-கருவாபுரிச் சிறுவன்
தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு நீர் வழங்கும் செண்பகவல்லி அணை உடைந்து கிடக்கிறது. இரு மாநில சர்ர்ச்சையில் சிக்கியுள்ள இந்தத் தடுப்பணையை அரசு சீர் செய்ய வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை நமது தளம் தொடர்ந்து முன்வைத்து வருகிறது. இந்த விஷயத்தில் மேலும் சில தகவல்களை இக்கட்டுரை தருகிறது... இது மூன்றாம் பகுதி...

மருந்தவை மந்திரம் மறுமை நன்னெறி யவை மற்றும் எல்லாம் அருந்துயர் கெடும் அவர் நாமமே சிந்தை செய் நன்னெஞ்சமே பொருந்து தன்புறவினில் கொன்றை பொன் சொரி தரத் துன்று பைம்பூம் செருந்தி செம்பொன் மலர் திருநெல் வேலி உறை செல்வர் தாமே -திருஞானசம்பந்த நாயனார்
மருந்து, மந்திரம், நன்னெறி இவையே மக்களின் அருந்துயரைக் கெடுக்கும். இதனை சிந்தையில் இருத்த வேண்டும் என்று சொன்ன சமயக்குரவர்களில் ஒருவரான திருஞானசம்பந்த நாயனாரின் பாத மலர்களை முதலில் தலைமேற் கொள்வோமாக.
தமிழ் இலக்கியம், தமிழகம், பண்பாட்டு வரலாறுகள் யாவும் ஓரளவு முழுமையாக சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் தான் உருவாயின என்பதை அனைவரும் அறிவர்.
அதற்கு முன்பாக, மூவேந்தர்கள், அவர்களுக்குப் பின்னர் வந்தவர்கள் என்னும் பேரரசு, சிற்றரசு, சமஸ்தானம்,திவான் என்ற முறையிலும், மாவட்டத்தை மையமாக வைத்து ஆட்சி, நிர்வாகம், அரசியல், கலை, அறிவியல், இயற்கை, சமூகம், புவியியல், தெய்வீகம், பொழுது போக்கு, சுற்றுலா, ஏனைய சிறப்புகள் தனித்தலைப்புகளாக அங்காங்கே வசித்த நல்லறிஞர்களைக் கொண்டு நூல்களை உருவாக்கினார்கள்.
அந்த வகையில் செண்பகவல்லி தடுப்பணை அமைந்திருக்கும் பகுதி முழுக்க முழுக்க தமிழகத்திற்கு சொந்தமானது தான் என்பதை அரசியல்வாதிகள் முதல் அடிமட்டத் தொண்டர்கள் வரை அனைவரும் உணர்ந்து கொள்ளும் பொருட்டு, 1925 ஆம் ஆண்டு அன்றைய சென்னை தொல்லியல் துறையைச் சார்ந்த பி.வி. ஜெகதீஸ்வர ஐயர் ‘ஜில்லா சரித்திரம் -திருநெல்வேலி’ என்ற நூலை உருவாக்கி அச்சிட்டு வெளியிட்டுள்ளார்கள்.
அவற்றில் உள்ள தடுப்பணைக்குரிய வாசகங்களை அப்படியே இங்கு தருகிறோம்.
“இந்த ஜில்லாவின் மேற்கு எல்லையாக ஏற்பட்டிருக்கும் குன்றுகள் ஒழுங்கற்று ஓடியிருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் தொடர்ச்சியே. இங்கு அது ஒருவாறு ஒழுங்காகவே சென்றிருக்கக் காணலாம். தென்காசி தாலுகா ஏற்பட்டுள்ள இடத்தைத் தவிர இந்த ஜில்லாவின் வடகோடியில் இருந்து பாபநாசம், தாம்பிரணி பள்ளத்தாக்கு வரை உள்ள இடங்களில் இது நேராகவே சென்றிருக்கிறது. பிறகு ஒரு பன்னிரெண்டு மைல் சுமாருக்கு அது தென்கிழக்காக வளைந்து சென்று பிறகு முன்போலவே தெற்கு நோக்கி சமுத்திரம் வரை செல்கிறது.
