வைரமுத்துவுக்கு கம்பவாரிதியின் கடிதம்

-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

சென்னை கம்பன் கழக பொன்விழாவில் கவிஞர் வைரமுத்துவின் பேச்சு கம்பனின் தமிழன்பர்களையும் உலகம் முழுவதிலுமுள்ள ராமபக்தர்களையும் ஒருசேரப் புண்படுத்தி இருக்கிறது. அதுதொடர்பான வைரமுத்துவைக் கண்டிக்கும் பதிவுகளை நமது தளம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், கம்பன் விழாவிலேயே நிறைவுநாளில் வைரமுத்துவின் பேச்சைக் கண்டித்த கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அவர்கள், இன்று முகநூலில், கவிஞர் வைரமுத்துவுக்கு பகிரங்க கடிதம் ஒன்றை வரைந்திருக்கிறார். இக்கடிதம் தன்னை பெரும் ஞானியென்று நினைத்துக் கொண்டிருக்கும் வைரமுத்துவின் ஊனக் கண்களைத் திறக்கட்டும். இதோ அவரது கடிதம்….

அன்புக்குரிய கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு,

வணக்கம்! நலம் வேண்டிப் பிரார்த்திக்கிறேன்.

மீண்டும் சர்ச்சைக்கு ஆளாகியிருக்கிறீர்கள். அந்த விடயத்திற்கு வரும் முன்பாக, எனது நன்றியறிதலை, தங்களுக்குச் சொல்ல வேண்டியிருக்கிறது.

சென்னைக் கம்பன்விழா மேடையில் உரையாற்றிய போது, என்னை மிகவும் உயர்த்திப் பேசினீர்கள். அந்த அன்பிற்கு எனது நன்றிகள்.

***

 அந்த நன்றி அறிதலைக் கடந்து, சில உரைக்க வேண்டியிருப்பது பற்றிக் கவலையுறுகிறேன்.

உங்களாலும் ஏற்றுக்; கொள்ளப்படுகிற வள்ளுவன்,  ‘நன்றி அறிதல்’ எனும் அதிகாரத்திற்கு அப்பால்,  ‘நடுவு நிலைமை’ என்ற அதிகாரத்தை வைத்ததன் நோக்கம் தாங்கள் அறியாதது அல்ல.

அந்த வள்ளுவ நெறி நின்றே இக் கடிதத்தை வரைய முனைகிறேன்.

***

கற்பனை மிகுந்த உங்களது இயல்பினாலோ என்னவோ, உங்கள் எழுத்திலும், பேச்சிலும்கூட மிகைத் தன்மை குவிந்து விடுகிறது. எவரையேனும் புகழத் தலைப்பட்டால், விண்ணளவாய்ப் புகழ்ந்து விடுகிறீர்கள். இகழத் தலைப்பட்டால் பாதாளம் வரையில் தாழ்த்தி இகழ்ந்து விடுகிறீர்கள்.

இந்த மிகைதான் உங்களை எப்போதும் சிக்கலுக்கு ஆளாக்கி விடுகிறது. இப்போதும் ஆளாக்கி இருக்கிறது.

***

எப்போதும் உங்களது எழுத்தும் பேச்சும்,  சர்ச்சைகளை உருவாக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள் போல. அங்ஙனமாய்த் தான் எண்ணத் தோன்றுகிறது!

சமூகத்தின் கவனம் எப்போதும் உங்களைச் சூழ்ந்திருக்க வேண்டும் என்கின்ற, எண்ணத்தின் வெளிப்பாடுதான் அதுவோ?

என் ஊகம் உண்மையாயின், நீங்கள் தவறிழைக்கிறீர்கள்.

***

இனி விடயத்திற்கு வருகிறேன்.

நடந்து முடிந்த சென்னைக் கம்பன் விழாவில் பேசும்போது, தெய்வ இராமனுக்குச் ‘சித்த சுவாதீனம் இருக்கவில்லை’ என நீங்கள் கூறப் போய், பத்திரிகைகளிலும், இணையங்களிலும், தொலைக்காட்சிகளிலுமாக, சர்ச்சைகள் தீயாய் வெடித்திருக்கின்றன.

***

இன்று பலரும் உங்களைக் கடுமையாய்த் தாக்கி வருகிறார்கள்.

அத் தாக்குதல்கள் நாளுக்கு நாள் எல்லைமீறிப் போய்க் கொண்டிருக்கின்றன.

நீங்களோ, எதுவும் நடக்காதது போல மௌனம் காக்கிறீர்கள்.

