  இவ்வுலகம் தோன்றிய நாள் முதலாக காலம் தோறும் மக்களோடு மக்களாக வாழ்ந்தும் தர்மத்தையும் நீதியையும் இன்றும் நிலை நாட்டிக் கொண்டு தான் இருக்கிறார்கள். 

போலித் தத்துவங்களில் மயக்கமுற்று, அதுவே உண்மையென நம்பி இந்த  நவீன உலகில் புரையோடி பின்னிப்பிணைந்து கிடப்போரின் வாழ்வு சீர் அடையவும், பல வளங்களை பெற்று மேன்மையுறவும் ஞானிகளின்  திருவடியை தேடிக் கண்டு கொள்ளல் அவசியம். 

அவர்களுடைய அதிஸ்டானங்களுக்கு சென்று அகம் குழைந்து கண்ணீர் பெருக்கி வழிபாடு செய்வதொன்றே கலியுகத்தில் இருந்து உய்வதற்கான ஒப்பற்ற வழியாகும். 

திருப்பம் தரும் திருப்பரங்குன்றம்:

வேதங்களின் அங்கமாகிய  தைத்திரீய உபநிடத்தில் இடம் பெற்ற  சத்தியம் வத என்ற ஞான வாக்கியத்தினை உயிர்ப்பாகக் கொண்டு வாழ்ந்து, இப்பூவுலகில் பல அற்புதங்களை நிகழ்த்திய காட்டிய அருளாளர்கள் பலர் ஆவார்கள். அவர்களுள்,  தென்பகுதியில் திலகமாகத் திகழ்பவர் மதுரை திருப்பரங்குன்றத்தில் வாழ்ந்து  இன்றும் தன்னை நாடி வந்தவர்களுக்கு அருள் வழங்கிக் கொண்டிருக்கும் கட்டிக்குளம் மாயாண்டி சுவாமிகள் குறிப்பிடத்தக்கவர்கள். 

சுவாமிகள் எத்தனையோ அன்பர்களை அருள் ஞானியாக ஆக்கி இருக்கலாம். இருப்பினும், நமக்கு கிடைத்த சான்றுகள் படியும், மெய்யன்பர்கள் சொல்லிய செய்திகளை அடிப்படையாகக் கொண்டும் கட்டிக்குளம் மாயாண்டி சுவாமிகள் அடையாளம் காட்டி அருளாசி நல்கிய தேசியப் பெரியவர்கள்  மூவர். 

சென்ற நூற்றாண்டில்  முடிசூடா அருளாளராக மிளிர்ந்த கட்டிக்குளம் மாயாண்டி சுவாமியாகிய குருநாதரின் வாக்கிற்கு அம்மூவரும் இலக்கணமாகத் திகழ்ந்தார்கள் என்பதைக்  கோடிடுவதே  இக்கட்டுரையின் உயிர்ப்பாகும்.

1. கவசம் தந்த கருணாகரக் கடவுள்:

முன்பு போர்க்களத்தில் வீரர்கள்  இரும்பினால் உடை அணிந்து எதிரியிடம் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ள அணிந்து கொள்ளும் ஆடையை கவசம் என்பர். 

 ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு ஒரு பொருளை அனுப்புவதற்கு பாதுகாப்பாக பார்சல் செய்வதை அப்பொருளுக்கு கவசம் என்போம்.

அதைப்போல பிறவிகளிலே உயர்ந்த பிறவியான மானிடப் பிறவியினை தாங்குவது  இந்த உடல். இதனையும் இதில் சூட்சமமாக இயங்கும் உயிரினையும்  பிறரின் திருஷ்டி, கண்கோளாறு, மனஅழுக்கு, தாழ்வு மனப்பான்மை…நோய், நொடிகள் போன்றவை வந்து தாக்கமல் இருக்கவும், நாளும் இவ்வுடம்பினை  பேணிகாத்துக் கொள்ளவும்  ஞானிகளால் சாமானிய மக்களுக்கு விரும்பி அருளப் பெற்ற அருள் கொடையாகிய திருவரமே  கவசப் பாடல்கள் ஆகும். 

