-கவிஞர் ரவி சுப்பிரமணியன்
சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் நீதியரசர் திரு. ஜி.ஆர்.சுவாமிநாதன் குறித்து ஒருசிலரால் அவதூறுகள் கற்பிக்கப்படுகின்றன. அரசியல் களத்தில் சிலரின் தூக்கத்தை இவரது தீர்ப்புகள் கெடுத்ததன் விளைவு தான் இது என்பது நீதிமன்றத்தில் நிற்கும் எவருக்கும் தெரியும். ஆனால், தன்னைத் தானே விளக்கிக்கொள்ள சட்டத்தில் நீதிபதிக்கு இடமில்லை என்பதாலும், தமிழகத்தில் தீண்டத் தகாத ஜாதியான பிராமணராக அவர் அடையாளப்படுத்தப்படுவதாலும், பொதுத்தளத்தில் அநியாயக் குரல்களே ஆரோகணிக்கின்றன. இத்தருணத்தில் எழுத்தாளர் திரு. சோ.தருமன், கவிஞர் திரு. ரவி.சுப்பிரமணியன் ஆகியோரின் குரல்கள் தமிழர்களின் மனசாட்சியாக ஒலிக்கின்றன. இதோ கவிஞரின் அறச்சீற்றம் மிகுந்த எழுத்தோவியம்…

.
அபிபுல்லாவின் கால்களில் அவர் அப்படி சாஷ்டாங்கமாக விழுந்து அவரது பாதங்களைத் தொட்டு, என்னை ஆசீர்வதியுங்கள் என்று கேட்பார் என நானோ, கவிஞர் அபியோகூட நினைத்திருக்கவில்லை. ஆனால் அது நடந்தது. அபி அண்ணன் அவருக்கு மிகவும் பிடித்த கவிஞர். இப்போதும் அவரது கவிதைகளில் பிடித்தவற்றைத் தன் நினைவிலிருந்து சொல்லுபவர் நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன்.
“அந்தக் கவிதைகளோட இருண்மை வந்து, என்னை எங்கெங்கயோ அழைச்சிண்டு போயிடறதுஜி. அந்தக் கவிதைகள் அப்படி இருக்கதாலதான், அவாஅவாளுக்கான பாதைகளை அவை திறந்து விட்டுடறதுன்னு நினைக்கிறேன், அற்புதம் ஜி” என்று ஒரு முறை சொன்னார். சென்ற ஆண்டின் (2024) அதேநாளில், அதேமாலை, அபி வசித்துவரும் மதுரை, கிருஷ்ணாபுரம் காலனி, தாமரைத் தெருவுக்கு அடுத்த தெருவில் வசிக்கும், தமிழ்இசை அறிஞர் மம்மது வீட்டுக்கும் சென்றோம். அபி அண்ணனும் உடன் வந்திருந்தார். அங்கும் இதே நடந்தது, அபியைப் போல மம்மதுவும் பதறிவிட்டார். சற்றே பின்வாங்கி நகர்ந்துபோனார். ஒரு நீதியரசர் இப்படி என்னை வணங்கலாமா என மம்மது கேட்க, “முதலில் மூத்தோரை வணங்குதல் நம் பாரம்பரிய மரபு, நீங்கள் எவ்வளவு மூத்தவர்கள், நீங்கள் செய்த தமிழ்ப்பணிகள் எவ்வளவு? உங்களை வணங்குவதன்மூலம் நான் தமிழையும் இசையையும் அல்லவா சேர்த்து வணங்குகிறேன்” என்றார்.

மிகவும் பின்தங்கிய வகுப்புகளைச் சார்ந்த என் நெருங்கிய நண்பர்களை அவர் வீட்டுக்கு அழைத்துச் செல்கையில், அவர் பூஜையறையின் முன்நின்று அவர்கள் வணங்குவதில் அவருக்கு சிறு சுணக்கமும் இருந்ததில்லை. அவர்மேன்மைமிகு வழக்கறிஞராக இருந்த காலத்திலயே, என் மதுரை நண்பர்கள் சொன்ன நற்செய்திகள் வழியே அவரை நான் அறிந்திருந்தேன், முதன்முதலில் நான் அவரைச் சந்தித்ததே ஒரு இலக்கிய நிமித்தமாகத்தான்.