மக்கள் கருத்துக்கு நீங்கள் செய்யும் மரியாதை இவ்வளவுதானா?

கவலையாய் இருக்கிறது.

***

உங்களை விமர்சிப்பவர்களையும் குற்றம் சொல்லிவிட முடியாது.

ஆயிரக் கணக்கான ஆண்டுகளாய் தாம் தெய்வமாகப் போற்றிவரும் இராமனை, இன்றும் இவ்வுலகில் அறம் தழைக்கக் காரணமாய் இருக்கும் இராமனை, சான்றோர் பலர் உச்சிமேல் வைத்து உவந்த இராமனை, நீங்கள் ‘பைத்தியக்காரன்’ என்று நாவினால் சுட்டால், யாருக்குத்தான் கோபம் வராது?

***

நீங்கள் சொன்ன ‘சித்த சுவாதீனம் அற்றவர்’ என்ற தொடருக்கான இன்றைய அர்த்தம், மற்றவர்களுக்குப் புரியவேண்டும் என்பதற்காகத்தான், மேற்சொன்ன வார்த்தையினை மிக்க மனவருத்தத்தோடு  பயன்படுத்தியிருக்கிறேன்.

இராமனைக் குறித்து அத்தகைய ஒரு வார்த்தையை, நீங்கள் சொன்னதாய் எழுதுகையில்கூட,  வலிதாங்காமல் என் கரங்கள் நடுங்குகின்றன.

***

நீங்களே நினைத்துப் பாருங்கள்.

உங்கள் வீட்டில், உங்களுக்காக நடைபெறும் ஒரு விழாவில், எவரேனும் வந்து, உங்களைச் ‘சித்த சுவாதீனம் அற்றவர்’ என்று கூறினால், அதனை உங்களால் தாங்கிக் கொள்ள முடியுமா?

உங்களை விடுங்கள்! உங்களைச் சார்ந்தவர்கள் தானும்  அப்படிச் சொன்னவரை, அங்கிருந்து ஒழுங்காகத் திரும்பிச் செல்ல அனுமதித்திருப்பார்களா?

கம்பன் சபை அனுமதித்திருக்கிறது.- அது அச்சபையின் சான்றாண்மையின் அடையாளம்.

***

ஒருவன், சான்றோர் கூடிய சபை ஒன்றில் தன் நிலை அறியாமல் கண்டபடி பேசினானாம். அவனை மடக்கி, பேசவிடாமல் இழிவு செய்தால், பலரும் கூடிய அச்சபையின் முன் அவனது மானம் போய் விடுமே என நினைந்து, அச் சபையிலிருந்த கற்றறிந்த சான்றோர்கள் தம் கருணையினால், அவன் பேச்சிற்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் மௌனித்துக் கேட்டிருந்தார்களாம்.

இச்;செய்தியை நாலடியாரில் வரும் ஒரு பாடல் கூறுகிறது:

புல்லா எழுத்தின் பொருளில் வறுங்கோட்டி
கல்லா ஒருவன் உரைப்பவும் கண்ணோடி
நல்லார் வருந்தியும் கேட்பரே மற்று அவன்
பல்லாருள் நாணப் பரிந்து.

இந்தப் பாடல் தான் எனது ஞாபகத்திற்கு வருகிறது.

***

கம்பன் விழாச் சபையை நீங்கள் சாதாரணமாக நினைத்துவிட்டீர்கள்.

கம்பன் கழகங்களை ஆரம்பித்து, கிட்டத்தட்ட நூறாண்டுகள் ஆகப் போகின்றன.

கம்பனைக் கடவுளாகவே நேசித்து வந்த, ‘கம்பனடிப்பொடி’ என்கின்ற ஒரு மாமனிதன்தான், காரைக்குடியில் கம்பன் கழகத்தை முதன் முதலில் ஆரம்பித்து வைத்தார்.

பின்னர், கம்பன் கழகங்கள் பலவற்றை ஊர்தோறும் ஆரம்பிக்கவும், அவரே வழி செய்தார்.

அந்தச் சான்றோனின் சிந்தனையில் பிறந்த வித்து, இன்று தமிழ்நாட்டைக் கடந்து, பாரதத்தையும் தாண்டி, உலக நாடுகள்; பலவற்றிலும் விருட்சமாகி விரிந்து நிற்கின்றது.

***

இவையெல்லாம் நீங்கள் அறியாத செய்திகள் அல்ல.