சிவகவசம், சக்திகவசம், நாராயணர் கவசம், அனுமன் கவசம், பைரவர் கவசம், கந்த சஷ்டி கவசம் என்பது குறிப்பிடத்தக்கது. அவற்றுள்,  

 கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே
முஷிக வாகனனே மூலப் பொருளோனே
ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே
திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய்
சித்தி விநாயக ஜயமருள் போற்றுகிறேன்.
............     .............
கன்னிமார் ஓடையிலே நீராடி நீறுபூசிக்
கந்தகுரு கவசம் ஓதி கந்தகிரி ஏறிவிட்டால்
முந்தை வினை எல்லாம் கந்தன் அகற்றிடுவான்
நிந்தைகள் நீங்கிவிடும் நிஷ்டையுமே கைகூடும்
கன்னிமார் ஓடை நீரை கைகளில் நீ எடுத்துக்
கந்தன் என்ற மந்திரத்தைக் கண்மூடி உருவேற்றி
உச்சியிலும் தெளித்து உட்கொண்டு விட்டிட்டால் உன்
சித்த மலம் அகன்று சித்த சுத்தியும் கொடுக்கும்
கன்னிமார் தேவிகளைக் கன்னிமார் ஓடையிலே
கண்டு வழிபட்டு கந்தகிரி ஏறிடுவீர்.
கந்தகிரி ஏறி ஞான ஸ்கந்தகுரு கவசமிதைப்
பாராயணம் செய்து உலகில் பாக்கியமெல்லாம் பெற்றுடுவீர்...

-என்னும்  447 வரிகளைக் கொண்ட கந்த குரு கவசப்பாடல் ஆஸ்தீக அன்பர்களின் உள்ளங்களிலும், அவர்களது இல்லங்களிலும், அவர்கள் வசிக்கும்  பட்டி தொட்டிகளிலும் ஒலிப்பதற்கு மூல காரணகர்த்தாவாகத் திகழ்பவர் சேலம் சற்குரு சாந்தானந்த சுவாமிகள் ஆவார்கள். 

சுவாமிகளின் பெற்றோர் மதுரைக்கு அருகிலுள்ள சிற்றூரில் வசித்து வந்தார்கள். அவர்களுடைய வீட்டிற்கு ஒரு முறை  கட்டிக்குளம் மாயாண்டி சுவாமிகள் வருகை தந்தார்கள். அவர்களது உபசரிப்பில் அகமும் புறமும் மகிழ்ந்து,   “உங்களுக்கு  10 வதாக ஒரு சற்புத்திரன் பிறப்பான். அவன் சாமானியன் அல்ல… வேதங்களை இரட்சிக்க வந்தவன், உலக நலத்தை விரும்புவன், மாதா புவனேஸ்வரியின் அருள் உடையவன்,  இந்த உலகத்திற்கே சொந்தமானவன்” என்று அருள்வாக்கு சொல்லிவிட்டுச் சென்றார் மாயாண்டி சுவாமிகள்.

சுப்பிரமணியன் என்ற பெயருடைய நம் சாந்தானந்தர்  இளமைக் காலத்தில்  சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்ட போது அதை  தவச்சாலையாக மாற்றி அமைத்துக் கொண்டார்.  அவருக்கு தோன்றாத்துணையாக இருந்தவர் கட்டிக்குளம்  மாயாண்டி சுவாமிகள் என்பது  வரலாறு. 

2. சொல்லும் செயலும் முத்தமிழுக்கே… 

தன்னுடைய சொல்லும் செயலும் முத்தமிழ்க்கடவுளாம் முருகப் பெருமானுக்கே என்று வாழ்ந்து காட்டியவர் வள்ளல் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள். 

தேசியமும் தெய்வீகமும் கலந்த சுவாமிகளின் சொற்பொழிவினைக் கேட்டு எத்தனையோ பேர் ஆஸ்தீகராக மாறி  திருத்தொண்டில் ஈடுபட்டுள்ளார்கள். தேச நலனில் அக்கறையுடன் பணியாற்றியுள்ளார்கள் என்பது ஏட்டில் எழுதப்படாத வரலாறு. 

தற்போதும் வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவினைக் கேட்பது, அவருடைய திருநூற்களை வாசிப்பது என கண்ணுக்கு தெரியாத எத்தனையோ அன்பர்கள் பரிபக்குவமாகிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.  வாரியார் சுவாமிகள் ஆன்மிக உலகில் ஒரு சகாப்தம். 

ராமநாதபுரம் பக்கத்திலுள்ள கிராமத்திற்கு தந்தை மல்லைய தாசர் உபன்யாசத்திற்குச் சென்ற போது சிறுவனாக இருந்த நம் சுவாமிகளும் உடன் சென்றுள்ளார். 

அங்கு மாயாண்டி சுவாமிகள் அன்பர்களுக்கு திருநீறு கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது சிறுவனாகிய நம் வாரியார் சுவாமிகளும்  கூட்டத்தில்  கை நீட்டி திருநீறு கேட்க, கரத்தைப் பிடித்துப் பார்த்த மாயாண்டி சுவாமிகள்,  சிரத்தையுடன்  “அடடே, இந்தக் கை பலருக்கும் திருநீறு கொடுக்கும். கோடி ஜனங்களுக்கும்  குருவாக  போகும் கை”  என்று அருள்வாக்கு சொன்னார்.