இங்குள்ள சிகரங்களுள், சிவகிரி 5,721 அடி உயரத்தில் உள்ள கள்ளக்கடை மொட்டை என்ற சிகரம் முக்கியமானது. இதன் பின் புளியங்குடிக்கு 6,335 அடி உயரத்திலுள்ள கோட்டைமலையும், கிருஷ்ணாபுரத்திற்கு அப்பால் கிளம்பிச் சென்றிருக்கும் 5,876 அடி உயரம் வாய்ந்த குளிராட்டிச் சிகரமும் முக்கியமானவை.”
என்ற வரிகளை கருத்தில் கொள்ள வேண்டும் என்பதை நினைவூட்டுகிறோம்.
ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள செண்பகவல்லி கால்வாய் தமிழகத்தின் எல்லைப்பகுதிக்கு உட்பட்டுத் தான் உள்ளது என்பதை மேற்கண்ட வரிகள் உள்ளங்கையில் உள்ள நெல்லிக்கனியாய் உணர்த்துகின்றன.
சுதந்திரம் அடைந்த பிறகும், மொழிவாரி மாநிலமாக தமிழகம் பிரிக்கப்பட்ட பிறகும் செண்பகவல்லி தடுப்பணை பகுதி தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் தான் இருந்தது என்பதை, உடைப்பு ஏற்பட்ட போது அதனைச் சீர் செய்த தமிழக அரசு நிறுவிய நினைவுக் கல்வெட்டு தெள்ளத்தெளிவாகக் காட்டுகிறது.
ஆனால் தமிழக அரசு தன்னுடைய மாநில எல்லையை சரியாக திட்ட மிட்டு அளவீடு செய்து பிரிக்கப்படாமல் இன்று வரை இருப்பதே, இவ்வுடைப்பு சீர் செய்யப்பட வில்லை என்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கும் என்கிறார்கள் கற்றறிந்த சான்றோர்கள்.
இயலாதவனுக்கு இருக்க இடம் கொடுத்தால் படுக்க திண்ணையைக் கேட்பான் என்ற சொலவடைக்கு ஏற்ப, தன் மாநில எல்லையை கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்திக் கொண்டே வருகிறது அண்டை மாநிலமான கேரள அரசு.
ஒரு வேளை கச்சத்தீவினை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்தது போல கேரளாவிற்கு செண்பகவல்லி அணைப்பகுதியை தாரை வார்த்து கொடுத்து விட்டார்களோ என்ற எண்ணம் ஒவ்வொரு விவசாயிகள் மனதில் எழத்தொடங்கி, சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள்.
அதற்கு காரணம், செண்பகவல்லி கால்வாய் அருகே ஒரு தங்குமிடத்தை அமைத்திருக்கும் பெரியார் புலிகள் காப்பகம், அங்கு செல்வதற்கு வழி இல்லாததால் புலிகள் காப்பகத்தின் தலைமையகமான தேக்கடியில் இருந்து கம்பம், தேனி, ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி, பேரையூர், திருவில்லிபுத்துார், ராஜபாளையம் சிவகிரி, வாசுதேவநல்லுார் வழியாக வாகனங்களில் தன்னுடைய வனத்துறை பணியாளர்களை 10 நாட்களுக்கு ஒரு முறை அழைத்து வருகிறது.
அவர்களை தலையணை முகாமில் தங்க வைத்த பிறகு தான் செண்பகவல்லி கால்வாய்க்கு தமிழக வனப்பகுதி வழியாகச் செல்ல அனுமதிக்கிறது. ஆனால் அந்த செண்பகவல்லி கால்வாய் இருக்கும் வனப்பகுதிக்குள் தமிழக வனத்துறையினர் செல்வதற்கு தடை இருக்கிறது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
தளவாடச் சாமன்களை எடுத்துக் கொண்டு தமிழகத்தில் உள்ள தேனி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களின் வழியாக தென்காசி மாவட்டத்திற்குள் புகுந்து 5,000 அடி உயரத்தில் இருக்கும் செண்பக வல்லி கால்வாய்க்கு தான் கொண்டு வந்த பொருட்களுடன் தாராளமாக செல்கிறார்கள் பெரியார் புலிகள் காப்பக வனத்துறை பணியாளர்கள்.
