-துக்ளக் சத்யா, முரளி சீதாராமன்
தமிழக வாக்காளர் பட்டியலில் ஆறு லட்சம் பிகார் தொழிலாளர்களை இணைக்க தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் முயற்சி நடப்பதாக சில அதி மேதாவிகள் புகார் கூறி வருகின்றனர். இவ்விஷயத்தில் உண்மை என்ன என்று பார்க்கலாமா?

1. பிதற்றல் உரிமையாகி விட்ட பேச்சுரிமை
-துக்ளக் சத்யா
‘தமிழக வாக்காளர் பட்டியலில் 6.5 லட்சம் பிகாரிகளைச் சேர்க்க, பாஜக தூண்டுதலில் தேர்தல் கமிஷன் சதி செய்கிறது’ என்று எதிர்க்கட்சிகள் கூறுவது அபத்தமான குற்றச்சாட்டு.
‘தேர்தல் கமிஷன் வாக்குகளைத் திருடுகிறது’ என்ற ராகுலின் குற்றச்சாட்டைப் பின்பற்றி, ப.சிதம்பரம், திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இப்படி புகார் கூறுகின்றனர்.
பிகாரிலிருந்து வந்து இங்கே வேலை தேடிக்கொண்டு இங்கேயே செட்டில் ஆனவர்களை இம்மாநில வாக்காளர்களாகத்தான் கருத முடியும். அப்படி எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
அவர்களுக்கு பிகாரில் சொந்த வீடு இருந்தாலும், இங்கே வாக்குரிமை பெற தடையில்லை.
இந்திய வாக்காளர்கள் இந்தியாவில் எங்கும் வாக்களிக்கலாம். இரண்டு இடத்தில் வாக்களிக்க முடியாது . அவ்வளவுதான்.
தமிழக மக்களும் இதேபோல பிற மாநிலங்களில் வாக்களிக்க முடியும்.
‘குடியுரிமை பெறாத அயல் நாட்டவர்களின் பெயர்களைச் சேர்க்க வேண்டும், இந்தியாவில் ஒரு மாநிலத்தைச் சேர்ந்தவர் இன்னொரு மாநில வாக்காளர் பட்டியலில் இடம் பெறக் கூடாது’ – என்றெல்லாம் இஷ்டம் போல பேசுவது முற்றிலும் அரசியலுக்காக மட்டுமே.
தமிழக வாக்காளர் பட்டியலில் பிற மாநிலத்தவர் இடம் பெறுவது, தமிழக வாக்காளர்களின் உரிமையைப் பாதிக்கும், இது மாநில உரிமைக்கு எதிரானது – என்ற வாதம் பொருளற்றது.
மாநில உரிமை என்ற கோஷமே ஒரு மாயை. எல்லா மாநிலங்களும் சமமே தவிர, எந்த மாநிலத்துக்கும் தனி உரிமைகள் இல்லை. அதனால்தான் காஷ்மீரின் சிறப்பு உரிமையும் பறிக்கப்பட்டது.
மாநில உரிமை என்பது சரியென்றால், மாவட்ட உரிமை, தாலுகா உரிமை, வார்டு உரிமைகளும் சரியாகி விடும்.
உண்மையில் முக்கியத்துவம் பெறுவது மக்கள் உரிமை மட்டுமே.
விவரம் தெரிந்தவர் என்று கருதப்படும் ப.சிதம்பரம் கூட வேண்டுமென்றே திருமாவளவன் வைகோ லெவலுக்கு இறங்கிப் பேசுவது பரிதாபத்திற்குரியது.
தேர்தல் மோசடி மூலம் மோடி பிரதமராகி விட்டார் என்ற ராகுலின் பேச்சு சிறுபிள்ளைத்தனமானது.
தேர்தல் பணியில் இருப்பவர்கள் அனைவரும் அரசு ஊழியர்கள். இப்படியொரு பெரும் மோசடி நடத்துவது சாத்தியமற்றது. அப்படி நடந்திருந்தால், தேர்தல் நடக்கும்போதே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கும்.
இந்திய பகுதியில் 2000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை சீனா ஆக்கிரமித்து விட்டது என்ற ராகுலின் பொறுப்பற்ற குற்றச்சாட்டை சுப்ரீம் கோர்ட்டும் கண்டித்துள்ளது.