கோபக்காரரான கம்பனடிப்பொடி மட்டும்  அன்று நீங்கள் பேசிய சபையில் இருந்திருந்தால், என்னாகியிருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறேன்.

நினைக்கவே அச்சமாக இருக்கிறது.

***

கம்பனடிப்பொடி வரைந்த கோட்டிற்குள் நின்று,  இன்று எத்தனையோ கம்பன் விழாக்கள் சிறப்பாக நடந்து முடிந்துவிட்டன.

அந்த விழாக்களில் எத்தனையோ நிறை அறிஞர்கள் கலந்து கொண்டு, தம் அறிவாற்றலால் கம்பகாவியம் எனும் வைரத்தை, பட்டை தீட்டி மிளிரச் செய்தார்கள்.- செய்து கொண்டிருக்கிறார்கள்.

***

கம்ப காவியத்துள் இருக்கும் சர்ச்சைக்குரிய இருட்பகுதிகளுக்குக் கூட, அவர்கள் தம் மதி நுட்பத்தால் ஒளி பாய்ச்சி, கம்பனையும் காவியத்தையும் மதிப்புறச் செய்தனர்.

அத்தகையோரால் வளர்க்கப்பட்ட சபைதான் கம்பன் விழாச் சபை.

அந்த நிறைத் தன்மையால்; தான், அன்றைய உங்களின் சர்ச்சைக்குரிய பேச்சை அச்சபை சகித்திருந்தது.

நீங்களோ, கற்றோர் சபையென்று கருதாமலும், வார்த்தைகளின் வலிமை அறியாமலும், காசில் கொற்றத்து இராமனைப் பழி சொல்லி, கம்பன் விழாச் சபையைக் களங்கப்படுத்தி விட்டீர்கள்.

அது எத்தனை பெரிய தவறு?

***

இதனை, மரபு அறியாததால் வந்த தவறென்பதா?

அல்லது  நமது மண்ணின் இயல்பு அறியாததால் வந்த தவறென்பதா?

அதுவுமன்றேல் மன்றின் உணர்வறியாததால் வந்த தவறென்பதா?

எனக்குப் புரியவில்லை.

***

இராமனைப் பார்த்து வாலி சொன்னாற்போல, ‘திகைத்தனை போலும் செய்கை’ என்றே, உங்களது செயலுக்கும் நாம் சமாதானம் காண வேண்டியிருக்கிறது.

இங்கு திகைத்தனை என்ற வார்த்தையை, நீங்கள் சொன்ன அர்த்தத்தோடு நான் பிரயோகிக்கவில்லை.

அதனை மட்டும் இவ்விடத்தில் உறுதி செய்ய விரும்புகிறேன்.

***

சென்னைக் கம்பன் கழகத்தின் வரலாற்றை நீங்கள் அறிவீர்கள்.

இஸ்லாமியரான மறைந்த நீதிபதி மு.மு.இஸ்மாயில் அவர்களும், திராவிடர் கழகக் கொள்கைகளில் ஊறித் திளைத்திருந்த, ‘அருளாளர்’ மறைந்த ஆர்.எம். வீரப்பன் அவர்களும்தான், முன்பு இக்கழகத்தின் தலைமையேற்று வழி நடத்தினார்கள்.

அவர்கள் இருவரும் தத்தம் தனி நிலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, தமது மதத்தையோ, கொள்கையையோ கம்பனுக்குள் நுழைக்காமல்,  கழகத்தைக் காவல் செய்தார்கள்.

***

நீங்களோ! அவர்கள் காட்டிய வழியை உணராது, உங்களது கொள்கையை மட்டும் மனதில் வைத்து, கம்பனது மேடையில் இராமனை இழிவு செய்திருக்கிறீர்கள்.

உங்களது செயலால், பலரதும் விமர்சனத்திற்கு ஆளாகி, சென்னைக் கம்பன் கழகமே இன்று ஆடிப் போய்க் கிடக்கிறது.

ஒரு கழகத்தை உருவாக்குவதிலும், விழா எடுப்பதிலும் உள்ள, சிரமத்தை அறிந்திருந்தால் நீங்கள் அங்கு அப்படிப் பேசியிருக்க மாட்டீர்கள்.

***

தற்போது கழகத்தின் தலைமையேற்றிருக்கும் ‘நயவுரை நம்பி’ ஜெகத்ரட்சகன் அவர்கள், மதநம்பிக்கை இல்லாக் கட்சியின் ஒரு பிரதிநிதியாய் இருந்து கொண்டும், தான் கொண்டிருக்கும் சமய நம்பிக்கையில், யாரோடும் சமரசம் செய்து கொள்ளாது நின்று நிலைக்கிறார்.