ஒரு வேளை செண்பகவல்லி அணையை சீர் செய்ய போராட்டங்களை முன்னெடுக்கும் தமிழக விவசாயிகள் பின்னாளில் உரிமை கோருவார்கள் என்ற மூலகாரணத்தை ஆராய்ந்து 2001இல் பெரியார் புலிகள் காப்பகம் கிழக்குப் பகுதியாக அறிவித்தது கேரள அரசு என்கிறார் சமூக நல ஆர்வலரும், பெரியாறு வைகை பாசன விவசாய சங்கத்தின் ஒருங்கிணைப்பாளருமாகிய ச.பென்னிகுயிக் பால சிங்கம் அவர்கள்.
மேலும், தமிழக வனத்துறையிடம் இப்பகுதிக்குரிய எல்லை குறித்த விபரங்கள் ஏதேனும் உள்ளதா என்ற கேள்விக்கு , அது குறித்து எதுவும் எங்களிடம் இல்லை என தமிழக வனத்துறையினர் சம்பந்தப்பட்டவர்களுக்கு பதில் அளித்திருப்பது தமிழக அரசின் நிர்வாகத் திறமையின்மையைப் பறை சாற்றுகிறது.
திருநெல்வேலி மாவட்டம்
ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து சில பகுதிகளைப் பிரித்து 1986 ஆம் ஆண்டு அக். 20 அன்று தூத்துக்குடி மாவட்டம் உருவானது.
பின்னர், திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து மேலும் சில பகுதிகளைப் பிரித்து 2019 ஆம் ஆண்டு நவ. 12 அன்று தென்காசி மாவட்டம் உருவானது.
இவை யாவும் நிர்வாகத்தில் தனித்தன்மையுடன் மாநில அரசு செயல்பட வேண்டும் என்ற நோக்கிலும், மக்களின் பொது நலன் கருதியும் பிரித்து உருவாக்கப் பெற்றது என்பதை கருத்தில் கொள்வோமாக. ஆனால்,
மக்கள் நலன் கருதி செய்யப்பட்ட இந்த நல்ல நோக்கத்தினைப் போன்று மூன்று மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு உயிர்ப்பான செண்பகவல்லி தடுப்பணையை சீர் செய்யும் திட்டம் தினம் தினம் நொறுங்கி சின்னபின்னமாகிறது என்பது தெரிந்திருந்தும், இது பற்றி மாநிலஅரசு உதட்டினை அசைக்காமல் இருப்பது ஏனோ என்று தெரியவில்லை.
கிராம சபைக் கூட்டம்
நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் கிராமம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பார் காந்தியடிகள்.
கிராம சபை கூட்டத்திற்கு முறையாக, ஊராட்சிமன்றத் தலைவர், ஊராட்சி மன்ற துணைத்தலைவர், வார்டு கவுன்சிலர், மக்கள் விரும்பும் பிரதிநிதிகள் அல்லது மாவட்ட ஆட்சித் தலைவரால் அங்கிகரிக்கப்பட்ட அலுவலர்களில் ஒருவரே தலைமை வகிப்பார்கள்.
பொதுமக்களின் குறைகளை கவனமாகக் கேட்க வேண்டும். கிராம வளர்ச்சி குறித்து இச்சபையில் யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம். அது நியாயமானதாக இருக்க வேண்டும். மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வாக கிராமசபையில் இயற்றப்படும் தீர்மானத்தை நிராகரிக்கும் உரிமை நீதிபதிகளுக்கு மட்டுமே உண்டு.
ஆண்டு தோறும், ஜனவரி 26 குடியரசு தினம், மார்ச் 22 தண்ணீர் தினம், மே 1 உழைப்பாளர் தினம், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி, நவம்பர் 1 உள்ளாட்சி தினம் ஆகிய இந்த ஆறு நாட்களில் கிராம சபை கூட்டம் நடத்திட வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் ஆணையிட்டு இருப்பதை யாவரும் அறிவார்கள்.
அந்த வகையில் தென்காசி, விருதுநகர், துாத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்களில் வறண்டு போய் இருக்கும் மற்றொரு தாமிரபரணியாகிய செண்பகவல்லி அணை உடைப்பினை சரி செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்று கொண்டே வருகிறது.