அதன்படியே சிவலோக பதவி அடையும் வரை மட்டுமல்ல தற்போதும் சற்குருவாகவே திகழ்கிறார்  நம் வாரியார் சுவாமிகள்.

3. தேசிய குருவான தெய்வத் திருமகனார்: 

ராமநாதபுரம் இந்திராணி அம்மையாரும், உக்கிரபாண்டித் தேவரும் தமக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை என்ற குறையைப் போக்க மாரநாடு கருப்பன சாமிகோயிலில் மாசி களரி விழாவிற்குச் சென்றுவிட்டு கருப்பனேந்தல் மடம் வழியாக வந்து கொண்டிருந்தார்கள்.

அப்போது அங்கிருந்த கட்டிக்குளம் மாயாண்டி சுவாமியை தரிசிக்கிறார்கள். அப்போது சுவாமிகள்  “56 ஊருக்கு சொந்தக்காரரான நீங்கள் இந்த சாதாரணமானவனிடம் வந்திருக்கிறீர்கள். உங்கள் மனக்குறையை யாம் அறிவோம். தாயே! உன் வயிற்றில் ஒரு முத்து உள்ளது. ஆதலால் உங்களுடைய குறை நீங்கும்.   ஊர் போற்றும் பிள்ளை ஒருவன் வந்து உதிப்பான். என் ஆதி குருநாதரான ராமலிங்கம் பெயரையும் சேர்த்து வையுங்கள்” என வரமளித்தார். 

அடுத்த  ஆண்டு அக்டோபர் 30இல் பிறந்த குழந்தைக்கு முத்து ராமலிங்கம் என பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள் பெற்றோர். அக்குழந்தையே நமது தேச அரசியலின் ஞான குருவாவார்.

பின்னாளில் தேவர் பெருமகனார் திருப்பரங்குன்றம் திருநகரில் வசித்த போது எந்த ஒரு அரசியல் ஆன்மிக முடிவுகளை எடுக்க வேண்டும் என நினைத்தால், காகபுஜண்டர் என்னும் பெயருடைய கூடல் மலைக்கு வந்து தவம் தியானம் இருந்து 1 மணி நேரம், 1, 2, நாட்களாகக்கூட காத்திருப்பாராம்.

அவருடைய கண்களுக்கு மாயாண்டி சுவாமிகளின் திருவுரு தரிசனம் கிடைத்த பிறகு தான் அக்காரியத்தைத் தொடங்குவார்கள்.

அதன் பிறகு அக்காரியம் மிகச்சிறந்த வெற்றியைப் பெறும் என்பது அவருடைய வாழ்வியல் கூறும் அருஞ்செய்தியாகும்.

இந்த தேசத்தில் வாழும் மகாஞானிகள் ஒன்றை நினைத்து சொன்னால்  அது பலிக்கும் என்கிற வேத வாக்கிற்கு இலக்கணமானவர்கள் தமிழகத்தில் வாழும் ஒப்பற்ற அருளாளர்கள்.  அது அவர்களது வாழ்வில் நடந்தே தீரும் என்பது மேற்கண்ட மூவர் வாழ்வில் உண்மையாயிற்று என்பதற்கு இந்நிகழ்வுகள் யாவும்  ஒரு சிறந்த சான்றாகும். 

கர்மயோகியின் கன்னிப்பேச்சு:

முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஏ. ஆர். பெருமாள்  ‘முடிசூடா மன்னர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வீரவரலாறு’ என்று ஒரு நூலை எழுதியிருக்கிறார். அதிலுள்ள  ‘முதல் கன்னிப்பேச்சு’ என்ற பகுதி இந்த நேரத்தில் இடம் பெறுவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறோம்.

முதுகுளத்துார் தாலுகாவில் உள்ள ஓர் ஊர் சாயல்குடி. அந்த ஊரில் சேதுராமன் செட்டியார் என்ற பழம்பெரும் தேசபக்தர் ஒருவர் இருந்தார். அந்த தேசபக்தர், சுவாமி விவேகானந்தர் பெயரில் ஒரு வாசக சாலை அமைத்து சிறப்பாக நடத்தி வந்தார்.