என் தந்தைக்கு நிகரான எழுத்தாளர் மா.அரங்கநாதன் மறைந்த சில நாட்களில், அப்போது வழக்கறிஞராக இருந்த ஜி.ஆர்.சுவாமிநாதன், அவருக்காக மதுரை பார்கவுன்சிலில் ஒரு இரங்கல் கூட்டத்தினைப் பொறுப்பேற்று நடத்தினார். அதில் என்னைப் பேசுமாறும் அரங்கநாதனின் ஆவணப்படத்தை அங்கு திரையிடுமாறும் கேட்டுக்கொண்டார். அன்றும் சிந்தாந்தரீதியில் எனக்கும் அவருக்கும் மாறுபட்ட கருத்து இருந்தபோதும் அவரது அன்பை, எளிமையை, பண்பை உணர்ந்து நான் நெகிழ்ந்து போனேன். அந்த ஒரு சந்திப்பின் இரு நாட்களிலேயே, “மாறிப்புக்கு இதயமெய்தினர்”என்று கம்பன் சொன்னது போல, ஒருவரது இதயத்துள் ஒருவரை ஏந்தி நாங்கள் நண்பர்களானோம்.
அவரது கொள்கை, கோட்பாடு, நம்பிக்கை அவை எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவை அவரது பரிபூரண சுதந்திரம். அவற்றை அவர் யார் மீதும் திணித்ததில்லை. தன் கருத்தை ஏற்காதவரைப் பகைவரெனப் பிரகடனம் செய்ததுபோல வேறுபட்டு அவர் நடந்ததில்லை. எதிர்த்தரப்பு நியாயங்களை ஏற்க மறுத்தவரும் இல்லை. அவர் கருத்துகளோடு முரண்பட, ஆக்கப்பூர்வமான எதிர்வாதம் செய்ய, இன்றும் அவர் எல்லோரையும் அனுமதிக்கவே செய்கிறார். யாரோடும் எது குறித்தும் மென்மையாய் விவாதிக்க அவர் தயாராகவே இருக்கிறார். விவாத முடிவில் நாம் சொல்லும் கருத்து அவருக்கு ஏற்றுக்கொள்ளுகிற மனநிலையை உருவாக்கினால், எந்தவிதச் சிறுதான்மையுமின்றி ஒரு சாதாரண மனிதனாக உடனே, தன்னிருகைகளை மேலே தூக்கவும் அவர் தயங்கியதில்லை. அதேசமயம் இது உண்மை, இது சத்தியம் என்று தெரிந்துவிட்டால், ஆதாரங்களும் இருந்துவிட்டால், அதன்பின் யாருக்காகவும் எதற்காகவும் ஒரு அங்குலம்கூட அவர் பின்வாங்க மாட்டார். அவர் ஒரு சத்திய நெருப்பு.
உங்கள் பிராதில் நியாயமிருக்கிறதென்றால், எதற்கு என் நண்பரைப் போய்ப் பார்த்து, சிபாரிசு செய்யச் சொல்லியெல்லாம் நீங்கள் கேட்கிறீர்கள்? என்று ஒரு வழக்கில் நேரிடையாக ஒப்பன் கோர்ட்டில் கேட்டுவிட்டார். யாரும் எந்த அனுகூலத்துக்காகவும் அவரை அணுகிவிட முடியாது என்பதற்கான நீதிமன்ற சாட்சி அது. அவரது குடும்பத்தார் உட்பட, எந்த மனிதரும், அவரது பணியில் குறுக்கிட்டுவிட, அவர் ஒரு நாளும் அனுமதித்ததில்லை.