அதனை மெய்ப்பிக்கும் விதமாக, 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் அன்று தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள சுமார் 45 ஊராட்சி மன்றங்களில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில் செண்பகவல்லி தடுப்பணை உடைப்பு சீர் செய்யப்பட வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை நியாயமான முறையில் தீர்மானமாக இயற்றப்பட்டு அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
மேலும் சமூக ஆர்வலர்கள் இதற்கான சட்ட முன்னெடுப்புகளையும் பொதுநல வழக்கறிஞர்களுடன் இணைந்து எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
வேண்டும் சுயநலமில்லாத அரசியல் தலைவர்
மக்கள் பிரச்னைகளைத் தீர்ப்பதில் முன்னோடியானவர் எம். ஜி. ஆர். அவர் முதலமைச்சராக இருந்த சமயத்தில் அரசு முறைப் பயணமாக அல்லாமல் தனிப்பட்ட முறையில் அன்றைய கர்நாடக அமைச்சர் ராமகிருஷ்ண ஹெக்டேவைச் சந்திக்க ஒரு நாள் கிளம்பினார்.
அவரது வீட்டில் எம். ஜி. ஆருக்கு சாப்பாடு தயாரானது. அவர்களது உபசரிப்பினை ஏற்ற எம். ஜி. ஆர். சாப்பிடும் போது ஒரு சொட்டுத் தண்ணீர் கூட குடிக்கவில்லை. அதைக் கவனித்த ராமகிருஷ்ண ஹெக்டேவின் தாயார் “ஏம்பா ராமச்சந்திரா… தண்ணீர் குடிக்க வேண்டியது தானே!” என்றார். அதற்கு எம். ஜி. ஆரும் “உங்கள் மகன் எங்களுக்கு தண்ணீர் தர மாட்டேன் என்கிறார். தண்ணீரை தரச் சொல்லுங்கள்… தண்ணீர் குடிக்கிறேன்” என்றாரே பார்க்கலாம்.
அதைக் கேட்ட, அரசியல் எதுவும் அறியாத தாயார், “வெள்ளந்தியாக நீ தான் தண்ணீர் கொடுத்து விட வேண்டியது தானே” என தன் மகனிடம் கேட்டுக் கொண்டார். அதற்கு அவரும் இந்த தர்ம சங்கடமான நிலையில் இருந்து மீள்வதற்கு தமிழகத்திற்கு காவேரி தண்ணீரை தர வேண்டியதாயிற்று.
இது போன்று மக்களின் பிரச்னை அறிந்து இடம், பொருள், ஏவல் என சூதானமாக செயல்படும் அரசியல் தலைவர்களை இன்று காண்பது அரிதாகி விட்டது.
60 ஆண்டுகாலமாக செண்பகவல்லி அணை உடைப்பு சரி செய்வது தொடர்பாக இன்னும் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டு இருக்கிறோம் என சொல்லி இப்பகுதி மக்களிடம், ஓட்டு வாங்கி அரசியலில் பிழைப்பு நடத்தி, நம்பிய மக்களை ஏமாற்றியவர்களுக்கு பதவி கொடுத்துள்ளார்கள் என்பது தான் ஆச்சரியத்தின் உச்சமாகும்.
நிறைவாக,
தமிழகத்திலுள்ள நீர் நிலைகள் எல்லாம் வறண்டு போய் கிடக்கிறது. நிலத்தடி நீரும் வெகு ஆழத்திற்கு போய் விட்டது. எல்லா இடங்களிலும் ஆழ்த்துளை கிணறுகள் தொடர்ந்து உருவாக்கப்படுவதால் நீர் சுரண்டப்படுகிறது.
கிராமம், விவசாய நிலத்திலுள்ள கிணறுகள் யாவும், இயந்திரமயமாகும் தொழிற்சாலைகள், சாலை விரிவாக்கம், தண்ணீர் இல்லை என்ற காரணத்தினால் மூடப்பட்டு வருகின்றன.
கிராமங்களுக்குரிய சொந்த ஏரி, குளங்களையும், திருக்கோயிலுக்கு சொந்தமான தெப்பங்களையும் போலிப் பொதுநலவாதிகள், அரசியல்வாதிகள் விட்டு வைக்காமல் தன் மனம் போன போக்கில் சூறையாடி வருகிறார்கள்.
தண்ணீர் தேவை அதிகமாகி கொண்டு வரும் சூழலில் அதற்கான மருந்து,மந்திரம், நன்னெறியை தேடிக் கண்டுகொண்டு, நமக்கான பிரச்னையை நாமே தீர்த்துக் கொள்ள வழி வகை செய்வது நம் கடமை.
வாழ்க பாரதம். வாழ்க மணித்திருநாடு.
$$$