ஆழ்வார் பாசுரங்களுள் தம்மைக் கரைத்துக் கொண்ட அவர், ‘ஆழ்வார்கள் ஆய்வு மையம்‘ எனும் அமைப்பை உருவாக்கி, ஆண்டுதோறும் விழா எடுத்தும் வருகிறார்.

***

அதுபோலவே இப்போது கழகச் செயலாளராய்ப் பொறுப்பேற்றிருக்கும், ‘டாக்டர்’ சாரதா நம்பியாரூரன் அவர்களும், நம் சைவத்தையும், தமிழையும் தம் கண்களாய்ப் போற்றும் பேரறிஞர்.

மறைமலையடிகளின் மருகளாய் வாய்த்த மாண்புடையவர்.

***

அவர்களது அழைப்பை மதித்துத் தான், தமிழக முதல்வர், இவ்வாண்டுக் கம்பன் விழாவில் கலந்து சிறப்பித்தார்.

கழகத்தின் பொன்விழா நிறைவின்போது முதலமைச்சரை அழைத்து, விழாவைச் சிறப்பிக்கலாம் என அவர்கள் கருதினார்கள் போலும், அவர்களின் நல்நோக்கத்தைப் புரிந்து கொள்ளமுடிகிறது.

சிலர் அதனையும் குறை சொல்கிறார்கள்.- அது தவறு!

***

கழகத்தின் மரபிற்கு இது ஒன்றும் புதிய விடயமல்ல.

‘கம்பனடிப்பொடி’ அவர்கள் தனது காரைக்குடி கம்பன் விழாவுக்கு, அப்போது தமிழகத்தின் முதல்வராய் இருந்த ‘கலைஞரை’ அழைத்துக் கௌரவித்திருந்தார்.

அதுபோலவே பெரியவர் மு.மு.இஸ்மாயில் அவர்களும், சென்னைக் கம்பன் விழாவுக்குக் ‘கலைஞரை’ அழைப்பித்து கௌரவம் செய்திருந்தார்.

அந்த வரிசையில்த்தான் சென்னைக் கம்பன் கழகமும் தனது பொன்விழா நிறைவையொட்டி, இவ்வாண்டு ‘முதல்வர்’ ஸ்டாலினை அழைத்துக் கௌரவித்தது.

அது மரபுவழி வந்த ஒரு செயலேயாம்.

***

விழாவுக்கு வந்த முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், நீண்ட நேரத்தைக் கம்பனுக்காக ஒதுக்கியதோடல்லாமல், தனது அமைச்சர்களையும் விழாவில் கலந்து கொள்ளச்செய்திருந்தார்.

அதோடு அவர் அந்த சபையின் தரமறிந்து, எவரது மனதும் நோகாமல் உரையாற்றி, நாகரீகமாய் நடந்து கொண்டார்.- அதனைக்கூட நீங்கள் ஒரு பாடமாய்க் கொள்ளவில்லை.

***

நீங்கள் உங்களது பேச்சால் முதல்வரின் வருகையைக்கூட விமர்சனத்திற்கு ஆளாக்கி விட்டீர்கள்.

தேர்தல் வரப்போகும் இந்நேரத்தில் இத்தகைய விமர்சனங்கள், முதல்வருக்கு எத்தனை தலைவலியைத் தரலாம் என்பது பற்றிக்கூட, நீங்கள் சிந்திக்கத் தவறிவிட்டீர்கள்.

***

உங்களால், முன்பு எழுந்த ஆண்டாள் பற்றிய சர்ச்சையை அறிந்திருந்தும், ஆழ்வார்களைத் தெய்வமாகப் போற்றும் ஜெகத்ரட்சகன் அவர்கள், கவிதைமேலும், தமிழ்மேலும், உங்கள்மேலும் கொண்ட காதலால் தான், ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் சார்பாக, ஆண்டுதோறும் வழங்கி வந்த, ‘கம்பன் விருதினை’ இவ்வாண்டு உங்களுக்கு வழங்க முன் வந்தார்.

இந்த முடிவினை அவர்கள் எடுத்தபோது எத்தனை பேர் அதனை எதிர்த்திருப்பார்கள்? எத்தனை பேர் அதனை மறுத்திருப்பார்கள்?

அவர்கள் எல்லோரையும் கடந்துதான், உங்களுக்கு அவ்விருதினை வழங்கக் கழகம் முன்வந்திருக்கும்.