பின்தங்கிய வகுப்பைச் சார்ந்த ஏழைப்பெண் ஒருவர், குரூப் நான்கில் தேர்ச்சி பெற்று, மாவட்ட நீதிமன்றம் ஒன்றில் எழுத்தராகப் பணிபுரிந்து வந்தார். அவரது தந்தையார் சாலையில் மரவள்ளிக்கிழங்கும் காய்கறிகளும் விற்று பிழைப்பு நடத்தியவர். தாயாருக்கு தன் வீட்டு வேலைகளை மட்டுமே பார்க்க வேண்டிய நிலை. அந்தப் பெண்ணுக்கு இரு தங்கைகளும் உண்டு. இத்தனை கஷ்டமான ஜீவனத்தில் தந்தையார் திடீரென மாரடைப்பு வந்து இறந்துவிட்டார். அந்த கடினமான சூழலிலும் குடும்ப பாரத்தை சுமக்க, அந்த பெண் குரூப் இரண்டு தேர்வு எழுதி தேர்ச்சி அடைந்தார். ஆனால், அவருக்கு புதிய பணிக்குச் செல்ல, தடையில்லாச் சான்று கிடைக்கவில்லை. நான் மிகுந்த தயக்கத்துடன் ஜி.ஆர். சுவாமிநாதனை நாடினேன்.
“இதுல என்ன இருக்கு ஜி? இதை என்கிட்ட சொல்ல ஏன் நீங்க தயங்குனிங்க? இது ஒரு ஏழைக் குடும்பத்தோட வாழ்வாதாரப் பிரச்னைன்னா? எந்த கெளரவமும் பாக்காத நான் யார்கிட்ட வேணாலும் போய் நின்னு இதுக்காக ரிக்வெஸ்ட் பண்ணுவேன்”என்றார். சொன்னபடியே செய்தார். ஆனால், இன்றுவரை அந்தப் பெண்னை அவரோ, அந்தப் பெண் அவரையோ நேரில் பார்த்ததுகூட இல்லை.
“இது போன்ற விஷயங்களுக்காக எப்பவும் நீங்க என்னை தாராளமா தொந்தரவு பண்ணலாம் ஜி. ஆனா, என் சோன்குள்ள மட்டும்தான் எண்ட்ரி பண்ணப்படாது என்ன?” என்று சொல்லிச் சிரித்தார். இப்படி இன்னும் அவர் செய்த சில விஷயங்களையெல்லாம் விரிவாய்ச் சொன்னால் கட்டுரை நீண்டு செல்லும்.
எழுத்தாளர் பெருமாள்முருகனுக்காக அவர் வாதிட்டு வென்றது, கரிசல் இலக்கிய பீஷ்மர். கி.ராஜநாராயணன் எழுத்திற்காக அவர்மீது வழக்கு வந்தபோது, இலக்கியத்தின்பால் நின்று பரிவோடு அவர் தீர்ப்பு வழங்கியது, எழுத்தாளர்களைத் தேடித்தேடிப் போய்ப் பார்ப்பது, ஒரு வழக்கின் உண்மைத்தன்மையை அறிய, நேரே சென்று பார்த்தும், கேட்டும், துறை சார்ந்த வல்லுனர்கள் கருத்தைப் பெற்றும் உண்மையை அறிவது போன்ற இவையெல்லாம் அவரிடம் நான் நேரில் கண்ட, காண்கிற அபூர்வங்கள்.
எழுத்தாளர்களிடம் மட்டுமல்ல, இலக்கியத்தின்மேல், ஓவியத்தின்மேல், இசையின்மேல் அவர் கொண்ட பற்று அபாரமானது. நாதஸ்வர வித்வான் பில்லப்பன் அவர்களைப் பணிந்து வணங்கி அவரைப் பாராட்டியது, டிராஸ்கி மருது, கேசவ் போன்றோரது ஓவியங்கள் இன்றும் அவர் வீட்டு வரவேற்பரையை அலங்கரித்துக் கொண்டிருப்பது, இப்படி அவரது இன்ன பிற கலைநாட்டத்தைப் பற்றி இன்னும் எவ்வளவோ சொல்லிக்கொண்டே போகலாம். கலைஞர்களை மட்டுமல்ல, எளிய மனிதர்களை மட்டுமல்ல, காலொடிந்த, கண் தெரியாத, விபத்தில் அடிபட்டு கைவிடப்பட்ட நாய், மாடு போன்ற சில மிருகங்களையும் அவர் வீட்டில் வளர்த்து வருகிறார். பிற உயிர்களின் மீதான அவரது இவ்வித நேசத்தையும் யாரும் அறிந்திருக்க மாட்டார்கள்.