தோல்வி பயம் வந்தால், முன் எச்சரிக்கையாக தாறுமாறாகப் பேசுவது அரசியல்வாதிகளுக்கே உரிய இலக்கணம்.
நம் நாட்டில் பேச்சுரிமை பிதற்றல் உரிமையாகி விட்டது…
$$$
2. அறிவிலித்தனமான பிதற்றல்கள்
-முரளி சீதாராமன்
மகாராஷ்டிர சட்டமன்றத்தில் பம்பாய் சியான் – கோலிவாடா தொகுதியில் கேப்டன் தமிழ்ச்செல்வன் மூன்றாவது முறையாக ஜெயித்து MLA ஆகி இருக்கிறார்.
இதற்கு முன்பு காங்கிரஸ் ஆண்டபோது மகாராஷ்டிராவில் – வசந்த் தாதா பாட்டில் முதல்வர் என்று நினைக்கிறேன் – அந்த அமைச்சரவையில் V.V.சுப்ரமணியன் என்ற தமிழர் அமைச்சராகவே இருந்தார்.
கேரளாவில் தேவிகுளம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து ஏ.ராஜா என்ற தமிழர் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வென்று MLA ஆகி இருக்கிறார்.
பரந்த இந்தியாவில் எந்த மாநிலத்தவரும் – எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் குடியேறலாம்.
முறைப்படி தமது இருப்பிடத்தைக் கூறி மனுப்போட்டு அந்த மாநிலத்தில் வாக்காளர் ஆகலாம்.
அதே அடிப்படையில் அந்த மாநிலத்தின் சட்டமன்றத் தொகுதிக்கோ, உள்ளாட்சி அமைப்புக்கள் எதுவானாலும் அதன் உறுப்பினர் / தலைவர் பதவிக்கோ போட்டியிடலாம்.
ஒரு மாநிலத்தில் இருந்து வேறொரு மாநிலத்துக்குக் குடிபெயர்வது – தொழில், வியாபாரம், உத்யோக நிமித்தமாக இடம் மாறுவது – அவர் அந்த மாநிலத்தில் வாக்காளராக தன்னைப் பதிவு செய்து கொள்வதற்கு எந்த வகையிலும் தடை ஆகாது.
பிகார் தொழிலாளர்கள் தமிழகத்தில் குடியேற எந்தத் தடையும் கிடையாது – அவர்கள் வாக்காளரும் ஆகலாம், விரும்பினால் வேட்பாளரும் ஆகலாம்.
அவர் அடிப்படையில் ஓர் இந்தியப் பிரஜை – அது ஒன்றே அவர் எந்த மாநிலத்திலும் குடியேறவும் – தொழில் புரியவும் அவருக்கு உரிமையைத் தருகிறது. அப்படியிருக்க அதே மாநிலத்தின் வாக்காளர் பட்டியலில் இடம் பெறவும் அதே பிரஜாவுரிமை அவருக்கு வழி வகுக்கிறது.
ப.சிதம்பரம் உள்ளிட்ட பலருடைய பேச்சுக்கள் இந்த விஷயத்தில் கண்டிக்கத் தக்கவை.
தமிழர்கள் ஆயிரக் கணக்கில் தில்லியின் சில தொகுதிகளிலும், குஜராத்திலும், பம்பாயிலும், கேரளாவிலும் தேர்தலில் வெற்றி – தோல்வியைத் தீர்மானிக்கும் அளவுக்கு தீர்மானகரமான சக்தியாக வாக்காளர் எண்ணிக்கையில் மிகுந்து இருக்கின்றனர்.
வட மாநில வாக்காளர்கள் – குறிப்பாக பிகார் வாக்காளர்கள் தமிழக வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவது குறித்து பல்வேறு கட்சிகளின் தலைவர்களுடைய எதிர்ப்புப் பேச்சுக்கள் அரசியல் சட்டம் பற்றிய அடிப்படைப் புரிதலோ – நடைமுறையில் வெவ்வேறு மாநிலங்களில் பரந்து விரிந்த தமிழ் வாக்காளர்கள் பற்றிய விபர ஞானமோ இல்லாத அறிவிலித்தனமான பிதற்றல்கள்.
- நன்றி: இவை இரண்டும் கட்டுரையாளர்களின் முகநூல் பதிவுகள்.
$$$