***

இவ்விருதின் மூலம் ஆற்றலாளரான உங்களை, அருட்பணிக்குள் நுழைத்துவிடலாம் என்றுதான் அவர்கள் நினைத்திருப்பார்கள்.

நீங்களோ, அவர்களது உயர்ந்த எண்ணத்தைப் புரிந்து கொள்ளாமல் பேசி, இன்று அவர்களையே குற்றவாளிகளாய் சமூகத்தின் முன் நிறுத்திவிட்டீர்கள்.

***

இத்தனைக்கும் நீங்கள் சாதாரண ஒருவர் அல்லர் – கவிப்பேரரசு!

இந்தப் பட்டம் சாதாரணமான ஒன்றா என்ன?

கவிதைகளுக்கான பல உயர் பரிசில்களைப் பலதரமாய்ப் பெற்றவர் தாங்கள், அத்தகைய உங்களிடம் ஒன்றைக் கேட்கத் தோன்றுகிறது.

நீங்கள் எழுதிய ஒரு கவிதையை உங்கள் எண்ணத்திற்கு மாறாக, எவரேனும் பிழையாக வியாக்கியானம் செய்தால், உங்கள் மனம் எவ்வளவு புண்படும்?- உணர்ந்து பாருங்கள்.

***

கவி மரபு தெரியாத ஒருவர் பேசியிருந்தால் அதனை மன்னிக்கலாம்.

கவிப்பேரரசான நீங்கள் இப்படிப் பேசியதால்தான் எல்லோரும் கொதித்துக் கோபிக்கிறார்கள்.

தேரை இழுத்துத் தெருவில் விடுவதே உங்களின் வேலையாகிவிட்டது.

ஏன் இந்த எதிர்மறைப் போக்கு?

***

கம்பன், உங்களைப் போல, சினிமாவுக்காகக் கவிதை எழுதிய புலவன் அல்லன்.

அவன் அறம் நிலைக்கப் பாடிய பெரும் புலவன்.

அதனால்தான் கம்ப காவியத்தை நம் மக்கள் அறத்தின் ஊற்றாகவும், அன்பின் ஊற்றாகவும்,  பண்பாட்டின் ஊற்றாகவும், பக்தியின் ஊற்றாகவும்,  சத்தியத்தின் ஊற்றாகவும், சால்பின் ஊற்றாகவும் கருதிப் போற்றி வருகிறார்கள்.

அந்த உயர் பொக்கிஷத்தில் நீங்கள் கைவைத்தால் அவர்கள் எப்படிச் சகித்திருப்பார்கள்?

***

பெரும்புலவனான கம்பன், இராமனை  ‘காசில் கொற்றத்து இராமன்’ என்று, காவியத்தின் ஆரம்பத்திலேயே உரைத்து விடுகிறான்.

இராமன் வெறும் காவிய நாயகன் மட்டுமல்லன்.- அவன் அறத்தின் நாயகன்.

குறித்த ஒரு சமயத்தாரால் போற்றி வணங்கப்படும் கடவுள்  நாயகனுமாம்.

***

இம் மண்ணில், அவனுக்கான ஆலயங்கள் எத்தனை? அவனுக்கான பாசுரங்கள் எத்தனை? அவனுக்கான பக்தர்கள் எத்தனை?

இவற்றையெல்லாம் நீங்கள் அறியமாட்டீர்களா என்ன?

அறிந்திருந்தும் அவனை ‘சித்த சுவாதீனம் அற்றவன்’ என்று, உங்களால் எப்படிச் சொல்ல முடிந்தது?

***

இந்து மதம் சகிப்புத் தன்மை நிறைந்ததுதான்.

மனைவியைக் கடத்திச் சென்றவனையே மன்னித்த இராமனின் வழிவந்த சமயம் அது.

அத்தகைய இந்து மதத்தின் சகிப்புத்தன்மையை, அதனது பலவீனமாய் இன்று பலரும் நினைத்து விடுகிறார்கள்.

அறிவாளியான நீங்களும் அங்ஙனம் நினைத்ததுதான் கவலை தருகிறது.

***

அன்பரே! ஒன்றே ஒன்றை உங்களிடம் கேட்க விரும்புகிறேன்.

இந்து மதத்தை இழிவுபடுத்தி இப்படியாய் விமர்சிப்பது போல, மாற்று மதம் ஒன்றை உங்களால் விமர்சிக்க முடியுமா?