ஒரு நாளைக்கு ஆங்கிலத்திலோ, தமிழிலோ பாதி புத்தகமேனும் படிக்காமல் அவர் உறங்கச் சென்றதில்லை. அவர் தீர்ப்புகளில் தமிழ் இலக்கியத்தின், உலக இலக்கியத்தின் எத்தனை விஷயங்கள் எடுத்தாளப்பட்டுள்ளன என்பதை அறிந்தவர் அறிவார்.
இலக்கியத்தை வாசித்து வாசித்து, இசையைக் கேட்டுக் கேட்டு, சிற்பங்களையும் ஓவியங்களையும் பார்த்துப் பார்த்து, அதன் சாரங்களைச் சரியான அர்த்தத்தில் செரித்துக்கொண்டு, பதப்பட்ட மனதுடன் இயங்குகிற ஒருவருக்கு, சாதிமத பேதங்கள் எப்படி இருக்க முடியும்? அறமும் கலையும் அவரது நீதித் தேரின் இரு சக்கரங்களாக இருக்கிறபோது பயணம் ஒருபோதும் திசை மாறாது.
அவரது பணியில் காலநேரம் பாராது, அவர் அர்ப்பணிப்பாய் ஈடுபடுவதை அறிவதற்கு, அவர் விசாரித்த வழக்குகளின் எண்ணிக்கைகளும், வழங்கிய தீர்ப்புகளுமே சாட்சி. இன்றைய அமைச்சர்களை, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களைப் பொதுஇடத்தில், கூட்டங்களில், விமானப்பயணத்தில் அவர் சந்திக்கும்போது நடந்துகொள்கிற பண்பின் மேன்மை அவரவர் மனசாட்சிக்குத் தெரியும்.
கலையும், இலக்கியமும், பரந்துபட்ட வாசிப்பும் உண்மையில் மனிதர்களை விசாலப்படுத்தாமல், குறுகியமனம் கொண்டவர்களாக மாற்றினால், கோளாறு கலையிலோ இலக்கியத்திலோ இல்லை. மாறுபட்ட கொள்கைகளை கோட்பாடுகளை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளலாம். தனிமனித வாழ்க்கையைஅல்ல. எதிர்க்கருத்து கொண்டவர்கள்மேல் தனிப்பட்டவகையில் வன்மத்துடன் நிகழ்த்தப்படும் தந்திர நாடகங்கள் தற்காலிக வெற்றிகளைத் தரலாம். போலியான சலசலப்பைத் தரலாம். ஆனால் அவை, நிரந்தரமல்ல.
2004ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காவும், மனிதஉரிமைக்கான பங்களிப்புக்குமாக சேர்த்து அமைதிக்கான நோபல் பரிசுபெற்றவர் ‘மரங்களின்தாய்’ என அழைக்கப்பட்ட வங்காரி முட்டா மாத்தாய். கென்யாவின் கிராமப்பெண்களுடன் இணைந்து பசுமைப் படிவ இயக்கம் வழியாக பனிரண்டு ஆப்பிரிக்க நாடுகளில் மில்லியன் கணக்கில் மரக்கன்றுகளை நட்டு வளர்த்தவர். பொறுப்பான அரசியல்வாதியாகவும் பணியாற்றிய அவர், தனது நோபல் அமைதிப்பரிசு உரையில் இப்படிச் சில வரிகளையும் சொன்னார்: “நான் ஒவ்வொன்றையும் சரிசெய்ய முடியும் என்ற எண்ணத்தால் அல்ல, ஆனால் எதையும் செய்யாமல் இருப்பதற்குப் பதிலாக, என்னால் முடிந்ததை நான் செய்தேன்.”
பூனைக்கு மணிகட்டும் இதுபோன்ற ஒரு நேர்மையாளரின் செயல்கள் மிக சிறியதாகத் தோன்றலாம், ஆனால் அந்தச் சிறிய முயற்சிகள் பலவாக ஆகும்போது, பெரிய மாற்றங்களாய் அவை உருவெடுக்கும். சுயநலத்துக்காக அவதூறுகளைப் பரப்புபவர்கள் மத்தியில் பாராட்டைப் பெறுவதோ பெறாததோமுக்கியமல்ல, ஆனால், நற்செயல்களின் தொடக்கமே முக்கியம்.