அந்த வாசக சாலையின் முதலாவது ஆண்டு விழா 1933 ஆம் ஆண்டு நடைபெற்றது. அந்த வாசக சாலையின் ஆண்டு விழா, மாவட்ட மாநாடு போல பெரிய அளவில் அவ்வளவு சிறப்பாக நடைபெற்றது.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நண்பர் சசிவர்ணத்தேவரும், காமராஜரும்  அந்த ஆண்டு விழாவில் கலந்து கொண்டார்.

அந்த விழாவில், சுவாமி விவேகானந்தர் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்து பேசுவதற்கு, மதுரை கிருஷ்ணசுவாமி பாரதி அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் அவரால் அன்றைய தினம் என்ன காரணத்தினாலோ வர முடியாமல் போனது.

அவருக்குப் பதிலாக  விவேகானந்தர் படத்தைத் திறக்க யாரை வைத்து  ஏற்பாடு செய்வது என்பது குழப்பமாக இருந்தது.

அப்போது சாயல் குடிக்குப் பக்கம் இருக்கும் ஒரு கிராமத்திற்கு பஞ்சாயத்துப் பேச பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சென்றொருந்தார். இந்த விஷயம் சேதுராமன் செட்டியாருக்கு தெரிய வந்தது.

உடனே சேதுராமன் செட்டியார் சென்று,  “விழாவில் நீங்கள் தான் விவேகானந்தர் படத்தைத் திறந்து வைத்துப் பேச வேண்டும்” என்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை அழைத்தார் செட்டியார்.

அப்போது பசும்பொன் முத்துராமலிங்கத்தேவருக்கு வயது 25.

தேவரும் ஒப்புக் கொண்டு சாயல்குடிக்கு வந்தார். ஆண்டு விழா தொடங்கியது.

 விவேகானந்தரை படத்தைத் திறந்து வைத்துப் தேவர் பேச ஆரம்பித்தார். ஒரு பத்து , அல்லது பதினைந்து நிமிடம் தான் தேவர் பேசுவார் என்று எல்லோருக்கும் எதிர்பார்த்தார்கள்.

ஆனால் அவர்கள் அனைவரும் எதிர்பார்த்தற்கு மாறாக, தேவர் மூன்று மணி நேரம் விவேகானந்தரைப் பற்றி பேசிய முதல் கன்னிப்பேச்சு அனைவரையும் அப்படியே திகைக்க வைத்தது.

அதற்கு முன்னால் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் எந்த மேடையும் ஏறிப் பேசியதில்லை. விவேகானந்தர் பற்றி அவர் பேசிய அதுதான் அவரது முதல் பேச்சு.

முதல் பேச்சிலேயே அரசியலும் ஆன்மிகமும் கலந்து சுவாமி விவேகானந்தரின் தத்துவங்களை எடுத்து வைத்து – அடுக்கடுக்காக அவர் ஆற்றிய சொற்பொழிவு அனைவரையும் கவர்ந்தது. பொது மக்களும் அடிக்கடி கை தட்டி ஆரவாரம் செய்து, தங்களது மகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள்.

நிறைவாக,

தென்தமிழகத்தின் தேசியகுருவாக திகழும் பசும்பொன் முத்துராமலிங்கத் ர் எவ்வாறு  தன் நெற்றியில் நீறணிந்து  இந்த தேசத்திற்கு சேவை செய்தார்களோ அதைப்  போல நாமும் நெற்றியில் நீறணிந்து தேசியத்திற்கும் தெய்வீகத்திற்கும் தொண்டு செய்து உய்வு பெறுவோம் எனச் சொல்லி இச்சிந்தனையை நிறைவு செய்கிறோம்.

பத்தியோடு சிவசிவ என்று திருநீற்றைப்
    பரிந்து கையால் எடுத்துப்
    பாரினில் விழாத படி, அண்ணாந்து செவியோடு,
       பருத்த புய மீது வீழ,
நித்தம் மூவிரல்களால் நெற்றியில் அழுந்தலுற
   நினைவாய்த் தரிப்பவர்க்கு
   நீடு வினை அணுகாது தேக பரிசுத்தமாம்
       நீங்காமல் நிமலன் அங்கே,
அத்தியொடு நித்தம் விளையாடுவான் முகத்திலே
   தாண்டவம் செய்யும் திரு
   வராது பரகதியுதவும்: இவனையே
       சத்தியும் சிவனும் எனலாம்.
மத்தினிய மேரு என வைத்து அமுதினைக் கடையும்
   மால் மருகனான முருகா!
   மயிலேறி விளையாடும் குகனே! பொன் வயல்நீடு
       மலை மேவு குமரேசனே!

திருச்சிற்றம்பலம்

வாழ்க பாரதம்! வாழ்க மணித்திருநாடு!

$$$

Leave a comment