-வ.மு.முரளி
பாஜக மூத்த தலைவராக இருந்தவரும் நாகாலாந்து மாநில ஆளுநருமான எல்.ஜி. என்கிற திரு. இல. கணேசன் அவர்கள் (80) இன்று (15.08.2025) மாலை சென்னையில் காலமானார். அவரைப் பற்றிய சில குறிப்புகள்....

.
# தஞ்சையில், இலட்சுமிராகவன் – அலமேலு தம்பதியின் ஐந்தாவது மகனாக 1945 பிப்ரவரி 16இல் பிறந்தவர் இல.கணேசன். உடன் பிறந்தோர்: 5 சகோதரர்கள், 3 சகோதரிகள்.
# இளம் வயதிலேயே (25) அரசுப் பணியை (வருவாய்த் துறையில் ஆர்.ஐ. பதவி) விட்டுவிட்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முழுநேர ஊழியராக 1970-இல் வந்தவர்.
# ஆர்எஸ்எஸ் இயக்கம் தமிழகத்தில் வளர்ந்ததில் பெரும் பங்கு வகித்தவர்; அதற்காக தனது வாழ்வையே அர்ப்பணித்தவர்; 1975 நெருக்கடிநிலையின்போது தலைமறைவுப் போராட்டத்தில் பங்கேற்றவர்.
# ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நாகர்கோவில் நகர பிரசாரக் (அமைப்பாளர்) பொறுப்பு முதல் பல்வேறு நிலைகளில் பணியாற்றியவர். 1990 வரை மாநில இணை அமைப்பாளராகப் பணி புரிந்தவர்.
# மண்டைக்காடு கலவரத்தின் போது அன்றைய முதல்வர் எம்ஜிஆரையே எதிர்த்துப் பேசி, பாதிக்கப்பட்ட ஹிந்துக்களின் தரப்பைப் புரிய வைத்து, அரசைச் செயல்பட வைத்தவர்.
# 1990 முதல் பா.ஜ.க.வில் இணைந்து பல்வேறு பொறுப்புகளில் செயல்பட்டவர். மாநில அமைப்புச் செயலாளர், தேசிய செயலாளர், தேசிய துணைத் தலைவர், மாநிலத் தலைவர் ஆகிய பொறுப்புகளில் இயங்கியவர்.
# மணிப்பூர் (2021- 23), நாகாலாந்து (2023- தற்போது வரை) மாநிலங்களின் ஆளுநராகவும் மேற்குவங்க மாநில பொறுப்பு (2022) ஆளுநராகவும் திறம்படப் பணியாற்றியவர். ராஜ்யசபா எம்.பி.யாக 2016-18இல் இருந்தவர்.
# சிறந்த இயக்க நிர்வாகி மட்டுமல்ல, பேச்சாளர், எழுத்தாளர், பத்திரிகையாளர், கவிஞரும் கூட. ‘ஒரேநாடு’ பத்திரிகையின் நிறுவனர்.
# இவர் எழுதிய பல தேசபக்திப் பாடல்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பல்லாண்டுகளாகப் பாடப்படுகின்றன. அந்தப் பாடல்களை எழுதியவர் பெயரைக் குறிப்பிடுதல் சங்கத்தில் மரபு கிடையாது என்பதால், பலருக்கும் தெரிவதில்லை. சில பாடல்கள்:
- புனித நன்னாளில் இன்று பூஜை செய்கிறோம்…
- ஒன்னுதான் ஒன்னுதானே நம்ம நாடு தம்பி ஒன்னுதான் ஒன்னுதானே!
- கல்லாக இருந்த தமிழகம் இன்றொரு வில்லாக வளர்ந்ததைக் காண்போமையா!
- அந்தக் கேசவனை நாம் வணங்குவோம்…. அவர் பாதையிலே நாம் செல்குவோம்.
- மலையில மகுடம் வச்சு, கடலில் பாதம் வைச்சு….
# சமயோசிதமாகவும் நறுக்குத் தெறித்தாற் போலவும் நகைச்சுவையாகவும் பேசும் சொல்வன்மை மிக்கவர்.
# கட்சி பேதம் கடந்து அனைத்து அரசியல் இயக்கங்களிலும் நண்பர்களைக் கொண்ட நனிநாகரிகர். முன்னாள் முதல்வர்கள் மு. கருணாநிதி, ஜெ. ஜெயலலிதா ஆகிய இருவரின் அன்பையும் பெற்றவர். தி.மு.க. தலைவர் திரு. மு.கருணாநிதிக்கு இவர் மீது விசேஷப் பிரியம் உண்டு.
# தேசிய சிந்தனை தமிழகத்தில் பரவ பொற்றாமரை அமைப்பை நிறுவி நடத்திய தமிழ் ஆர்வலர். மண்வாசனை, தேசிய சங்கப்பலகை ஆகிய அமைப்புகளையும் நிறுவி வழிநடத்தியவர்.
# தமிழக பாஜகவுக்கு மாநில அளவில் குறிப்பிடத்தக்க செல்வாக்கையும் மக்களிடையே ஏற்பையும் ஏற்படுத்திய தலைவர்.
தமிழகத்தில் தேசிய சிந்தனையை வலுப்படுத்திய அன்னாருக்கு நமது கண்ணீர் அஞ்சலி.
ஓம் சாந்தி.
$$$