ஒரு நாட்டின் சுதந்திரமான தன்னாட்சி பெற்ற அமைப்புகளின் நேர்மையை சுயநலத்துகாகக் கேள்விக்குள்ளாக்கி, அவற்றின்மீது அவதூறு பரப்புதல் கோழைத்தனம். ஒரு விஷயத்தின் மேல்தளத்தில் பேசப்படுவதன் உண்மையான ஆதாரவேர்கள் பரவியிருக்கிற தூரம் சாமனியர்களுப் புரியாது.
“மனதில் பயமில்லாத ஒரு நாட்டை உருவாக்க வேண்டும்”என்று 1912இல் ரவீந்திரநாத் தாகூர் சொன்னார். தற்போதைய என்ன கொடுமையென்றால், குற்றவாளிகள் எந்தக் குற்றஉணர்ச்சியுமற்று சுதந்திரமாகவும் மிடுக்கோடும் உலாவந்து சகலர்க்கும் உபதேசம் செய்ய, நேர்மையாளர்கள் பயப்படுகின்ற கேவலம் இங்கே நடக்கிறது. ஆடையற்று இருப்பது மட்டுமல்ல. இதுவும் ஆபாசம்தான்.
அடிப்படைக் கட்டமைப்புகளின் சூழலையும் நஞ்சாக்கி நிலைகுலைய வைப்பவர்கள், அநீதிகளைப் புரிபவர்கள், அதையே பொதுமைப்படுத்தி சகஜமாக்க முயல்பவர்கள், பலகாலம் பதுங்குகுழிகளுக்குள் இருந்துவிட்டு, திடீரென குறிப்பிட்ட விஷயங்களுக்காக மட்டும் மறைமுக நிரல்களோடு குரல் எழுப்பிவிட்டு, மறுபடி பங்கர்களுக்குள் மறைந்து கொள்பவர்கள், சொல்ல வேண்டிய உண்மையை மறைத்து, அதன் இடைவெளியில் புகுந்துகொண்டு தப்பித அர்த்தம் கற்பிப்பவர்கள், மாய்மால வசீகர அடுக்குத்தொடர்களை உருவாக்குபவர்கள், மேல்தோற்றத்துக்கு மட்டுமே தெரியும் ஒன்றிற்கு மினுக்கும் முலாம் பூசி, பாவத்தைப் பரப்புபவர்கள் நீலநெடுவான் கூரையின் கீழிருந்து எங்கு ஒளிந்துகொள்ள முடியும்?
சுற்றிச்சுழலும் செற்கைக்கோள்கள் ஒரு நாள் உண்மைகளைக் கண்டுசொல்லும். அவர்களை முகுதுக்குப் பின்னிருந்து பார்த்துக்கொண்டே இருக்கும் பார்வைக்கு வராத அந்த அறத்தின் கண்கள், ஒருநாள் மன்றத்தின் முன்வந்து தான் கண்ட செய்திகளையெல்லாம் செந்நிறப்பிழம்பாய்க் கக்கும். அதனால்தானே ‘சூதும்வாதும் வேதனைசெய்யும்’ என்று ஒளவையும், ‘படித்தவன் சூதும் வாதும் செய்தால், போவான் போவான், ஐயோ என்று போவான்’ என்று பாரதியும், ‘அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும், ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்’ என்று இளங்கோவும் சொன்னார்கள்.
உண்மையில் எந்த நீதியையும் சொல்ல தமிழனுக்கு தனிமன்றங்கள் வேண்டாம், தமிழ் ஒன்றே போதும். ‘அன்பிலார் நெஞ்சில் தமிழில் பாடி நீ ஆடிக் காட்ட மாட்டாயா’எனக் கேட்டு, தமிழில் பாடினால், அன்பில்லாத நெஞ்சிலும் அன்பு சுரக்கும் என்றெல்லாம் விண்டுரைக்க முடியாத பலபலப் பொருள்களைத் தன்னுள்ளே கொண்ட தமிழை ஆழ்ந்து கற்றால் அது நமக்குச் சொல்லும் ஆயிரம் ஆயிரம் அறங்களை.
.
நன்றி: இக்கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம், தினமலர் (திருச்சி) நாளிதழில் 05.08.2025 இதழில் வெளியாகியுள்ளது.
$$$