மாற்று மதத்தவரால் வணங்கப்படும் இறைத்தன்மை கொண்ட ஒருவரை, ‘சித்த சுவாதீனம் அற்றவர்’ என்று உங்களால் சொல்லத்தான் முடியுமா?

சொல்வதை விடுங்கள்! நினைக்கத்தானும் உங்களால் முடியுமா?

நினைத்து முடிக்கும் முன் நீங்கள் தண்டனைக்கு ஆளாகிவிடுவீர்கள்.

அது உங்களுக்கே தெரியும்.

***

இந்து மக்கள் எப்போதும் சகித்திருப்பார்கள் என்று பலரும் நினைக்கிறார்கள்.

‘குட்டக்குட்டக் குனிபவனும் மடையன், குனியக் குனியக் குட்டுபவனும் மடையன்’ எனும் உண்மையை இந்து மக்கள் இப்போது நன்றாக உணர்ந்து விட்டார்கள்.

அதனால் இந்து மதத்தின்மேல் கைவைக்க விரும்புபவர்கள், இனி அதுபற்றி, சற்றுச் சிந்தித்து செயல்படுவதுதான் நல்லது,

***

உங்களுக்கு எழுதும் இக் கடிதத்தின் மூலமே, உங்களைக் கடும்வார்த்தைகளால் விமர்சித்து வருவோர்க்கும், ஒன்றை நான் உரைத்து முடிக்க விரும்புகிறேன்.

அன்பர்களே! உங்கள் ஆத்திரத்தின் நியாயம் புரிகிறது.

ஆனாலும் நம் பண்பாட்டின் பெருமையை முதலில் நாம் நிறுவ வேண்டும்.

நம் மொழியினதும், மதத்தினதும் நாகரீகத்தை நாம் உணர வேண்டும்.

கவிஞரின் வார்த்தைகளால் கோபமுற்று, நீங்கள் பேசும் பேச்சுக்களில் சில காதுகளைக் கூச வைக்கின்றன.

ஆயிரம்தான் இருந்தாலும் அவர் இன்று இருக்கும் நம் தமிழ்க் கவிஞர்களில் ஒருவர்.

அவரைக் கேவலமாய்ப் பேசி வெளியிடும் செய்திகளால், நம் இனத்தின் நாகரீகம் மற்றவர்களின் ஐயத்திற்கு ஆளாகும்.

***

நம் இனத்தின் பெருமைக்காகப் போராட நினைக்கும் நீங்கள், மற்றவர்களின் செயலால் நிலை தழும்பக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஒருவர் படியிறங்க, மற்றவரும் படியிறங்கினால், நம் பண்பாடு பாதாளத்தில் போய்த்தான் நிற்கும்.

உணர்வது உங்கள் கடன்.- இது எனது பணிவான வேண்டுகோள்.

***

நிறைவாக, கவிஞரிடமும் ஒரு வேண்டுகோளை முன் வைக்க விரும்புகிறேன்:

தவறு நிகழ்ந்து விட்டது.- அது தவறியும் நிகழ்ந்திருக்கலாம்.

‘சொற்சோர்வு’ என்பது எல்லோருக்கும் ஏற்படக்கூடிய ஒன்றுதான்.

‘நான் இராமனைத் தாழ்த்த நினைக்கவில்லை.- காப்பாற்றவே நினைந்தேன். பேசிய வார்த்தைகள் தவறான அர்த்தத்தைத் தந்துவிட்டன. என் வார்த்தைகளால் மனம் நொந்து போனவர்களிடம், மனமார மன்னிப்புக் கோருகிறேன்’ என்று ஓர் அறிக்கைவிட்டு, இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.

***

சால்புக்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்.

எனும் வள்ளுவரின் குறளையும்,

‘பணியுமாம் என்றும் பெருமை’ எனும் அவரது கருத்தையும் ஏற்றுச் செயற்படுங்கள்.

உங்களது கவிதையும், பெருமையும் உயர்வடையப் பிரார்த்திக்கிறேன்.

நன்றி.

‘இன்பமே எந்நாளும் துன்பமில்லை’

  • நன்றி: கம்பவாரிதி அவர்களின் முகநூல் பதிவு

$$$

One thought on “வைரமுத்துவுக்கு கம்பவாரிதியின் கடிதம்

  1. Vairamuthu yenbathu kodiya nanju. Adhu thuli alavu paalil kalandhaalum (Kamban Kazagathil ) veenaavathu kamban kazhagame. Moodarukku bhuthi sonnaal kedu thaan varum.

    Like

Leave a comment